ADS 468x60

11 January 2011

தை பிறந்தால் வழி பிறக்குமா????

மாரி மழை
காட்டு வெள்ளம்,
பட்டினிச்சாவு,
இடி,
மின்னல்..
இவைகள் மட்டும்..
எங்களை சொந்தம்.
கொண்டாட...
சூரியனே- நீ
எங்கு சென்றாய்..



வயல்,
பயிர் நிலம்,
வரும் வழி..
இன்னொரு புலமாய்...
இடம் நகர்ந்து கிடக்க..

தமிழர்களுக்கே 
பரிட்சயமான
அகதிகளாக- இன்னும்
எத்தனை நாள்???
தைபிறந்தால் 
வழிபிறக்குமா????

தை பிறந்தால் இவ்வளவு சந்தோசமா?
அக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும்.

மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும். புதிய தொழில் முலம் நிறையவே சம்பாதிக்க தொடங்கும் காலமாகும். தமிழர்கள் மாத்திரமல்ல உலகத்தின் பல பாகத்திலும் உள்ள மக்கள் இக்காலத்தினைத்தான் இளவேனிற் காலம் எனக் கொண்டாடுகின்றனர். இந்த இனிய காலத்தினை அனேகம் கவிஞ்ஞர்கள் பாடல் புனைந்தமை இதன் பெருமையை பறை சாற்றுகின்றது.

பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகல் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இன்னேரம்

இவ்வாறான காலத்தில் தான் எமது மக்கள், தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் கொண்டாடுகின்றனர். புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் தை மாசத்தில் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

'தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழியை 'புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்' -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்ப்பதும் உண்டு.

இயற்கையின் நன்றிக்கடன்.
அன்றைய தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்பு மிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது. அந்த மண் நமக்குரியதாக இன்று இல்லாததால், நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது.

இவ்வாறு இயற்கையை வழிபட்டு அதனோடே ஒன்றி வாழ்ந்த தமிழர்கள் கொடிய இயற்கையால் அழிவதை நினைக்க முடியாமல் இருக்கிறது. அதுக்கு நன்றி செலுத்திய தமிழனுக்கு காட்டும் நன்றிக்கடன்தான் இந்த கொடிய வெள்ளமோ? 

823003 மேற்ப்பட்ட மக்களின் வாழ்வை 218,007 குடும்பங்களில் இருந்து நாசமாக்கியுள்ளது, உயிர்களையும் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு அப்பால் 70,000 மக்கள் 179 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பினைப் பொறுத்தமட்டில் 480,189 மக்கள் 128,665 குடும்பங்களில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு செல்வதில் நாட்டம் செலுத்தும் பெரிய மனிதர்கள் ஏன் அவர்கள் இவ்வாறு வெள்ளத்தினில் அகப்படுவதனை அவர்களுடைய அபிவிருத்தியூடாக நிறைவேற்ற முடியவில்லை?? 

எப்போது இவர்கள் முகம் மலரும்..
பரிதாபமாக இருக்கும் இம்மக்களின் முகம் மலர எல்லோரும் உதவ முன்வரவேண்டும். நமது வீரத்தினை பேச்சில் காட்டுவதனை பின்தள்ளிவிட்டு இயலுமான உதவி செய்ய வாரீர் என மக்களின் சார்பாக அழைக்கிறேன். மட்டக்களப்பு, அம்பரை மற்றும் பொலநறுவ மக்களுக்கு என அரசி ஒதுக்கி இருக்கும் 90 மில்லியன் நலன்புரிக்கான நிதியுதவி அவர்களுக்கு சென்றடைய பொதுமக்கள், அரச ஊழியர்கள் பக்கச்சார்பற்று செயலாற்றுவார்களா என்ற கேள்விக்குறி இருக்கின்றது.

இன்னொரு விடயம் இம்மாவட்டங்களில் 525 பாடசாலைகளில் மக்கள் தற்க்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் அதில் 302 பாடசாலை வெள்ளத்தில் தள்ளாடும் அபாயமான நிலமையில், ஆண்டவன் ஒருவன்தான் காப்பாற்ற வேண்டும். 

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது இன்று பொய்த்து போய் தைபிறந்தால் துன்பம் பிறக்கும் என்பதனையே இந்குள்ள சான்றாதாரங்கள் சுட்டிநிற்கின்றன. மட்டக்களப்பில் மாத்திரம் 58,374 கெக்டேயர் வயல் செய்கையும், 49,339 கெக்டேயர் மேட்டு நிலச் செய்கையும் வெள்ளத்தில் அள்ளுண்டு போயிற்று.. என்ன தான் இம்மக்களிடம் மிஞ்சி இருக்கிறது.. இருக்கிறது அது தன்மானமும், தன்னம்பிக்கையும் மட்டும்தான்...

0 comments:

Post a Comment