ADS 468x60

30 January 2011

ஓ அழகிய தீவே!

இன்று திறந்த வெளியாகி இருக்கும் இலங்காபுரியின் அழகிய தழிழ் வாழிடங்களை நோக்கிய சுற்றுலாப்பிரயாணிகளின் படையெடுப்பு 2009 யுத்த முடிவிற்கு பின்னர் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. இலங்கையின் வருமான மார்க்கங்களில் குறிப்பிடத்தக்க துறையாக வளர்ந்து இருக்கும் சுற்றுலாத்துறை மூலமாக கணிசமான வருமானம் இந்நாட்டின் தேசிய வருமானத்தில் பங்களிப்புச் செய்வதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரந்து விரிந்து காணப்படும் நீர் நிலைகள், கடல் ஏரிகள், வயல் வெளிகள் மற்றும் மலை முகடுகள் போன்ற இன்னோரன்ன இயற்கையழகு மற்றும் தழிழ் மணம் மாறாத பண்பாடு, புன்சிரிப்போடு வந்தோரை வரவேற்று விருந்தளிக்கும் விருந்தோம்பல் என்பன எல்லோரையும் ஈர்க்கும் ஒன்றல்லவா. இதனால் படையெடுக்கும் சுற்றுலாப்பிரயாணிகள் மூலம் இங்கு காணப்படுகின்ற மக்கள் கிடைக்கும் உள்ளூர் வளங்களை வைத்து வருமானங்களை ஈட்டி வரும் அதே நேரம் பல சீர்கேடுகள் வளச்சுரண்டல்கள் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கதல்லவா.

யுத்த காண்ட முடிவும் படையெடுப்பும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏ9 பாதை திறப்புக்குப் பின்னரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் விருப்பம் யாழ் தீவகப் பிரதேசங்கள் நோக்கி திரும்பியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாள்தோறும் 500 க்கும் மேற்ப்பட்டவர்கள் இங்கு, தரை, வான் மற்றும் பெரி மார்க்கமாக இந்த அழகிய தீவை பார்வையிட வருகின்றனர், இது அதிகரித்த வண்ணமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றது. இந்தச் சுற்றுப்பிரயாணிகள் அங்கு காணப்படும் நெஞ்சை அள்ளும் ஆலயங்கள், புராதன இடங்கள், வனவிலங்குகள், கடைத் தொகுதிகள், உணவுகள், நூல் நிலையங்கள், மக்கள் வாழிடங்கள், யுத்தத்தின் சிதைவுகள், கடலேரிகள், தீவகப் பகுதிகள், கடற்கரைகள் கலாசார விழுமியங்கள் என்பனவற்றை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களில் முனைப்பு..
சுமார் 17 கெஸ்ற் கௌஸ்கள் 11 உல்லாச விடுதிகள் என்பன ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்களவான நட்சத்திர கொட்டேல்கள் இல்லை என்கின்ற இடை வெளியை நிரப்புவதற்கு முதலீட்டாளர்கள் அவசர மதிப்பீட்டினை செய்து வருவதுடன் இத்துறையில் முதலீடு செய்ய பல தனவான்கள் முன்வந்துள்ளமை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகின்றது. இத்தனைக்கும் தலை வாசலாக நல்லூர் கந்தன் முருகன் ஆலயமே திகழுவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மூன்று தசாப்த கால யுத்த காலத்தில் யாராலும் உரசிப்பார்க்க முடியாமல் இருந்த வளம் கொண்ட பச்சைக் கம்பளமான இந்த வளத்தை பயன்படுத்தி உல்லாசப்பயனிகளை உறிஞ்சி எடுக்க உகந்த இடமென முதலீட்டாளர்கள் கண்ணில் எண்ணையை விட்டு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதன்மூலம் உள்நாட்டு உற்ப்பத்தி அதிகரிப்பதுடன் (அழகு சாதனப் பொருட்கள், பனம் உற்ப்பத்திப் பொருட்கள், உணவுப் பண்டங்கள்) அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்ளுவதுடன் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் சந்தர்பமும் எதிர்வு கூறப்பட்டுள்ளது இதனால் தலா வருமானம் அல்லது ஆழ்வீத வருமானம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த தொலை நோக்கங்களை மையமாகக் கொண்டுதான் இலங்கை சுற்றுலா சபை பெரியளவில் இத்துறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சாவகச்சேரி கடற்கரை சூரியக்குளியலுக்கு உகந்த இடம் அதுபோல யாழ் நீர் ஏரிகள், இயற்கையின் பசுமை, தீவகப் பிரதேசங்கள் இவை உலக மக்கள் அனைவரையும் ஈர்கும் ஒன்றாகும். அத்துடன் எல்லா மக்களும் பயன்படுத்தும் படியான போக்குவரத்து வசதிகள் எல்லாப் பகுதிகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது இங்கு வரும் மக்களிடையே நம்பிக்கையையும் விருப்பத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

நெஞ்சையள்ளும் குடாநாடு..
குறிப்பாக இந்த சுற்றுலா பிரயாணிகள் விரும்பி வருகின்ற இடங்களாக நல்லூர் முருகன் கோயில், செல்வச்சன்நிதி முருகன் கோயில், நயினை தீவு நாகபூசணி அம்மன்னோயில், நாகவிகாரை, யாழ் நூலகம், கீரிமலை சிவனாலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தஸ்சுவாமி ஆலயம் என்பன அழகு மிளிரும் இடங்களாகும்.

ஆடிப்போகும் கலாசார மாற்றம்..
இவ்வாறு வசீகரமாக இருக்கும் இடங்களை நோக்கி வருகின்ற வகை தொகையில்லாத மக்களின் தங்குமிடம், உணவு, குடிநீர் என்பனவற்றை எவ்வாறு சமாளிப்பது என்கின்ற கேள்வி இருக்கின்றது. குறிப்பாக நைநாதீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கான போதிய நீர் இல்லாமை காணப்படுவதனால் வேலனையில் (லைட்டன் தீவு) இருந்து நீர் கொண்டுவரப்படுகின்றது. அத்துடன் இங்கு வருகின்ற மக்களிடம் பொலித்தீன் பாவனையை நிறுத்த சொல்லியும் அது முடியாமல் உள்ளதால் நீர்நிலைகள், ஆலயங்கள் எல்லாம் அசுத்தமாகவே காணப்படுவதனைக் காணலாம். அத்துடன் மலசல கூடவசதியும் இத்தனை மக்களுக்காக வசதி செய்யப்பட்டு இல்லை ஆதலால் புனிதப் பிரதேசங்கள் புனிதம் கெட்டுபடபோவதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக நோய் பரவும் எச்சரிக்கையும் (பண்டிக்காய்சல், பறவைக்காச்சல்) அடிக்கடி விடப்படுவதும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது தவிரவும் இதனை தடுத்து உதவுவதற்க்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதும் குறைவாகவேயுள்ளது. இதற்கும் அப்பால் கலாசார சீர் கேடுகள் தலைதூக்க துடங்கியுள்ளமையும் இம்மக்களது பாரம்பரிய விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கி வருகின்றமையும் குறிப்பிடதடதக்கது.

ஆகவே என்னதான் வருமானம் வரத்தொடங்கினாலும் எங்கள் தமிழ் மக்கள் கட்டிக்காத்து வருகின்ற கலாசாரம், பண்பாடு, அணுட்டானம் என்பனவற்றை என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாது, அவை அழிந்தால் அழிந்ததுதான் ஆகவே எங்களை நாங்கள் பாதுகாத்து எமது பண்பாடுகள் கலாசாரங்கள் அற்ப்ப சொற்ப்ப விடயங்களுக்காக விலைபோக விடாது பாதுகாக்க வேண்டியது எமது கடமையே அல்லாது இன்னொருவருடையதல்ல.

0 comments:

Post a Comment