ADS 468x60

29 April 2011

மட்டக்களப்பு பாடும் மீன் ஓசை..

"மட்டு மா நகரை மீன் பாடும் போது, ஏன் நான் பாடக் கூடாதா!' என்ற நட்பாசை தான்...இது எனது நீண்ட நாள் ஆசை. மிக சில தொழில் நுட்ப்பங்களை மட்டும் கொண்டு இன்பனின் மதுரக் குரலில் என் செல்ல மருமகள்மார்களுடன் இதை முடித்து இருக்கிறேன்....

25 April 2011

முகம் பார்க்க ஏங்கும் மூட்டுவலி

Myspace Hugs Graphics Kisses Clipart
தூரல் நின்ற வானம்
அலைகள் ஓய்ந்த கரை
வேகம் சாய்ந்து,
சோகம் தோய்ந்த,
இவன் சங்கற்ப்பங்கள்,
இப்போ........

பூக்களின் வாசத்தில்...
வண்டுகளின் ஓசையில்....
மீன்களின் துள்ளல்களின்...
நடுவில்...
கரைகளில் தவழும்....
நெஞ்சக்கனத்துடன்....
பரவசப்படும் நான்..
நான் அல்ல...

காது வழியால்- ஒரு
புதிய நுழைவு- என்
நெஞசத்தின்
இடம் நிரப்பி.......
வேலிகள் உடைக்கும்
சந்தோசம் இருந்தும்,,
முகம் பார்க்க ஏங்கும்
மூட்டு வலியில் நான்.........
படுக்கை மறந்து
பரிதவிக்கிறேன்..

16 April 2011

சி‌த்ரா பௌர்ண‌மி


மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும்இ சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது.‌சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து பூஜையறை‌யி‌ல் ‌விநாயக‌ர் பட‌த்தை நடு‌வி‌ல் வை‌த்துஇ ‌சிவனை எ‌ண்‌ணி பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் செ‌ய்து படை‌த்து அதனை எ‌ல்லோரு‌க்கு‌ம் அ‌ளி‌க்கலா‌ம். 


‌பழ‌ங்கால‌த்‌தி‌ல்இ சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் உற‌ல் தோ‌ண்டி அத‌ற்கு ‌திருவுற‌ல் எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டிஇ அ‌ங்கே இறைவனை வல‌ம் வர‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்கு படை‌த்து பூ‌ஜி‌ப்பா‌‌ர்க‌ள்.


இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை.அதிலும், உறவினர், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடிஇ பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்தான்.


அன்றைய தினம் ப‌ல்வேறு கோயில்களிலும் ‌திரு‌‌விழா‌க்க‌ள் நட‌த்த‌ப்படு‌கி‌ன்றன. எ‌ங்கு‌ம் அதிகமான கூட்டம் காணப்படும். புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன். அவ‌ர் ‌சிவ‌ன் வடி‌த்த ‌சி‌த்‌திர‌த்தை‌க் கொ‌ண்டு உருவா‌க்‌ப்ப‌ட்டதாலு‌ம், ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் ‌பிற‌ந்ததாலு‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்

12 April 2011

மட்டக்களப்பு மக்களின் சித்திரை வருடம்-

ஐயா வாங்க அம்மா வாங்க, தங்கச்சி வாங்க கொழுத்தும் வெய்யிலில் அழுத்தம் கொடுத்து பொருட்கள் விற்ப்பதை பார்க்கும் போது ஒரே குதூகலம் கொண்டாட்டம். ஓமாடியாமடுவில் இருந்து ஒரு குலாம், ஓந்தாச்சி மடத்தில் இருந்து ஒரு குலாம், விளாவட்டுவானில் இருந்து ஒரு குலாம், வாழைச்சேனையில் இருந்து ஒரு குலாம், மற்றது மாங்கேணியில் இருந்து ஒரு குலாம், செட்டிபாளையத்தில் இருந்து இன்னொரு குலாம்,  இப்படி அலை அலையாக அழகழகாக தமது பாரம்பரியங்களை இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு அப்பால் குழந்தைகள் இருந்து இளையவர்கள் முதியவர்கள் என படை படையாய் மட்டு நகர் வீதியெங்கும் எட்டி எட்டி போய் ஆர்வத்துடன் பொருட்களை வாங்க உழைத்த காசெல்லாம் செலவு செய்யும் ஒரு பரபரப்பான காட்சி அழகாய் இருக்கிறது.
                         (மட்டக்களப்பில் பரபரப்பாக பொருட்கள் வேண்டும் மக்கள்)
பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, பறவைகள் இசை ஒலிக்கின்றன, மரங்கள் தலையசைத்து தென்றல் வீசுகின்றது ஓ ஒரே விறுவிறுப்பு பரபரப்பு. நம்ம தழிழ் புத்தாண்டு இம்முறை விமர்சையாக பட்டி தொட்டியெல்லாம் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர் பாருங்க. இதைத்தான் சிங்களவர்களும் தங்களது புதுவருடமாக் கொண்டாடுகின்றனராக்கும். இலங்கையில் மட்டும். இதனால் தான் தமிழ் சிங்கள புத்தாண்டு என்று பெயர் வந்துள்ளது.
                                    (சாலை ஓரம் விசியாகி இருக்கும் மட்டு மாநர்)
இது தான் தமிழர்களின் வருடத் தொடக்கமாக்க் கொள்ளப்படுகின்றது.  எந்த ஒரு காரியத்துக்கும் அல்லது செயலுக்கும் ஒரு தொடக்கம் முடிவு என்பன உண்டு அதை நம் ஆன்றோர்கள் மரபு வழியாகப் பேணி வருகின்றனர் அல்லவா.

சோதனையும் மகிழ்சியும்.
இரண்டு மாதம் விடாது பெய்த வெள்ளம், யுத்தங்களின் போதான இடப் பெயர்வு, சொந்த நாடுகளை விட்டு வெளியேற்றம், விலையேற்றம், தொழில் இன்மை, விரக்தி இத்தனையும் தாண்டி சிறிது தழிர்க்க தொடங்கி இருக்கும் எம்மக்கள் மெது மெதுவாக சுபிட்சமான் பாதை நோக்கி செல்லவேண்டும் என்பதே அனைவரதும் பிராத்தனையும் கூட இல்லையா பபாருங்க

இந்த சோதனைகளுக்கு அப்பால் நல்ல சமாதானச் சூழல், சாதகமான காலநிலை, சுகந்திரமான நடமாட்டம் என்பனவற்றினால் மக்கள் சிங்களவர் தமிழர் என்ற பேதம் மறந்து ஒரே குடையின் கீழ் இந்த துா்முகி வருடத்தினை கொண்டாட தலைப்பட்டிருப்பதை பார்க்கும் போது எனக்கெண்டா சுரியான சந்தோசமாக இரக்கிறது பாருங்கோ.

தமிழர்கள் வரலாறு பாரம்பரியம், சமய அனுட்டானங்கள் எல்லோராலும் விரும்பும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இல்லறம் மூலமான நல்லறம் அது இந்து மதத்தில் செறிந்து கிடக்கிறது. எப்போதும் விழாக்கோலம், பெருநாட்கள் இவை மக்களிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்யும் பெரிய மூலோபாயமாக அல்லவா எம் முன்னோர் அன்றே வகுத்து வைத்துள்ளனர்.


மட்டக்களப்பில் சித்திரைக் கொண்டாட்ட மரபுகள்..
குறிப்பாக பெரியளவான மாற்றங்கள் பிராந்திய எல்லைகளுக்குள் இல்லா விடினும் சில தனித்துவங்கள் இருக்கத்தான் செய்கின்றது என்ன பாருங்கோ. குறிப்பாக வழிபாட்டு முறை, கொண்டாட்ட மரபுகள், விருந்தோம்மல் என்பனவற்றில் தனித்துவம் இருக்கிறது தான்.

மட்டக்களப்பில் இப்படி தான் பாருங்க கொண்டாட்டம் வைப்பாங்க..
தமிழர்களது வாழ்க்கை முறை செம்மையாக்கப்பட்டு உன்மையான வழியில் 
செல்வதற்கு என்றே விழாக்கழும் கொண்டாட்டங்களும் அமைந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது பாருங்கோ. மட்டக்களப்பு மக்கள் இளவேனிற் காலத்தினில் வருகின்ற சித்திரை வருடப்பிறப்பினையே தங்கள் புதுவருடமாகக் கொண்டாடுகின்றனர் பாருங்க.

கொண்டாட்டங்கள் சித்திரை மாசம் தொடங்கி வைகாசி மட்டுக்கும் அது கோயில் திருவிழா, வைகாசி சடங்கு என்று இக்காலம் முழுவதும் கொண்டாட்டமாகவே இருக்கும்.

இவர்கள் குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பினை வித்தியாசமான தங்களுக்கே உரித்தான கலாசார நடைமுறைக்குட்பட்டு கொண்டாடி வந்திருக்கின்றனர். ஆனால் அவை இன்று யுத்தம், வறுமை, இடப்பெயர்வு போன்ற இன்னோரன்ன இடர்கள் காரணமாக அவையெல்லாம் ஊனமுற்றுப் போச்சி பாருங்க. இருப்பினும் அவையெல்லாம் கொஞ்சம் துளிர்விடத் தொடங்கி இருக்கிறதோ என எண்ணத் தோணுகிறது.

வருடப்பிறப்பு வந்து விட்டால் பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என ஒரே குதுகலம் தான் பாருங்க. இக்காலத்தில் இவர்கள் கொண்டாடும் விதங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாங்கோ.

குறிப்பு: எங்கள் கலையகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த பாரம்பபரிய கலை நிகழ்வுகளின் ஒலி ஒளிப்பதிவுகள்.

நாட்டுக்கூத்து அரங்கேற்றம்.
இஞ்சே கேளுங்கோ, மட்டக்களப்பு என்றாலே கலை அதிலும் கூத்துக்கலை ஞாபகத்துக்கு ஓடி வரும் இல்லையா? இங்கு கன்னங்குடா, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, தேத்தாத்தீவு, கிரான்குளம், வாகரை போன்ற கிராமங்களில் பட்டையைக் கிழப்பும் பாருங்க சும்மா சொல்லி வேல இல்ல. வருடத்துக்கு முன் அதெல்லாம் பழகி வருடப்பிறப்பு தொடங்கி ஒரு வார காலத்தினுள் இவற்றை விடிய விடிய அரங்கேற்றி மகிழ்வர், குறிப்பாக இராம நாடகம், வாழவீமன் கூத்து, பவளக் கொடி சரித்திரம் போன்ற வற்றை கூறலாம். இவை தொடர்ந்து வருகின்ற கண்ணகை அம்மன் சடங்கிலும் இரண்டாம் கலரியில் அரங்கேற்றி நேத்திக்கடன் தீர்க்கும் மரபு இன்றும் காணப்படுகிறது ஓ!. இது போன்றே வசந்தன் கூத்து அரங்கேற்றமும் இடம் பெற்று வருகின்றது.

நடைக்கூத்து.
இன்னொன்று இருக்கு அது, புதவருடம் வந்து விட்டால் மூன்று நான்கு பேர் சேர்ந்து விநோதமாக உடை அணிந்து தெரு தெருவாகச் சென்று வேடிக்கையாகப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டாடும் மரபு இருந்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பின் கிராமப்புறம் சார்ந்து தான் இந் நிகழ்வுகள் அரங்கேறுகின்றமை குறிப்பிடத்தக்கது. புள்ளங்க எல்லாம் அப்பிடியே பின்னால இழுபட்டு போகுங்கள் பாருங்க அது ஒரு சந்தோசம் தான் சா...!.

மகிடிக்கூத்து.
வினோதமான அதுபோல் பார்ப்பதற்கு சுவையான கூத்து இது பாருங்க. குறிப்பாக இக்கூத்து தேத்தாத்தீவில் 1999 இல் கடைசியாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பறை மேளக்கூத்தும் முக்கியம் பெறும். இந்த மகிடி வருடப்பிறப்பினைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஊரின் நடுவினில் கலரி அமைத்து வினோதமாக உடையணிந்து எல்லோரையும் மகிழ்சி ஊட்டீ கொண்டாடுவார்கள். வேதளம் வரும் பாருங்க பாத்தா பயமாத்தான் இருக்கும் ஓ அப்படி சுப்பரா இருக்கும் அது.

கொம்பு முறி.
இது ஒரு பொல்லாத விளையாட்டாம் நான் கண்டதில்ல கேள்விப் பட்டிருக்கன் பாருங்க. இதுவும் ஊர் கூடி கொண்டாடும் விழாவாகக் இந்த வருடப்பிறப்பு காலத்தில் சிறப்பாக இருந்து வந்திருக்கிறகு. வடசேரி தென்சேரி என இரண்டாகப் பிரிந்து பாடி ஆடி கொம்புடைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். 'வடசேரியான் கொம்பு எங்கே எங்கே' என்று தொடங்கும் பாடல் மிகவும் அழகாக மெட்டமைந்து இருக்கிறது. ஆக எல்லோரும் ஒன்று கூடி மகிழும் ஒரு உபாயத்தினை நம்மட பழய ஆக்கள் அமைத்து வைத்திருக்கின்றனரே என்று வியக்க தோணுகிறது.

ஊஞ்சல் போட்டு ஆடுதல்.
சாதாரணமாக நாம் நம் வீட்டில் ஊஞ்சல் போட்டாடுவது போல் புதவருடம் வந்து விட்டால் புளிய மரத்தடி ஊஞ்சல், மாமரத்தடி ஊஞ்சல் என எங்கும் ஊஞ்சல் போட்டு ஆடி மகிழ்வுதும் ஒரு கொண்டாட்டமாக இருந்து வந்திருக்கிறது. 
தந்தனத்தோம் தானத்தோம் 
தந்த நானத்தோம் தானானோம்.
வாருங்கடி தோழியரே நல்ல 
பொன்னூஞ்சல் ஆடிடுவோம்..
என்று பாடி பாடி ஆடுவர் அது என்ன சோக்கு என்று சொல்ல முடியாது பாருங்க.

வார் விழையாட்டு
மறுகாப் பாருங்க இந்த வாரு விழையாட்டு, சில்லுக் கலைத்து விழையாட்டு மறுகா உத்திக்கம்படி அதுபோல கவடி விழையாட்டு என்று சரியான கொண்டாட்டம் தான் பாருங்க. இதெல்லாம் கிழமைக் கணக்கில நடை பெறுமுங்க.

உறவினர் வீடுகளில் விருந்தோம்பல்.
இது எப்படி எண்டா இப்ப மாமி மாமாட வீட்ட பலகாரப் பொட்டிகள், மரக்கறி வகைகள் இதெல்லாம் கொண்டு போய்க் கொடுப்பாங்கள், மறுகா என்ன பண்ணுவாங்கண்டா எல்லா பிள்ளைகளையும் கூப்பிட்டு பெரிய தடபுடலாக விருந்து வைப்பாங்க பாருங்கோ சொல்லி வேல இல்ல. நல்ல கறிய புளியப் புடிச்சி அண்டைக்கு புளளா நல்ல சாப்பாடு போட்டு எல்லா மக்களும் ஒன்றா சேந்து சாப்பிட்டு சந்தோசமா இருப்பாங்க அது உன்மையில் விழாதான். 

இன்னும் எத்தனையோ எத்தனை மாட்டு வண்டி ஓட்டம், கயிறு இழுத்தல், தலகனைச் சமர், வள்ள ஓட்டப் போட்டி, நடன நிகழ்சி என்று எக்கச்சக்கம் பாருங்க. உன்மையா இத விட தமிழனா இருக்கிறத்தில என்ன பெருமை டாப்பா நமக்கு தேவ?? இல்ல கேட்கிறன். அதால தான் பாருங்க வெள்ளக் காரணும் நம்மளப் போல வாழ ஆசப்படுறான், அதில தப்பில்ல தானே பாருங்க ஐயோ ஐயோ..

 வாழ்க தமிழ் வாழ்க நிரந்தரம்

11 April 2011

இது தான் தமிழர் புது வருடமா?.....

    
தமிர்களின் உண்மையான வருடம் எது?
தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.உன்மையில் இந்துக்களின் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகின்றது.

தொன்மை கொண்ட சித்திரை. 
'திங்கள் பன்னிரண்டு என்பதும், அவற்றுள் தை, மாசி, பங்குனி, கார்த்திகை முதலிய மாதப் பெயர்களைச் சங்கப் பாடல்கள் குறிப்பதனாலும் ஓர் ஆண்டில் சித்திரைத் திங்கள் முதற்கொண்டு பங்குனி ஈறாக எண்ணும் தமிழ் ஆண்டின் மாதப் பெயர் வழக்கும் பழமையானவை என்பது போதரும்' என்பார் பேரா.சண்முகம் பிள்ளை.எனவே கடந்த 2000 ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் சித்திரை முதலான மாதங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது தெளிவு.

சித்திரையின் சிறப்பு
இந்த மாதத்தில்தான் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் வீசுகின்றன. மாம்பழமும் இனிமையான பலாவும் கிடைப்பது இந்த மாதத்தில் தான்.

சங்க காலத்தில் இந்த மாதத்தில் தான் காமவேள் விழாவும் இந்திர விழாவும் கோலாகலமாய்க் கொண்டாடப் பட்டன. இந்த மாதத்தில் தான் வேப்ப மரம் பூக்கிறது. சங்க காலத்தில் வேப்பம்பூ பூக்கும் காலத்தை மணநாளுக்கு உரிய காலமாகக் கருதியிருக்கின்றனர் என்பது நற்றிணை 206 : 6 – 7 பாடல் வரிகளால் விளங்குகிறது.

இந்த நாட்களில் கூடிமகிழ்து பல விளையாட்டுகள், கலாசார நிகழ்சிகளை செய்து மகிழ்வதும் எமது பண்பாடுகளையும் மரபினையும் பறைசாத்துகின்ற ஒன்றாகும்.

உலகெங்கும் உள்ள இந்து தமிழர்களால் சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதுகதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இதனை 'இந்து தமிழ் புத்தாண்டு' என சிலர் கூறிவந்தனர். இன்னும் சிலரோ உலகில் உள்ள இந்துக்களுக்கெல்லாம் ஒரு பொதுப்படையான புத்தாண்டு இல்லை. இதுவே 'தமிழ்ப் புத்தாண்டு' எனவும் கூறிவந்தனர்.
தமிழர் நெடுங்காலம் தொட்டு சித்திரை முதலாம் நாளையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இலங்கை மற்றும் இந்தியாவில் அந்நிய ஆதிக்க ஆட்சிகளின் வருகையைத் தொடர்ந்து கிருத்தவ சமயம் தமிழர்களிடையே தோன்றவும், கிறித்தவ தமிழர்களால் இப்புத்தாண்டு கொண்டாட்ட முறை வழக்கில் இருந்து மறையத் தொடங்கியது. அதே போன்றே இசுலாம் மார்க்கம் தமிழர்களிடம் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து அவர்களிடமும் இருந்தும் இப் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கில் இருந்து மறையத்தொடங்கியது. ஆனால் கடைசி வரை இந்து தமிழர்களிடம் மட்டுமே இப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்ந்ததாகக் கூறலாம். மற்றும் கிருத்தவ, இசுலாம் சமயத் தமிழர்கள் இப்புத்தாண்டை கொண்டாட வில்லை என்றே உணரலாம்.

ஆனால் இலங்கை சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என தொடர்ந்து கொண்டாடிவருகின்றனர். இது பண்டைய இலங்கை தமிழர் மற்றும் தென்னிந்திய தமிழ் பண்பாடுகளின் தாக்கத்தினால் ஏற்பட்டதாகும்.

தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது

பொதுவாக வருடம் பிறந்து விட்டால் தமிழர்கள் தங்களுடைய பாரம்பரியங்களை, கலாசாரங்களை தூசி தட்டி எடுக்க தொடங்கி விடுகின்றனர். அதில் சாத்திர சம்ரதாயங்கள் மின்ன தொடங்கி விடுகின்றன. இங்கு வருடப்பிறப்பின் முழுப்பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுகின்ற ஒரு வெண்பா.

வரவிருக்கும் கர வருடம்.
விக்ருதி ஆண்டு, 14.04.2011 அன்று நண்பகல் 01.02 மணிக்கு முடிவடைகிறது. 'கர' வருடம், அன்றைய தினம் நண்பகல் 01.03 மணிக்கு உதயமாகிறது. கடக லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறக்கிறது.

இந்த 'கர' ஆண்டில், சித்திரை மாதம், 20ஆம் தேதி (03.05.2011) அன்று, ராகு/கேது பகவான்கள் முறையே தனுசு, மிதுன ராசிகளிலிருந்து விருச்சிக, ரிஷப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அங்கே அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 15.01.2013 அன்று துலாம், மேஷ ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

'கர' ஆண்டு, சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.05.2011) அன்று குரு பகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அங்கே அவர் ஓராண்டு காலம் சஞ்சரித்துவிட்டு 17.05.2012 அன்று ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

கர வருஷத்திய பலன் வெண்பா:
'கர வருடமாரிபெய்யுங் காசினியுமுய்யும்
உரமிகுத்து வெள்ளமெங்குமோடும்ரூநிறைமிகுத்து
நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்
பாலும்நெய்யுமே சுருங்கும் பார்.'

வெண்பாவின்படி உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப் பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார். 

கர வருடப் பிறப்பு பற்றிய பொது நோக்கு.
திருக்கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு பிறக்கிறது. இது அறுபது வருடச் சுற்று வட்டத்தில் 25 வருஷமாகும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மேட சங்கிரமான புண்ணிய காலமாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்
வாக்கிய பஞ்சாங்கப்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.39 க்கு பிறக்கிறது. அன்று காலை 7 மணி முதல் பகல் 3 மணி வரையும் விஷ புண்ணிய காலம் என குறிப்பிடப்படுகிறது.

புத்தாடை தரிசனம்
ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும்.

பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு
வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.

உணவு கரவருடத்தில் அறுசுவை உணவுடன் பால், தயிர், தேன், வேப்பம் பூ வடகம் போன்றவைகளை கண்டிப்பாக சேர்த்து, சுற்றம் சூழ இருந்து அளவளாவி புதுவருட உணவை உண்ணுதல் மேலானது.

கைவிசேடம்
14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.03 தொடங்கி 1.14 மணி அல்லது மாலை 06.03 தொடங்கி 07.38 வரையுள்ள சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களை பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.

விருந்துண்ணல்
புதிய கர வருடத்தில் வெளியிடங்களுக்குச் சென்று 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.18 தொடங்கி 10.27 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 11.18 தொடங்கி 12.47 வரையுள்ள சுபநேரத்தில் விருந்துண்டு மகிழ்தல் சிறப்பினை அளிக்கும்.

பெரியோர்களை சந்தித்தல்
புதிய கர வருடத்தில் பெரியோர்களை 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.28 தொடக்கம் 10.48 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 12.08 தொடங்கி 1.27 வரையுள்ள சுபநேரத்தில் சந்தித்து கலந்துரையாடுதல் நன்மை தரும்.

பூமி தரிசனம்
புதிய கர வருடத்தில் பூமி தரிசனம் செய்வதற்கு 14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.04 தொடக்கம் 1.44 வரையுள்ள சுபநேரம் அல்லது 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 8.15 தொடக்கம் 9.26 வரையுள்ள சுபநேரம் உகந்தது.

புதிய கல்வி
கர வருடத்தில் புதிய கல்வி முயற்சிகளை மேற்கொள்வதற்கு 20-04-2011 புதன்கிழமை காலை 7.33 தொடக்கம் 9-12 வரையுள்ள சுபநேரம் அல்லது 22-04-2011 வெள்ளிக்கிழமை காலை 9.12 தொடக்கம் 10.27 வரையுள்ள சுபநேரம் சிறப்புத்தரக் கூடியதாக அமையும்.

மருத்துநீர்
தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலைஇ பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

இந்த இரு பஞ்சாக கால நிர்ணய புண்ணிய காலங்களில் ஏதாவது ஒன்றில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள்இ தாய்இ தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும்

ஆகவே அனைவவரும் சகல செலடவமும் சந்தோசமும் பெற்று வாழ நான் எனது மனமார்ந்த வாழ்துகளை தெரிவிக்கிறேன்.

06 April 2011

புலிபாய்ந்த கல்லை ஊடறுத்து ஒரு தமிழ் கிராமம்...

தமிழர்களின் பண்பாடு பொதுவாக மற்றவர்களை வியந்து பார்க்கும் அளவுக்கு அன்பால் அனுசரிக்கும் தன்மையை கொண்டது. இலங்கையில் பொதுவாக செறிவாக தமிழர்கள் வாழுகின்ற இடங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் குறிப்பிடத்தக் ஒன்றாகும். இங்கு அனேகமான மக்கள் அகலப் பரந்து கிடக்கும் வளங்களைப் பயன்படுத்தி தங்களது புராதன முறைகளினூடு உழைத்து வாழும் ஒரு நாகரிக மரபுக்குள் வாழும் பண்பு தனி அழகு. இவர்கள் உன்மையில் மறவர்கள், போராடும் குணம் படைத்தவர்கள் அந்த போராட்டம் வறுமையாக இருக்கட்டும், இயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும், விலங்குகளின் அச்சுறுத்தலாக இருக்கட்டும் அவற்றுக்கு எதிர்த்து போராடியே வாழும் இவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. 

வெள்ள அனர்த்தத்தின் பின் மக்களின் உணவுத்தேவை அதன் பாதுகாப்பு பற்றி எல்லாம் உலக உணவுத்திட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மதிப்பீட்டு நடவடிக்கையில் நானும் கலந்து கொண்டிருந்தேன். மாவட்டத்தின் வடக்குப்பறத்தில் அமைந்து காணப்படும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் இரு தசாப்த கால வன்முறை, ஆட்கடத்தல் மற்றும் இன்னோரன்ன நெருக்கடிகளுக்குள் இருந்து மீண்டும் மீளமுடியாத நிலையில் மலையடி வாரங்களிலும், காடுகளுக்கிடையிலும் ஒதுக்கப்பட்ட ஒரு சமுகம் போன்று வாழ்ந்து வரும் எம்மினத்தை காண ஒரு வாய்ப்பு கிட்டியது. எனக்கு ஏதோ வேறு ஒரு நாட்டில் நிற்ப்பது போன்று ஒரு பிரமை அப்படி மாறுபட்ட சூழல், மக்கள், தொழில் அத்தனையும் என்னை மொத்தமாக வியப்பூட்டியது.

சந்திவெளி பிரதேசத்தினை ஊடறுத்து புலிபாய்ந்த கல் ஊடாக ஈரலைக்குளம் எனும் குக்கிராமத்தினை எமது குழுவினர் சென்றடைந்தனர். போகும் வழியெங்கும் அத்தனை அழகு, தொப்பிக்கல் மலை, குடிம்பி மலை மற்றும் டோறா வோறா மலைத்தொடர் என அனைத்தையும் கடந்து சென்றோம்.

இந்த பிரதேச செயலக பிரிவுக்குள் மட்டும் 78344 பேர் அண்மைய வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப் பட்டிருந்தனர். இங்கு மக்கள் பொதுவாக் காடுகள், சேனை, வயல் நிலங்கள், புட்தரைகள் போன்ற வளங்களை கொணடடுள்ளனர், இவை தான் அந்த மக்களுக்கு அரன். தவிரவும் அவர்கள் பழக்குப்பட்ட இயற்கையோடு இயைந்த வாழ்க்கை இவை யெல்லாம் அவர்களை ஆசை கொள்ள வைத்திருக்கும் வளங்கள் என்றால் மிகையில்லையே!..

இந்த ஈரலைக் குளம் 29 குக்கிராமங்களைக் கொண்ட ஒரு கிராம சேவகர் பிரிவாகும், இங்கு 424 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என கிராம சேவகர் திரு வீரசிங்கம் சொன்னார். ஆனால் 19 கிராமங்களில் மட்டுமே மக்கள் வசித்து வருகின்றனர் எனவும் கூறினார். போகும் வழியில் இலுக்குப் பொத்தான எனும் இடத்தில் மதிப்பீட்டக்கு வந்தோம் மிகவும் வறுமையில் வாடும் ஒரு குக் கிராமம், இங்கு கூலி வேலை செய்வோர் அதிகமாகக் காணப்படுகின்றனர், பெண்கள் கூட அனேகமாக கூலி வேலை செய்கின்றனர். காரணம் கணவனை இழந்த பெண் விதவைகள் அதிகம் காணப்படுகின்றனர். 
                         (இலுக்குப் பொத்தானை மக்களும், மாக்களும் குளிப்பாடும் நீரேரி)
குடிப்பதற்கு குளிப்பதற்க நீர் இல்லை வாய்க்கால் தான் எல்லாவற்றுக்கும். மாடுகளும் அங்கே மனிதர்களும் அங்கே...அதனால்; பார்ப்பதற்கு வெளியில் அசிங்கமாகவே இருக்கின்றனர் ஆனால் உள்ளுக்கு தங்கமான மனசி.

'படிக்க விட்டால் யார் என் இளய மகளுக்கு பால் ஊட்டுவது' என மனைவிலை இழந்த குடும்பத்தலைவர் செ.சின்னத்துரை என்னை பார்த்து கேட்டார். ஊழைத்து உழைத்து தனது உடல் ஓடாய் இருந்தது. இவர் 5 பிள்ளைகளுக்கு பொறுப்பு வாய்ந்த தாய், தகப்பன் எல்லாமாகவும் இருந்தார். விறகுவிற்பதையே தொழிலாகக் கொண்ட இவர் வேறு கூலி வேலைகளுக்கும் செல்வதுண்டு. இவர்கள் 2003 இல் தனது சொந்த மண்ணை விட்டு மாவடிவேம்பில் இடம்பெயர்ந்து இருந்த போது குழந்தைப் பிரசவத்தின் போது தனது மனைவியை இழந்து குழந்தையை மட்டும் உயிருடன் கடவுள் கொடுத்தான்.
                                                     (சின்னத்துரை அவர் மகள் வெள்ளையம்மாவுடன்)
சின்னத்துரையிடம் முதாலில் தர்சினியின் அம்மா எங்கு என்று கேட்டபோது வெள்ளையம்மாவை தான் காட்டினார் ஆச்சரியமாக இருந்தது.
'எனக்கு பள்ளிக்கு போறன்டா சரியான விருப்பம் அண்ணா ஆனா அம்மா செத்த பிறகு தர்சினிப் பிள்ளையை வளக்க யாரும் இல்ல அதால தான் நான் 2 வருசம் பள்ளிக்கு போக முடியல்ல, இப்ப 2 வருசம் பிந்தி பாடசாலையில சேத்தாங்கள்' என்றாள் சின்னத்துரை வெள்ளையம்மா எனும் இந்த கள்ளமற்ற குழந்தை தாய்

ஆந்த இடத்தில் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் என்னால் கூறக் கூடியதாய் இருந்தது ஆசை வார்த்தை காட்டி அரசியல் வாதிகள் போல் மோசம் செய்ய நான் விரும்மவில்லை. எமது தமிழ் இனம் இப்படியும் இருப்பது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டேனே என்று வருத்தப்பட்டேன். இதை நீங்களும் தெரிந்து கொள்ளனும் என இதை யாத்திருக்கிறேன்.
                                        (பிள்ளை வெள்ளையம்மா குழந்தை தர்சினியுடன்)
வசதி இருத்தும் படிக்காத பிள்ளைகளுக்குள் இந்த சிறிய குழந்தை சிறிய குழந்தையை மட்டும் சுமக்கவில்லை வறுமை, பட்டினி, பாதுகாப்பு இன்மை, ஓரங்கட்டுதல், இது போன்று இன்னும் இன்னும் சுமைகளுடன் வாழும் இவளால் படிக்க இருக்கும் ஆர்வத்துக்கு யார்தான் கை கொடுப்பார்!

இவள் போன்று எத்தனையோ வெள்ளையம்மாக்கள் எம் இனத்தின் புத்தி ஜீவிகளே விழித்தெழுங்கள் இன்னும் இன்னும் இலுக்குப் பொத்தானை கிராமங்கள் உருவாகும் பரிதாபம் எமது உறவுகளுக்கு ஒரு சாவக்கேடாக இருப்பதை களைந்தெறிய கை கோர்ப்போம். இப்படி நிலமை இருக்க 'மித மிஞ்சிய வறுமையையும், பட்டினியையும்' ஒழிக்கின்ற மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை இலங்கையினால் அடைய முடியுமா என்கின்ற கேள்வி தொக்கு நிற்கிறது அல்லவா?
                                             (வெள்ளையம்மாவுடன் நானும்)
1990க்கும் 2015க்கும் இடையில் தேசிய வறுமைக்கோட்டை விட குறைந்த வருமானத்தை கொண்டுள்ள மக்களின் கதவீதத்தை அரைவாசியாக்குதல், அதுபோல் பெண்கள் மற்றும் இள வயதினர் உட்ப்பட சகலருக்கும் முழுமையானதும், உற்ப்பத்தி திறனிலாலானதுமான தொழிலையும், மற்றும் கௌரவமான வேலையையும் பெற்றுக்கொடுத்தல், 2015க்குள் பட்டினியிலிருந்து துன்ப்பப்படும் மக்களின் சதவிகிதத்தை அரைவாசியாக்குதல் என்பன் இந்த வெள்ளையம்மாக்கள் வாழுகின்ற இலுக்குப் பொத்தானை கிராமங்களையும் சேத்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவை நடக்குமா என்பது ஆண்டவனுக்கு மாத்திரம்தான் வெளிச்சம்..

03 April 2011

கிரிகட் பெற்றோளின் விலையை சரிக்கட்டுமா?

உலகம் மாயையால் ஆனது என சித்தாந்திகள் சொல்லுவது என்னவோ உன்மை தான் எனத் தோணுகிறது. ஏனென்றால் சாதாரண மனிதர்கள் இலகுவில் மாயையில் அகப்பட்டு விட்டால் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட அந்த மாயைக்குள் அகப்பட்ட பின் அறியார்கள். உலகம் எனும் மாயைக்குள் அதிலும் 11 பேர் விளையாடும் கிரிக்கட் எனும் மாயைக்குள் 20 மில்லியன் மக்களின் கண்கள் கட்டப்படும் அந்ந தினம் அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது போலும். அந்த நாளில்தான் அதுவும் முட்டால்கள் தினத்தில்தான் நாம் எல்லோரும் விலைச் சுமையை சுமக்க வைக்கப்பட்டுள்ளோம், என சிலர் சிலாகித்துக் கொள்ளின்றனர்.

அதுதான் பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிப்பது. குறிப்பாக ஏப்ரல் 1ம் திகதி நள்ளிரவில் இருந்து 1 லீற்றர் பெற்றோளின் விலை 10 ரூபாவினாலும், 1 லீற்றர் டீசலின் விலை 3  ரூபாவினாலும் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 1890 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது பலரதும் விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

உலகக் கிண்ணம் மக்களின் உள்ளங்களில் உஸ்னத்தினை ஏற்படுத்தி அந்த உஸ்னம் நாடுகளுக்கிடையில் மாத்திரமல்ல, கணவன் மனைவிக்கு இடையில் கூட பல சர்ச்சைகளையும் விரிசல்களையும் ஏற்ப்படுத்தும் அளவுக்கு மக்கள் சோறு தண்ணியைக் கூட மறந்து ஏப்பரல் 1ம் நாள் வெள்ளிக் கிழமையே தயாராகி இருந்தனர். அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்கள் என ஏராளம் ஏராளம்... இவர்கள் கிரிக்கட்டில் மாத்திரம் தான் தங்கள் முழுக்கவனத்தினையும் வைத்திருந்தனர்.

இவற்றை நாடி பிடித்த அரசியல்வாதிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் யாருக்கும் தெரியாமல் பெற்றோலின் விலையையும் ஏற்றி விட்டனர் அல்லவா. மக்கள் யாரும் இதை கண்டு கொள்ளமுடியாமல் அந்த பொறி வைக்கப்பட்டுள்ளது என சில புத்திஜீவிகள் அங்கலாய்ப்பதனைக் காணலாம்.

உலக மட்டத்திலான பெற்றோல் விலை உயர்வு.
உலகலாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் எண்ணை விலை மாற்றம் தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் மாற்றத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது என சிலர் கூறுகின்றனர். இது குறிப்பாக சிங்கப்பூர், ஜேர்மனி, மலேசியா போன்ற நாடுகளிலும் கூட விலை அதிகரிப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அண்மையில் பெற்றோலிய துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதற்க்கிணங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நஸ்ட்டம் அவர்களின் பிழையான முகாமைத்துவத்தினாலன்றி உலகலாவிய சந்தையில் ஏற்ப்பட்ட விலைகளாலல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர் இப்போது சண்டே டைம்சிக்கு தெரிவிக்கையில் அவர்கள் மானியங்கள் மூலமாக பாரிய இழப்பினை சந்தித்து வந்தமையால் தான் இவை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மலேசியாவுடனான ஒரு ஒப்பீடு.
முன்பு கூறியது போல் வேறு நாடுகளிலும் இவ்வதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது குறிப்பாக மலேசியாவில் அந்த நாணய அலகில் 0.20 சதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் 10 ரூபாயால் அதிகரித்தால் என்ன என்று கேணத்தனமாய் சிலர் கேட்கின்றனர். குறிப்பாக மலேசியாவின் குடிமகன் ஒருவனின் மாதாந்த சராசரி வருமானம் இலங்கை ரூபாயில் சுமார் 150,000 ஆகும் ஆனால் இலங்கையரின் மாதாந்த சராசரி வருவாய் 20000 மட்டுமே. அத்துடன் இவர்களது நாட்டில் நவீன, வினைத்திறன் வாய்ந்த செலவு குறைந்த போக்குவரத்து சேவை வளர்ச்சி மலைபோல் வளர்ந்து இருக்கும் நிலை இலங்கையில் இருக்கிறதா? இல்லை. இன்னொரு தகவலின் படி 40 விகிதத்துக்கும் அதிகமான இலங்கையர்களின் மாத சராசரி வருமானம் வெறும் 7000 ரூபாய் மட்டுமாகவே இருக்கிறது, இந்த நிலையில் இப்படியான அத்தியாவசியப் பொருட்களின் மீதான திடீர் விலையேற்றம் ஏழைகளை இன்னும் ஏழையாக்குவதுடன் நடுத்தர வர்க்க மக்களையும் நடுத்தெருவில் இழுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக விமர்சிக்கின்றனர். ஏப்ரல் பூளில் பூளாகி விட்டோம் என்று சிலர் தலையில் அடிப்பதுபோல் கவலைப்படுகின்றனர்.

சிலர் கூறுகின்றனர் அதென்ன உலகச் சந்தையில் பெற்றோலின் விலை, தங்கத்தின் விலை எல்லாம் கூடுகிறது பின்ப குறைகிறது. ஆனால் கூடும் போது மட்டும் கூட்டும் இந்த அரசாங்கம் ஏன் குறையும் போது மட்டும் அது பற்றி கண்டு கொள்வதில்லையே என விசனம் தெரிவிப்பதனையும் காணலாம்.
ஆனால் இவை உலக சந்தையில் ஏற்ப்பட்ட விலை அதிகரிப்பினால் இல்லை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்ப்பட்ட நஸ்ட்டத்தினை சீர் செய்யவே எனக் கூறுவதை ஏற்க்க முடியுமா? இல்லை ஏனென்றால் மக்களிடமும் ஒரு லீற்றருக்கு 25 விகிதம் பணம் வரியாக அறவிடப்படுகின்றதே இந்த இழப்பீட்டை எங்கு சென்று கேட்பது??? அது தான் ஒருமுறை நீதி மன்றத்தினால் கூட இந்த பெற்றோலின் விலையேற்றம் மக்களின் உழைப்பை வரியாகக் கேட்க்கக் கூடாது என்று தீர்ப்பளித்தும் அது அரசியல் பலத்தின் மூலம் செல்லாக் காசாகிப் போனது அனைவருக்கும் தெரிந்ததே.

எது எவ்வாறு இருப்பினும் இது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தினை முழுதாகக் குறைத்துவிடும் என்ற அச்சம் பரவத்தொடங்கி விட்டது. இந்த விலையேற்றம் சில்லறைக்கடை இருந்து தேனீர் கடை ஈறாக தாக்கத்தினை ஏற்ப்படுத்தி எல்லா அடிப்படைப் பொருட்களிலும் மாற்றத்தினை ஏற்ப்ப:த்தி குடும்ப நிலைலை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோணுகிறது.

இருப்பினும் புத்திஜீவிகள் ஆய்வு ஆர்வலர்கள் பெற்றோலிய மாற்றீட்டுப் பாவனை பற்றி கரிசனை செலுத்தும் உபாயங்களை ஆய்ந்தறியத் தலைப்படவேண்டும் அவை வரவேற்ப்புக்கு உரியதாகவே அமையும்.

ஆகவே கிரிக்கட் உலகக் கிண்ணம் வெல்லப்பட்டு இருப்பின், இதன் வெற்றி, சித்திரைப் புதுவருடம் என ஒரு மாதம் உருண்டோடி இருக்கும் இந்த மாற்றம் என்னவென்றே தெரியாமல் ஓடி மறைந்து இருக்கும். ஆனால் கணிப்பு பிழைத்திருக்கும் இன்நிலையில் பல்வேறு அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்து மீழ முன்னர் இன்னொரு அனர்த்தம் மக்களின் மனநிலை மாற்றத்தில் என்ன வகையான பிரதிபலிப்புகளை கொண்டுவர இருக்கின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.