ADS 468x60

18 May 2011

மென்மையாகப் பேசுவோம், மேன்மை பெறுவோம்.


'நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு' உலகத்திலேயே பெரிய ஆயுதம் எது எனின் அது நாக்குத்தான்... அதை நாங்கள் அவதானமாகப் பாவிக்காவிடின் பின்னர் மிக மோசமான பழிக்கு ஆளாகி விடுவோம், என்கின்ற உன்மையை வள்ளுவப் பெருந்தகை மேலுள்ள அடியில் தெழிவுறுத்தியுள்ளார்.

பேச்சற்ற சிந்தனை இருக்கலாம், ஆனால் சிந்தனையற்ற பேச்சு இருக்கவே கூடாது. மனிதனின் தனிச்சிறப்பே, அவனின் சிந்தனைத் திறன்தான். சிந்தனையின் வெளிப்பாடே பேச்சு, பேசும் திறன். மனித இனத்துக்கு மட்டும் இறைவன் கொடுத்த அருள் பரிசு அது.

இன்றய வாழ்வின் தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாய் இருப்பது பேச்சுத்திறன். இதைத்தான் 'நாநலம்' என்பார் வள்ளுவர்.

'நாநலம் எனும் நலனுடமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று'

வாய்திறந்து வெறும் வார்த்தைகளைக் கொட்டுவது பேச்சு அல்ல. அது பேதைகளின் வார்த்தை சலசலப்பு, ஜாலமும் கூட. அங்கு கருத்துகள் கலக்காத காற்று ஓசை மட்டுமே, கேட்பவரின் நெஞ்சையும் அது தொடுவதில்லை, கேளாதாரையும் ஈர்ப்பதில்லை.

சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் தேடித்தருவது பேச்சுத்தான். ஒரு சொல் வெல்லும்; மறு சொல்லோ கொல்லும்! இத்தகைய சக்தி வாய்ந்த கருவியை, அறிவின் துணை கொண்டே பயன்படுத்தவேண்டும். அதனால்தான் சொல்வார்கள், எண்ணங்களின் மேலாடையே பேச்சு என்று.

பண்டைய காலத்தில், பேசும் கலை மிகவும் உச்ச நிலையில் இருந்தது. அக்காலத்தில் மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்க வேறு வழி இருக்கவில்லை, எனவேதான் பேச்சு, கலை வழியாக, கவிதையாக, கருத்துக் குவியல்களாக, எழிமையாக ஏற்றம் மிகு நடையில் சொல்லி வைத்தார்கள்.

இன்று அச்சுக்கலையின் அபார வளர்ச்சியாலும், ஊடகம், சினிமா மோகம் இது போன்ற அறிவியலின் விளைவுகளாலும் பேச்சுக்கலை மூச்சிழந்து நலியத் தொடங்கி இருக்கிறது.  அழகாக - அறிவுடன் - இனிமையாக பேசத் தெரிய வேண்டும். எந்தச் சூழ்நிலையில், எவருடன் பேசுகிறோம் என்பதனை உணர்ந்து, மற்றவரின் திறன் அறிந்து, எளிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.

உன்மையில் 'சிந்தனையின் அழகு சொல்லில் மிளிர்கிறது' என்பார் இராஜாஜி. எவரிடமும் பேசுவதற்கு முன் தெளிவான சிந்தனை ஓட்டம் வேண்டும்.
வார்த்தையில் இனிமை என்ற சொல் தேனில் தோய்க்கப்படவேண்டும். உணர்ச்சிகள் என்ற பட்டாடைகள் போர்த்தப்பட வேண்டும். சொற்க்கள், மலர் அன்புகளாய்க், கேட்பவரின் இதயக் கதவுகளை, தளிர் நடை பயிலும் தழிழ் தென்றலாய் தழுவவேண்டும்.

மேன்மையாகவே மேதினியில் பேச வேண்டும், கேட்பவரின் உள்ளத்தை அன்பால், அறிவான சொற்களால், இனிமையாக, இதமாகப் பேசி முற்றுகையிட வேண்டும். அந்த மோகன வேலை நமக்கு முழு உலகத்தினையே வாங்கிக் கொடுத்துவிடும் இல்லையா. அன்பு இதயம் கிடைத்துவிட்டால், அவணியில் ஆகாத காரியமும் உண்டே.. எனவே அன்பாகப் பேசித்தான் பழகுவோமே!!!!!

2 comments:

பனித்துளி சங்கர் said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

அருமையானப் படைப்பு . ஒவ்வொருவரும் இதுபோல் நடந்தால் எப்பொழுதும் சிறப்பே

Post a Comment