ADS 468x60

06 October 2012

சோளச் செய்கையில் மட்டக்களப்பில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள்


இன்று மட்டக்களப்புக்கு வருவாய் தேடித்தருகின்ற பிரதானமான இரண்டு மார்க்கங்கள் காணப்படுகின்றன. ஓன்று விவசாயத்துறை மற்றது மீன்பிடித்துறை. அதில் குறிப்பாக சுமார் 58,374 கெக்டேயர் நிலப்பரப்பினில் சுமார் 300,000 விவசாயக் குடும்பங்கள் நெற்செய்கையில் இரு போகத்திலும் ஈடுபடுகின்றனர், அதேபோல சுமார் 49,339 கெக்டேயர் மேட்டுநிலத்தில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையிலும் சேனைப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு வெண்காயம், பச்சை மிளகாய், கத்தரி, வெற்றிலை அதுபோல் சோளம், கச்சான், கவுப்பி மற்றும் இதர பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்ற ஒரு வளமிகு மாவட்டமாகும்..


மட்டக்களப்பு மாவட்டம் மற்றவரை வசீகரிப்பதற்கும், பொறாமை கொள்ள வைப்பதற்க்கும் காரணம் கொட்டிக்கிடக்கும் அளவில்லா வளமும், கொள்ளை கொள்ளும் வாவிகளின் அழகும்தான்.

இதனால்தான் என்னவோ புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்,

'பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங்
கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து
கால் பெருகும் கல்லார்கும் சொல்லாட்சி மிகப் பெருகும்
நூல் பெருகும் கிடையார்கு நுவலறங்கள் பெருகுமால்'
என அனைத்தும் பெருக்கெடுக்கும் எமது மீன்பாடும் தேனாடு பாடப்பட்டிருப்பது ஒரு சாட்சியாகும்.

சோளச் செய்கையாளர்களின் இன்றய நிலை
இன்று உலகளாவிய பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறை விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. அதனால் உலகில் இலகுவாக விளைவிக்கக்கூடிய தானிய வகைகளை பயிரிடுவதில் உலகம் விழிப்படைந்துள்ளது எனலாம். இன்று உலகிலேயே மூன்றாவது நுகர்வுத் தானியமாக சோளம் இருந்து வருகிறது அத்துடன் இந்தச் சோளம் தரமான சத்துணவாகவும் மிருகங்களுக்கான உணவாகவும் வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

இலங்கையில்; செய்கை பண்ணப்படும் சோளம் 80 விகிதமான மக்களுக்கு தங்களது தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கிறது. இந்த உற்பத்தி சுமார் 28,000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றது. வருடாந்த உற்பத்தியாக 200,000 மெற்றிக் தொன் சோளம் எமது நாட்டில் கிடைக்கப் பெறுகிறது. ஆனால் இவை பருவ காலத்தில் மாத்திரம் மழையை நம்பி செய்கை பண்ணப்படுகிறது. இந்த உற்பத்தியில் அனேகமானவை வறிய கிராமப்புறங்களில் இருந்து சேனைச் செய்கையாக மேற்கொள்ளப்படுகிறது. இவை மிகக் குறைந்த உள்ளீடுகளைக் கொண்டு, செய்கை பண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒட்டுமொத்த உற்ப்பத்தியில் 40 விகிதமான உற்ப்பத்தி மாத்திரம் உள்நாட்டு நுகர்வுக்காகவும் எஞ்சிய 60 விகிதமும் மிகை நிரம்பலாக இருக்கிறது. அவற்றை தாரளமாக சந்தைப்படுத்த முடியும். குறிப்பாக இந்த உற்ப்பத்தி ஜனவரி மாதத்தில்தான் அதிகமாக சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு விடயம் இவற்றை இடைத் தரகர்கள் அந்தக் கிராமத்தில் வந்தே அவற்றை குறைந்த விலையில் பெறுகின்றனர். அந்த அந்த சேனைகளுக்கு சென்று ஒரு சோளம் பொத்தியை 4 ரூபாய்படி பெற்று 15 இருந்து 20 ரூபாய் விகிதம் விற்பனை செய்து வருகின்றனர். ஆக மாடாய் பாடுபடுபவர்க்கு 4ரூபாய் அதை போட்ட உடை கசங்காமல் வந்து பெற்றுச் செல்பவர்க்கு 15 ரூபாய் என்னே அநியாயம்! ஆகவே இங்கு இடைத்தரகர்கள் தான் அனைத்தையும் பெறுகிள்றனர். ஆக தங்களுக்கு ஏற்படு;ம் செலவினைக்கூட இந்த வருமானத்தில் ஈடு செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் இந்த விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

இதற்க்கு மேலாக மாபுரீதியான பயிர்ச்செய்கை, புதிய முயற்ச்சிக்கான வழிகாட்டல் இல்லாமை, சந்தைக் கேள்வியில் இருக்கும் நம்பிக்கையீனம் என்பன இங்கு உற்ப்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு மவுசைக் கொடுப்பதில்லை. இதனால் விவசாயிகள் வறியவர்களாகப் போகும் நிலை அதிகரித்தே காணப்படுகிறது. 

ஆரம்பிக்கப்பட இருக்கும் சோளம் ஏற்றுமதிக்கிராமம்.
ஆனால் ஒரு புதிய மாற்றம் அனுராதபுரத்தில் உள்ள விவசாயக் கிராமமான கலன்விடுநுவௌ இம்மாதம் ஒக்டோபர் 6ம் திகதி ஏற்றுமதிக் கிராமமாக மாற்றப்பட தெரிவாகி இருக்கிறது. இது வயம்ப குறுப் ஒவ் கம்பனியின் முதலீட்டில் சோளச் செய்கை மேற்கொண்டு அதனை ஏற்றுமதி செய்வதற்க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டெய்லி நியூஸ் (01.10.2012) தெரிவித்துள்ளது.

மேலும், கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சடிகீன் கருத்து தெரிவித்திருக்கையில் ' இன்று இலங்கை சோளச் செய்கையில் தன்னிறைவு கண்டு மேலதிகமான சோளத்தினை செய்கை பண்ணி அவை களடா, தாய்வான் மற்றும் புறுணி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது' எனக் குறிப்பிட்டார்.

இந்தச் செயற்ப்பாடானது இலங்கைக்கு சுமார் 300 மில்லியன் டொலரை அந்நியச் செலாவணியாக பெற்றுத்தருவதுடன், இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதியில் காணப்படும் துண்டுவிழும் தொகையை கணிசமான அளவில் குறைக்க உதவுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

எமது நாட்டில் 190 மெற்றித் தொன் சோளம் உற்ப்பத்தி செய்யப்பட்டது. ஆனால் வழமையான உற்ப்பத்தியுடன் இப்போது 30 தொன் உற்ப்பத்தி அதிகரித்துள்ளது. தரமான சோளத்தினை அநுராதபுரத்தில் உற்ப்பத்தி செய்யும் செயற்ப்பாடானது வெளிநாட்டு கொள்வனவாளர்களிடையே கேள்வியை அதிகரித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளச் செய்கை.
"நாங்கள் கையும் காலும் இருக்கும் மட்டும் ஒளச்சித்தான் பொழைக்கிறம். எங்களுக்கு அதுக்கு அங்காலதான் ஒன்றும் தெரியல. விக்கிறவங்க வந்து கொறஞ்ச விலைக்கு வாங்கிறாங்க, அந்த காச கொண்டு ஒன்டும் பண்ண முடியல, அத அப்படியே இந்த பயிருக்கும் எங்கட உயிருக்கும் சேத்து பட்ட கடன கொண்டு சந்திவெளிக் கடையில கொடுத்தா கையும் கணக்கும் சரியாத்தான் இருக்கு தம்பி என்ற வரலெட்சுமி மீண்டும் மண்வெட்டியால் சாடத்தொடங்கினார். இந்த படம் திகிலிவட்டைக் கிராமத்தில் எடுக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலாக இந்த சோளம் பருவகாலத்தில் (ஜல சீசன்) பயிரிடப்படுவது  குறிப்பிடத்தக்கது. இந்த பயிர்ச் செய்கையில் நன்கு பயிற்றப்பட்டவர்கள் படுவான் கரைப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்கள் ஆகும். வெள்ளம், வரட்சி, காட்டு மிருகங்களின் அட்டகாசம் மற்றும் இன்னோரன்ன தடைகளால் பிரச்சினைகளை எதிர்நோக்கியபோதும், அவற்றை எல்லாம் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என வாழ்ந்து வரும் மக்கள் கூட்டம் அவர்கள். அதனால்தான் அன்று தொட்டு மிகை உணவால் பிற நாட்டுக்கும் உணவளித்த பெருமை இந்த மட்டக்களப்பு மக்களுக்கே உரித்துடையதாய் இருக்கிறது. இந்த காரணங்களால்தான் இன்றும் இவர்கள் 'வந்தோரை வாழவைக்கும்' நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்ற நாமத்துடன் வாழ்கின்றனர்.

இருப்பினும் சோளம் பொத்திகள் அவியலுக்காக மாத்திரம் உற்ப்பத்தி செய்யப்பட்டு அந்த உற்ப்பத்தியின் முழுப்பயனையும் பெறமுடியாமல் போகிறது. இந்த சோளனைக் கொண்டு எத்தனையோ உணவுப் பொருட்களையெல்லாம் வேறு பொருட்களையும் பெறுமதி சேர்க்கப்பட்ட ஒன்றாக உற்ப்பத்தி செய்கிறார்கள், அனுராத புரத்தினை போல் இல்லாவிடினும் கூட உள்ளுர் சந்தைகளில் இவற்றை சந்தைப்படுத்தும் வகையில் அவற்றை பெறுமதி சேர் பண்டமாக மாற்றலாம். இதற்க்கு பின்வரும் விடயங்களில் கருசனை கொள்ளவேண்டும்.

1. தனியார் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.
2. துறை சார்ந்த அறிவினை பெற்றுக் கொடுக்கும் பயிற்ச்சியினை வழங்கல்.
3. தனியார் கம்பனிகளுடுடன் சந்தை மற்றும் உள்ளீடு சம்மந்தமான    .........இணக்கப்பாட்டினை செய்துகொள்ளல்.
4. சந்தை வாய்ப்பினை ஏற்ப்படுத்தும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
5. சந்தையை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விஸ்திரப்படுத்துதல்.
6. புதிய விதை வகைகளை அறிமுகம் செய்தல்.
7. சிறியளவிலான உட்கட்டுமான வசதிகளை வழங்குதல்.
8. புதிய தொழில் நுட்ப முறைகளை அறிமுகம் செய்தல்.
9. விவசாய நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தல்.

போன்றவற்றினை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவும் அரசாங்கத்தின் இயலுமான உதவியினை இதற்கு பெற்றுக் கொடுப்பதனூடாகவும், வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்வதுடன், இந்த வறிய மக்களின் வருமானத்தினை கணிசமான அளவு உயர்த்துவதனூடாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தலாம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இதனால் அவர்களது குழந்தைகளின் கல்வி, போசாக்கு, சுகாதாரம், வீட்டு வசதி என்பன அதிககரிக்கும் வாய்ப்பினையும் பெற்று நீண்ட காலத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்ப்படுத்தும் சமுகமாக மாறும் என்பதனில் சந்தேகமில்லை.

ஏர் பூட்டி தோளில் வைத்து 
இல்லாமை வீட்டில் வைத்து 
போராடும் காலமெலாம் போனதம்மா 
எல்லோர்க்கும் யாவும் உண்டு 
என்றாகும் காலம் இன்று 
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா .....

0 comments:

Post a Comment