ADS 468x60

03 December 2012

மட்டு மாநிலத்தின் பாரம்பரியத்தை காக்கும் வேட்கை - தீபத்திருநாள் களியாட்டம்.

 இற்றைக்கு முப்பது வருடத்துக்கு முன்பு இந்த மட்டு நகரம் இப்படியாகத்தான் கலையில் களைகட்டி இருந்தது. அதன் பிறகு காற்று மட்டும் போய்வருகின்ற வேற்று வாசிகளின் இடம்போல் ஆகிவிட்டது. இருந்தும் இன்று மெது மெதுவாக பசுமை பூண வைக்கும் நடவடிக்கையை செய்யவேண்டிய பொறுப்பு எம்மையும் சார்ந்து நிற்க்கின்றதல்லவா!. மட்டு மாநிலத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் தீபாவளித் திருநாள் பாரம்பரியத்தினை நிலைநாட்டும் கலை நிகழ்வுகளோடு தேத்தாத்தீவு திருவூரில் இனிதே நடந்தேறியது.

இலங்கை பல இன மக்கள் வாழும் நாடு. இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான வரலாறும் சமூக- பொருளாதார மதப் பின்னணிகளும் உண்டு. அந்த வகையில் மட்டுமாநில மக்கள் தங்கள் கலை, கலாசாரம் என்பனவற்றை அவர்களுடைய வாழ்வியல், சூழல், காலநிலை, சமயம் என்பவற்றோடு மிகவும் நுட்பமாக, எல்லோராலும் அனுசரிக்கும் வகையில், அறிவு பூர்வமாக பின்னப்பட்டு இருக்கிறது. இதனால்தான் பிறநாட்டாராலும் இவை வாஞ்சயோடு விரும்பப்படுகிறது.

குறிப்பாக இம்மாநிலத்தில் பாரம்பரிய நிகழ்வுகளாக சடங்குகள், உழவர் விழா, பொங்கல் விழா, வருடப்பிறப்புகள், விளயாட்டு விழாக்கள் பின்பற்றப்பட்டு, நாகரிகம் வளர்த்து வந்திருக்கின்றனர். ஆனால் அவைகள் இன்று தொலைந்து போகும் நிலையிலேயே இருந்து வருகின்றது. வறுமை, தொடர்ந்தேச்சியான அனர்த்தங்கள்(மனித, இயற்கை), பூகோளமயமாக்கம், பிற நாகரிக மோகம் என்பன போன்ற இன்னோரன்ன காரணங்களால் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைத் துலைத்து நிற்க்கின்றமை நமக்கெல்லாம் தெரிந்த விடயம். 
நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு 
தொகுதியினர்.
ஒரு சமுகத்தின் வளர்ச்சி அதன் பண்பாடு என்னும் அடித்தளத்தில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. இதை உணர்ந்து வரும் இந்த மட்டுமாநில ஆர்வலர்களின் தாராள மனப்பாங்கினால் இவைகள் மீளுருவாக்கம் செய்ய தொடங்கி இருப்பது எமக்கெல்லாம் மட்டில்லா மகிழ்சியை தருகிறது. அவர்களுக்கு முதலில் கலைக் கண் கொண்டு நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நிகழ்வுகள் எமது மட்டு மாநில நலன் விரும்பிகளின் அனுசரணையுடனும், நெறிப்படுத்தலிலும் தேனுகா கலைக்கழகத்தின் ஏற்ப்பாட்டில் சிவகலை வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் வெகு விமர்சையாக 01.12.2012 பி.ப 3.00 க்கு இனிதே நடந்தேறியது.

எமது பணிகள் கல்வி, வாழ்வாதாரம் என்பனவற்றோடு நின்றுவிடாமல் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எமது மக்களின் திறமைகளுக்கூடாக அரங்கேற்றி, இழந்த மகிழ்ச்சியினையும், தொலைத்த பாரம்பரியத்தினையும் மீண்டும் புதுப்பித்தல் எங்களது முழுநோக்கமாக இருக்கிறது. இதனை எங்கள் மட்டு மாநிலத்தின் பாரம்பரியத்தை காக்கும் வேட்கை என்று கூறலாம்.

உன்மையில் இந்துக்கள், ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்கலங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும் என நம்புகின்றனர். வேத புராணங்கள் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்கலங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.  ஆனால் அவை பல தசாப்தமாக நிசப்தமாகியே இருந்தது அதனை இப்போது நாங்கள் மெது மெதுவாகப் பிரகாசப்படுத்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மட்டக்களப்பார்; கலைகளில் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நிருபித்தல் போல் நேர்த்தியான முறையில் அங்கு பல சுவையான பாரம்பரிய கலைக்கோர்வைகளை அளிக்கை செய்தமையானது தமிழர்களிடையே அவர்களை மார் தட்டி முறுக்கேற்றினாற்போல் இருந்தது. 

மரபுமாறாத வரவேற்ப்புடன் 
அழைத்து வரப்படும் அதிதிகள்
கி.ப.கழக துறைத்தலைவரும், சிரேஸ்ட்ட விரிவுரையாளருமான கலாநிதி திரு.க.இராயேந்திரம, களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் வைத்திய கலாநிதி கு.சுகுணன், பியூரிட்டாஸ் பணிப்பாளர் எந்திரி சர்மிளா இரகுநாதன் உட்ப்பட கலைஞர்கள், ஏனைய பல உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சுருக்கமான முறையில் உரைகளை வரையறை செய்து விட்டு நிகழ்வுக்குள் நுழைந்தனர். நிகழ்வுகளில் முதலாவதாக விளக்குகளை கையில் ஏந்தி ஆடும் பூஜா நடனம் ஆரம்பத்திலேயே அனைவரையும் கவர்ந்தது.

 அதன்பின்னர் கிராமத்தின் மகிமை பற்றி கூறும் பாடல் செல்வன் வாகீசன் அவர்களின் குழுவினரால் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவடி நடனம் கண்களுக்கு களிப்பூட்ட அதன் பின் கலைஞர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது.  கலைஞர்களான திரு. வைரமுத்து  மற்றும் தருமரெத்தினம் (கவிஞர் தேனூரான்) மற்றும் திரு த.விமலாநந்தராசா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதற்க்கு பின்னர் புராண நாடகமான நரகாசுர சம்ஹாரம இடம்பெற்றது அகில இலங்கை ரீதியில் பல பரிசுகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் எமது மட்டு மாநிலத்தின் தேனுகா கலைக்கழகத்தினர் செம்மையாக இதனை அரங்கேற்றினர். நீண்ட நாட்களுக்கு பின்னர் சீரியலுக்குள் அடிமையாகிக் கிடந்த மக்களை சிந்திக்கவும் மகிழவும் வைக்கத் தவறவில்லை இந்த நாடகம்.

அதன் பின்னர் தேத்தாத்தீவு இந்து கலாலயா கலைக்கழகம் வழங்கிய 'வள்ளி திருமணம்' எனும் வில்லிசை நடந்தேறியது.

இதன் பின்னர் அதிதிகள் உரை இடம்பெற்றது. அந்த வகையில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட பா.ம.உறுப்பினரும், மட்/ மாவட்ட இ.இ பேரவைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் உரை நிகழ்த்துகையில் 'இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எமது பண்பாடுகள் காப்பாற்றப்படுகிறதே என்று பெருமையாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சிவதாண்டவம் நடன நிகழ்வு இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவன் ச.பிரகாஸ் அழகாக அரங்கேற்றினார். அதனைத் தொடர்ந்து அதிதி உரை இடம்பெற்றது. அந்த வகையில் கி.ப.கழக துறைத்தலைவரும், சிரேஸ்ட்ட விரிவுரையாளருமான கலாநிதி திரு.க.இராயேந்திரம் அவர்கள் உரையாற்றுகையில் ' இந்த மாவட்டம் கலைஞர்களை நிறையவே ஈன்றெடுத்த மண், அதிலும் குறிப்பக தேத்தாத்தீவு நான் பிறந்த ஊர். இதனை கலையூர் என்று அழைப்பதற்கு ஏற்ப்ப அதனை நிரூபித்தும் காட்டியுள்ளனர். இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நான் இந்த மட்டு மாநில மக்கள் சார்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்' என்று கூறியமர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து காளிங்கா நர்த்தனம் எனும் நடனமும், அதனைத் தொடர்ந்து புதிய தயாரிப்பு நடனமாகிய 'கல்கி அவதாரம்' மிகவும் புதுமையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் அளிக்கை செய்யப்பட்டது. இதன் பின்னர் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. பிரமுகர்கள் இந்தப் பரிசில்களை வழங்கி வைத்து பாராட்டினர். கலைக்கழகம் நடாத்திய போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதன்பின் தமழ்மொழி வாழ்த்துப்பாவுடன் நன்றியுரை கூற நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. ஏங்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்தான் கவனிக்கப்போகிறார்கள் என்ற கேள்விதான் இன்று இத்தனை மாற்றங்களுடனான எமது எள்ளளவும் பிசகாத தமிழ் கலாசார கட்டிக்காப்பாக அமைந்துள்ளது.

ஆக இந்நிகழ்வுகள் பல நோக்கங்களை குறிக்கோளாகக்கொண்டு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வுகள் மூலம் எமது பாரம்பரியத்தை உள்ளபடியே ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு விழிப்பூட்டியுள்ளது. அது மாத்திரமல்ல இங்கு புதிய தலைமுறையினர் பங்குபற்ற வைத்துள்ளோம் அது ஏனையோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது. அத்துடன் இலைமறை காய்களாக இருக்கும் திறமைசாலிகள் அரங்கத்துக்கு கொண்டுவரும் ஒரு பெரிய கைங்கரியத்தினை செய்துள்ளோம். அது மாத்திரமல்லாமல் பாரம்பரியக் கலைகளை கண்ணொண்டாக வளர்த்தெடுத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர் இதன்மூலம் எமது கலைகளும் கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தத்தில் அறுந்து கிடந்த பாரம்பரியங்களையும் விழாக்களையும் இன்றய சமுகத்துடன் தொடர்புபடுத்தும் ஒன்றாக இந்த நிகழ்வு ஒட்டுமொத்தத்தில் அமைந்து காணப்படுகிறது.
                                              ஒளியேற்றப்படும்போது...  

செல்வன் வாகீசன் அவர்களின் குழுவினரால் பாடப்பட்டது
 'கல்கி அவதாரம்'
தனுசாவின் அபிநய நடனத்தில்
நரகாசுர சம்ஹாரம

தருமரெத்தினம் (கவிஞர் தேனூரான்) கௌரவிக்கபடும்போது.
அண்ணாவியார் வைரமுத்து  கௌரவிக்கபடும்போது.
                                   பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்போது.


நிகழ்வில் கலந்துகொண்டோர்


0 comments:

Post a Comment