ADS 468x60

02 March 2013

கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ! கவலையுறும் கிராம மக்கள்

காலங்காலமாக விவசாயத்தினையே நம்பி வாழுகின்ற மக்கள் நம்மவர்கள். ஆனால் காலநிலை மாறிவிட்டது, காலங்களும் மாறிவிட்டது இதனால் கை நழுவிப்போனது அவர்களின் தொழில் நிலமை, அவர்களது நம்பிக்கையினைப் போல். மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்ப்பட்டு வரும் வெள்ள அனர்த்தம் மாற்றீடில்லாத பாரம்பரிய விவசாயத்தினை கழுவிச் சென்று அந்த விவசாயிகளை எல்லாம் நடு வீதியில் தள்ளி விடுவதனை சமகால அறிக்கைகளில் இருந்து காணலாம்.  
கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் மனித வலுவில் (கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம்) ஏற்ப்படுத்தும் பயனுள்ள மாற்றம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது


கல்வியில் ஏற்ப்படுத்தும் மாற்றம் ஒரு தனி நபர் வளர்ச்சிக்கும் அப்பால் அந்த சமுகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது என ஆய்வு சொல்கிறது. மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் குறிப்பிட்டிருக்கும் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்கின்ற இலக்கினை எமது பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த அனைத்து துறையினரும் ஒருமித்து செயற்ப்படவேண்டிய தேவை இன்னும் இருக்கிறது.

இதற்கு மாற்றுவழி கண்டு ஏற்றம் காணும் முனைப்பில் எந்த வகையிலும் பின்னிற்காத எங்கள் குழுமத்தினர், மட்டக்களப்பு மாவட்டத்தில், இங்குள்ள வசதி குறைந்த குழந்தைகளின் ஆரம்பக் கல்வியில் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக மாற்றத்தினை ஏற்படுத்த பாடுபட்டு வருகின்றனர். இதன் மூலம, அவர்களின் நீண்டகால தனி நபர், மற்றும் இந்த மாவட்டத்தின் நிலையான வருமான வளர்ச்சியை நிச்சயப்படுத்த ஒரு பொறிமுறையை வகுத்து ஒன்றிணைந்து செயற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

' நாங்கள் யாரென்றே தெரியாமல் இந்த கஸ்ட்டப்பட்ட இந்த குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய உதவியை தந்தவர்க்கு இந்த மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன், இங்கு அநேக மாணவர்கள் படிக்க வசதி குறைவாக இருப்பதனால் சிறு வயதிலேயே கூலி வேலைக்கு செல்வது கொடுமையாக இருக்கிறது. அத்துடன் அவர்கள் தங்கள் ஆரம்பக் கல்வியினை தொடர முடியாமல் இடை விலகிப் போவது இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. நீங்கள் கொடுத்து உதவிய பொருட்கள் இந்த மாணவர்களின் எதிர்காலத்தில் ஒரு படிக்கல்லாக இருக்கும், உங்களுக்கு எங்கள் நன்றிகள்' என மொட்டுக்கள் பாலர் பாடசாலை ஆசிரியை ரஞ்சிதா தெரிவித்தார்.

'உங்கள் உறுப்பினர்கள் இந்த மிகவும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு வாஞ்சையுடன் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதற்க்கிணங்க பாடசாலைக்கு கொண்டு செல்லும் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் களிமடு மற்றும் கற்ப்பக்கேணியில் இருந்து பாவக்கொட்டிச்சேனை மற்றும் இருட்டுச்சோலைமடு போன்ற தூர இடங்களுக்கு பாடசாலைக்கு செல்லும் 79 பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தமை உண்மையில் எங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது' என இங்கு  வந்திருந்த கிராமசேவகர் பாராட்டினார்.

மேலே குறித்த கிராமங்கள் வவுனதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அழகான அதுபோல் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றில் மிகப் பின்தங்கிய கிராமங்களாகும். 'பாலும் தேனும் பனைக்கதிர் நெல்லும், சாலும் சாலும் எனத்தகு நாடு' என்பதற்க்கிணங்க பாலும் தேனும் மேவி வழிந்து கிழக்கு கரையில் இருந்து வருகின்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த போடிமார்கள் வாழ்ந்த இடத்தில் இன்று கூலிவேலை செய்யும் கூட்டங்களை உருவாக்கி விட்டிருக்கும் கடந்த மூன்று தசாப்த கசப்பான காலங்கள் அதே மூன்று தசாப்த காலம் பின்னிற்கின்ற ஒரு பாவப்பட்ட மக்களாக எம்மினத்தை மாற்றியுள்ளமை கொடுமையிலும் கொடுமை.

 வரு விருந்து பாத்து வந்த விருந்தை ஓம்புவதில் மட்டக்களப்பார் முதன்மையிடம் வகிப்பவர்கள். இதனால் வந்தாரை வாழ வைக்கும் மக்கள் என பிற மாநிலத்தாரினால் சொல்வதுண்டு. விருந்தினரை மலர்ந்த முகத்தோடும் அன்பொடும் வரவேற்று, கற்பன் பாய் விரித்து அதில் பால் பழம், தண்ணீர்ச் செம்பு, எச்சில் படிகம், வட்டா என்பன வைத்து உபசரித்து, தலை வாழை இலையில் அறுசுவை அன்னமிட்டு இறுதியில் தயிர் சீனி பழம் கொடுத்து விருந்திடும் பழக்கம் என்றும் மாறாத நாடு மட்டக்களப்பு!. இந்த நாடு இன்று பல கால பிரச்சினைகளால், அன்று கொடுத்து பேர்பெற்ற எம்மக்கள் இன்று பிச்சை எடுத்து பேர் பெறும் அளவுக்கு வறியவர்களாகி விட்டனர். இது அவர்களுடைய கல்வி கலாசாரம், பண்பாடு என்பனவற்றை மெது மெதுவாக சிதைக்க துடங்கியுள்ளது வருத்தமே!.

'அனேகம் தகப்பன்மார் மதுபானத்துக்காக தாங்கள் உழைக்கும் பணத்தில் அனேகமானவற்றினை சாராயத் தவறணைகளில் செலவிடுகின்றனர். இதனால் அடுப்பெரிக்கும் செலவுக்கு கூட காசில்லாத கட்டத்தில புள்ளங்கள எங்க தம்பி எடுத்தேத்துற! அதால தாய்மாரும் கஸ்ட்டப்பட்டு கூலிக்கு போகுதுகள். இந்த நேரத்தில எங்க எல்லோரையும் கூப்பிட்டு புத்தி சொல்லிஇ எங்கட புள்ளங்கமேல அக்கற காட்டினதுல எங்களுக்கு சரியான சந்தோசம்' என ஒரு அம்மா கூறியது உண்மையெனத் தோன்றுகின்றது.

 'எங்களுக்கு சில நேரங்களில் அப்பாவால்கூட சில கொப்பி, பென்சில் மாத்திரமே வாங்கித்தர முடியும், ஆனா நீங்க அழகான புத்தக வாக்கு, ஒரு பென்சில் போடும் உறை, பென்சில்,பேனைகள் இறேசர், தண்ணீர்போத்தல், கலர்பெட்டி, அத்தோட இதுவரையும் கண்டிராத இனிப்பு சொக்கலட் எல்லாம் தந்தீங்க உங்களுக்கு மிக்க நன்றி' என மாணவி சுமித்திரா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி சுகுணன், திருமகன் ஸ்ரீ, பொறியியலாளர் சாமிளா, விரிவுரையாளர்களான சுரேஸ் மற்றும் திருமதி சுரேஸ், ஆசிரியர் ஜீவா, சக்தி, ரமேஸ்வரன் ஆகியோருடன் இக்கிராமத்து மாதர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கங்கள் போன்ற அமைப்பினரும் கலங்து உதவினர்.


உயர்ந்த இடம் கிடைக்கும் என்று சேவை செய்பவர்கள் தாழ்ந்த இடங்களுக்கு செல்வதும் இல்லை உதவுவதும் இல்லை. இது நமது கடமை என சேவை செய்ய வேண்டும். நாங்கள் இந்தக் குழந்தைகளுக்கு உதவ வந்தமை எமக்கு கிடைத்த பேறுபோல் இருந்தது. அத்தப் பேறு இந்த உதவியை உவந்து அளித்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நல்ல உள்ளத்தினையே சாரும். இதைத்தான் காஞ்சிப் பெரியவர் 'மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லாப் பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே' என்று சொல்லி இருக்கிறார்.


ஆக கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. அந்த வாழ்க்கை தரமான நல்லதொரு சமூகத்தை உருவாக்கத் துணைநிற்கிறது! இந்த ஒரு இலட்சியத்துக்காகவே நாம் ஒன்றிணைந்து செல்வோம் ..


( மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..  )
Like and share in your facebook !

நிகழ்வுகளின்  நிழல்கள் 
மிகவும் சிரமப்பட்டு எமது குழந்தைகளுக்காக வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இனிப்பு பொருட்கள் 





 பெற்ற பொருட்களுடன் சந்தோஷமாய் வீடு செல்லும் மாணவி 

0 comments:

Post a Comment