ADS 468x60

23 June 2013

மட்டக்களப்பில் அப்பக்கடை அவலம்..

நான் இந்த அம்மாக்களிடம் தான் ஆசயாய் அப்பம் சாப்பிடுவேன்.. சுவையாய், மிருதுவாய் இனிமையாய் இருக்கும். ஆனால் அந்த சுவையான அப்பத்துக்கு பின்னால் பெரிய வேதனை, கஸ்ட்டம், சிரமம், பிரச்சினைகள் மறைந்து இருக்கிறது. மட்டக்களப்பில் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது, கிட்டத்தட்ட 40,000 விதவை தமிழ் பெண்கள் இருப்பதாக. இவர்கள் தங்கள் வயிற்றுப்பிளைப்புக்காக எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். 

மட்டக்களப்பு மிகை உணவு விளையும் பூமியாகும், ஒரு முயற்சியாளன் தன்னிடத்தில் அதிகம் காணப்படும் வளங்களை வைத்தே ஒரு தொழிலை தொடங்குகிறான் என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

குறிப்பாக பெண்கள் தங்களது வறுமையின் கொடுமையால் எவ்வளவோ தொழில் நுட்ப்பம் வளர்ந்த போதிலும் மரபுரீதியான தொழில் முறைகளைப் இன்றும் பின்பற்றுகிறார்கள். அப்பம் இங்குள்ளவர்களால் மட்டுமல்ல வெளியில் இருந்து வரும் சிங்கள, மேலைத்தேய சுற்றுலா பயணிகளாலும் விரும்பி உண்ணப்படுவதாக இவர்கள் சொன்னார்கள்.

இந்த அப்பம் பல பொருட்சேர்கையால் செய்யப்படுகிறது. அரிசிமா, தென்னங் கள், தேங்காய்ப் பால், சீனி, தேங்காய் எண்ணை போன்ற இன்னோரன்ன பொருட்களை சேர்த்தும், இவற்றை வேக வைக்க மேல் ஒரு சட்டியும் கீழ் ஒரு சட்டியுமாக நெருப்பு இட்டு அழகாக சுடுவார்கள். ஆனால் அவர்களைச் சுற்றி நெருப்பு இருக்கும் இதைத்தான் 'நெருப்புத் திண்ட காசி' என்று கடின உழைப்பாளர்களுக்கு சொல்லுவார்கள். 

மாலை நான்கு மணியளவில் தொடங்கி 7, 8 மணிபோல் முடிப்பார்கள். விசியான வாழ்வில் இணைந்து விட்ட மக்களுக்கு ஆற அமர அப்பம் சுட்டு பத்தியமாய் சாப்பிட நேரம் இல்லாததால், இவர்களிடம்தான் சாப்பிடுவார்கள். ஒரு சோடி அப்பம் 15 ரூபாவில் இருந்து 20 ரூபாய் வரைக்கும் விற்க்கும்...

இருந்தும், இருந்தும், இந்த ஒரு அப்பம் உருவாக எத்தனை காரணிகள், தடைகள் இருக்கிறது தெரியுமா????.. அந்த அம்மா சொன்னார்.. தேங்காய் மட்டை, அத்துடன் விறகு இவற்றை தேடி எடுக்கவேண்டும். அத்துடன் இப்போது போக்குவரத்து பொலீசார் கூட வீதியில் கடை வைத்துள்ளதால் பணம் வசூலிக்கிறார்கள். எங்கள் கஸ்ட்டம் சொன்னாலும் அவர்கள் பாசையில் புரியாது. 

அது தவிர மாநகர சபையால் இந்த வியாபாரம் பண்ணுவதற்க்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வரி செலுத்துகின்றனர் எனவும், ஆக இந்த நெருப்பில் வேகிய கூலி ஏதோ 200 அல்லது 300 தான் நாளுக்கு கிடைக்கிறது என்றும், இதற்க்குள் இவர்களின் வரிப்பணம் போக மிச்சம் வெக்கயும் வேக்காடும்தான் என்று; தனது ஒப்பரேசன் செய்த கிளினிக் போக காசி இல்லாமல் வேதனையோடு வந்ததாக ஒரு அம்மா சொன்னார். 

அழுகையைவிட எதுவும் வரவில்லை. என்னால் செய்யக்கூடிய உதவியாக எல்லா அப்பங்களையும் வாங்கி அவரை சிறிது திருப்திப்பட வைக்க முடிந்தது. இருப்பினும் சில நேரங்களில் அப்பம் விற்க்க முடியாமல் போவதாகவும் நஸ்ட்டப்படுவதாகவும் அவர் விசனப்பட்டார்.

இன்னொரு விடயம் இந்த அப்பம் சுடும் இவர்கள் கிட்டத்தட்ட 4, 5 மணித்தியாலங்கள் இந்த வேகா வெக்கையில் வேகியும், உரிமட்டைப் புகைக்குள் கண்களை விழித்தும் பாடுபடுவதால் இந்த வேலைகள் முடிந்ததும் கண்கள் நன்றாக தெரிவதில்லை என்றும், வெளிச்சங்களை பார்க்க கண் கூசுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். அத்துடன் மணித்தியாலக் கணக்கில் சம்பாலம் போட்டு உட்காந்து இருப்பதனால் கால்கள் திமித்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள் தீயில் வேகினால்தான் அவர்களின் குடும்பம் பசியில்வேகாது. இப்படிப்பட்ட நல்ல உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் பரோபகாரிகளையும் ஆண்டவன் படைக்காமல் இல்லை. அந்த வகையில் இந்த புகைப்படத்தினை எல்லாம் பேஸ் புக்கில் பார்த்து விட்டு,  ஓர் அன்பர்,  நண்பர் (அன்ரன் ஜெசன்வி)ஒரு பெருந்தொகைப் பணத்தினை கொடுத்து உதவ முன்வந்துள்ளமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நன்றி ஐயா.
பெரிய வேலை செய்பவர்கள், பணக்காரர்கள் இவர்கள் எல்லாம் வரிகட்ட மறுத்து எத்தனையோ திருகு தாளம்போடும் போது இந்த கஸ்ட்டப்படும் ஏழைகளில் பிச்சைக் காசில் அரசி நாட்டை நடத்துகிறது என்றால்... உங்களைப் போன்ற அம்மா மார்கள்தான் எத்தனையோ பேர்க்கு சம்பளம் கொடுக்க உதவுகிறார்கள்..இவர்களுக்கு எங்களது சல்யூட்..

0 comments:

Post a Comment