ADS 468x60

01 January 2014

என்னதான் என்றாலும் எண்ட ஊர்போலில்லை

தங்க மணல் ஜொலிக்கும் கடற்கரை
தாவி மீன் பாடிடும் குளக்கரை
செல்லும் இடம் எல்லாம் ஆற்றங்கரை
சேர்ந்து மணம் பரப்பும் தாமரை



கொம்புச் சந்தி கோயிலடி- அங்கு
கூடியிருக்க கூமாவடி
வட்டமாய் வாடிபோட்டு
கொட்டம் அடித்த நாட்கள்
கலைஞரும் இளைஞரும்
கண்டு மகிழ சேருமிடம்


மிரண்டு மிரண்டு
பயந்து அயர்ந்து
உறுண்டு திரிந்து
உலகம் அறிந்து

ஓடி ஓடி தேடி வேண்டி
ஒளித்தொழித்து தின்ற விஸ்கற்
மாங்காய் தாட்டு வைத்து
மறு நாள் எடுத்த காலம்
நாவற்கா தின்ன
நடுக்காடு சென்ற காலம்
வாகைப் பிரம்பெடுத்து
வாத்தியாரிடம் பட்ட அடி
என நினைக்க இனிக்கும்
எங்கட பாடசாலை

குளத்தின் இடையே
கோடு போட்ட மதுரை நிழல்
குட்டித் தீவாக
குளக்கரையில் குடியிருப்பு
நீலம் பூசிய கடற்கரை-அதில்
ஜாலம்போடும் அடம்பன் பூக்கள்

மனம் நிறைந்த மக்கள்- இது
குளம் நிறைந்த ஊரு
நெல்மணி சொரிய ஆலையடிவட்டை
கதிர்மோதி கலகலக்கும் குடியிருப்புவட்டை

இருட்டுவேளை தோட்டங்களில்
வைரவர் செய்கை
சேலை கட்டும் மழலை கூடும்
சக்கரைப் பொங்கல்
கதிர் அறுத்து களத்தினிலே
களவட்டிப் பொங்கல்
வேலையும் விருந்தோம்பலும்
குழைந்து கிடக்கும்
நாகரிகம்

பள்ளி விட்டதும்
துள்ளிக் குதிக்க பெரிய குளம்
கள்ளத்தனமாய் குளிக்க
காத்துக் கிடக்கும் கடற்கரை
செல்வம் சேர்கும் வெற்றிலைச் செடி
சேர்ந்து செய்யும் வெண்காயம்
காலம் வந்தால் கரைவலை
கறிக்கு ஆற்றில் கட்டுவலை

என்னடா இன்னும் வேணும்
எல்லாம் கிடைக்கும் சொர்கம் இது
செலவு வைக்காத வளம்
அள்ள அள்ள ஊறும் நிலம்
பார்த்திருக்கேன்
பழகி இருக்கேன்
உண்டு இருக்கேன் உறங்கி இருக்கேன்
என்னதான் என்றாலும் எண்ட ஊர்போலில்லை

0 comments:

Post a Comment