ADS 468x60

04 January 2014

கடவுளாப்பாத்து அனுப்பி இருக்கிறாரு

 கிளிநொச்சி அன்று யுத்தவேக்காடு மாறாத பூமியாக இருந்தது. அது மனிதர்களை மாத்திரமல்ல மரம் செடி கொடிகளையும் இழந்த பூமி. எனக்கு இந்த மக்களோடு பழக கிடைத்த நாட்கள் கடவுள் தந்த தருணங்கள் தான் என நினைக்கிறேன் . 

'என்னுடய கணவர் நித்தியானந்தராசா, என்னுடைய மகன் மார்களான ஜெயராசா, மகேந்திரன் மற்று என்னுடைய மகள் ஜெகலதா என்னுடைய அம்மா, தங்கச்சி, அவன்ட ரெண்டு பிள்ளைகள், என்ட மூத்த அண்ணா அசோக்குமார், என்னுடைய மருமகள் அருந்ததி எல்லாமாக பத்து உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கிறன் தம்பி' என ஆரம்பித்தார் இராசலெட்சுமி. திருநகர் கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமமாகும். அங்குதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றர்கள்.

இந்தக் குழந்தைகளை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்ற தாயும் தந்தையும்
'மிஞ்சி இருக்கிற மூன்று குஞ்சுகளையும் எப்படி இந்த வயசுபோன காலத்தில வச்சி காப்புத்திற என்றதுதான் கவலை, பள்ளிக்கூடம் வேற இரண்டாம் திகதி ஆரம்பமாகுது அதுக்கான எந்த ஆயத்தமும் இல்லாம ஒரே கவலையா இருக்கு தம்பி' என அம்மம்மா இராசேஸ்வரி கூறினார். அம்மா மற்றும்  அப்பா  இருவரையும் இழந்தாலும் அம்மம்மாவின்  அரவணைப்பில்  சிறுவர்கள்  இருப்பதனால் கலகலப்பாக விளையாடிக்கொண்டு திரிவதனை அவதானித்தேன்.

கலைமகள், குணாலன் மற்றும் அனஞ்சயன் ஆகிய மூவருமே இந்தக் குழந்தைகள் இவர்கள் முறையே 10ம் தரம், 6ம் தரம் மற்றும் 4ம் தரத்தில் கனகபுரம் பாடசாலையில் தங்கள் கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.
'நீங்கள் உங்களுக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் வாங்கிடீங்களாடா' என்று கேட்டேன் அதில் கலைமகள் மாத்திரம் சிரித்தவாறே தலையை பக்கவாட்டில் அசைத்து 'இல்லை' என்று சொன்னாள். 

பப்படம் மற்றும் மிக்சர் ஆகியவற்றை கையால் செய்து கிடைக்கும் வருமானத்தில் இவர்களை காப்பாற்றி வருகின்றார். யுத்தம், இடப்பெயர்வு காலங்களில் அனைத்து பத்திரங்கள், உடமைகளை இழந்து விட்டதனால் எவரிடமும் குறிப்பாக வங்கிகளில்கூட கடன் பெற முடியாமல் இவரைப்போன்ற அநேகம்பேர் இன்னும் அவதியுறுகின்றனர். 

'எனக்கு கடன் பெற முடியவில்லை தம்பி அதுக்கு கரண்டிக்கு ரெண்டு அரச உத்தியோகத்தர் கையொப்பம் கேட்கிறாங்க, எனக்கு யாரு தம்பி இருக்கா' என அங்கலாய்த அந்த அம்மா இலேசாக கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்தவாறே 'இந்த பத்து உசுரும் இருந்திருந்தா எனக்கு இந்த நிலமை நேர்ந்திருக்குமா என விம்மி விம்மி அழத்தொடங்கியவரை' சுதாகரித்துக்கொண்டு நாங்கள் அனைவரும் இயன்ற உதவியை ஒன்றுதிரட்டி செய்துவிட்ட திரும்பினோம். 

அம்மா அந்த குழந்தைகள் அனைவரது முகமும் மகிழ்ந்து இருந்தது ஏதோ மன நிறைவாக இருந்தது இந்த உதவியைச் செய்த பெயர் சொல்ல விருப்பப்படாத அந்த நல்ல உள்ளத்துக்கே இந்த நன்மைகளெல்லாம் சேரணும்.
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே 
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே!!

0 comments:

Post a Comment