ADS 468x60

09 August 2015

கொடுக்கிற மக்களுக்கு குடிக்க இல்லையா தண்ணீர்? மன்றாடும் உன்னிச்சை மக்கள்..

 மட்டக்களப்பு என்ற அழகுப் பெண்ணை வேலியாக காத்து நிற்கும் மக்கள் எமது எல்லைக் கிராமத்தவர்கள்தான். யுத்தம், அனர்த்தம், இருள், வறுமை, வேதனை என்னும் பேரிடிகளின் காப்பாக இருந்தவர்கள்,மழையிலும் வெயிலிலும் கல்லிலும் முள்ளிலும் கரத்தாலும் சிரத்தாலும் களனி செய்து உண்ணும்; சோற்றுக்கு நெல் விளைவிப்பவர்கள், மீனும் தேனும் பாலும் கூழும் பசிக்கு தருபவர்கள், வந்தோரையெல்லாம் வாழவைப்பவர்கள் என்ற அடைமொழியின் சொந்தக் காரர்கள், உபசரிப்பதில் உற்சாகமானவர்கள் இந்த உன்னிச்சை கிராம மக்கள்.


உன்னிச்சை என்பது மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 33 கி.மீ க்கு அப்பால், மன்முனை மேற்கு பி.செயலகப் பிரிவில் அமைந்துள்ள வயல், காடு, மலை, அருவி என்னும் இயற்கை மூடிய இன்ப அரன். இங்கு பி.செயலகப் பிரிவின் அறிக்கைப்படி கிட்டத்தட்ட  இக்கிராம சேவகர் பிரிவில உள்ள உன்னிச்சை, இராஐதுரைநகர், குறவன்திடல், கரவெட்டியாறு, குதம்ப, மாவலியாறு, எட்டாம்கட்டை போன்ற கிராமங்களில் கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் வாழுகின்றனர். அவர்களில் 75 விகிதத்திற்கும்மேல் வறுமையில் சிக்கி தவிப்பவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 80 விகிதம் இவைபோன்ற கிராமத்தவர்களின் உழைப்பில்தான் 20 விகித தனவந்தர்கள் வயிற்றை வீங்க வைகிறார்கள் அவர்களது தலைக்கனத்தைப் போல். இங்குள்ள நகரத்து பிள்ளைகளுக்கும், படித்தவர்கள் என அழைத்துக் கொள்பவர்களுக்கும் எமது மாவட்டத்தின் எல்லைகளைக் கூட இன்னும் தெரியாமலேயே வாழுகின்றனர் அப்படி இருக்க இம்மக்களது கஸ்ட்டம் எப்படி தெரியப்போகுது அவர்களுக்கு? 

இவர்கள் பலதடவைகள் யுத்தத்தில் இடம் பெயர்ந்தவ்கள். இறுதியாக 2007 இல் வெறுங்கையுடன் மீள் குடியேறியவர்கள். இந்த கொடிய யுத்தத்தில் அடிபட்ட எங்கள் எல்லைத் தெய்வங்களின் ஐீவனற்ற உடலைத்தவிர அடிப்படை வசதிகளான நிரந்தர வீடு, கட்டிடங்கள வீதி, தொழில், குடிநீர் இதுபோன்ற அனைத்தும் அழிந்து போயின.

இங்கு பிரதானமான வளம் விவசாயம் செய்யக்கூடிய களியோடு கலந்த பசளை மண். அதற்கேற்ப்ப கிட்டத்தட்ட 1500 மி.மீற்றர் வருட மழைவீழ்ச்சியுடன் 28 செல்சியஸ் பாகை அளவான வெப்பம். தங்கம் விளையும் பூமி. இந்த மண்ணைப் போலவே மக்களும் தாராளமானவர்கள். இங்கு ஆறு, குளம், நீர் ஓடைகள் என இந்தப் பிரதேசத்துக்கே நீர் வழங்கும் அத்தனை நீர்சுணைகளும் ஊற்றெடுக்கும் புண்ணிய பூமி. இந்த நீர்வளத்தைச் சுற்றி 750 கெக்டேயர் நெல்வயல்கள், 550 கெக்டேயர் மேட்டு நிலம் தென்னை பனை, மா, கமுகு என அத்தனை வளங்களும் விளங்கும் கிராமங்கள் இவை. இத்துடன் இந்த கிராமத்தில் இருந்து மட்டும் 15,000 லீற்றர் பால் உற்பத்தியாகுவது யாருக்கு தெரியும்.

வளங்களில் இத்தனை முன்தங்கி இருந்தும், கணவனை இழந்த பெண்கள், பாடசாலைக் கல்வி இழந்த பிள்ளைகள்;, கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் என நலிவுற்றவர்கள் அதிகரித்து காணப்படும்; ஒரு பின்தங்கிய பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் சுகாதார வசதி, கல்வி, போக்குவரத்து, சந்தைவாய்ப்பு, தொலைத் தொடர்பாடல், வங்கி வசதிகள் என்பவற்றுடன் குடிநீர் வசதி இவை அத்தனையும் இல்லாத அநாதரவானவர்கள். இவர்களிடத்தில் விளைநிலங்கள் இருந்தாலும், இறந்தகாலத்தில் இழந்தவை தவிர வெறும் 40 குடும்பங்கள் மாத்திரம் அவற்றில் சொந்தக்காரர்களாக இருக்க, மற்றவர்கள் கூலிக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களை புன்னகைத்த முகத்துடன் பார்க்க முடியவில்லை தமது எதிர்காலம் குறித்த கேள்விக் குறியுடன் வாழும் ஒரு இனக்குழுமமாக இம்மக்களை ஆழுபவர்கள் மாற்றியுள்ளனர். 

ஆனால் இவர்கள் இத்தனை குறைபாட்டையயும் செய்து தரும்படி முன்னுரிமைப்படுத்தவில்லை, அவர்கள் கேட்பதெல்லாம் தண்ணீர் குடிதண்ணீர் கேட்காமலே கொடுக்கவேண்டிய ஒன்று. கேட்டும் கொடுக்காத அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவர்கள் கல்நெஞ்சக்காரர்கள், இம்மக்களது உழைப்பைத்தான் இந்த அரசியல் மற்றும் கற்ற அதிகாரிகள் உறிஞ்சிக் குடித்தனர் ஆனால் இப்போ இவர்களது தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்துள்ளனர். 

குடிநீர் மனிதனுக்கு மிக அத்தியாவசியமானதாகும். மட்டக்களப்பு மாவட்டம் வாவி மகள் சூழ உள்ள நீர்த்தாய குளிர்பரப்பும் பசும் சோலைப் பட்டினம். அப்படி நீர் வளம் நிறைந்த ஒரு மாவட்டத்தின் கிழக்கிற்கு இந்த மாவட்டத்தின் மேற்கு வரட்சியான எல்லைப் பகுதிகளில் குளிக்க குடிக்க நீர் கிடைக்காமல் அவதியுறும் நிலையில், நீரை கொண்டு செல்லப்படுவது நியாயமா? இவர்கள் பாதுகாப்பற்ற வீதியோரங்களில் உள்ள குளங்களிலும் குட்டைகளிலும் சுகாதரமில்லாத தண்ணீரைத்தான் நாளாந்தம் மக்கள் பாவித்துவருகின்றனர்.
இந்த கிராமசேவக பிரிவில் உள்ள 400 குடும்பங்களுக்குமாக் 18 சாதாரண கிணறுகளும் 3 குழாய்க்கிணறுகளுமே இருக்கின்றன. 

கிராமவாசி சொன்னார் 'அநேகம் போர் மானாவாரி காலத்தில் மாத்திரம் தண்ணீரை தாராளமாகப் பயன்படுத்த, தொடந்து வரும் ஆனி ஆடி தொடங்கி கார்திகை மாத்திரம் இங்குள்ள மனிதரும் மிருகமும் ஒன்னாதான் தண்ணீரை பருகிவருகின்றனர், எமக்கென அமைந்த எமது நீர்வளத்தில் இருந்து காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, செங்கலடி, ஓட்டமாவடி போன்ற வசதிபடைத்த நகரங்களுக்கு நீரை வளங்க அங்கு இருந்து வரும் போத்தலில் அடைத்த நீரை எங்கட்ட வர்ரவங்களுக்கு கொடுக்கும் துர்ப்பாக்கியத்துக்கு ஆளாக்கி விட்டாங்கள்' என மக்கள் புலம்புகின்றமை கேட்;க வருத்தமாக இருக்கிறது. 'இந்த மக்களிடம் சென்று நாட்டுக்கோழி, நட்டாற்றில் பிடித்த மீன் வீட்டுச் சமையல் என அத்தனையும் தின்று ஏப்பமிட்டவர்கள்தான் இந்த மக்களுக்கு சதிசெய்து வருகின்றனர்' என மக்கள் வெறுப்போடு பேசிகின்றனர். 

இங்கு பாதைவசதிகள் சீர்செய்யப்படவில்லை, இருந்தும் ஒரு நாளைக்கு ஒரு தடைவ ஓடுகின்ற பேருந்து, தூர இடத்து பாடசாலை, இத்தனைக்கும் மத்தியில் குளம் குட்டைகளில் பாதுகாப்பற்ற காட்டுப் பாதையில் நெடும்தூரம் சென்று எல்லோரும் பார்க்கும் வெட்ட வெளிகளில்; பெண்களும் ஆண்களும் ஒன்றாக குளிக்க, துவைக்க வேண்டும். பிள்ளைகளைப் பொறுத்தவரை அம்மா அப்பா கூடச் செல்லவேண்டும், அதற்குள் இவற்றை செய்து முடிக்க நேரம் போய்விடுகின்றது. இதனால் போக்குவரத்தினையும் நேரத்துக்கு பயன்படுத்த முடியவில்லை அதனால் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி அடிபடுகின்றது. அத்தோடு வரட்சிக்காலங்களில் இந்த சேற்று நீரை பருகுவதனால் குழந்தைகளிடையே மயக்கம், மந்தம், சிறுநீரகக் கோளாறு, பாடசாலை இடைவிலகல் என  ஒட்டுமொத்தமாக எம் சொந்தங்களை விரைவில் அழித்துவிடும் நிலைக்கே இந்த பிரச்சினை கொண்டு செல்லும் அபாயம் இருக்கிறது.

இங்கு மொத்மாக 300க்கு மேல் பாடசாலைக்கே செல்லாதவர்களும், 600 பேர்வரை 5ம் தரத்துக்கும் குறைவாக படித்தவர்களும்; வெறும் 9பேர் மாத்திரம் சாதாரண தரத்தில் சித்தியடைந்த நிலையில் கல்வியறிவு குறைந்த இந்த மக்களை ஆடுமாடாகவ பயன்படுத்தவே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நினைக்கிறார்களா? கடமையுள்ள எந்த அதிகாரியும் இப்படி கைநாட்டுகளை உருவாக்கி பார்க்க ஆசைப்படமாட்டான். 

தயவு செய்து தேர்தல் காலத்தில் மாத்திரம் பல்லைக்காட்டுவதை நிறுத்துங்கள். இவர்களிடம் 'திட்டமும் இல்லை பட்டமும்'; இல்லை கட்டம் கட்டமாக செய்வதாக சொல்லி முட்டாள்கள் ஆக்கியது போதும். இந்த மக்களுடைய நீரை இன்னொருமக்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லுமளவுக்கு இவர்கள் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல 'கொடுக்கங்ள் அதில் எங்களுக்கும் விடுங்கள்' எனத்தான் கோருகின்றனர். அவர்களும் இந்த மாவட்டத்தின் பிரஜைகள் என்ற வகையில், நீதியாகவும் நியாயமாகவுமே குடி நீரைக் கேட்கின்றனர். இவர்களுடைய வளத்தையே அவர்களுக்கு கொடுக்க மறுக்கும் சூழ்ச்சிக்கார உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் எப்படி இன்னொரு இடத்தில் உள்ள வசதியை இந்த மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்போகின்றனர்?

இன்று மக்கள் இந்த விடயம் தொடர்பாக பேச முன்வந்துள்ளமை உன்மையில் வரவேற்க்கத்தக்கது. இந்த உழகை;கும் கரங்களின் ஒற்றுமையை நான் பாராட்டுகிறேன். நானும் இவர்களில் ஒருத்தன் என்பதனால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாமல் இவற்றை தெரியப்படுத்துகிறேன். 
சரியான சமையத்தில் இந்த மக்கள் தங்களது வாக்குப்பலத்தினை கையில் எடுத்து இருக்கின்றனர். வெறுமனே ஏமாற்றும், சுயநலக்காரர்களை, கையாலாகாதவர்களை, வெறும் நாநயம் கொண்டு நாணயம் இல்லாத நயவஞ்சகர்களை அந்தப் பலத்தை உபயோகித்து இல்லாமல் செய்யுங்கள். 

'எத்தனை அதிகாரிகள, அரசியல்வாதிகள் இங்கு வருகின்றார்கள்,  பூக்கள் இல்லாத காலத்திலும் மாலைகளை போட்டு வருவேற்போம்' ஆனால் அவர்கள் எங்களை ஏமாற்றி ஏமாற்றி காலை வாரியதுதான் மிச்சம். இவர்களுக்கு 'எங்கள் வாக்கு மட்டும் முக்கியம், ஆனால் எங்கள் வாழ்க்கை முக்கியமில்லை'. இதுதான் எங்கள் விதியென நினைத்து வாழ முடியாது, எங்களிடம் உள்ள வாக்குகள் தான் இவர்களை அரசியல்வாதிகளாகவும் அவர்களிடம் இருந்து அதிகாரிகளாகவும் ஆக்கினாலும் அவர்கள் எமக்கு பணி செய்ய மறுத்து செல்வாக்கு உள்ளவர்களுக்கே சேவை செய்கின்றனர்' என மக்கள் வருந்தி கூறுகின்றனர்.

மக்களே ஒன்றைக் கூற விரும்புகிறேன், அவர்கள் இன்னும் இன்னும் உங்களை விற்பார்கள், நடுத்தெருவில் மிருகங்களுடன் மிருகமாக விட்டுச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழுவார்கள், கருணையில்லாத கல்நெஞ்சக்காரர்களின் நடிப்புக்கு மயங்கி உரிமையை இழக்கவேண்டாம் மக்களே!. சிந்தித்து செயற்படுங்கள் நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து, மனித வளங்கள் உங்கள் வாழ்க்கையின் எழுச்சியே எமது மாவட்டத்தின் உயிர் மூச்சி. உங்களது துணிவு எப்பொழுதும் வரவேற்க்கத்தக்கது.

இறுதியாக ஒன்றை தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். இந்தமாதிரியாக  அதிகாரிகள் அரசியல்வாதிகள் மக்களை கைவிடாமல், அதுபோல் ஏமாற்றாமல், அவர்களை இந்த மாவட்டத்தின் மக்கள் என கருத்தில் கொண்டு சம அளவு வசதிகளை வழங்கி சேவை செய்யுங்கள்;. இந்த சேவையின் முதற்படியாக அவர்களுடைய கோரிக்கையினை நிறைவேற்றி வையுங்கள். அபிவிருத்தியின் அடிப்படை தெரியாமல் அதிகாரிகளாக இருப்பதில் பயனில்லை. ஒட்டுமொத்த பொருளாதார மூலாதாரமான இந்தக் கிராம மக்களை புறக்கணித்து விட்டு, தங்களை ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரி என அழைத்துக்கொள்ளுபவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையற்றவர்கள். இந்த மக்களின் குறையை நிறைவேற்ற முடியாமை அவர்களின் இயலாமையையே காட்டுகின்றது. ஆகவே எது எப்படியோ அனைவரும் இந்த மக்களுக்கு குடிநீர்கிடைக்கும் வழியினை ஏற்ப்படுத்த ஒன்றுபட்டு குரல்கொடுப்போம்.
கானொலிக்கு இங்கே சொடுக்கவும்
https://audioboom.com/boos/3451564
https://audioboom.com/boos/3451593-2

0 comments:

Post a Comment