ADS 468x60

13 March 2016

கொம்புச்சந்தி கோயில்: சமுதாய பல்கலைக்கழகமாய் திகழும் ஒரு நிறுவகம்

மட்டக்களப்பு தமிழகத்தை ஒருங்கே பிரதிபலிக்கும் பழந்தமிழ் கிராமம் தேற்றாத்தீவு எனும் தேனூராகும். மட்டக்களப்பின் பெருமையும் பழமையும் மிகுந்த கிராமங்களுள் ஒன்றுதான் தேற்றாத்தீவுக் கிராமமாகும். இங்கு வாழுகின்ற மக்களின் வந்தோரை வாழவைக்கும் பண்பு, கலைகளை பேணிவளர்க்கும் திறமை, வீரசைவம் செறிந்த இடம், சித்தர்களும், கவிஞ்ஞர்களும், கலைஞர்களும் நிறைந்து உருவான இடம், கடலும் ஆறும், குளங்களும் சூழ வயல் வனப்புகள் வளம் கொஞ்சும் நாநிலம் போன்றவை  எமது ஊர் ஏனைய ஊர்களைவிட தனிப்பண்புகளுடன் இருப்பதற்கு காரணங்களாய் அமைந்துள்ளன.
இந்த தேனூர் கிழக்கே சுருதி கூட்டும் வங்ப்புனல், மேற்கே வளைந்து ஓடும் பாடுமீன் வாவிக்கரை, வடக்கே கற்புக்கரசி கண்ணகி அருளாட்சி செலுத்தும் செட்டியூர் அதுபோல் தெற்கே சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் அமர்ந்தருளும் மாட்சிமை பொருந்திய களுதாவளை இவற்றுக்கு மத்தியிலே அமைந்துள்ளது.

இக்கிராமத்தின் மேற்க்குப் புறத்தில் தேன் விளையும் செந்தாமரைகள் நிறைந்த நீர்க் குளங்களும், குளிர்பரப்பும் வரிசையான மதுரை மரங்களும், இக்கிராமத்தின் பணப்பயிராம் வெற்றிலைத் தோட்டங்கள், வானுயர்ந்து காய்கின்ற தென்னை, கமுகம் சோலைகளும், சலங்கை ஒலிக்கும் வேளான்மை வயல்களும், பட்டி பட்டியாய் பசுமாடுகளும், பார்க்கும் இடமெல்லாம் பயிர்தோட்டங்களும், வனப்பாக வளர்ந்துகிடக்கும் வாழைத் தோட்டங்களும், எம்மூரை அழகு செய்கின்றவையாக இருக்கின்றன. இவ்வாறான ஒரு இடத்தில் அமைந்த ஆலயம் எந்த வகையில் ஒரு நிறுவனமாக, மக்களை வழிநடாத்தும் ஒரு நடுநிலையான ஸ்தாபனமாக பொறுப்பேற்று அவற்றை நடைமுறைப்படுத்தியது என்பதையே இந்த ஆக்கத்தில் ஆராய்ந்துள்ளேன்.

1. ஆலயமும் சமுகமும்
'பிள்ளையாரப்பா! தொடங்குற காரியம் ஒரு விக்கினமும் இல்லாம நிறைவேறனும்' என்று நம்புகிற வழிபாட்டு மரபுக்கு சொந்தக்காரர்கள் எமது ஊரவர். நிலவெறிக்கும் நாள் வந்தால் நில்லாத தூக்கத்தை விரட்டி, உழவு செய்ய போகும் உழைப்பாளர்கள்;! இவர்கள் உழைப்பின் பின் ஓய்வுக்கென ஊர்மத்தியில் உள்ள கூமாவடியில் கூடி கொம்பு விழையாடி மகிழ்ந்து வந்துள்ளனர்.

வீரத்தையும் உழைப்பையும் சாரமாகக் கொண்டு விநாயகனையே குலதெய்வமாக்கி வழிபட்டு வந்தனர். இங்கு தொட்டத்தடியில் கொம்புமுறி பிரபல்யமாக இருந்த வந்தது. அங்கு ஆதியில் இருந்து, தொன்றுதொட்டு இந்தவழியால் வரும் வழிப்போக்கர்கள் தங்கி வழிபட்டு வந்த இடத்தில் இந்த அப்பன் அமர்ந்து அருளாட்சி செய்து வந்தமையால் 'கொம்புச்சந்தியான்' என்ற காரணப் பெயரினாலே அழைத்து வந்தனர்.

மண்முனையை உலகநாச்சியார் ஆட்சி செய்த காலத்தில் இந்த தொட்டத்தடியிலேயே போர் யானைகள் கட்டப்பட்டு வந்ததாக ஒரு செய்தியும் உண்டு. காரணத்தால் பெயர் பெற்ற பூரணனை சுற்றி ஒரு கலாசார, சமுக, பொருளாதார மற்றும் கலைகள் வளரத் தொடங்கி இருந்தன. ஆம் இந்த நிறுவக வளர்ச்சியில் இந்த ஆலயத்தின் தலைமத்துவ உபாயம்  பல பரிநாமங்களை வெளிப்படுத்திய விதத்தினையே இங்கு ஆராய்ந்துள்ளேன்.;

சோளர் காலத்து புரட்சியை அட்சரம் தவறாமல் பின்தொடரும் எமது ஆலயம் மட்டக்களப்பு மாவட்ட ஆலயங்களுள் ஒரு சமுகத் தொடர்பை பேணுவதில் எடுத்துக்காட்டாக உள்ளது. இங்கு சமுகம் என்கின்ற நிறுவகத்தின் தலைமை இடமாக இருந்துவரும் ஆலயம் இதுவாகும். பல ஊர்சார்ந்த பொது நிகழ்வுகள், பொது முடிவுகளை இங்குள்ள வண்ணக்குமார் கூடி எடுப்பர். அவற்றை ஊர்சார்ந்த பொதுமுடிவாக ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுக நிறுவனமாக   இருந்துவருக்pன்றது.

ஆதற்குமேலாக பாதயாத்திரை செல்லுவோர்கான தங்குமிடவசதிகள், அன்னதான நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள் அதுபோல் கல்யான, காதுகுத்து, மொட்டையடித்தல் போன்ற சமுக சடங்கு நிகழ்வுகளையும் வழிநடத்துகின்ற ஒரு சமுக ஒட்டுறவை பேணிவருகின்ற மையமாக விளங்கி வருகின்றது.

இவைதவிர இடர் காலங்களில் அவற்றில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு சமிக்ஞைகளை   வளங்கும் அதுபோல் அனர்த்தத்துக்கு பின்னரான மீள் உருவாக்க கட்டமைப்பை வழிநடாத்தும் சமுகப் பாதுகாவல் நிலையமாகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆக இன்பத்திலும் துன்பத்திலும் அதன் அபிவிருத்திச் செயற்பாட்டிலும் தோழ்கொடுக்கும் நிறுவகமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. ஆலயமும் ஆளுமையும்
ஆளுமை ஒரு மனிதனிடம் பிறப்பிலிருந்தும் அதுபோல வெளிப்புறச் செல்வாக்கில் இருந்தும் வளரத்தொடங்குகின்றன. கல்வி ஆளுமைக்கான ஒரு கருவி அது முழுவதுமல்ல. இதுதவிர பேச்சாற்றல், பொறுப்பேற்றல், பொறுப்புக்கூறல், தலைமையேற்றல், நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல், முன்வருதல், பிற மொழியறிவு என்பனவற்றினை வரிசைப்படுத்தலாம். இவைதான் ஒரு மனிதனை முன்னே சென்று ஏனையவருக்கு விடிவெள்ளியாக மிளிர வைக்கின்றன. இந்த வரிசையில் என்னைப் பொறுத்த அளவில் எனது ஆளுமையின் வளர்சியிலும் மற்றும் பலரின் வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்பினை இந்த ஆலயம் நல்கி இருக்கின்றது எனின் அது மிகையில்லை.

ஆலயத்தில் வெறுமனே விசேட தினங்களை நடாத்துவதற்கு பதிலாக பல நிகழ்வுகளையும் அதற்குள் உட்புகுத்திப் பத்தியோடு ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் பலவற்றை அரங்கேற்றி வந்துள்ளது எமது ஆலயம். ஊதாரணத்துக்கு வண்ணக்கரும், முன்னாள் அதிபருமாகிய பெ.வ.ஆறுமுகம் ஐயா அவர்கள் எமது சமகாலத்தில் ஆளுமை வளர்ச்சியில் கலைகளினூடு உள்ளுரில் பங்களிப்பு செய்தவரில் ஞாபகத்துக்கு வருபவர்.

இவர் பாடல்கள், தேவாரப் பதிகங்கள், வேறு திரட்டுக்களையெல்லாம் விஷேட காலங்களில் அரங்கேற்றியும் அளிக்கை செய்தும் இளைஞர்கள் சிறியவர்களிடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளுமையை வளர்தவர். இவர் பாசறையில் இருந்து வெளிவந்தவர்கள் பல துறைகளில் சென்று பளிச்சிடுவது இந்த ஆலயத்தினால் கிடைத்த பயன்.

அது தவிர இங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்குதல், அவற்றை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துதல் அவற்றுக்கு தலைமைதாங்குதல் என்கின்ற வகிபங்கினை இங்குவருகின்ற அடியவர்கள் கற்றுக்கொண்டும், பரீட்சித்துக்கொண்டும் உள்ள பலர் மாவட்ட மாகாண, தேசிய அளவையெல்லாம் கடந்து சர்வதேசத்தில் குரல் ஒலிக்க ஆளுமையை உட்செலுத்திய  ஆலயம் என்றால் அது மிகையில்லை. அதற்கு நூற்றுக்கணக்கில் வாழ்ந்தும், வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் சான்றாகும்.

இவைதவிர சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்களை,  இங்கு நடைபெறுகின்ற பல சமய சமுக, கலாசார நிகழ்வுகளில் களமிறக்கி எதையும் எங்கு சென்றும் பேசுகின்ற தையிரியம், விடய அறிவு  என்பனவற்றை வளர்தெடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சகலகலா நிறுவகம் எமது கொம்புச் சந்தி கோயிலாகும்.

3. ஆலயமும் கலையும்
'கொம்புமுறி ஆடுகிறோம் 
கரகம் கும்மிபாடுகிறோம்
தேற்றாத்தீவு அழகான களரி அம்மா
இங்கு தெருவெல்லாம் கமத்தின் வாடையம்மா'

ஏன்ற ஒரு கவிதையே போதும் இந்த கிராமம் கலையின் மகுடமாக இருக்கின்றது என்பதற்கு சான்று பகர. இந்த ஆலயத்தில்தான் அமுதுண்டோம், நடந்தோம் கிடந்தோம், ஆடினோம் பாடினோம், வரைந்தோம் செதுக்கினோம் என்று அனைத்தையும் அரவணைத்து வளர்த்த தாய்வீடு. இங்கு பாடுகின்ற பஐனைக்கு தனி பக்தி, உரு, மதிப்பு என்பனவெல்லாம் இருந்து வருகின்றது. 'தெருவெல்லாம் தோரணம் ஆடிவரும் அங்கு கண்ணகையாள் காவியமே பாடிவரும், தேவார திருமுறைகள் ஒலிக்குதம்மா இங்கே தேனான இசைவந்து பாயுதம்மா' என்பது நூறு விகிதமும் உன்மை.

இந்த ஆலய விழாக்காலங்களான, சிவராத்திரி, நவராத்திரி, கண்ணகி அம்மன் சடங்கு போன்ற இன்னோரன்ன விஷேட காலங்களில் பிரத்தியேக மேடைகள் அமைத்து ஊரில் உள்ள கலைஞர்களை அரங்கேற்றி நாடகம், கரகம், காவடி, கூத்து, வில்லிசை போன்றவற்றை கட்டி வளர்த்து மெருகேத்தி பாதுகாத்து வந்தமையால் 'கலையூர், தேனூர்' என அயலூரார் அழைக்கும் அளவுக்கு கலைகளை வளர்த்து தடம்பதிக்க வைத்த புனித ஆலயம். இங்கு அரங்கேற்றப்பட்ட பல நிகழ்வுகள் வருடாவருடம் மாவட்ட, மாகாண தேசிய மட்ட நிகழ்வுகளை அலங்கரித்து பரிசில்களைதட்டி வந்ததுடன் மட்டக்களப்பு தமிழகத்துக்கே உரித்தான பொக்கிசங்களின் பெட்டகமாக லிக்கிறது என்னால் எதுவித ஐயமும் இல்லை.

4. ஆலயமும் படைப்பாற்றலும்
ஆலயம்தான் பலரது படைப்பையும் அறிமுகம் செய்து வைக்கும், வெளியிடும் ஒரு பெருமைக்குரிய இடமாக இருந்து வருகின்றது. ஒரு மனிதனின் திறமையை அவனுக்கு கிடைக்கும் களத்தை வைத்தே நிர்ணயிக்க முடிகிறது. அந்த வகையில் பல படைப்புகளை இங்கு தான் தயார் செய்யும் ஒரு மரபு இங்கு இருந்து வருகின்றது. சாதாரணமாக ஆலயத்தை விதவிதமாக அலங்கரிப்பதில் இருந்து, நான் முன்பு கூறியதற்க்கு அமைய ஆடல் பாடல், பண்ணிசை, இசைத்தட்டுகள், காணொளிகள், புத்தகங்கள் இவற்றோடு வரைதல், தோரணம் கட்டுதல் என்கின்ற பல கலைகள் அவை அல்லாத வேறு பல படைப்புகளின் சங்கமமாக மிளிருகின்ற ஒரு பேராலயம் இந்தக் கொம்புச்சந்தி ஆலயமாகும்.

5. ஆலயமும் கல்வியும்
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொள்ளலாம். இந்த வகையில் பாடசாலையுடனும் பாடசாலைக்கு அப்பாலும் எமது ஊர் கல்வியை வளர்ப்பதில் பங்காற்றி வருகிறது.

இந்த வகையில் பஞ்சாங்க பாராயணம், பகவத்கீதை விளக்கவுரை, திருவாசக விளக்கவுரை, நற்சிந்தனை, அறநெறி பண்ணிசை, பேச்சு, நாடகம் போன்ற போட்டி நிகழ்வுகள் என்பன ஆலயத்தில் அறநெறி, ஒழுக்கம், விழுமியம், இசைத்தல் போன்ற பல நேரடி மறைமுக கல்வியினை இங்கு வருகின்ற மாணவர்களிடையே ஏற்படுத்துவது அதுபோல் பெரியவர்கள், புத்திஐPவிகள் போன்றோரினை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வரவளைத்து அவர்களது அறிவை மற்றையோருக்கு அறியவைப்பதுடன், மாணவர்களை பாராட்டுதல் கௌரவித்தல் போன்ற நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்து நிகழ்த்திவருவதன்மூலம் இந்த ஆலயம் கல்விக்கான வளர்சியில் கருசனை கொண்டு வருவது மறைக்க முடியாத உன்மை.

6. ஆலயமும் தொண்டும்.
'அன்பர் பணி செய்திடவே ஆளாக்கி எனை விட்டுவிட்டால், இன்ப நிலை தானே வந்து எய்துமே பராபரமே' என்பார் தாயுமானவ அடிகள். உயிர்களுக்கு அன்பு செய்தால் பெருமான் திருவடிப் பேறு கிட்டும் என்கிறார் தாயுமானவர். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' எனவும் 'நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று  ஈயில் அது படமாடக் கோயில் பகவர்க்கதாமே' என்கின்றார் திருமூலர். இனம், மொழி, நிறம், சமயம், நாடு, சாதி, படிப்பு, அழகு, வயது என்ற வேறுபாடுகளையெல்லாம் மறந்து எவர் ஒருவர் தன்னளவில் இயன்ற உதவிகளைப் பிற உயிர்களுக்குச் செய்கின்றாரோ அவரே எளிதில் இறைவனை அடையலாம்; பிறவி துன்பத்தை நீங்கலாம் என்று இந்த ஆலயத்தில் தொண்டர் குலாங்களை உருவாக்கி தொண்டர்கள் நிறைந்த ஊருக்கு பேர்போனது தேற்றாத்தீவு.

ஆலத்தை துப்பரவு செய்தல், கல்யான வீடு, மரணவீடு போன்றவற்றிக்கு உதவுதல், சேமக்காலை, வீதி என்பனவற்றை துப்பரவு செய்தல், மரம் நடுதல், நாடி வருபவர்க்கு உணவளித்தல், யாத்திரிகர்களுக்கு வழிகாட்டுதல், அன்னதானங்கள் கொடுத்தல், அறநெறிப்பாடசாலைகளை நடாத்துதல் மற்றும் பல வகையிலும் தொண்டினை ஊக்கிவித்து தொண்டுமூலம் ஒருமைப்பாடு, குழச்செயற்பாடு, நல்ல மனப்பாங்கு என்பன வளர உதவியாக இருந்து வருகிறது. ஆக இவ்வாலயம் ஒரு சமுகத்தின் பல்தேவைகளை நிறைவு செய்கின்ற ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமாக இருப்பதற்கு இந்த ஆலயம் துணைபுரிந்துள்ளது எனலாம்.
https://audioboom.com/boos/4295695-?t=0

0 comments:

Post a Comment