ADS 468x60

29 September 2016

இயலுமானவரை இயன்றவரிடமிருந்து இயலாதவர்களுக்காய்!!!!


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் எல்லா வகையான கிராமப்புற மக்களின் பங்களிப்பை அதிகரிக்க முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணமிது. பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து இங்கு ஊழிய வளம் புறக்கணிக்கப்படுவதனாலும், காலநிலை மாற்றம், புதிய நவீன இயந்திர இறக்குமதி, தொழில்நுட்ப வசதி இவற்றினால் பாரம்பரியமாக  நிலத்தினையும் நீரினையும் நம்பி இருந்த ஒரு பரம்பரை படிப்படியாக முடமாக்கப்பட்டு வருவதனையும் அதுபோல் அவர்கள் மாற்றுவழி இன்றி மன உழைச்சலுக்குள்ளாகி பல தீய விடயங்களில் திசை மாறிக்கொண்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஒரு முழுமையான தேகாரோக்கியமான மனிதசமூகத்துக்கே இந்த நிலையெனில் யுத்தம், இயற்கை போன்ற இன்னோரன்ன அனர்த்தங்கள் காரணமாக விசேட தேவையுடையவர்களாக  ஆக்கப்பட்டவர்களின் நிலையினை சற்று சிந்திக்கவேண்டும். இந்த மாவட்ட 2015ம் ஆண்டின் தகவலின் படி எல்லாவகையிலும் விசேட தேவையுடையவர்களென அடையாளங்காணப்பட்ட 6879 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பலர் பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள் சிலர் வயோதிப நிலையை அடைந்தவர்கள் இந்த இரு வகுதியினரும் சமுகத்தில் முன்னிலைப்படுத்தவேண்டியவர்கள்.
இவர்களில் சிலர், இவர்கள் வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தாங்களும் சமூகத்தில் வாழவேண்டும் என ஆசை கொண்டவர்கள். 
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரிமை 6க்கு அமைய 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளும் உயிர்வாழும் உரிமையுடையவர்கள். கருத்துச் சுதந்திரம், கூடும் சுதந்திரம், அந்தரங்கத்தைப் பேணல், பொருத்தமான தகவல்களைப் பெறல், இம்சை மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், கல்வி கற்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் சிறுவர்களுக்கும் உள்ளது என்ற ஐக்கிய நாடுகளின் சாசனத்தை, இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த உரிமைகள் அனைத்தும் வயது, பால், இனம், நிறம், சாதி, மொழி மற்றும் மத வேறுபாடுகளின்றி வழங்கப்பட வேண்டும். சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகளைப் பரப்புவதற்கு அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளும் முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் விதிமுறைகளாகும்.

எனினும், இவை எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் இந்த உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுகின்றனவா என்பதும் இலங்கை போன்ற நாடுகளில் கேள்விக்குறியே.

மூன்று தசாப்தங்களைக் கொண்ட போர்ச்சூழலும் ஓர் ஒழுங்கமைப்பைக் கொண்டிராத சமூகப் பின்னணிக் காரணங்களும், பின்தங்கிய பொருளாதார நிலைமைகளும் இவற்றையெல்லாம் இன்று பின்தள்ளச் செய்துள்ளன. இதனால் நம் நாட்டில் சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் தாராளமாக மலிந்து கிடக்கின்றன.

இருப்பினும் இவற்றையெல்லாம் தாண்டி இப்படிப்பட்ட மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வியை, வசதியை ஆறுதலை முழுமையாக வழங்குவதனூாடாக அவா்களது உாிமைகளை வென்று தரும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை செய்துவரும் கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும் நான் நடக்கமுஇயாமல் அவதியுற்ற திருமதி தங்கம்மாவின் வேண்டுகோளை பதிவிட்டதனை அவதானித்த ஒரு பெருந்தகையின் வேண்டுகோளுக்கிணங்கவும், நான் திரு ஜெயக்குமார் தங்கவடிவேலு என்னும் நல்ல உள்ளம் படைத்த பிரபல வழக்குரைஞரை அணுகி இந்த உதவியினை கேட்ட உடன் அவற்றுக்கு செவி சாய்து உடனடி அவற்றை தந்துதவுவதற்கு முன்வந்து மூன்று பேருக்குமான சக்கர நாற்காலிகளையும் வாங்கி தந்து அவர்களது வாழ்க்கையில் ஒரு படி முன்னேற மனங்கொண்டமையை நாங்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது.

பணம் புகழ் சம்பாதிப்பது அல்ல வாழ்க்கை, அதையும் தாண்டி நாம் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒத்த கருத்து கொண்ட இந்த மனிதரின் உதவி மறக்க முடியாதது.

இதைக்கேட்டதும் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், உற்றோர், நண்பர்கள் மட்டுமல்ல, மொத்த கிராமமே கையை காலாக நினைத்து நன்றி கூறுகிறோம் என்றனர்.

இந்தக் கைங்கரிய பாலத்துக்கு நானும் ஒரு அணிலாக இருந்து ஒரு சிறிய உதவியை செய்ய முடிந்ததே என நினைத்து புளகாங்கிதமடைகின்றேன். இன்றய சிறுவர்தினத்தில் அவர்களது அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும், அதுபோல் இவர்கள்தான் எமது எதிர்காலம் இவர்களை சவால் நிறைந்த எதிர்காலத்துக்கு நாங்கள் தயார்படுத்தவேண்டும் என வேண்டிக்கொள்ளுகின்றேன்.

0 comments:

Post a Comment