ADS 468x60

27 October 2016

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' .

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' என்பது மறுக்க முடியாத ஒன்று. இருந்தும், மட்டக்களப்பு பிரதேசத்துக்கு வரலாறு கிடையாது, அல்லது நீண்ட பண்டை வரலாறு இல்லை என்றுதான் அனேகர் நினைக்கின்றார்கள். மட்டக்களப்புக்கு போர்ந்த பண்பாடு இல்லை என்பது பலரது மனதில் தீர்க்கமாய் உறைந்திருக்கிறது.

இலக்கியம் கலை, மொழிச் செழுமை, வித்துவத்திறன், பிரதேச சமுக மேன்மை ஆகியவற்றில் மட்டக்களப்பு பிரதேச சமுதாயம் ரொம்பவும் பிற்ப்பட்டது என்கின்ற எண்ணப்பாடு நீண்ட காலமாக உலவுகிறது.

பாயோடு ஒட்ட வைப்பவர்கள், மந்திரக்காரர்கள், சும்மா விளைகிற பூமியின் தாராளப் பண்பால் பஞ்சி பிடித்துப் படுத்துக் கிடப்பவர்கள், நடைமுறை தெரியாதவர்கள் என்று இன்னும் இன்னும் மட்டக்களப்பார் விமர்சிக்கப்படுகிறார்கள். மட்டக்களப்பினை ஆழ்ந்து பார்க்காதவர்கள் 'மட்டக்களப்பாரை' பார்க்கும் பார்வை ஆழமானதோ, நிதானமானதோ இல்லை. மட்டக்களப்புக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. உலகின் எந்த மூலையின்றும் கிழர்ந்த மானிட நாகரிகத்துக்கு, எவ்வாறும் தரங்குறையாத வகையில் மட்டு மக்களின் வரலாறு இருக்கிறது.
பண்டய மட்டக்களப்பு முகத்துவார வாயில்

தேனும் பாலும் சேறாகிக் கலக்கும் புவியியல்பும், நீரரர் எனும் மீன்பாடும் களப்பியல்பும் சுவைதரும் இலக்கிய வளமார்ந்த மட்டக்களப்பு இன்று நேற்றல்ல பண்டைப் பெருமை மிக்கது. ஆயினும் காலக்கரையின் கோலம் இந்த மண்ணிற்க்கே ஒரு பண்டை வரலாறு உள்ளதா! என்று திக்குமுக்காட வைத்துவிட்டது . என்று 'மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடிகள் எனும் நூலில்....குறிப்பிடுவது....என்னவோ....உன்மைதான்.                                                                                                                 

மட்டக்களப்பு பிரதேசத்தின் வரலாற்றை இராவணன் ஊழிக்காலம், அதன் பின் சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் அதன் பின் வெளி நாட்டவரின் ஆட்சி என்பனவற்றின் போது கிடைக்கும் ஆதாரங்களை வைத்து ஆன்றோரும் சான்றோரும் சான்றாதாரங்களை காட்டி நிறுவி உள்ளனர்.  சான்றாதாரங்களுள் குறிப்பாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரராலய மற்றும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் பட்டயங்கள், தட்சிண கைலாய புராண விபரிப்பு, திருக்கோயில் கோயில் கல்வெட்டு, குளக்கோயில் கல்வெட்டு, மட்டு பிரதேச வீச்சத்தில் அகழ்வாய்வில் பல்வகைப்பட்ட தொல் பொருட்கள், பழந்தழிழ் பாடல்கள் ஆகியன முக்கியமாக இருக்கின்றன.

மட்டக்களப்பு டச்சுக்காரர் கோட்டை

ஒரு மக்களின் வரலாற்றைச் சொல்ல பல ஆதாரங்கள் தேவை, பலம் மிக்க பேரரசுகள் ஆட்சி செய்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இராசதானிகளின் வரலாறுகளை கண்டறியும் ஆதாரங்கள் கூட அரையும் குறையுமாக இருக்கும் போது அடிக்கடி கடற்கோளாறுகள் வந்து கிள்ளுப்பட்டுக் கிடக்கும், குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்த மட்டக்களப்பில் அது கடினமே. இருப்பினும் மக்கள் வாழ் இடம் இல்லாத இடம் காடு என்பர். எனவே மட்டக்களப்பு என்நொரு நாடு இருந்திருப்பின் அங்கு மக்கள் வாழ்ந்துதானே இருப்பர். அது போலவே குடி இருந்தால் அங்கே முடியும் இருந்திருக்கும் அல்லவா? ஆகவே மட்டக்களப்பு மாநில பூர்வீகம் தொன்மைவாய்ந்ததே. இருப்பினும் இவற்றை மிக நுணுக்கமாகச் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் வரலாற்று ஆசான் இல்லை என்று உங்கள் முன் அடங்கி நிற்க்கிறேன்.

மட்டக்களப்பின் பூர்வீக வரையரை.
மட்டக்களப்பு மாநிலம் எனப்படும் நிலப்பரப்பின் எல்லை பற்றி ஈழத்துப்பூராடனார் இவ்வாறு வரையறுக்கிறார், வடக்கே வெருகல் ஆற்றில் இருந்து ஆரம்பமாகி, தெற்கே குமுக்கன் ஆற்றுடன் முடிகிறது. இவற்றிற்க்கான இடைத்தூரம் 130 மைல்கள். அத் துடன் இவற்றின் பரப்பு 1017 சதுர மைல் என்றும் துணிந்திருந்தார்.
மட்டக்களப்பு மாநிலம் வரையறுக்கப்பட்ட பண்டைய வரைபடம் 


மட்டக்களப்புக்கான பெயர்கள் கொண்டு நிற்கும் பிற்புலம்.
மட்டக்களப்பின் வரலாற்றில் அதன் பெயர் வந்ததற்க்கான காரணத்தினையும் அறியத்தருவது பொருத்தமே, அந்த வகையில மட்டு என்றால் தேன் எனப் பொருள் இந்தப் பகுதியில் நறுந்தேன் கிடைப்பதனால் தேன்பாயும் நீர்நிலை என இலக்கியச் சுவை ஊட்டுகின்றனர்,;

இன்னொரு வகையில், மட்டக்களப்பின் சமுத்திரத்தின் கரைகளில் உருவாகும் தாழமுக்கம், பேரலை எழுச்சி, ஆழி அதிர்வு என்பனவற்றினால் கடல் சமதரைக்குள் புகுந்து தங்கி விடுகிறது. இத்தகைய நீர்நிலைகள் நாளடவில் களப்புகளாக மாறிவிடுகின்றன. இந்தக் களப்புகளின் நீர் மட்டம் வங்கக் கடல் நீர் மட்டத்துக்கு சமமாக இருப்பதனால் முன்னோர்கள் மட்டம் களப்பு என்ற காரணப் பெயரை இணைத்து மட்டக்களப்பு என்று கூறுகின்றனர். இப்போது மட்டகளப்பு தூய தமிழ் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்பதும் உறுதியாகின்றதல்லவா! அத்துடன் பண்டைத் தமிழில் களப்பு, கழி, என்பன நீர்நிலைகளை குறிக்கப் பயன்பட்டது என 'மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள்' எனும் நூலில் குறிப்பிடப்படுகிறது.

சிங்களவர் மட்டக்களப்புவ என்று அழைக்கின்றனர் இதனை மொழி மாற்றினால் சக்தி நிலம் எனப் பொருள்படுகிறது. அதுபோல் இங்கு படையெடுத்த ஐரோப்பியர் வற்றிக்கலோ (BATTICALO) என்று பெயர் பதித்தனர் . அதற்கு தானியக் களஞ்சியம் என அர்த்தம் புகட்டப்படுவதும் வளம் கொண்ட நாடாக இருந்துள்ளது என்பது கண்கூடு.

வயற்களத்தில் கொய்தகதிர் வரையெனப் போர்செய்யும்
நயமட்டுக் களப்பாகும் வாவிசூழ் வளநிலத்தின்
தயவன்றிப் பிறதயவை தகையென்று ஓம்பாத
இயல்புடையார் பண்பெடுத்து இசைத்தமிழில் பாடீரோ
இவ்வாறு புலவர் பெருந்தகை பாடி வாழ்த்தும் பெருமை உடைய இந்த நாட்டிற்கு ஏதும் பண்டை வரலாறு இல்லை என்று சொல்லுவது மனவருத்தமே.

மட்டக்களப்பின் தொன்மை வரலாறு.
மட்டக்களப்பின் தொன்மை கூறுவதில் இராவணன் ஊழி பற்றிச் சொல்லும் ஆரியர்களின் வான்மீகி இராமாயணம் முக்கியமானது. கிழக்குக்கரை தென்கரையாக மாறும் பாணமை பகுதியை அண்டி இரு பெரிய கற்ப்பாறைகள் கடலில் உள்ளன. அவற்றை சின்ன பாஸ் பெரிய பாஸ் என அழைப்பர். இங்கேதான் இராவணன் எனும் திராவிட இனத்து தமிழ் மன்னன் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன் இலங்காபுரி எனும் நகரமைத்து வாழ்ந்தான் என்று வரலாறு கூறுவது மட்டக்களப்பு தமிழர் வரலாற்றின் தொன்மையை கோடிடுகிறது.

அத்துடன் இராவணன், மட்டக்களப்பின் நகரத்தில் அமைந்திருக்கும் அமிர்தகழி மாமாங்கேஸ்வரரை வழிபட்டதாகவும் அதற்க்கு ஆதாரமாக தென் இலங்கையில் இன்றும் காணக்கூடியதாக உள்ள சிறிய பெரிய வாஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள தீர்த்தமாடிச் சென்ற பாதை எனும் இடம், இங்குள்ள தீர்த்தக் குளத்திற்க்கு அனுமன் தன் வாலின் உதவி கொண்டு தீர்த்த நீரை எடுத்ததாக கூறப்படுவது புராண வரலாற்றுச் சான்றுகளாக உள்ளது என, ஈழத்துப்பூராடனார் குறிப்பிடுகிறார்.

அதுபோல் இங்குள்ள ஐதிகத்தின் படியும் வால்மீகியின் கூற்றுப்படியும், புவியியல் சான்றுகளின்படியும் அன்று தென் இலங்கையில் இருந்து அமிர்தகழியில் உள்ள தலத்திற்கு தேரோடி வந்த அப்பாதை படிந்த தடமே இன்ற கடலோரம் பருவமழை காலத்தில் தேங்கும் வெள்ளத் தொடர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதனையே இங்குள்ள மூதாதையர் நம்பினர்.

இன்னொரு சான்றாதாரமாக, ஐயாயிரம் ஆண்டுக்கு முன் மட்டக்களப்புத் தமிழகத்தில் மட்டுமன்றி ஈழத்தின் கிழக்குப் புலம் முழுவதுமே எந்தையுமே எந்தையும் மகிழ்ந்து வாழ்தமையை, தீகவாவி, கொட்டியாரப்பற்று, கதிரவெளி, குருகல்கின்ன, படிய கம்பளை, வெல்லாவ நடுப்படுக்கை, கதிர்காமம் ஆகிய இடங்களில் மேற்க்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்யுகள் மூலம் (வாகரை வாணணின் பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்பு தமிழ், பக்-15) கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகள் உறுதி செய்கின்றன.

கடல் வழி குடியேற்ற வரலாற்றுச் சான்று
அடுத்த சான்றாதாரத்தில், இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் பயணத்தின் கேந்திர நிலையமாக திகழ்கிறது. அதில் முக்கியமாக வங்கக் கடலின் வடக்க்கிலும் மேற்கிலும் இருந்து வரும் கடற் பயணக்காரருக்கு படகுகளை கரை சேர்க்கும் இயல்லு கிழக்கு கரையோரத்துக்கு இருந்தது. இதனால் ஒரிசா (கலிங்கம்)ஈ வங்கம், முதலிய இந்திய வடகிழக்குப் பிரதேசங்களில் இருந்தும், சேர, சோழ, பாண்டிய எனும் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களாலும் மட்டக்களப்பு மக்கள் குடியேற்ற வளர்ச்சி பெற்றது, அதன் தொன்மையை காட்டுகிறது.

இதனால் கடல் வழிக் குடியேற்றங்கள் மட்டக்களப்பில் ஏற்ப்பட்டன. குறிப்பாக காரைதீவை அடுத்த கழிமுக வாயிலான சம்மாந்துறைக்கு அருகில் ஏற்ப்பட்ட வீரமுனை சீர்பாதக் குடியிருப்பும், தாழங்குடாவில் அமைந்திருக்கும், தோணா என்ற கழிமுக வாசலாக மண்முனையில் குடியேறிய உலக hநச்சி குடியேற்றமும், வாகரைக் கரையின் கழிமுக வாசலாக ஏற்ப்பட்ட கலிங்கக் குடியேற்றமும் மட்டக்களப்பு வரலாற்றில் பாண்டியர்களும் சோழர்களும் கடல் வழி தரை தட்டிய திருக்கோயில் குடியிருப்பும் மட்டு மாநில மக்களின் தொன்மைக்கான சான்றுகள் தானே!.

சங்ககால சான்றாதாரம்
இனி சங்ககாலத்துக்கு செல்வோம், மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை நிர்ணயிக்கும் முக்கியமானதொரு ஆவணம் பட்டினப்பாலை தரும் பத்துப்பாட்டு இதில் 'ஈழத்துணவும் காழகத் தாக்கமும்' என்ற செய்யுள் வரிகளில் இலக்கியச் செம்மல் கா.சுப்ரமணியம் அறுதியிட்டுக் கூறும்போது அவை ஆகக் குறைந்த எல்லையாக மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்தன எனவும் அது இலங்கையில் விஜயன் கால் வைக்க முன்னர் எனவும் நிரூபிக்கின்றார். ஈழத்து உணவான அரிசி கடல் வழியாக காவிரிப் பூம் பட்டினத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இத்துடன் ஐரோப்பியர் வறிறிக்கலோ (Batticaloa) அதாவது தானியக் களஞசியம் என சொல்லுவதாகவும் ஓ.கனகரெத்தினம் எடுத்துரைத்துள்ளார்.
இது இங்கு காணப்பட்ட மிகை உணவுகள் உற்பத்தி பற்றியும், அவை கந்தப்பாணத் துறை, வெருகல், வாகரை, இலம்பித்துறை எனும் துறைமுகங்களில் இருந்து மட்டக்களப்பின் மிகை உணவு சென்றுள்ளதனையே இந்தச் செய்யுள் விழிக்கிறது என அவர் மேலும் வலுப்படுத்துகிறார்.
இன்னொரு சான்றாக பெருங்கற்காலத்தில்(கி.மு 1000 –கி.மு 500 வரை) மட்டக்களப்புக்கு வடக்கே 45 மைல் தூரத்தில் உள்ள கதிரவெளி எனும் கிராமதில் தழிழ் நாட்டிற்கிணையான நாகரிக மேம்பாட்டோடு எங்கள் முன்னோர் வாழ்ந்திருக்கின்றனர் எனும் உன்மையை அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல் ஆய்வுப் பொருட்கள் (கி.மு 2ம் நூற்றாண்டு) உறுதிப்படுத்தியுள்;ளமை மட்டக்களப்பு வரலாற்றின் இருண்ட பக்கங்களில் பாய்ச்சப்பட்ட பேரொழி என்று நாம் பெருமிதம் கொள்ளலாம்.
கண்ணகி வழிபாடு
கி.பி 113இல் சிங்கள மன்னன் கஜபாகுவினால் சேர நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி அம்மன் வழிபாடு மட்டக்களப்பில் அதிக இடங்களில் கைக்கொள்ளப்பட்டு வருகின்றமை அதன் வரலாற்று தொன்மையை காட்டுகிறது. உடுகுச் சிந்தின் 71வது பாடலில்,

பட்டிநகர் தம்பிலுவில் காரைநகர் வீரமுனை
பவிசுபெறு கல்முனை கல்லாறு மகிழூர்
செட்டி பாளையம் பதுக்குடியிருப்பு செல்வ
முதலைக் குடா கொக்கட்டிச்சோலை
அட்டதிக்கும் புகழ் வந்தாறு மூலை
அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்..

எனவும் மற்றும் தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி போன்ற இன்னோரன்ன பழம்பெரும் கிராமங்களில் இன்றும் அவை பக்தியுடன் கொண்டாடப்படுவது கண்கூடு.

திருக்கோயில் கல்வெட்டு தம்பிலுவில் அம்மன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட மானியம் பற்றிய தகவல் திருக்கோயில் கல்வெட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறி சங்கபோதி பருமரான திரிபுவன சர்க்கரவர்த்
திகள் சிறி விஜயபாகு தேவர்க்கு ஆண்டு
பத்தா வதில் தை மாதம் 20ந் திகதி சிவஞான
சங்கர கோயிலுக்கு கொடுத்த வொவில.
இதை தன்மத்துக்கு அகித்தம் செய்தானாகில்
கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற
பாவத்தை கொள்ளக் கடவாராம்.

(திருக்கோவில் புராதன கல்வெட்டு)
 இதில் குறிப்பிடப்பட்டுள்ள அரசன் முதலாம் விஜயபாகு (கி.பி1075) என்று காலக் கணிப்புக் கூறும்.
இவ்வாறு இன்னும் பல சான்றாதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆகவே வரலாறு என்பது இறந்த காலத்து உன்மைகளை நிறுவி விடுதல் சம்மந்தமான இடையறாத தேடல்களாகும். இந்த தேடல்கள் தான் மனித குலத்து மேம்பாட்டுக்கு உதவும் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. காலவோட்டத்தில் மனித நாகரிகமாக எஞ்சியுள்ள விழுமியங்கள், அனைத்துமே வரலாற்று உண்மைளை அறிவதன் மூலமாகவே சாத்தியமாகிறது என நம்புகிறோம். ஏன எஸ்.போ அவர்கள் கூறியதற்க்கு இணங்க மட்டக்களப்பு தமிழ் மக்களின் நாகரிக எல்லையை புட்டுக்காட்ட தேவையான வரலாற்று ஆதாரங்கள் இருந்தும் அவை புதிய சமுகத்தின் காலடிக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி ஏனைய சமுகங்களின் தேடல்கள்போல் எடுக்கப்படவில்லை. இருந்தும் இந்த வலைத்தளத்தின் ஊடாக இந்த தழிழர்களின் தொன்மையின் ஆணிவேராக இருக்கும் வரலாற்றுச் சான்றாதாரங்களை முன்வைத்துள்ளேன்.

(பண்டைய வேடுவத்தமிழன்)
உன்மையில் அனைவருக்கும் மட்டக்களப்பு மாநிலத்துக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் வேட்கை இருக்கவேண்டும். எமது நாட்டில் இருந்த தமிழ் பேசும் மக்கள் இன்று கடல் கடந்த நாடுகளான ஒல்லாந்து, போத்துக்கல், நோர்வே, பிரஞ்சு, இங்கிலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் பரந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு அந்த மொழியில் பேசவும், எழுதவும், வாசிக்கவும் நன்கு தெரியும். வெளிநாட்டவர்களால் பல நூறாண்டு ஆளப்பட்டு வந்த இம்மாநிலம் பற்றிய தகவல்கள் அங்கு காணப்படும் நூலகங்களில், அரும் பொருட்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள், வரலாற்றுக்கழகங்கள், ஆவணப்பதிவு நிலையங்கள் என்பனவற்றில் காணப்படுகின்றன அவற்றை திரட்டி தமிழில் மொழிபெயர்த்து அவற்றை நூலாக்க அனைவரும் முயற்சிக்கவேண்டும். அது இங்கு இருக்கும் என்னால் பண்ண முடியவில்லை.

அதற்கு மேலாக மட்டக்களப்பு மாநிலத்தின் மூளையாக இருக்கும் கிழக்குப் பல்கலைக்கழகம் இவை சார்ந்து என்ன செய்கிறது அல்லது என்ன செய்யத் துணிந்துள்ளது என்கின்ற கேள்வியை சமுகத்திடம் இருந்து சதா எதிர்நோக்கும் நிலையில், இவர்களை நம்பி இருப்பதில் என்ன பயன் எனத் தோணுகிறது. எனவே இவற்றை விட்டு இன்னும் இன்னும் ஆய்வுகளை செய்ய பொது அமைப்புகள், ஆர்வலர்கள் மண் சார்ந்த ஆய்வாளர்களை, எழுத்தாளர்களை ஊக்குவித்து இவற்றை வளரச் செய்ய வேண்டும். எனவே மட்டக்களப்பு மண்ணுக்குள் இருக்கும் வரலாற்றை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது அல்லவா.
சி.தணிகசீலன்

0 comments:

Post a Comment