ADS 468x60

31 January 2017

வந்து உன்னை அள்ளுகிறேன்.....

கால் கழுவ களனிக்காடு
கண்டு மகிழ களத்து மேடு
பால் நிறைந்த வெள்ளைக் கதிர்
பருவம் வந்தால் தின்னும் புதிர்

வில்லுக் குளத்து வீச்சிமீன்
விடியக் கிளம்பும் சூரியன்
பல்லுத் தீட்ட ஆலங்குச்சி
பக்கத்து கோயில் மணி

உதவாதவா்கள் உள்ளவரை உருப்படாது ஒன்றும்.

மரத்தை தெய்வமாய் வழிபட்டனர் ஏன்? மரம் கனி தந்தது, காய் தந்தது, இலை குழை தந்தது, நிழல் தந்தது, நிலம் காத்தது, படுக்க மெத்தை, உடுக்க துணி, எடுக்க பை, அடுக்க அலமாரி, சுவாசிக்க காற்று, வாசிக்க கடதாசி இன்னும் எத்தனையே எத்தனையோ! ஆனா எங்க ஊரில இந்த தெய்வத்தை வைத்து பலன்பெறத் தெரியல்ல
கவலையாக இருக்கிறது, யாரும் பராமரிப்பார் இல்லை, நாட்டி நாலடி உயரமாக கூட்டி வளர்த்த இந்த மரங்களை சுற்றிய கம்பிக்கூடு, கூட இருந்த கம்புத்தடி என்பன சிலவற்றை களவாடிவிட்டனர்.
அப்பப்போ போகும்போது அழனும்போல தோணுது. ஊரில் எத்தனையோ சங்கம் கழகம் இருக்காம், எத்தனையோ உறுப்பினர்கள் இருக்கிறாங்க அது தவிர தொண்டர்கள் இவர்களுக்கு எல்லாம் ஏன் இந்த அக்கறை வருவதில்லையோ தெரியவில்லை. கோபால் எனும் ஒரு தொண்டா் எனக்கு அப்பப்போ உதவியாய் இருப்பது ஒரளவுக்கு ஆறுதலாக இருக்கிறது.

22 January 2017

ஜல்லிக்கட்டு

இது மாட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல தமிழ் நாட்டுக்கான போராட்டமாக இருப்பது மிக்க மகிழ்சி. இன்று இது உலகத்தில் ஒரு புரட்சியாகப் பார்கப்படுகின்றது. அது மாணவர்களின் திரட்சியாக நோக்கப்படுகின்றது. நெடுநாளாக அவதானித்து பெருமை கொண்டிருந்தேன், உலகத்தில் தமிழன் இவளவு தானே என்றெனக்கிருந்த சிறுமை கொண்றிருந்தேன்.

19 January 2017

நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன்

நான் 16.01.2014 அன்று நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன், அங்கு புதிதாக வந்திருக்கும் சின்னஞ்சிஞசுகளை ஆசையோடு பார்க்கச் சென்றேன். குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து குட்மோணிங் சொல்லி வரவேற்றது என்னை ஒரு கணம் பழய நினைவுக்கு கொண்டு சென்றுவிட்டது. 

17 January 2017

எமது மாவட்டத்தில் பெண்களின் நிலை கவலைக்குரியதே!!


பொதுவாக இலங்கையில் 150000 மாணவர்கள் வருடம் ஒன்றுக்கு உயர்தரத்தில் தோற்றுகின்றனர். அதில் 25000 மாத்திரம் தேசிய பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஏனைய 125000 பேரின் நிலை? கேள்விக்குறியாகவே போகின்றது. "ஆசியாவின் அறிவு மையம்" என்ற எடுகோள் சரியான திட்டமிடல் இன்மை காரணமாக வேலையற்ற, வழியற்ற சமுகம் ஒன்றினை தோற்றுவித்துவரும் அபாயம் இன்று காணப்படுகின்றது.

அரசியல்வாதிகம் மக்களும்...

எங்கள் கட்சியில், 
சேருபவர்கள் உண்டு!!
மாறுபவர்கள் இல்லை!!!
அங்கு சல்லிக்காக கட்சி தாவுகிறான்
இங்கு நெல்லுக்காக வெயிலில் சாவுகிறான்..

'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'

இற்றைக்கு2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணம், இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது. 'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்' என என் நண்பர் ஒருவர் இந்தியாவில் இருந்து உரையாடியது எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இப்போது ஏன் அப்படி சொன்னார் என்று பார்க்கும்போது தெழிவாகிறது. 'ஒரு மொழியின் வளர்ச்சி அந்த சமுகத்தின் அந்தஸ்த்தினை உயர்த்துகிறது' என புலவர் மணி உள்ளதும் நல்லதும் எனும் புத்தகத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுவது உன்மைதான். மட்டக்களப்பில் தழிழ் என்றால் மண் மணக்கும், தேன் இனிக்கும். இது கிராமத்துக்கு கிராமம் பேச்சுவாக்கில் வேறுபட்டு சுவை படுவதனை பட்டி தொட்டிகளை எட்டிப் பார்த்தால் புரியும். இங்கு எமது மக்கள் பேசிச் சுவைக்கும் தமிழ், சங்கம் வளர்த்த மதுரை மக்கள் பேசும் பேச்சு வாடை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

மட்டக்களப்பு இன்று நேற்றல்ல பண்டைப் பெருமை மிக்கது.

தேனும் பாலும் சேறாகிக் கலக்கும் புவியியல்பும், நீரரர் எனும் மீன்பாடும் களப்பியல்பும் சுவைதரும் இலக்கிய வளமார்ந்த மட்டக்களப்பு இன்று நேற்றல்ல பண்டைப் பெருமை மிக்கது. ஆயினும் காலக்கரையின் கோலம் இந்த மண்ணிற்க்கே ஒரு பண்டை வரலாறு உள்ளதா! என்று திக்குமுக்காட வைத்துவிட்டது . என்று 'மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடிகள் எனும் நூலில் குறிப்பிடுவது என்னவோ உன்மைதான். 

மட்டக்களப்பு மாநிலம் பூர்வீக தொன்மை வாய்ந்ததே!

மட்டக்களப்பு பிரதேசத்தின் வரலாற்றை இராவணன் ஊழிக்காலம், அதன் பின் சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் அதன் பின் வெளி நாட்டவரின் ஆட்சி என்பனவற்றின் போது கிடைக்கும் ஆதாரங்களை வைத்து ஆன்றோரும் சான்றோரும் சான்றாதாரங்களை காட்டி நிறுவி உள்ளனர். சான்றாதாரங்களுள் குறிப்பாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரராலய மற்றும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் பட்டயங்கள், தட்சிண கைலாய புராண விபரிப்பு, திருக்கோயில் கோயில் கல்வெட்டு, குளக்கோயில் கல்வெட்டு, மட்டு பிரதேச வீச்சத்தில் அகழ்வாய்வில் பல்வகைப்பட்ட தொல் பொருட்கள், பழந்தழிழ் பாடல்கள் ஆகியன முக்கியமாக இருக்கின்றன.

பாரப்பா பழனியப்பா எப்பங்க நாம முன்னேறுவது???

நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள் அது 1950களில் இலங்கை மற்றும் இந்தியாவை விட ஏழை நாடாகத்தான் இருந்தது ஆனால் இன்றய சிங்கப்பூர் முற்றிலும் வேறுபட்டது, அதன் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 43 லெட்சம் மற்றும் கிட்டத்தட்ட 644 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட குட்டித்தீவு இது. இந்தியாவின் வெங்குழூரை விட சிறிய நகரம். ஒரு சிங்கப்பூர் குடிமகனின் சராசரி வருமானம் நம்மை விட பன்மடங்கு அதிகம். 80 சதவீதம்பேர் தனி பிளட் வைத்திருக்கின்றார்கள். இது இருபத்தைந்தே ஆண்டுகளில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.

எமது மாவட்டம் வள அளவில் நலிவுற்றிருக்கவில்லை.


எமது மாவட்டம் வள அளவில் நலிவுற்றிருக்கவில்லை (பின்னடைதல்) ஆனால் தனிப்பட்ட மற்றும் குழு என்ற அளவில் (குறிப்பாக தமிழ் சகோதரங்கள்) மிக மிக நலிவுற்றிருக்கின்றது. இந்த நலிவுறல் நிலை அதிகமாக யுத்தம் காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றது.


இவைதான் மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சமுக பின்னடைவை அவர்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்த மக்களுக்கு மாறிமாறி வரும் இடர்களை எதிர்நோக்கும் ஒரு அபாக்கியவான்களாகவே எம் மக்கள் இருந்து வருகின்றனர்.

எங்கள் நாட்டின் எருமைக்கும் இங்கிதம் தெரியும்-

எம்மக்கள்
கருமையாக இருந்தாலும்
வெள்ளை உள்ளம் படைத்தவர்கள்
நாடி வருவோரை எல்லாம்
ஓடி ஓடி உபசரிப்போர்
இதனாலோ எம்மை
வந்தோரை வாழவைப்போர்- என
சொந்தம் கொண்டாடுகிறார்

ஏன் பிறரிடம் கடுஞ்சொற்களைக் கூட்டி பேசவேண்டும்?


இனிமையாக தான் பிறரோடும், தன்னோடு பிறரும் உரையாடுதலின் இன்பத்தினை அறிந்து உணர்ந்தவர்கள், எதற்காக, ஏன், பிறரிடம் கடுஞ்சொற்களைக் கூட்டி பேசவேண்டும்? 

பிறர் தன்னிடம் பேசும் இனிய மொழிகளிலே இன்பம் அடைகிறவர்கள், மற்றவரிடத்திலே தாங்கள் பேசுவது வன்மொழியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நுகர்வோருக்கான குறைந்தளவு பண்பு அது.

கறிக்கு ஏதும் கரப்புக்க ஏத்தனும்..

பெருக்கேற முன்ன
சுறுக்கா வாங்கடாப்பா
கருக்கலானா பிறகு
கரப்பு குத்த முடியாது

எட்டிப் போட்டாத்தான்
ஏத்தடிக்கு போகலாம்..
நேத்தய மாதிரி
கூத்தாடித் திரியாம
கறிக்கு ஏதும்
கரப்புக்க ஏத்தனும்..

வட்டைக்க போறன் மச்சான்

வாரன் மச்சான் ஒள்ளுப்பம்
வரம்பக் கட்டிப்போட்டு
வந்த தண்ணியெல்லம்
வக்கடய புட்டுபோட்டாம்

வெள்ளாப்புல வாறத்துக்கும்
வெளிச்சம் தெரியுதில- இப்ப
புள்ளாப் பனிப்பெயிது
புளுக்கம் வேற மதியம்

கூட்டம் வைக்கிறானுகளாம் மச்சான்
குரக்கன் அரைக்கிற வேலையும் கிடக்கு-இதில
நாட்டம் நமக்கில்ல 
என்ன போனா!!!
கோயில ஒடச்சிப்போட்டான்
கூடிக்கதைச்சி இருக்கம்
குழு அமைச்சி கூடியவர
குடியேத்தச் சொல்லிருக்கம்- நாங்க
அரசாங் கட்சி இல்லையே!
கொடுக்க ஒண்டுமில்ல என்டும்,

உரிமையை உடக்கூடாதென்று
உசுப்பேத்துவானுகள் வேறென்ன?
படுவான் கரை கிரான் வாகரை எல்லாம்
திடகாத்திரம் இழந்து கிடக்கு புள்ள
தின்ன சோறில்லாம மண்ண நம்பிக்கெடக்கம்

அறிவிருந்தா அபிவிருத்திய பேசுவான்
அன்பிருந்தா அரவணைத்து பேசுவான்
வடக்கைப் பாத்தாவது வாழவைக்க தெரியாதா?
எடக்குமுடக்கா பேசி ஏமாத்தாதிங்கடா! -ஓ
நம்மட சனம் பாவம்.

எமது பிள்ளங்களுக்கு எதுக்குப்பா கல்வி?


ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கான பெரிய பாதை கல்வியே, கல்விதான் இன்று வாழ்க்கைக்கான ஆதாரமாகிவிட்டது. எமது பிரதேசங்களில் காணப்படும் பாரபட்சம், வறுமை, கடந்து சென்ற அனர்த்தங்கள், அக்கறையீனம் போன்றவற்றால் மெது மெதுவாக எம்மினத்தை விட்டு கல்வி வழுவி கூலிக்காரர்களாகிவிடும் நிலையில் உள்ளமை கண்கூடு. (அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்)

அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, போதைவஸ்த்து, கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், வன்முறைகள் என அனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது கல்வியில் காணப்படும் பின்னடைவாலேயாகும்.

எங்கட வட்டவிதானயார் என்ன சொல்லுறாரு??


'அன்றிருந்தது வேற இப்ப இருக்கிற நிலவரம் வேற தம்பி' வட்டவிதானையார் ஞாபகங்களை கிளர ஆரம்பித்தார். "இந்த தும்பங்கேணி பழுகாமம் றோட்டு வெட்டுக்காலம் வந்தா திருவிழாத்தான்.

வெட்டுறவன், சூடுபோடுறவன், வண்டிக்காரன், சோத்துப்பொட்டலம் சொமக்கிறவன், கதிரு பொறக்கிறவங்க எண்டு வௌ்ளாப்பில இருந்து மயண்ட வரரைக்கும் ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.
என்ன, அண்டைக்கு மனிசனப் பாத்தம் இண்டைக்கு மெசினப் பாக்கிறம்.

சிறுவர் ஊழியத்துக்கெதிரான சிந்தனைஅண்மைய உலகலாவிய கணிப்பீடுக்கமைய உலகில் உள்ள சிறுவர்களில் 5 தொடக்கம் 14 வயதுக்குட்ப்பட்ட 120 மில்லியன் சிறார்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நேரடி மற்றும் மறைமுக மூல காரணங்களாக வறுமை, வயது வந்தோருக்கான வேலையின்மை, குறைந்தளவான சமுகப் பாதுகாப்பு, கல்வியைப் பெறுவதற்க்கான வசதிக்குறைவு என்பன கண்டறியப்பட்டுள்ளன. எமது பகுதிகளிலும் இவை அதிகரித்துக்காணப்படுகின்றனஇருப்பினும் எமது பெற்றோர்கள் இவை சார்ந்த விழிப்பை பெற்று வருவதனால் அவை ஓரளவு முன்னேற்றம் அடைந்து காணப்படுவது வரவேற்க்கத்தக்கதே.


எமது மாணவர்களின் நல்ல தரமான கல்விக்கு உத்தரவாதமளிப்போம்.

பூமாலைகள்,புகழ் மாலைகள்

பூமாலைகள்,புகழ் மாலைகள்
புதிது புதிதான வரவேற்புக்கள்
'கூலிங் கிலாசு'களோடு சில
அதிகாரிகள்,
தலையில் செருகிய
கண் கண்ணாடி,
சுத்தமான பூசாரிக் கோலம்,
மாணவருக்குப் பாதணி
வழங்கிய அதிகாரியின் ஒரு படம்,

மரண உத்தரவாதத்துடன் 1732 போ்!


இன்று ஒரு பத்திரிகைச் செய்தி இலங்கையில் எயிட்ஸ் நோயினால் மரணம் உத்தரவாதப்படுத்தப்பட்டவர்கள் என 1732 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான மாற்று மருந்து கண்டு பிடிக்கப்படாதவரை இந்த மரண உத்தரவாதத்தினை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

எமது சமுகம் மற்றும் மக்களின் உளப்பாங்கு என்பன ஆண் பெண் ஆகிய இரு பாலாரிடையேயும் இந்த நோய் அறிகுறிகள் தோன்றும் போது அதை பயத்தில் மூடிமறைக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையில் 3600 இருந்தவருவதாகயும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தாங்களாக முன்வந்து அவற்றுக்கான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில்லை. இதனால் அவர்களிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவும் அபாயமும் இருந்து வருகின்றது.

இந்த நிலை பாதிக்கப்பட்டவர்களின் உடல், உள மற்றும் பொருளாதார நிலையை மோசமடைய வைப்பதுடன் அவர்களை மரணத்தின் வாசலுக்கு விரைவில் அழைத்து வருவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகில் 1981 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை உலகம் எங்கும் இந்நோயால் அவஸ்த்தைப்படும் மக்கள் தொகை 35 மில்லியனாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை!!


நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரமிது, இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ஒன்று என்ற மனப்பாங்கை நிறுத்தி நமது நாளைய நாளை நாமே தீா்மானிக்கும் சக்திகளாக மாற வேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், அதர்மத்தை தர்மம் வெல்லும் என்பது கண்டும் கேட்டும் அறிந்த ஒரு தத்துவம். இது ஒரே முறை மட்டும் நடக்கும், அல்லது நடந்தது அல்ல. அது போல இதோடு சரித்திரம் முடிந்து விடவில்லை. மறுபடி அதர்மம் வெல்லும் இதை மறுபடியும் தர்மம் வெல்லும். இது காலம் காலமாக நடந்து கொண்டே வருகிறது. ஏன் இந்த தொடர் போராட்டம்? இந்த சரித்திர உண்மையை நாம் வேறு கோணத்தில் ஆராய்ந்து பார்க்கலாம்.

எங்கள் எதிர்காலம் தமிழர் கையிலா அல்லது மாற்றான் கையிலா?


கிழக்கு வாழ் தமிழ் மக்களே எங்களுக்கு வைக்கப்பட நீளமான ஒரு ஆப்பு என்னவெனில், 2001 நடந்த தேர்தல் போல் இம்முறையும் தேசியகட்சிகளும் , துவிசகர வண்டியில் வந்த தேசிய வியாபாரியும் , உதயசூரியன் போல் வந்த மங்கு சனியும் , நாம் திராவிடர் என்ற திருடரும் கிழக்கின் தமிழர்களின் வாக்கு பலத்தை அழிக்க விடாதீர்கள். 

வடக்கில் எத்தனனை கட்சி போட்டி போடலும் முடிவு அங்கு தமிழர் கையில்தன் ஆசனம் போய்க் கிடைக்கும் ஆழும் கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் யாரோ ஒரு தமிழர் தான் வெற்றிபெறுவார். ஆனால் கிழக்கில் களம் முற்றிலும் வேறுபட்டது. சிந்தித்து செயல்படுங்கள் கர்த்தர் ஆனாலும் கந்தன் ஆனாலும் கிழக்கில் கிழக்கின் பூர்விககுடி "தமிழன்" தமிழன் தலை நிமிரவேண்டும். 

ஏன் கிழக்கில் முஸ்லிம்களைப்போல தமிழர்கள் வாக்களிப்பதில்லை!

எழுவான் படுவான் என சூரியன் இரு தோற்றங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே துறை நீலாவணை வரையுள்ள ஏறத்தாழ 100 கி.மீ தூரத்தை கொண்டுள்ள மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.

இங்கு எழுவான் கரைப் பகுதியினிலேயே மக்கள் அதிகம் செறிந்து வாழுகின்றனர். மேற்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக பரந்து வாழுகின்றனர். இதில் முஸ்லிம் சமுகத்தவர் காத்தான்குடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர், பாலமுனை ஆகிய பகுதிகளில் செறிந்து வாழுகின்றனர்.

ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை.


நாங்கள் மீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறோம். நாங்கள் பல காரணங்களால் கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம்.

'அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிற கதையாக' இருக்கிறதோ! எங்களுக்கிடையிலான ஒற்றுமை இன்மை என எண்ணத் தோன்றுகின்றது. நான் நாளாந்தம் பார்க்கும் எம்மக்களின் அவலம் எண்ணிலடங்காது, சொல்லி மாளாது.

வரலாற்றை உருவாக்குபவர்களாக இருப்போம்.


அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, இளைஞர்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எமது இனிய வணக்கங்கள். இதை உங்கள் முகப்புத்தகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


எமது இனம் தொன்றுதொட்டு இந்தநாட்டில் வாழ்ந்துவரும் ஒரு பூர்வீக நாகரிகத்தினைக் கொண்ட, எடுத்துக்காட்டான, புரட்சிகள் பல படைத்த, சலுகைக்கு அடிபணியாத ஒரு இனமாகும்.

காலம் காலமாக சுதந்திரத்துக்குப் பின் பல அடக்குமுறைகளை பேரினவாதம் என்ற பெயரில் சந்தித்து சரிந்திருந்தது, அடிபட்டு முறிந்திருந்தது. ஜனநாயகமும் சட்ட ஒழுங்கும் நாம் அனுபவிக்க முடியாமல் சீரழிந்து இருந்தது. அரசிடம் மண்டியிடாத எம் தலைமைத்துவத்தினால் நாட்டின் வரப்பிரசாதங்கள் தமிழர்களுக்கு புறக்கணிக்கப்பட்டு இருந்தது.

16 January 2017

தைப் பொங்கல் தமிழ் பொங்கலா??

'தம்பி என்ன விளையாடுறீங்களோ? பாட்டன் முப்பாட்டன் காலம் இருந்து நாங்க கொண்டாடிவாறம் நீங்க என்ன புதுசா கேட்குறீங்க.....' என்று ஒரு பெரியவர் என்னிடம் கேட்க்கத் தொடங்கினார்.. உண்மைத் தமிழர்கள் தங்களுக்கு என்று இருக்கும் தனித்துவத்தினை, கொண்டாட்டங்களை அன்று பின்பற்றியதுபோல் இன்று பின்பற்றுகிறார்களா? என்றால் இல்லை என்றே பதில் வரும். அனேகம் பேர் இன்று தைப்பொங்கல் தமிழர் புதுவருடமா! என்று தமிழ் மக்களையே ஒரு கணம் குழப்பமடைய வைத்துள்ளனர். எமது உப கண்டத்தில் உள்ள இந்தியாவில்கூட அண்மையில் தான் தைப்பொங்கலே தமிழ் பொங்கல், அவர்களது புத்தாண்டு பிறப்பு தினம் என்று உறுதி உரைத்திருப்பது என்னவோ வேடிக்கையாக இருந்தாலும் இதுதான் தமிழர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. எது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் வட கிழக்கில் உள்ள பூர்வீக தமிழ் மக்கள் பண்டு தொட்டு இன்று வரை தைப்பொங்கலை வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது அவர்களது பழமை போற்றும் பண்புக்கு சான்றாதாரமாகும்.

07 January 2017

வாகரைத் தமிழில் வசப்பட்டு வந்தேன்!

இன்று எனக்கு மிக மிக மகிழ்சியான நாள், வாகரை தமிழ் கமழ்ந்து வந்தேன். கம்பன் என்ன கொம்பனா? என என் மனம் என்னைப் பார்த்து வம்பளக்கிறது. 

அத்தனை தங்கத் தமிழ் சிங்கங்களின் கோட்டையாக, வெந்து புண்பட்டு சிவந்த மண் இன்னும் சுட்ட பொன்போல் பளிச்சிடுவது, நானும் மட்டக்களப்பில் பிறந்தேன் என பெருமை கொள்ளச் செய்கிறது. 

கதிரவெளிப் பாடசாலையில் நடந்த பட்டிப் பொங்கல், அதனுடன் அரங்கேறிய கூத்துப்பாடல் என்னை மெய் சிலுக்க வைத்து விட்டது. அத்தனை மக்களுக்கும் மத்தியில் என்னையும் பேச அழைத்து விட்டனர். ஏதேதோ அத்தனை ஆயிரம் பேருக்கும் முன் மடைதிறந்தாற்போல் பேசினேன். 

06 January 2017

மட்டக்களப்பில் மழுங்கிப்போகும் மரமுந்திரிகைச் செய்கை!


மட்டக்களப்புக்கு இருக்கும் தனித்துவங்களுக்குள் இந்த முந்திரிச் செய்கையும் ஒரு அடையாளமாகும். இருந்தும் கஸ்ட்டப்படுபவன் பலனடையாமல் போகும் நிலைதான் இந்த விவசாயிகளுக்கு நேருகிறது. இவர்கள் பயிராக்கி, வளர்த்து அந்த விளைச்சலில் முழு இலாபமும் அடையமுடியாமல் அவர்களே அவர்களது பொருட்களை அறாவிலைக்கு வாங்கும் துர்ப்பாக்கிய நிலையில் எம்மவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள். இவர்கள் எப்போது எக்ஸ்பிறஸ் றோட்டில் பயணம் செய்வது??.

04 January 2017

மட்டக்களப்புக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது கனபேருக்கு தெரியாது' தோணிதாட்ட மடுவின் சோகக் கதை


போய்க்கொண்டே இருந்தோம் அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.
ஆமாம் அதுதான்  கோறளைப்பற்று வடக்கில் நில வளம் நீர் வளம் ஒருங்கே அமையப்பெற்ற பேர்பெற்ற வாகரைப் பிரதேசத்தில் அமைந்த ஒரு பழம் பெரும் கிராமம்தான் தோணிதாட்டமடு எனப்படும் கிராமமாகும். இது புச்சாகேணி என்னும் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடமாகும். இங்கு மொத்தமாக 47 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அதன் மக்கள் தொகை 171 உம்; அதில் 7 கணவரை இழந்த பெண்களும் 15 பாடசாலை செல்லும் மாணவர்களும் அதுபோல் 13 பாலர்வகுப்பு சிறார்களும் உள்ளடங்குவர்.

சுபீட்சமான பாதையை நோக்கிய ஏமாற்றங்களில்லாத ஆண்டாக மலர 2017ஐ வரவேற்கிறோம்

கடந்து வந்த கசப்பான பாதைகளின் பயணங்களை இன்னும் நாங்கள் ஒரு முன்னேற்றத்துக்கான வழிகளாக கொண்டு எங்களை நாங்கள் புதிதாக்கிக் கொள்ளவேண்டும்;. பரந்து கிடக்கும் வயல் நிலங்களும், மீன் பாடும் வாவி மகளும், கனிகள் கொட்டும் சோலைகளும், அலைகள் மோதும் ஆழ்கடலும் வருமானமும் வளர்ச்சியும் கொண்ட சமுகத்தை ஏற்ப்படுத்த போதுமான வளங்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருந்தும் இன்னும் எம்மக்களை எடுத்தேத்தும் உணர்வுள்ள, தொண்டுள்ளம் கொண்ட, மனிதாபிமானமான ஒரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்கின்ற உறுதிமொழியே இன்று எம் சமுகத்தின் முன் நிற்க்கவேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்குமா!

மாரி மழை
காட்டு வெள்ளம்,
பட்டினிச்சாவு,
இடி,
மின்னல்..
இவைகள் மட்டும்..
எங்களை சொந்தம்.
கொண்டாட...
சூரியனே- நீ
எங்கு சென்றாய்..