ADS 468x60

16 January 2017

தைப் பொங்கல் தமிழ் பொங்கலா??

'தம்பி என்ன விளையாடுறீங்களோ? பாட்டன் முப்பாட்டன் காலம் இருந்து நாங்க கொண்டாடிவாறம் நீங்க என்ன புதுசா கேட்குறீங்க.....' என்று ஒரு பெரியவர் என்னிடம் கேட்க்கத் தொடங்கினார்.. உண்மைத் தமிழர்கள் தங்களுக்கு என்று இருக்கும் தனித்துவத்தினை, கொண்டாட்டங்களை அன்று பின்பற்றியதுபோல் இன்று பின்பற்றுகிறார்களா? என்றால் இல்லை என்றே பதில் வரும். அனேகம் பேர் இன்று தைப்பொங்கல் தமிழர் புதுவருடமா! என்று தமிழ் மக்களையே ஒரு கணம் குழப்பமடைய வைத்துள்ளனர். எமது உப கண்டத்தில் உள்ள இந்தியாவில்கூட அண்மையில் தான் தைப்பொங்கலே தமிழ் பொங்கல், அவர்களது புத்தாண்டு பிறப்பு தினம் என்று உறுதி உரைத்திருப்பது என்னவோ வேடிக்கையாக இருந்தாலும் இதுதான் தமிழர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. எது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் வட கிழக்கில் உள்ள பூர்வீக தமிழ் மக்கள் பண்டு தொட்டு இன்று வரை தைப்பொங்கலை வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது அவர்களது பழமை போற்றும் பண்புக்கு சான்றாதாரமாகும்.
எனவே இந்த பொங்கல் பற்றிய கட்டுரையில் அதன் சிறப்பு, தோன்றிய வரலாற்றுப்பின்னணி, அது கொண்டாடப்படும் முறைகள்இ அது மட்டக்களப்பில் பெறும் முக்கியத்துவம் என்பனவற்றை சற்று உற்று நோக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தைப்பொங்கல் தமிழர்களிடையே ஏன் முக்கியம் பெறுகிறது?
பகலவன் கோலம்போட பறவைகள் பண்ணிசைக்க 
மலர்கள் மணம் பரப்ப மரங்கள் தலையசைக்க 
மட்டக்களப்பு கரும்புசேர்த்து யாழ்ப்பாண வெல்லமிட்டு 
அம்பாரை  அரிசி சேர்து வவுனியா வாழைப்பழமிட்டு 
திருமலை பசும்பால்  ஊற்றி அனைத்தையும் ஒன்றுசேர்த்து  
பொங்குவோம் பொங்கல்.....

தமிழர்களின் ஒவ்வொரு அனுஸ்ட்டானங்களுக்குப் பின்னும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அதுபோல் ஒவ்வொரு நிகழ்வும் புவியியல், இயற்கை மாற்றங்களுக்கு ஏற்புடையதாக விஞ்ஞான முறைமையை அஞ்ஞானத்தில் கண்டு தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றால் அவை மிகையல்ல. குறிப்பாக பொங்கல் விழாவை சூரிய வழிபாடோடு சுருக்கிப் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும். இது தமிழர்களின் ஒரு ஆண்டு கழிந்து மறு ஆண்டு தொடங்குவதை கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும். இது ஆங்கில வருடத்தில் 13 தொடங்கி 17 வரை விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

அந்தக்காலத்திலேயே தமிழர்கள் ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்துக் கணித்தார்கள். ஆரியர்கள் நான்கு பருவங்களாக மட்டுமே பிரித்து வைத்திருந்தார்கள். தமிழர்கள் கணித்த பருவங்கள் வருமாறு:
1. இளவேனில் ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
இந்தப் பூலோகத்தில்; நாகரீகம் மிக்க இனங்கள் இளவேனில் காலத் தொடக்கத்தை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடினார்கள். தமிழர்களும் அவ்வாறே கொண்டாடினார்கள். இளவேனிற் காலத்தின் தொடக்க நாளை கணித்து அந்த நாளை வரவேற்று பெரும் விழாவாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் சூரியனையும் தமது வாழ்க்கையோடு உடன் நின்ற மாட்டையும் போற்றினார்கள். ஒர் ஆண்டு கழிவது என்பது சூரியனோடு எவ்வளவு தூரம் சம்பந்தப்பட்டது என்பதையும் இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

அதுபோல இந்தப் பொங்கலின் தொன்மை பற்றி நிறையவே தமிழ் இலக்கிய ஆதாரங்கள் போதியளவு இருக்கின்றன. அவற்றின் சாரமாக சந்திரலேகா வாமதேவ அவர்கள் குறிப்பிடுகையில்; பொங்கல் என்பது தை என்ற தமிழ் மாதத்தின் முதலாம் நாளில் இடம் பெறும் தைப்பொங்கலைக் குறிக்கும். பொங்கல் என்பது பொங்கு என்ற வினையடியில் இருந்து தோன்றிய சொல்லாகும். அது அவ்வாறு பொங்குதலை முக்கியமாகக் கொண்டு அரிசியினால் நன்கு அவிந்து சேரும்படியாகத் தயாரிக்கப்படும் உணவையும் குறித்து நிற்கிறது. அன்று செய்யப்படும் உணவின் பெயர் பின் அந்தப் பண்டிகையைக் குறிக்க வழங்கப்படலாயிற்று.

இன்னொரு வகையில் கூறுவதாயின் இந்தப் புதுப் பொங்கல் என்பதற்கு 'பொங்கி வழிதல்', 'பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில்இ புத்தரிசியிட்டுஇ அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால்இ தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும்இ வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும்இ திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடுஇ கழனியெல்லாம் பெருகிஇ அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும்இ தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

அதுபோல அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில்இ பயிர் விளைச்சலுக்கு உதவிய மழைஇ சூரியன்இ கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம்.

இவ்வாறு நம்மிடையே பொங்கல் முக்கியம் பெறுவதற்க்கு நிறையவே காரணங்கள் கூறப்படுவதுடன் அவற்றை நாம் உன்மையில் அனுபவ ரீதியாகவும் அனுபவித்து வருவதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தைப் பொங்கலின் பூர்வீகம்.
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிஇ சூரியன்இ உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

விசேடமாக ஆங்கில ஆண்டு இயேசு பிறப்பை முன்னிட்டு பேணப்பட்டு வருவதுபோல் தை முதலாம் நாள் வள்ளுவர் பிறப்பை முன்னிறுத்தி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த தை முதலாம் நாளில் இப்பொங்கல் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்யப்பட்டதால் இந்நாள் தைப்பொங்கல் என்று அழைக்கப்படலாயிற்று. இந்த அறுவடை விழா திராவிடர் மத்தியில் நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வந்ததாகவும் ஆரியரது செல்வாக்கு தமிழ் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் இந்த பொங்கல் மாற்றவோ அழிக்கவோ முடியாதபடிக்கு தமிழர் மத்தியில் நிலைத்து நின்றுவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஏனைய பண்டிகைகளுடன் இணைந்துள்ள புராணக் கதைகள் பொங்கலுடன் தொடர்பாக இல்லாதததும் இது தூய திராவிட அதாவது தமிழரது கொண்டாட்டம் என்பதைக் காட்டி நிற்கிறது.

சங்ககால பாடலொன்றில் போர்க்களத்தில் இருந்து மீளும் அன்புக்குரியவனின் வருகை ஒரு இளம் பெண்ணின் மனதில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அந்த மகிழ்ச்சி பொங்கலுக்கு முதல் மாதம் நிலவும் மகிழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது. பொங்கலின் முன் மழை நின்று விட்டிருக்கும் என்றும் காயா மலர்கள் அழகாக மலர்ந்திருக்க கொன்றை மலர்கள் மரம் கொள்ளாமல் மஞ்சளாக மலர்ந்து நிலத்தில் மகரந்தத்தை உதிர்த்திருக்கும் என்றும் ஆண் மானும் பெண் மானும் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கும் என்றும் வர்ணிக்கப்படுகிறது. பொங்கலின் முன் ஏற்படும் மகிழ்ச்சியையும் மன எழுச்சியையும் இப்பாடல் உவமை முலம் விவரிக்க முற்படுகிறது. இதன் மூலம் இந்தப் பண்பாட்டின் வேரின் நீளம் புலனாகிறது.

தைப்பொங்கல் தான் தமிழர் புதுவருடமா?
இந்தக் கேள்வி அநேகமான தமிழ் மக்களிடையே உலகெங்கும் சிலசமயம் ஓங்கி மறைவதுண்டு. அந்தவகையில்இ 1935ஆம் ஆண்டில் ஒன்று கூடிய தமிழ் அறிஞர்கள் தை முதலாம் நாளை திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பாக அறிவித்தார்கள். கிறிஸ்துவுக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்தார் என்பது அந்த அறிஞர்களின் கணிப்பாகும் அந்த அறிஞர்கள் தமிழர்களின் பண்டைய நூல்களை ஆராய்ந்து இந்த முடிவிற்கு வந்தார்கள். 1970ஆம் ஆண்டில் தமிழக அரசும் இதை ஏற்று சட்டபூர்வமான ஆண்டாக அறிவித்ததுஇ இருந்தும் இது திரும்பவும் அண்மையில் மீளறிவிக்கப்பட்டதும் நினைவிருக்கும்.

இந்த நாள்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு உறுதியான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லை. ஆயினும் எப்படி யேசு கிறிஸ்துஇ, முகம்மது நபி போன்றோர்களின் பிறந்த தினத்திற்கும் சரியான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாது வெறும் நம்பிக்கை மற்றும் பண்டைய நூல்களை ஆராய்ந்து ஒரு அண்ணளவான கணிப்பிலும் கொண்டாடப்படுவது போல் திருவள்ளுவர் ஆண்டையும் கொண்டாடுவதில் தவறில்லை.

அத்துடன் தைப்பொங்கல் நாள் குறித்து உள்ள சில குழப்பங்களையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சில ஆண்டுகளில் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகின்ற பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15இல் கொண்டாடப்படுகிறது. லீப் ஆண்டு வருவதில் ஏற்படுகின்ற குழப்பமே இதற்கு காரணம். தமிழ் ஆண்டுக் கணக்கில் லீப் ஆண்டு என்கின்ற ஒன்று இல்லை. இதை சிலர் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திஇ தமது வருமானத்திற்கு ஏற்றமுறையில் பொங்கல் நாளை கணித்துவிடுகிறார்கள். எது எப்படியோ தமிழருக்கு தமிழ் வருடம் பிறப்பது தை முதலாம் தேதி என்பதில் தெழிவுற வேண்டும்.

தைப் பொங்கல் கொண்டாடப்படும் முறைமைகள்.
பொங்கல்  என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். அது ஊருக்கு ஊர், பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுபட்டாலும் பொங்கல் என்பது ஒன்றுதான். செய்நன்றியை நற்பண்போடு வெளிக்காட்டும் பாரம்பரியப் பண்பாடு தமிழர்களுடைய சிறப்புப் பழக்க வழக்கம் என்று சொன்னால் அது குற்றமாகாது. மாறாக மாபெரும் உண்மையே! அத்தகைய தமிழர்கள் இன்று இடப்பெயர்வுக்குள்ளாகி அந்நிய கலாசாரத்திற்கு மாறிக்கொள்வது பற்றித் தப்பாகச் சொல்லாவிட்டாலும், தமிழ் பண்பாடுகளையும் பாரம்பரியத்தையும் மறந்து போய்க்கொண்டிருக்கிற போதிலும் மறக்காமல் தமிழை வளர்ப்பதிலும் ஏராளமானோர் முன்நிற்பது பெருமைக்குரியதும் பாராட்டலுக்குரிய தென்பதும் வெளிச்சம்.

அத்தகைய தமிழர்களின் கலாசாரக் களிப்பாடலிலொன்றுதான் தைமாதத் தைப்பொங்கல் பெருவிழா.
||எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு||
என்ற பெருந்தகையின் பேச்சுக்கிணங்க வாழ்பவர்தான் தமிழ்க்குடிகள் என்பதனைத் தமிழர்களின் இத்தைப் பொங்கல்த் திருவிழாவும் தெளிவு படுத்துவது திண்ணம்.

அதிகாலை சாணத்தால் தரை மெழுகி, மாக் கோலம் மண்ணிலிட்டு, மாவிலைத் தோரணங்கட்டி, சந்தனமும் குங்குமமும் தயார்படுத்தி, வாசற்படியில் அடுப்பு மூட்டி, புதுக்குடத்தில் பொங்கிப் போட ஆர்வத்துடனே ஓடித்திரியும் அந்தக் காலைக் காட்சி ஓ! சொல்லமுடியதா பேரின்பம்..அட்டகாசம்.

பொங்கல்ப் பானையின் வாயினைத் தாண்டிப் பொங்கிவரும் பொங்கலைப் பார்ப்பதற்கென்றே விரைந்து வந்து வேடிக்கை பார்க்கும் அழகும் அற்புதந்தான் . அன்றாடம் அம்மாமார் அடுப்படியில் பொங்கிப் படைக்கும் அன்னத்திற்கு அண்மையில் வராத அப்பாமாரும் ஆர்வத்தோடு ஆடிப்பாடும் காட்சி அற்புதமோ அற்புதம்.

இன்னும் அதை ஆழ்ந்து நோக்குவோமானால், உடல் ரீதியிலும் மனரீதியிலும் இத் திருவிழாக்கள் எத்தனையோ திருப்திகரங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாது மனிதநேயத்தினை வெளிக்காட்டும் மாபெரும் வெளிக்காட்டுகள் இங்கு இடம் பெறுகின்றது. குடும்ப உறவுகள் பலப்படுகிறது. தொலை தூரத்தில் வாழ்பவர்களுக்கிடையில் வாழ்த்துக்கள் என்ற பெயரில் தொடர்புகள் துரிதப்படுகிறது. பகிர்தல் இவிட்டுக் கொடுத்தல் இபுரிந்து கொள்ளல் போன்ற நற்பண்புகளைச் சீர்ப் படுத்த இப் பெருவிழாக்கள் அடிக்கடி மாறுபட்ட பெயரில் வந்து போகின்ற போதிலும் இசெய்த நன்றியை மறக்காமல் பிரதி அவரை நினைத்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவத்தைச் செலுத்தும் இத்தைப் பொங்கல் திரு விழா மிகச் சிறப்புடையதுதான். அன்று காலை நடக்கும் நிகழ்வு எல்லாவற்றையும் என்றுமில்லாதவாறு பார்த்துப் பார்த்துப் புன்னகை செய்வான் பகலவன்;.

 பொங்கலை பொங்கி 'தலைவாழை அதை வெட்டி, பொங்கலை அதில் கொட்டி படைத்துப் போடுவார். புன்னகைத்துக் கொண்டிருக்கும் அன்றைய விருந்தாளிக்கு நன்றி நமஸ்கரிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. அப்போது பொங்கல்ப் பானையில் பொங்கல் பொங்கி வரும் காட்சியைக் கண்டதும் அஞ்சி அஞ்சி வெடி வெடிக்கும் சப்தம் நெஞ்சைப் பிளக்கும்.

எமது பிரதேசங்களில் பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பு மத வேறுபாடின்றி அன்றையதினம் பரஸ்பரம் இடம் பெறும் அத்தோடு தாம் பொங்கிய பொங்கலை அன்போடு அயலாருக்குக் கொடுத்து உண்ணும் அளப்பெரிய விருந்தோம்பல் அங்கே இணைக்கப்படுகின்ற அருமையான செயற்பாடு மட்டுமன்றி ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு ஏற்பட்டுவிட்ட நபர்களுக்கிடையில் இணக்கம் காணும் ஒரு கருவியாகக்கூட பலர் இவற்றைப் பயன்படுத்தியதைக்கூட அறியமுடியும் . ஒருவர் ஒருவரை மதிப்போடு வாழ்த்துச் சொல்லும் போது அவர் விரோதியாக இருந்தாலும் பதில் வாழ்த்துத் தெரிவிக்கும் கட்டாயம் இந்நாளில் ஏற்படுவதால் விரோதம் அங்கே விநோதமாக விடைபெற்றுச் சென்று விடுகின்றது.

இப்பேற்பட்ட அற்புத நிகழ்ச்சியை அதே சிறப்புடன் அன்னிய தேசத்தில் அமுல்ப் படுத்தமுடியாத அபாக்கிய நிலைக்கு எம் இளைய தலைமுறை தள்ளப்பட்டு விட்டதல்லவா?! என நினைத்து மனம் வெதும்பினாலும் எம்மவர் நமது கலாசாரத்தை பிறருக்கு அறியப்படுத்தி அவர்களும் விரும்பச் செய்வதில் வல்லவர்கள். 'தை பிறந்தால் வழிபிறக்கும்'  என்னும் வாக்கும் இதனைத் தழுவியே கைக்கொள்ளப்பட்டது. அனைத்துப் பிரச்சினைக்கும் பணம் ஒரு முக்கிய காரணம் இன்றைய நவீனத்துவத்திலும் சரி அன்றைய நாகரீகத்திலும் சரி ஒரு அரசின் அல்லது தனிமனிதனின் வளர்ச்சியிலும் பெரும் பொருள் ஈட்டக்கூடிய நடவடிக்கைகள் விவசாயம்இ மீன்பிடித்தொழில்இ மிருகவளர்ப்பு போன்றன தான் முதன்மையாக இருந்தது. இவை அதி கூடிய பயன்தரும் காலம்தான் தை மாசம் இதனால்தான் தைபிறந்ததும் வழி பிறக்கும் என சொல்லி வருகின்றனர்

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும்இ பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.  அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.  உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர்இ பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல்இ பழம் கொடுப்பார்கள்.

மட்டக்களப்பில் இது பெறும் முக்கியத்துவம்
'பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங்
கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து'
என்று பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பின் வளத்தை காட்டியிருப்பதுஇ இம்மக்கள் வயலும் வாழ்வும் என்று வாழ்க்கைப்பட்டவர்கள் என்பது திண்ணம். இவர்களது செல்வம் பசுக்களோடும், வேளாமைச் செய்கையோடும் தொடர்புபட்டிருந்தமை அதற்க்குச் சான்றாகும். இம்மக்கள் பொங்கல் என்றாலே ஆங்கில வருட முதல் நாளில் இருந்தே தொழில்தேடி வேறு பிரதேசங்களுக்கு சென்று பொங்கல் நெருங்கியதும் உழைத்து பெற்ற பணத்தில் புதுப்புடவைகள், வீட்டுக்கு தேவையான பண்டங்கள் என்று எல்லாம் வேண்டி விடுவார்கள். 
நான் ஒரு கவிதை எழுதி இருந்தேன் சென்ற வருடம் அதில்

எத்தனையோ பொங்கல் எங்கள் தமிழ் பண்பாட்டில்
சர்க்கரைப் பொங்கல் சந்தணப் பொங்கல் 
பால்ப் பொங்கல் பழப் பொங்கல 
மாட்டுப் பொங்கல் காணும் பொஙகல் 
இன்னும் எத்தனையோ எம்மிடத்தில் இருந்தும்.....  

மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி 
வயல் காட்டை உழுது பச்சை வயலாக்கி 
பருவத்தோடு கதிர்பறிய போடியார் வட்டைக்குள் 
வேளாமை வெட்டப்போய் ஊரெல்லாம் சிதேவி 
உணவளிக்க உதவிய ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும் 
தமிழ் பொங்கலே  தைப் பொங்கல்  

குறிப்பாக இங்குள்ள மக்கள் இராசவள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு, காய்வள்ளிக் கிழங்கு, வாழைக்குலை என்பனவற்றினை தங்கள் தோட்டங்களில் இருந்து அறுவடைசெய்வது தான் அவர்களுக்கு தனி சந்தோசம். அதனை அயலில் உள்ள நாலாபேருக்கும் பகிந்தளித்து பரிமாறி உண்பது வழக்கம். இதனிடையே போடிமார்கள் குறிப்பாக அவர்களிடம் பணிபுரிந்து வருபவர்களுக்கு நெல் மற்றும் ஏனைய தானிய வகைகளைக் குடுத்து உதவுவதும் இன்றும் மரபில் உள்ளது. உன்மையிலே இங்கு பார்க்கும் இடமெல்லாம் வேளாமை பச்சைக் கம்பளம் பாய்விரித்துஇ பறவைகள் உல்லாசமாக கீச்சு கீச்சு எனப்பறந்து திரியஇ மரங்களெல்லாம் துளிர்விட்டு பருவடடைந்த புதுப் பெண்போல் இருக்க அவற்றை குளிப்பாட்டுவதுபோல் நாலா பக்கமும் சல சல என நீர் பெருக்கெடுத்து ஓடுவது சொல்லமுடியாத ஆனந்தம். ஆத்தனையும் மட்டக்களப்பு மாநிலத்தின் கொட்டிக்கிடக்கும் காலம் தான் இந்த தை மாசம்.

எல்லா வீடுகளிலும் பொங்கல் பொங்கப்படுவது உண்டு. யாரும் பொங்காமல் விட மாட்டார்கள். வழமையை விட விசேடமாகப் பொங்குவர். அதன் பின் நல்ல கறி புளி பிடித்து சமைக்கத் துவங்குவர். அயல் தெரு எங்கும் கறி வாசைன மூக்கைத் துளைக்கும். சிறுவர்கள் கலர் கலரான வர்ண ஆடைகளை பூண்டு அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக ஓடித்திரிவர். கோயில் எல்லாம் கற்பூரம் வானைப் பிளக்க கம கம என வாசைன பரப்பஇ நல்ல பாராயணங்கள் அது போல் பக்திப்பாடல்கள் ஒல்க்க அந்த நாளின் சந்தோசம் எந்த நாளிலும் கிடைக்க முடியாத அளவுக்கு அத்தனை கொண்டாட்டம்இ அத்தனையும் திராவிடத்தமிழ் மக்களின் பூர்வீக மக்கள் இந்த மண்ணில் இருப்பவர்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

முடிவுரை.
ஆகவே இவற்றை எல்லாம் நோக்கும்போது, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருப்பினும் விஞ்ஞான ரீதியிலா சரி, கால நிலை மாற்றத்துக்கு அமைவாகவா சரி அல்லது செழிப்பான காலம் என்பதற்க்கு அமைவாக சரி இந்த தைமாதம் அமைந்து விட்டதனால்தான் இந்த பொங்கல் திருநாள் இந்தக்காலத்தில் அறுவடை செய்வதற்க்கு காரணமாக இருந்த சூரியர், உழவர், அதற்க்கு உறுதுணையான மாடு என்பனவற்றை நன்றியுணர்வோடு பார்த்து அவற்றுக்கு நன்றி செலுத்தும் காரணத்துடனான விழா இது நாங்கள் பெருமையோடு கொண்டாடவேண்டிய நன்நாள். இதுதான் எங்களுக்கு பிடித்த வேண்டிய திருநாள். இருந்தும் வட கிழக்கு மக்கள் மூன்று தசாப்த காலத்தில் எதை எல்லாம் காப்பாற்ற வேண்டுமோ அவற்றை எல்லாம் இழந்து விட்டார்கள். இருப்பினும் தமிழன் என்று சொல்ல அவனுக்கான அடையாளங்களாகவாவது இவற்றை கடைப்பிடித்து வருகின்றமை பெருமைக்குரியதே. இந்த நிகழ்வுகளை இப்போதைய சமுகம் தெரிந்து கொள்ளும் வகையில் பொது அமைப்புகள்இ தொண்டர்கள் நிகழ்வுகளாக செய்து பொதுமக்களிடம் எழுச்சியையும் விழிப்பினையும் தூண்டி விடுவதன்மூலம் இழந்தவற்றை மீளக்கட்டியெழுப்ப அறைகூவ வேண்டும். என்று வேண்டி அனைவருக்கும் இனிய தைத்திருநாள் தித்திக்கும் ஆண்டாக வேண்டி வாழ்த்தி நிற்கிறேன்.
- சிவகுரு தணிகசீலன்

0 comments:

Post a Comment