ADS 468x60

17 January 2017

வரலாற்றை உருவாக்குபவர்களாக இருப்போம்.


அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, இளைஞர்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எமது இனிய வணக்கங்கள். இதை உங்கள் முகப்புத்தகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


எமது இனம் தொன்றுதொட்டு இந்தநாட்டில் வாழ்ந்துவரும் ஒரு பூர்வீக நாகரிகத்தினைக் கொண்ட, எடுத்துக்காட்டான, புரட்சிகள் பல படைத்த, சலுகைக்கு அடிபணியாத ஒரு இனமாகும்.

காலம் காலமாக சுதந்திரத்துக்குப் பின் பல அடக்குமுறைகளை பேரினவாதம் என்ற பெயரில் சந்தித்து சரிந்திருந்தது, அடிபட்டு முறிந்திருந்தது. ஜனநாயகமும் சட்ட ஒழுங்கும் நாம் அனுபவிக்க முடியாமல் சீரழிந்து இருந்தது. அரசிடம் மண்டியிடாத எம் தலைமைத்துவத்தினால் நாட்டின் வரப்பிரசாதங்கள் தமிழர்களுக்கு புறக்கணிக்கப்பட்டு இருந்தது.
இதனால் எமது தலைவர்கள் அறவழிப் போராட்டங்களை ஆரம்பித்தனர். சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் என பல அகிம்சைப் போராட்டங்களால் இந்த புறக்கணிப்புக்களை நிறுத்தி உரிமைகளைப் பெறப் போராடினர், கிடைக்கவில்லை. அதன்பின் இளைஞர்கள் அராஜகத்தினை அடக்க ஆயுதம் ஏந்தினர். அது விடுதலைப்போர் என உருவெடுத்து இடுகாட்டுக்கே ஆயிரம் ஆயிரம் உயிர்களை அனுப்பி வைத்து முடிந்தது.

ஓற்றை இலங்கைக்குள் இத்தனை தியாகங்களையும் செய்த எமது இனத்துக்கு வெறும் நம்பிக்கை வாக்குறுதிகளைத் தவிர எந்தவித நன்மதிப்போ, வெகுமானங்களோ கடந்து சென்ற ஆட்சிகளில் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலைமைகளுக்குள் பழக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் தேர்தல்களைப் புறக்கணிக்கத் தொடங்கியிருந்தனர். அது எமக்கு பாதகமாகவே வரலாற்றில் பாடம் புகட்டியது.

முன்னோர் 'எதற்கும் காலமும் நேரமும் கனிந்து வரவேணும' என்பர். அது எமது மக்களின் கைகளுக்குப் 2015 இல் வந்திருக்கின்றது. சர்வாதிகார ஆட்சி, றெளடி ஆட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, சுயாதீனம் இழந்த நீதித்துறை, ஊராளக் கூட முடியாத பாராளுமன்ற முறைமை, சாதகமற்ற சட்டதிருத்தங்கள், ஊழல், தகவல் சுதந்திரம் இன்மை, அரசியல் அச்சுறுத்தல் எனப் பல பல அநீதிப் போக்குகளுக்கு வாக்குகளால் சாட்டை அடி கொடுத்தனர் எமது மக்கள்.

இன்று மக்களை தலைவர்கள் வழிநடத்தவில்லை ஆனால் அந்தத் தலைவர்களை மக்கள் தெரிவு செய்கின்றனர். சுயலாப அரசியல் இனி சாத்தியப்படாது என்பதை இத்தேர்தல் காட்டியுள்ளது. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களிடையே இந்த மாற்றம் இடம்பெற்றிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை இம்முறை தேர்தல் மூலம் நிரூபித்து இருக்கின்றனர். இலங்கை மக்கள். ஒற்றுமைதான் பலம், ஒற்றுமைதான் முன்னேற்றம், ஒற்றுமைதான் உயர்வு. பிளவுபடாத இலங்கைக்குள் ஒருதாய் மக்களாய் அனைவரும் வாழும் ஒரு நிலை தோன்ற வேண்டும் என்பதே அனைவரதும் அவா,எதிர்பார்ப்பு.
இந்த தமிழர்கள் இத்தனை அழிந்தும் கேட்பது ஒன்றுதான். அது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் நேர்மையானதும் நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதும் நீடித்து நிலைக்ககூடியதுமான ஒரு அரசியல் தீர்வு. நாம் பலகாலம் பொறுத்துவிட்டோம். மாற்றம் காணவிளைந்து ஏமாற்றமே கண்டோம். இன்று ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கிறது எமது இனம்.

இன்று எமது மக்கள் இடம்பெயர்ந்தும், சொந்த நிலபுலங்கள் பாதிக்கப்பட்டும், சுவீகரிக்கப்பட்டும், வாழ்வாதாரம் வலுவிழந்து, சுயமரியாதை சூம்பிப்போய் வீடுகள் இல்லாமல் காடுகளுக்குள்--மாடுகள்போல் பாதுகாப்பு இன்றி பெண்களும், பிள்ளைகளும் இன்று எத்தனை காலம் வாழ்வது.

இத்தருணத்தில் மாற்றத்தை சிறிலங்கா அரசிடம் மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை, எமது அரசியலிலும் எதிர்பார்க்கின்றனர். தம்பட்டம் அடிக்கும் தலைமைகளையும், சத்தம் போடும் பூச்சாண்டி தலைவர்களையும் நாம் விரும்பவில்லை. கடமை புரியும் புத்தியுள்ள, வழி நடத்தும் சாணக்கியமான புதிய அரசியலை குறிப்பாக எமது மட்டக்களப்பு மாவட்டம் நாடி நிற்கிறது.

இதுவரையில் அடக்குமுறைக்குள் அரசியலை நடத்திய எமது இனத்துக்கு சுதந்திரமான ஒரு அரசியல் பாதைக்கான வழி தென்படுகின்றது.

இந்தப்பாதையில் ""கத்தி வேலை செய்யும் உருப்படி இல்லாதவர்களை களைந்து புத்தி வேலை செய்யும் புதிய முகங்களை இறக்குங்கள்"". அது மறுமலர்ச்சி, அபிவிருத்தி, விறுவிறுப்பு என்கின்ற சித்தாந்தத்தில் அரசியல் நடைபோடும் ஒரு தலைமுறையை பிரசவிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் எமது மாவட்டத்துக்கு இப்போது தேவை.

வடகிழக்கு என்று சொல்லி வந்தவர்கள் அதை மட்டுப்படுத்தி இன்று வடக்கு தெற்கு மக்களிடையே உள்ள பிரச்சினையை தீர்க்க பாடுபடுவதாகக் கூறுகின்றனர். அதனால்தான் மக்களை ஏமாற்றுவதுபோல்; கூட்டமைப்பு தலைமை இன்று பேசியுள்ளோம் பேசியுள்ளோம் என்று இறுதியில் எமது மாவட்ட மக்களை கெதியற்றவர்களாக வீசியுள்ளனர்.

சம்பந்தன் விடயங்களை விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஒழிய, விடயத்தை வெற்றிகொள்வதற்கு ஏற்றவகையில் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சம்பந்தன் மைத்திரிபாலவூடன் பேசினார் ரணிலுடன் பேசினார் என்பதும், எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார் என்பதும் உண்மைதான் ஆனால் நியாயங்களை எடுத்துக் கூறுவதுடன் எங்கள் வேலை முடிந்து விட்டதா? மைத்திரிபாலவிற்கு ஒரு காலக்கெடுவை கொடுத்து தனது முடிவை சொல்லுமாறு கூற வேண்டும். சாரிவராவிட்டால், வேறு வழிகளை கையாள வேண்டும்.

அதுவும் சாரிவராவிட்டால் மைத்திரிபாலவின் அணுகுமுறை தொடர்பில் எங்களது அதிருப்திகளை தெருவிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் ஆதரவை வழங்குமாறு அழைப்புவிட்ட சம்பந்தன் இப்போது ஏன் மைத்திரிபால மற்றும்; ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் சென்று இரந்து கொண்டிருக்கிறார் என்று எமக்கு விளங்கவில்லை.
எமது மாவட்டத்தில் எமது தலைமைகள்; இதுவரை ஒரு அரசியல் அறிவற்ற மக்கள் குழாமை உருவாக்கி இருக்கின்றது. 

யுக்த அநாதைகளான எம்மக்கள் சுயமாக அரசியலை தெரிந்துகொள்ளும் அளவுக்கு வசதி கிடைத்திருக்கவில்லை. அதனால்தான் இம்முறை மட்டக்களப்பின் வாக்குப்பலம் 60 வீதமாக மட்டும் இருந்தது. அதிலும் பல நிராகரிக்கப்பட்டு இருந்தது. எமது அரசியல்வாதிகளை தேர்வு செய்வது ஒரு அரசியல் அறிவுள்ள சமூகத்தை அவர்கள் மூலம் உருவாக்குவதற்கே! ஆனால் அவர்கள் எம்மக்களை அரசியலில் முட்டாளாக்கியதுதான் இத்தனை நாள் செய்த பணியோ என எண்ணத் தோன்றுகிறது.

அரசியலில் குப்பை கொட்டுகின்ற இடமாக எமது மாவட்டம் இருந்துவிடக்கூடாது என நினைக்கின்றேன். புதிது புனைகின்ற, புதிதாய் சிந்திக்கின்ற, அபிவிருத்தி, நிர்வாகம், சட்ட ஒழுங்கு, சர்வதேச விவகாரம் என்பவற்றுக்கு அப்பால் அடிமட்ட மக்களின் அவலத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவராக இருக்கவேண்டும். அத்துடன் அவர்களை புணருத்தாரணம் செய்யும், மீளுருவாக்கம் செய்யும், பொறிமுறைகளை நிறுவும் புத்தி ஐுவிகளை அர்ப்பணிப்புள்ள, மக்களிடம் அன்புள்ளவர்களை தெரிவு செய்யுங்கள்.
அவ்வாறானவர்கள் நிறையவே இருக்கின்றனர். 

அது எடுத்துக்காட்டாகவும் பிறர் பின்பற்றும் புதிய அரசியலையும் ஸ்தாபிக்கும். இது எம் போன்றோரின் ஆதங்கம்.அன்பார்ந்த மக்களே! நன்றாகச் சிந்தியுங்கள்,எமது மாவட்டம் 160000 ஏக்கர் வயல் காணியில் நெல்லை உற்பத்தி செய்கிறது, கடற்பரப்பில் மீன்களை பிடிக்கிறது, வாவிகளில் நன்னீர் மீன் கிடைக்கிறது, மேட்டு நிலம், வீட்டுத்தோட்டம், புல்தரை, பசு, ஆடு, மாடு, கோழி என அத்தனையும் உற்பத்தியாகும் நிலபுலங்கள் இன்றைக்கு எமது மாவட்டத்தில் இருக்கின்றது.

ஆனால் இன்று அரிசியை எடுத்துக்கொண்டால் இந்தியா அரிசி, பாகிஸ்தான் அரிசி, பொலன்னறுவை அரிசி, கொழும்பு அரிசி, என வேற்று இடத்து அரிசியை உண்கின்றோம், எங்கோ இருந்து வருகின்ற மீன்களை உண்கின்றோம். தம்புள்ள மரக்கறி, இந்திய வெங்காயம் ஏன்? ஏன்? இத்தனை வளம் இருந்தும் ஏன் Made in Batticaloa என ஏதும் உற்பத்தி செய்யப்படவில்லை?..

போடியார்கள் வாழ்ந்த முதலாளி தேசத்தை ஏன் தொழிலாளி தேசமாக வைத்திருக்கிறீர்கள்? கவனிப்பார் அற்று கிடக்கிறோமே! கடல் வழி போக்குவரத்து என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே நெல்லை பர்மாவுக்கு ஏற்றி வந்தார்கள் நாங்கள். இது வரலாறு சொல்லும் கதை. இவற்றையும் பற்றி சிந்திக்கும் அரசியல் எமக்கு தேவை. இந்த இடைவெளி காரணமாகவே ஏனையவர்கள் இந்த மாவட்டத்தினை சந்தையாக்கி வைத்திருக்கிறார்கள், அறிவாளிகளை முடமாக்கி வைத்திருக்கிறது. 'படித்த இளைஞர்கள் யோசிக்காத தேசம் பயப்படுகின்ற தேசம் என்பார்கள்'. அதைத்தான் எமது சமூகத்துக்கு இந்த தலைவர்களால் செய்யமுடிந்ததென்றால் நாங்கள் எல்லாம் உண்மையில் துர்ப்பாக்கியசாலிகளே!

ஓன்றை உறுதியாகச் சொல்ல விரும்புகின்றோம், இளைஞர்களே! எங்களை அரசியல்வாதிகள் முட்டாள்கள் ஆக்கியுள்ளனர்;. எமது மாவட்டத்தின் இவ்வளவு பெரிய ஆதார சக்திகளையும் கையில் வைத்துக்கொண்டு வீணே காத்திருந்தால் வரலாறு நம்மை கேலி செய்யும்.

ஏவ்வளவு நாளதான்; சோழ வரலாறு பேசுவீர்கள், கரிகாலன் வரலாறு பேசுவீர்கள், பாண்டிய வரலாறு பேசுவீர்கள், காந்தி வரலாறு பேசுவீர்கள், தந்தை செல்வா வரலாறு என்று பேசுவீர்கள். என்றைக்கு உங்களை உலகம் பேசப் போகின்றது சிந்தியுங்கள்!. ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம், வரலாற்றை பின்பற்றுகின்ற சராசரி மனிதர்களாக உங்கள் வாழ்க்கையை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது வரலாற்றை உருவாக்குகின்ற மாமனிதர்களாக உருவெடுத்துக் கொள்ளப்போகிறீர்களா? நாளை உங்களின் கையில். விழித்தெழுங்கள் முன்னேவாருங்கள்.

0 comments:

Post a Comment