ADS 468x60

18 April 2017

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?'  என்கின்ற கேள்விக்கு பதிலாக மனிதன் மனிதனாக, மனிதனுக்காக வாழுகின்றபோதுதான் பிறர் மனதில் நீங்காத ஞாபகத்தினை விதைத்துவிடுகிறான் என்பது பொது. இவ்வாறு அகமும் புறமும் நேர்மறையான முறையில் அனைத்து காரியங்களையும் செய்து, சாதித்து எமது பிரதேச மக்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தினைப் பிடித்து, மறைந்தும் மறையாமல் அனைவரதும் நன்மதிப்பினைப் பெற்று நிற்பவர்தான் இறைபதம் அடைந்த அமரர் பெ.வ.ஆறுமுகம் ஐயா அவர்கள்.

அன்னாருடன் இரண்டாவது தலைமுறையின் வரிசையில் பல காலம் கலை மற்றும் ஆண்மீகப் பயணத்தில் ஒருங்கே செயலாற்றியவன் என்ற முறையில், இவர் இன்றும் எவ்வாறு மக்கள் மனதில் நிலையாக நிற்கின்றார் என்பதனை அன்னாரது கலை, கல்வி மற்றும் சமூக ஆண்மீகப் பணிகளின் ஊடாக நிறுவலாம் என எண்ணுகிறேன்.
கலைப்பயணத்தில்
கலை என்பது எல்லோருக்கும் இலகுவில் வாய்க்கப்பெறும் ஒன்றல்ல. அவ்வாறு வாய்க்கப் பெறினும் அவை பிறர் பயனுக்காக அநேகம்பேரினால்; பிரயோகிக்கப்படுவதில்லை. இந்தக் கூற்றுக்கு மாறாக, தனது கலைத்திறமை ஆளுமைதிறன் மூலம், தமிழ் சமயம் இரண்டினையும் உலகிற்கு அளிக்கை செய்ததுடன், பிறர் பலர் கலைஞராவதற்கான ஒரு நல்ல ஆசானாகவும் இருந்து சேவை செய்தவர் என்பது மறைக்க முடியாத உண்மை. 

இவர் பணி செய்தார் என்பதற்கு மேலாக செய்தவை எல்லாம் 'தர்மம்' என்று சொல்ல தோணுகிறது. தர்மம் என்றால் என்ன? பாரத பாரம்பரியத்தை சார்ந்த சாதுக்கள் நமக்களித்த போதனைகளில் இருந்து பார்த்தால், தர்மம் எனும் சொல்லுக்கு இயற்கை மற்றும் கடமை எனும் இரண்டு பொருளைக் காண முடியும். 

முதலில் இயற்கை எனும் பொருளை பரிசீலிப்போமானால், ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் விஷேட தன்மையினால் அப்பொருளை வரையறை செய்வதனைக் குறிக்கிறது. அதன்படி இவரது தன்மை ஒரு 'மாபெரும் கலைஞர்' எனக் கொள்ளவைக்கிறது. இவர் தனக்கு வாய்த்த கலைகளை தான் சார்ந்த இனம் மொழி மற்றும் சமயம்  தழைத்தோங்குவதற்காய் பிரயோகித்து வெற்றிகண்ட ஒரு தர்மவான். 

இந்த தர்மத்தில் அடுத்து இருப்பது 'கடமை'. இவர் தனக்கு தெரிந்த நல்ல கலைகளை, துறைதேர்ந்த அறிவினை மற்றும் முன்னுதாரணமான அனுபவங்களை இளைஞர் யுவதிகள் மீது  பரவவிட்டு அவற்றை பிறர் நலம் கருதி அல்லும் பகலும் ஆற்றுப்படுத்தி வாழும் காலத்தில் தனது கடமையினை செவ்வனே செய்த தர்மத்திற்குரியவர். குறிப்பாக இவர் நாடகத்துறையில் துறைதேர்ந்தவர் அதனால் 'தேவா கலைக்கழகம்' என்பதை இந்த தேனூர் மண்ணில் ஸ்தாபித்து பல அரங்கங்களை நெறிப்படுத்திய பேராளுமை. 'அரிச்சந்திரன்' என்ற மேடை நாடகத்தை தத்ரூபமாக இலங்கை பூராகவும் அரங்கேற்றி அதில் தானே கதாநாயகனாக நடித்து, தனது நடிப்புத்திறமையால் கலாரசிகர்களை கட்டிப்போட்ட தேனூர் 'நாடகத்தின் தந்தை' என்றால் அது சாலவே பொருந்தும்.

தவிரவும் பாடல் புனைதல், பாடல்களைப் பண்ணுடன் பாடுதல், பஐனை நிகழ்வுகள் மூலம் பக்தி மார்க்கத்தினை ஏற்படுத்துதல் சமய விழிப்புணர்வினை பாமர மக்களிடையே ஏற்படுத்துதல், கதாப்பிரசங்கங்களை பாடல்களுடனும், ஓசைநயத்துடனும் அரங்கேற்றுதல், வில்லிசை நிகழ்வுகள் என இயல், இசை நாடக தீபத்தினை திருவிழாக்காலங்களிலும், பாடசாலை நிகழ்வுகளிலும், ஏனைய சமய நிகழ்வுகிலும் ஏற்றி எமது சமயத்தினையும் தமிழையும் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்து கலாபூசணம் எனும் பெயரை தனது கண்ணியமான கலைச் சேவையால் பெற்றுக்கொண்டு, தான்சார்ந்த சமுகத்துக்கு 'கலையூர்' எனும் அடைமொழியினை பெற்றுத்தந்தவர்களில் இவரும் ஒருத்தர்.

இவர் பாராட்டுதல், நெறிப்படுத்தல், தலைமைதாங்குதல், வழிகாட்டுதல் என்பனபோன்ற அசாத்திய திறமையினால் பல கலைச்சீடர்களை ஏற்று ஆளாக்கி இருக்கின்றார். அவர்கள் பல்கலைக்கழகங்கள், கலைக்கல்லூரிகள், பாடசாலைகள் முதல் பல நிறுவனங்களில், வேறுபட்ட துறைகளில் அதே பணியினை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது அவர் இன்னும் மக்கள் மனதில் நிற்கின்றார் என்பதற்கு கண்முன்னே தோன்றும் சான்றாதாரங்களாகும்.

ஆண்மீகப்பணியில்
பல அடியவர்கள் புடைசூழ எமது அயல் கிராமமான களுதாவளைக் குருகுலத்தில் ரமண மகரிஷியின் ஞாபகார்த தினத்தில் கம்பீரமான குரலில், நேர்த்தியான ஆசார உடையில், நீறணிந்த நெற்றி, நேரான பார்வை, எப்பொழுதும் சின்ன புன்னகை போன்ற வசீகரத்துடன் ஓர் ஆழுமை பேசிக்கொண்டிருந்தது. அன்று நான் பிரமித்துப்போனேன், இத்தனை சக்திவாய்ந்த ஒரு ஆண்மீகவாதி நமக்குள் இருப்பது தெரியாமல் போயிற்றே என ஒரு மூலையில் இருந்து நினைத்துக்கொண்டேன். அது வேறு யாருமல்ல அமரர் ஆறுமுகம் ஐயாவேதான். 

இவர் சாகியத்தலைவராக, வண்ணக்கராக, பல ஆண்மீக அமைப்புகளின் ஸ்தாபகராகவும், உறுப்பினராகவும் இருந்து ஆண்மீகத்தினை வளர்த்தெடுக்க பல யுத்திகளையும், தனக்கே உரிய கருவிகளையும் கையாண்டு தன் பணியினை சிறப்பாக ஆற்றியவர். 

திருப்புகழ் அருணகிரியார் பாடினார் என்பதனை விட ஆறுமுகம் பாடினார் என்பதுதான் எமக்கெல்லாம் தெரியும். இராஜ ராஜ சோழன் பழய தேவாரப் பதிகங்களையெல்லாம் தொகுத்து இந்த உலகிற்கு அளித்ததுபோல்,     புழுதிமண்டிக்கிடந்த பல பாடப்படாத அற்புதமான திருப்புகழ்களையெல்லாம் மிகவும் அற்புதமாக பண்ணோடு பாடி இறைவனையும் அடியார்களையும் மகிழ்வித்து அதன் புகழ் பரப்பிய "ஆறுமுகச் சோழன்" இவர் என்றால் அது மிகையில்லை.

வள்ளுவர் சொல்வதுபோல் 'நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்- யாநலத்து உள்ளதூஉம் அன்று' அதாவது மற்றச் செல்வங்களை எல்லாம் விட நாவன்மையாகிய ஒருவகைச் செல்வத்தினை கொண்ட சிறப்புக்குரியவராக கந்த புராணத்தினை மாத்திரமல்ல வேறெந்தப் புராணத்தினையும் இனிமையாகவும் இறைபக்தியுடனும் மற்ற அடியவர்கள் பொருள் விளங்கும் வண்ணமும் எடுத்துரைக்கும் சொல்லாளனாக இருந்த பெருந்தகை இவர்.

தீர்த்த திருவிழாக்களில் பொன்னூஞ்சல் பாடி இறைவனை மாத்திரமல்ல எங்களையும் தூங்கவைக்கும் வசீகரக் குரலால் சைவ சமயத்தின் மீது சந்து பொந்துகளில் உள்ளவர்களுக்கும் தாகத்தினை உண்டு பண்ணிய பேராளன் இவர்.

இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் தான் கற்றவற்றினை கற்றவரின் முன் அவர்களுடைய மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அதனால் கற்றவர் எல்லாரினாலும் கற்றவராகச் மதித்துச் சொல்லப்படும் சொல்லாடல் இவரின் கைவந்த கலை என்பதற்கு, இவர் எமது பண்பாட்டை மற்றவருக்கு எடுத்துச்சொல்லும் பாங்கே சான்றாக இருந்தது.

இவ்வாறு எமது ஊர்களில் மாத்திரமல்ல அடியார்கள் அழைக்கும் அத்தனை இடங்களுக்கும் சென்று ஆண்மீகப் பணி செய்தமையினால் செல்லுமிடமெல்லாம் சிறப்பினைப் பெற்றிருந்தார். இதனால் இன்று மறைந்தும் மக்களின் மனதில் நின்றவராகின்றார்.

ஆசிரியப்பணியில்.
'எழுத்து அறிவித்தவன் இறைவன்'  என்பார்கள். எழுதவும் படிக்கவும் துணை செய்பவர் இறைவனுக்கு சமமானவர். இதிலிருந்து கல்விக்கும் கற்பிற்பவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நன்கு புலனாகின்றது. இதனையே இறைபதமடைந்து இன்றும் எம்முடன் வாழ்துகொண்டிருக்கும் ஐயா ஆறுகம் அவர்கள் தனது தலையாய பணியாக ஆசிரியராக இருந்து எமது மாவட்டம் பூராகவும் செய்து வந்திருக்கிறார். இதனால் அவர்மீதான மதிப்பும் மரியாதையும் இன்னும் இன்னும் எம்மத்தியில் அதிகரித்து வருகின்றது.

தேற்றாத்தீவு, செட்டிபாளையம், பட்டிருப்பு, கடுக்காமுனை மற்றும் மன்னார் போன்ற பிற மாவட்டங்களிலும் ஆசியப்பணி ஆற்றியதாக அறிந்தேன். அதனால் அடிப்படையில் ஓர் நல்லாசான். இவர் இப்பணியினை ஏற்று பல மாணவர்களை உருவாக்கிய செம்மல் இதனால் இவரை 'வாத்தி' என அடைமொழி கொண்டு அழைப்பதும் வழக்கம். இவர் சென்ற பாடசாலைகளில் எல்லாம் சாரணர் படையை உருவாக்கி தொண்டான்மையை மாணவர்கள் மத்தியில் தொடரச் செய்ததோடு, கலை மன்றங்களையும் களரிகளையும் ஏற்படுத்தி கருத்தான தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றிய பேராசான்.

சுருங்கக் கூறுவதானால், இவர் ஆசிரியராக இருந்து சைவ சமயம், தமிழ், நாடகம், சங்கீதம் போன்ற நுண்கலைகளை கற்பித்து மாணவகளை மாவட்ட, மாகாண மற்றும் தேசிய அளவில் பல போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெறும்வண்ணம் மாணவர்களை ஆற்றுப்படுத்தியமைக்கு சான்றாக அவர்கள் எல்லாம் இன்றும் பெரிய தொழில்களில் பேர்பெற மிழிருவதனையும் இன்னும் இவர் சேவையினை புகழ்பாடுவதனையும் காணலாம். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் மாணவ விதைகளை தூவி இன்று உலகமெல்லாம் அந்த விதைகள் விருட்சமாகி நிழல்தரும் புண்ணியத்துக்கு காரணமாகியதால் இன்றும் இவர் மக்கள் மனதில் நீங்காது நிறைந்திருக்கின்றார்.

இவ்வாறு நான் அறிந்தவைக்கு மேலாக இவரோடு இருந்து அனுபவித்தவைகளைக் கொண்டு நோக்கின், இவர் தன் கடமைகளை சரிவரச் செய்து, அஞ்சா நெஞ்சனாக நிலைத்ததனை நேராகச்
சொல்லி எமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார். இவர் இறையடியை எய்தினாலும், இவரினால் உருவாக்கப்பட்ட எம்போன்றவர்களினால் அவர் காட்டிய பாதையை பணியை நேராகவும் மறைமுகமாகவும் இன்றும் பறைசாற்றி வருவதனால் அவர் இன்னும் மக்களின் மனதில் நிறைந்து நிற்கும் ஒரு மாமனிதனாக இருந்துள்ளார் என்பதே திண்ணம்.

ஐயாவின் பிாிவின்போது சமா்ப்பித்த கவிதை.

ஐயா பிரிந்ததாக ஆறிந்த நேரம்
அங்கம் எரிந்ததாக நெஞ்சில் பாரம்
கலையென்றால் எமக்கு நீங்கதான் சாரம்
கவலையைத் தந்து பிரிந்ததேன் தூரம்

ஆறுமுகம்போல் வேறுமுகம் உண்டோ!
களறி பல ஏறிக்கலை ஆற்றுமுகம் ஒன்று
கல்விதனை வறியவர்கு ஊட்டுமுகம் ஒன்று
குளறிவரும் மக்கள்குறை தீர்குமுகம் ஒன்று
குடும்பத்தின் தலைமகனாய் பார்குமுகம் ஒன்று
தளரி மனம் வீழாமல் தாங்குமுகம் ஒன்று
தரணியிலே ஆண்மீகம் வளர்த்தமுகம் ஒன்று

தெய்வ நாயகனாய் தேனான புகழ்பாடும்
உய்யவழி தேடுவோர்கு உயர்வான கதைசொல்லும்
தேவார அகராதி! தௌ;ளு தமிழ் சித்தன்!
உள்ளம் பதைக்குதையா உறவைவிட்டு போனதேனோ?

பக்கத்தில் இருந்து 
பக்கவாத்தியம் இசைக்க
பலே பலே என்று பாராட்டும்
சித்தம் இனி எங்கு கிடைக்கும்
சென்ற நீங்கள் வருவதுண்டோ!

வாணிவிழா வஐனையும்
திருவெண்பா திருமுறையும்
கந்தர்ஷஸ்டி புராணக்கதையும்
கண்ணகி காவியமும்
மழையாய்ப் பொழிந்த மார்கழி காளமேகம்
ஓய்ந்துவிட்ட செய்தியில் ஒடுங்கிவிட்டது எம்மூச்சி.

ஊருக்கு பெருமைசேர்க்க
ஊரூராய்ப் பணிசெய்த
கலைக் கோபுரம் சரிந்த செய்தியில்
கலங்குதையா உள்ளம்!


0 comments:

Post a Comment