ADS 468x60

18 April 2017

கல்வியில் முன்னிற்கும் இலங்கைப் பெண்களின் ஊழியச்சந்தையின் நிலைப்பாடு

உலகலாவிய ரீதியில்; கிழக்கின் நாகரிகம் எப்பொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. பெண்னே குடும்பத்தின் தலைவியாகவும், அந்தக் குடும்பத்தின் பாரங்களை சுமக்கும் ஒருத்தியாகவும் இருந்து வந்துள்ளாள். அதனால்தான் பல கீழைத்தேய நாடுகள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றமை ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது. 

இதனால் பண்டைக் காலத்தில் சமுகத்தில் அவர்கள் மதிப்பினையும், முக்கிய வகிபாகத்தினையும் கொண்டிருந்தனர். இந்த நிலை மேலைத்தேயத்தவர்களின் வருகையின் பின்னரே அவர்களது எழுத்துக்களால், சிந்தனைகளால் மற்றும் விமர்சனங்களால் மாற்றடைய ஆரம்பித்தது. அத்துடன் பல நாடுகளை அவர்கள் கைப்பற்றி ஆளத்துவங்கியதுடன் சமுக அந்தஸ்த்து ஆண்களிடம் கைமாறியது. இவர்கள் மதம், மற்றும் ஆயுதம் என்பனவற்றினை கருவியாக கையிலெடுத்து போராடியமையூடாக அவர்களை சமுகத்தில் ஆஐானபாகுவாக காட்டியது எனலாம்.

இந்த இடத்தில் இருந்துதான் பெண்களின் வகிபங்கு குறையத்துவங்கியது எனலாம். பெண்கள் அறிவு குறைந்தவர்களாக, சக்தி குறைந்தவர்களாக, அதிகாரம் இல்லாதவர்களாக நடாத்தப்பட்டனர். மதிக்கப்படாத வர்க்கத்தினராக கருதி எல்லா வகையிலும் தாழ்நிலையில் வைக்கப்படலாகினர். இந்தப் புள்ளியில் இருந்து மீண்டு வர பல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் வெற்றியடைந்தாலும் அவர்கள் பல சவால்களை இன்றுவரை கடக்கவேண்டியே இருக்கிறது.

இந்த சவால்கள் இன்றய உலகில் வித்தியாசமானதாக நோக்கப்படுகின்றது. பெண்கள் வேலைவாய்ப்பை பெறுவதில், கல்வியினைப் பெறுவதில் அதுபோன்று நீதி அரசியல் சார்ந்த பெருந்துறைகளில் அவர்களின் வகிபாகம் எந்தளவுக்கு இருக்கின்றது அத்துடன் அவற்றில் அதிகரித்த பால் நிலை இடைவெளிகளை குறைப்பதற்கு தடையாக உள்ள மற்றும் அவற்றை சமப்படுத்துவதற்கான உபாயமார்க்கங்கள் எவை என்பதை எமது நாட்டின் நடைமுறையுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதுகிறேன்.

கீழ் உள்ள விளக்கப்படத்தினைப் பார்ப்போமானால் பொதுவாக இலங்கையில் வளங்கப்படுகின்ற இலவசக் கல்விக்கான வாய்ப்பு ஆண் பெண் என்கின்ற பாகுபாடுகளன்றியே வளங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வேலைவாய்பினை பெறும்போது பெண்கள் மிக மிக குறைந்தளவு காணப்படுகின்றமையை இது காட்டி நிற்கிறது. இதுபோல்; தொழில்வாய்ப்புக் கருதி அதிகம் பெண்கள் பின்பற்றுகின்ற தொழில்பயிற்சிகளாக அழகியல், தையல், மனையியல் மற்றும் சிகையலங்காரம் என்பன பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். இலங்கையைப் பொறுத்த அளவில் கல்வியில், வேலைவாய்ப்பில் மற்றும் ஏனைய அம்சங்களில் ஆண்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் சமமாக இருப்பது ஐனநாயக நாடு என்ற வகையில் மறுப்பதற்கில்லை. சட்டத்தின் முன் சாதி, மதம், இனம், மொழி, பால் அத்துடன் அரசியல் அபிலாசைகள் பிறந்த இடம் என்பனவற்றை வைத்து யாரும் பாரபட்சம் காட்ட முடியாது என்பது எம்நாட்டில் பெண்களைப் பொறுத்தமட்டில் வலுவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


இருப்பினும் வேலைத்தளங்களில் முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ வகிபாகம் பெண்களுக்கு எந்த மட்டில் இருக்கின்றது என்பது கேள்விக்குரியதே. அதற்கு ஆதாரம் தேயிலை, இறபர் தோட்டங்களில் வேலை புரிகின்றவர்கள் அதுபோல் ஆடைத்தொழிலகங்களில் வேலை புரிகின்றவர்கள்களில்; அடிமட்ட தொழில் புரிகின்றவர்களே அதிகம்; பெண் ஊழியர்களாக காணப்படுகின்றனர். இருப்பினும் இத்துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்பொழுது அவர்களின் ஊழியப்படையில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவது மறுப்பதற்கில்லை.

அண்மைய உலக பொருளாதார அமர்வில் உலக பால் நிலை அறிக்கையின் பிரகாரம் 136 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன, அதில் இலங்கை அரசியல் மேம்பாட்டுக் குறியீட்டில் அதன் பால் நிலை இடைவெளி மிக அதிகமாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தனைக்கும் உலகிலேயே முதல் பெண் பிரதமர் 1960 இல் இலங்கையில் இருந்து தெரிவாகியமையும் நாட்டின் முதல் பெண் ஐனாதிபதி 1994 இல் தெரிவாகியமையும் வரலாறு சொல்லும் கதை. இவ்வாறான முன்னுதாரணங்கள் பல நாட்டில் இருப்பினும் இன்னும் ஏன் பெண்களின் அரசியல் ஈடுபாடு குறைவாக உள்ளது என்பது அனைவரினதும் கேள்வியாக உள்ளது. இந்த வகையில் நிலைமையை சற்று பின்னோக்கி பார்ப்போமானால் முதலாவது சிலோன் அரச சபையில் (1931-1936) வெறும் இரண்டு பெண்களே அங்கத்துவம் வகித்து வந்தனர் அது 3.4 விகிதமாக மட்டும் காட்டப்பட்டிருந்தது. ஆனால் 83 ஆண்டுகள் கடந்த பின்னர், இலங்கையின் 14வது பாராளுமன்றத்தில் 225 மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளும் வெறும் 13 உறுப்பினர்களே பெண்களாக இருப்பது 6 விகித பங்களிப்பினை காட்டி நிற்கின்றது. 

அதுபோல இலங்கையில் உள்ள மொத்த நீதிபதிகள் 280 ஆகும். அதில் 64 பேர் பெண்களாக இருக்கின்றனர் இது 23 விகிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பெண்களின் முக்கிய துறைகளில் இருக்கின்ற வகிபாகம் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்து காணப்படுவது, அவர்களின் கல்வி கற்கும் வீதத்துக்கு தலைகீழான ஒரு செய்தியினையே தெரிவிக்கிறது.

ஊழியப்டையில் பெண்களின் வகிபாகம் ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவாக இருப்பதனையே இந்த வரைபு எமக்கு காட்டி நிற்கிறது. இங்கு 15 வயது தொடக்கம் 18 வயது வரை ஊழியச் சந்தைக்குள் இவர்கள் உட்புகுவதனைக் காட்டி நிற்கிறது, இவ்வாறு ஆரம்பித்து குறைவடையும் இவர்களுடைய வேலைவாய்ப்புக்கான போக்கு மேல்நோக்கி வளைந்து நிற்பதனைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

குறிப்பாக பெண்கள் 35 வயதில் அதிக வேலையைப் பெறும் தன்மையை காட்டுகிறது, அதன்பின்னர் சந்தையில் இவர்கள் இருக்கின்ற அளவு குறைந்து செல்வதனை இந்த வரைவு தெழிவாகக் காட்டி நிற்பதனைக் காணலாம். 


இந்த வரைபு கல்வி பால் ரீதியான தரவுகளை ஒப்பீட்டளவில் காட்டி நிற்கிறது. குறிப்பாக 98 விகிதமான பெண்கள் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துக்கொண்டுள்ளதாக 2005 இல் புள்ளிவிபரம் காட்டி நிற்கிறது. இதனால் பெண்களின் சுகாதாரம் மேம்பட்டுள்ளது, பிறக்கும் போது இறக்கின்ற கழந்தைகளின் விகிதம் அத்துடன் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பன 1960 ஆம் ஆண்டின் பிற்பாடு படிப்படியாகக் குறைவடையத் துவங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பால் நிலைச் சமத்துவத்துக்கான இடைவெளிகள் சார்பாக 142 நாடுகளில் நடாத்தப்பட்ட கற்கையில் இலங்கை 79 வது இடத்தைப் பிடித்து (2014 உலக பொளாதார மாநாடு) குறைந்த அளவில் பின்னிற்பதுக்கு காரணம் மேலுள்ளது போன்று பெண்களின் பொருளாதார நேரடிப் பங்களிப்பு ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருப்பதாகும். 

இலங்கையில் பெண்களின் ஊழியபடையின் பங்களிப்பு 35-40 விகிதம் வரை இருந்துவர ஆண்களின் பங்களிப்பு 75 விகிதமாக இருந்து வருகிறது என 2014 ஆண்டின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

எது எவ்வாறு இருப்பினும் கல்வியில் ஆணுக்கு பெண் சமானான வாய்ப்பைப் பெறினும் பெண்கள் தான் இரண்டாம் நிலை மற்றும் உயர்கல்வியில் அதிகம் பங்குகொள்வதனை விசேடமாகக் காணலாம் ஆனால் வேலைவாய்பினைப் பெறும்போது அது தலைகீழாக இருப்பதனையே பார்க்க முடிகிறது. 

பெண்களின் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கு பல முன் மொழிவுகள், புதிய குழுக்கள், ஆய்வு அறிக்கைகள் என்பன வருடா வரும் கொண்டுவரப்பட்டாலும் அவை நடைமுறையில் சாத்தியமாகாமல் இருப்பதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகிறது. குறிப்பாக அந்த பெண்ணைச் சுற்றியுள்ள கலாசாரப் பின்னணி, சமுகம், குடும்பம், பெண்களுக்கான தனித்துவம், தேவை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆண்களிடம் இருந்து வேறுபட்டிருப்பது அவர்கள் அறியாமலே பின்னப்பட்டுள்ள பெரும் இடர்கள் எனலாம். 

இதற்கு மேலாக பணியிடங்களில் எதிர்நோக்கும் கெடுபிடிகள், பாலியல் வன்முறைகள், புறக்கணிப்புகள் என்பவையும் அவர்களை ஆண்களுக்கு சமமான வகிபாகத்தினை வேலைவாய்ப்பில் பெறத்தடையாக இருக்கின்ற காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் நடைமுறைக்கு சாத்தியமான பல முன்மொழிவுகள் இவற்றை ஊடறுத்து பெண்களின் வகிபங்கை விரிவுபடுத்தும் வகையில் சமகாலத்தில் வாதிடப்பட்டு வரும் முக்கிய கருத்தாடல்களை இங்கு முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.

வேலைவபய்பில் பெண்கள் எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்கும் முன்மொழிவுகள்.
பெண்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குதலும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கலும்
பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகளை, வேலைவாய்புகளை மற்றும் அவற்றை தொடவதற்கான தனியார் மற்றும் அரச துறைகளின் கூட்டுறவை வலுப்படுத்துதல்.
பகுதிநேர வேலை, இன்ரநெற்றினூடாக வீட்டில் இருந்தவாறாக வேலை செய்தல்,  மற்றும் மாற்றிக்கொள்ளக் கூடிய பணி நேரங்களை அமுல்படுத்தல் என்பனவற்றில் தொழில் வழங்குணர்களை உறுதிப்படுத்துதல்.
மாற்று நேரங்களில் வேலை செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்துதல்.
பாடசாலை மட்டத்தில் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பினை ஏற்படுத்தல்
தொழில் சார் திறனை பாடசாலை மட்டத்தில் இருந்து அறிமுகப்படுத்துதல்
அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்த வகையில் சுயதொழிலாளர்களை உருவாக்குதலும் ஊக்குவித்தலும்
தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் 
அரச பல்கலைக்கழகங்களில் கலைப்பீடத்தில் இருந்து வெளியாகும் பட்டதாரிகளுக்கு புதிய திறனை வளர்க்கும் பயிற்சிகளை வளங்குதல். உ.ம். சுற்றுலாத்துறை, கட்டிட நிர்மானம். இதற்காக தனியார் துறையினரை பங்குகொள்ள வைப்பதனூடாக இவர்களுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு என்பனவற்றினை வழங்கலாம்.
அத்துடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கிடையிலான நேரடித் தொடர்பினை வலுப்படுத்துதல்.
விசேடமாக வேலைத்தளத்தில் அங்கு செல்லும் வழியிலான பெண்களுக்கான பாதுகாப்பினை வலுப்படுத்துதல், அதற்காக பெண்கள் வேலை செய்யும் இடங்களிலான தங்குமிட, பிள்ளைகள் பராமரிப்பு இடங்கள் போன்ற உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல். 

பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய பொறுப்புக்கூறும் மற்றும் உற்பத்தியாக்கும் வகிபங்கு, இனப்பெருக்கத்தில் உள்ள அவர்களது வகிபங்கு அத்துடன் சமுகத்தில் அவர்களது வகிபங்கு என்பன மிக மிக அவசியமானதாக உணரப்பட்டுள்ளது. இருப்பினும் பல இன்னல்களைத் தாங்கும் பொறுமை பெண்களுக்கே அதிகம் உள்ளது என்பதனை நாளாந்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உழைக்கச் செல்லும் பெண் ஊழியர்கள் படும் அவஸ்தைகளினூடாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறான திறனற்ற பெண் ஊழிய வெளியேற்றத்தினை தடுத்து, அவர்களுக்காக புதிய திறனை அபிவிருத்தி செய்வதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக ஏற்படுத் சமுகச் செலவை சமாளிப்பதுடன், மரியாதையான ஒரு வேலைச் சூழலை எமது பெண் ஊழியர்களுக்கு ஏற்படுத்தி அவர்களது நேரடி மறைமுகப் பங்களிப்பை பொருளாதார அபிவிருத்தியில் சேர்த்து அதன் மூலம் சம அந்தஸ்த்து வழங்குதலில் உள்ள நீண்ட இடைவெளியைக் குறைத்து ஒரு புதிய உற்பத்தித் திறனுடைய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுசேரணும் என்பதே எமது அவா.
By
S.T.Seelan

0 comments:

Post a Comment