ADS 468x60

04 June 2017

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 01

 'நாங்கெல்லாம் அந்தக்காலத்தில ஒரு கிணற நாலுபேரு சேந்து தோண்டி முடிப்பம், பக்கத்தில ஒரு கள்ளுக் கொடம் இருக்கும், மரவள்ளிக் கிழங்கு அவியல், கச்சான், கடல இதெல்லாம் வந்தவண்ணம் இருக்கும், கிணறும் முடிய கள்ளுக் கொடமும் முடியும்' என வீர தீரமாய் அப்போ வேலை செய்தாங்களாம் இப்படி  ஒருவர் சொன்னார். 

சனத்தொகை குறைந்த காலம், இயந்திர மயமாக்கல் இல்லாதிருந்த காலம் மனித நாகரிகம் வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதாபிமானத்தை மாத்திரம் கொண்டிருந்த காலம், இவன் என்ன செய்யுறான், அவள் என்ன செய்யிறாள் என யாரும் நோட்டமிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று சிசிரிவி கமறா, கூகுள் மப், ஸ்மாட்போன் என்பன வந்திருக்கவில்லை, ஆனால் இன்று மாறிப்போச்சி உலகமே ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

அந்தக்காலத்து அம்மமா ஆச்சிமாருக்கு பத்து பதினைந்து பிள்ளைகள், குஞ்சும் குராலுமாக கலா முலா என்று வாழ்ந்தார்களாம். ஒரு வராந்தா (இறக்கம்) ஒரு சாமியறை, ஒரு சிறிய அறை இதுக்குள்ள வாழ்ந்து தான் அவர்கள் இத்தனை பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்கள். அந்தக்காலத்து பாட்டன் பாட்டிக்கு பொழுது போக்கு வேறென்ன இருந்துச்சு! பாட்டிதான் அவருக்கு பொழுதுபோக்கு கா கா. அதுபோல் என்னுடன் ஒரு ஆசிரியர் சொன்னார் 'தம்பி அந்தக்காலத்தில தென்னையில தேங்கா கொல கொலயா காய்ச்சிக்கிடக்கும், இப்ப பாருங்க ஒண்டும் ரெண்டும் எனத்தான் கிடக்கு மனிதர்களும் அப்படியேதான்' என அலுத்துக் கொண்டார். தொடர்ந்தார் 'தெரியுமா ஒரு பவுண் அன்னேரம் பத்து ரூபாவாம் இப்பெல்லாம்?' ஏன மூசசுவிட்டார். 

கல்யான வீடு, சாவீடு, கோயில் கொளம் என்றெல்லாம் வந்தால் முழுச்சனமும் அங்க திருவிழாப்போல வந்து சுக துக்கங்களில கலந்து எல்லாவற்றிலும் பங்கெடுப்பார்கள். சண்ட போட்டவங்களும் அதில சமாதானமாகிடுவாங்களாம். கல்யானம் என்றால் ஆடு வெட்டி நம்மட பொம்பளங்கெல்லாம் ஒன்று சேந்து ஆட்டுக்கறி எட்டு வீட்டுக்கும் மணக்க மணக்க அத சமைத்து, கடைசியில தயிர் சீனியோடதான் அத முடிப்பாங்களாம். அப்படி ஒரு அட்டகாசமான அன்பான நாகரிகம் அவர்களுக்கு  ​வேலியாக இருந்தது. 

அதனால் இப்போது போல் அப்போதைக்கு யாரையும் இலகுவில் சீண்டிப்பாக்கும் நிலை இருக்கவில்லை. இத்துடன் இவர்களுடைய வணக்க முறைகள், வழிபாட்டு முறைகள் சம்பிரதாயங்கள் என்பன தொழிலுடன் சம்மந்தப்பட்டு இருந்தது. 

இவற்றுடன் தானியங்கள், பழங்கள் இவற்றை அவிபடையலாக படைத்து அதன் பின் அனைவருக்கும் கொடுத்து உண்ணும் பழக்கம் மட்டு மாநிலம் எங்கும் விரவிக் கிடந்ததாம். இதில் இவர்கள் பயம் அதன் காரணமாக பக்தி என்கின்ற கோட்பாட்டுக்குள் வாழப் பழகி இருந்தனர். வைரவர் பொங்கல், வாடியடிப் பொங்கல், களவட்டிப் பொங்கல், களிப்பு பொங்கல், காது குத்த, நேர்த்தி தீர்க்க, நாகதம்பிரானுக்கு என்றெல்லாம் அவர்கள் அவர்களுடைய வழிபாட்டியலை வாழ்வியலாக அமைத்துக் கொண்டார்கள். 

ஆக அந்தக்காலம்; மனிதத்துவத்துக்கும் மனிதர்களுக்கும் முக்கியம் கொடுத்திருந்தது. ஊர்பக்கம் பிரச்சினைகள் வந்தால் அதை தீர்த்து வைக்க பொலிஸ், நீதி மன்றம் போய் நீதிகேட்கும் நிலை அப்போது இருக்கவில்லையாம். 

ஊர் ஊருக்கு ஆலய தலைமை வண்ணக்குமார் போடிமார் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அந்த மக்களின் நீதிபதியாக தர்ம கர்த்தாவாக இருந்து எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் அவர்களே சுடச்சுட எல்லோரினாலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஒரு நல்லது கொட்டது வந்தால் அவர்களே முன்னின்று நடாத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு வாழுகின்ற மக்கள் குற்றமிழைக்க அஞ்சி நல்ல மனிதர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். 

இவர்கள் அறத்தையும், நீதி அநீதிகளையும், வீரத்தையும், காதலையும், விவேகத்தையும் அதிக அதிகமாக கலைகளினூடே வளர்த்து வந்திருக்கின்றனர். 'மருமகன் உங்கட அம்மப்பா போடியார் ஒருக்கா வாழ வீமனுக்கு சோடிச்சுக்கொண்டு உட்டாங்க பாரு, உன்மையாகவே வாழ வீமன் போலதான் மனிசன் இருந்தாரு, உசரமும் திடகாத்திரமும் அப்படி ஒரு தோற்றம்' இப்படி கூத்துக்களில் மயங்கிய மட்டு மாநில மக்களின் பள்ளிக்கூடமாக கலைகள் அமைந்திருந்தன.

ஆனா ஒரு சுவாரசியம் இந்தக் காதல் கசமுசாவெல்லாம் அப்பவும் இருந்திருக்கு. அப்போது காதலர்கள் கோயில் கொளம் மற்றும் பொது நிகழ்வுகளிலே சந்தித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இந்தப் புராண நாயகர்கள்போல தங்களை காட்டிக்கொள்ள முயற்சித்து மடக்கி போட்டனராம். 'ஓடித்தாங்க' என்பது ஒரு பிரபல்யமான விடயமாக இருந்திருக்கு. 

ஒரு பார்வையிலே ஒரு மாசத்துக்கு வாழ்ந்திட்டு போயிடுவாங்க, அப்போதைக்கு ஒருவர ஒருவர் சந்திக்கிறது சரியான கஸ்ட்டமாக இருந்திருக்கு. காதலுக்கு தூதுவர்கள் அதிகமாக இருந்திருக்கின்றனர். 

கோயில் கொளம் வருடத்துக்கு ஒரு முறை வருவதனால் பலகாலம் காதலர்கள் தங்கள் காதலை நிறைவேற்றவென காத்துக் கிடந்திருக்கின்றனர். கூத்துக்களில் நடிப்பவர்கள் அன்று ஒரு கீரோவாகப் பார்க்கப்பட்டதனால் அவர்களுக்கு பெண்ணகள் மத்தியில் அதிக கிராக்கி இருந்து வந்திருக்கிறதாம். 

'கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதைத்து 
கற்பு நிலை தவறாது காதல் பயிர் வளர்த்து 
அன்னை தந்தை ஆனவர்க்கு தம் பொறுப்பை விதைத்து 
பின் வரும் சந்ததியை பேணும் முறை வளர்த்து' இந்தப் பாடலடி அந்தக் காலத்து காதலை படம்பிடித்துக் காட்டுகிறது.

இப்படி பல விடயங்கள் பழயன கெட்டியானதாக இருந்திச்சு. அவர்கள் நிம்மதியாக, சுதந்திரமாக, நீதியாக, மற்றவர்கு மதிப்பளித்து, அனுஸ்ட்டானங்களைப் பின்பற்றி வாழந்து வந்திருக்கின்றனர். எனக்கு தெரியும் முட்டை வேண்ட வரும் காக்காவும், முண்டான் கருவாடு விற்க்க வந்த பேதுருவும் அம்மம்மாட வீட்ட வந்தா காலாறி கதைத்து உறவாடிவிட்டு போனது. இப்போ அப்படியெல்லாம் நல்ல உறவுகளைக் கண்ணாலும் காண முடியவில்லை.

இப்போ ' அண்ணே அண்ணே   சிப்பாய்; அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சண்ணே! அதச் சொன்னா வெட்க்கக் கேடு அதச் சொல்லாட்டி மானக்கேடு' என்கிற நிலையில இருக்குதுங்கோ!. ஏல்லாம் மாறித்தான் போச்சுங்க, நான் ஒரு கவிதையில் இப்படி பாடியிருந்தேன்' 

'காலநிலை மாறிப்போச்சி என்கிறானுங்கோ- அதற்கு
காரணமே நம்மதானே விளங்கவில்லையா
மார்கழியில் மழையடிக்கும் அந்தக் காலங்கோ- இப்போது
மாறிப்போச்சி காலநிலை இந்தக் காலங்கோ

காபனீரு காத்து ரொம்ப கூடிப் போச்சுங்கோ-அதால
கண்ட கண்ட வருத்தமெல்லாம் தேடிவருதுங்கோ
ஆயுள் வேத மூலிகைகள் அழிஞ்சி போச்சிங்கோ-நம்மாளு 
ஆங்கில மருந்து தின்னு அலையுறானுங்கோ' இப்படித்தான் எல்லாம் மாறிட்டிங்க..

தொடரும்.............

0 comments:

Post a Comment