ADS 468x60

01 June 2017

மட்டக்களப்பு தமிழ் எல்லைக் கிராமங்களை எடுத்தேத்த என்ன வழி செய்கிறார்கள்!!

கானல்நீர் ததும்பும் காய்ந்த வயல்வட்டைகள், குன்றும் குழியுமான உடைந்த வீதிகள், தலையில் மொக்காடு போட்டு தண்ணீருடன் செல்லும் மங்கையர், கொம்பை நீட்டி குளத்தில்; குளிக்கும் எருதுகள் இடையிடையே வரண்டு போய் வாடி நிற்கும் விருட்சங்கள் என பல காட்சிகளை கடந்து தும்பங்கேணி வம்மியடி சந்தியில் கிறுகி ஒரு தீவகற்பமாக இருக்கும் துரவந்தியமேடு கிராமத்தினை அடைந்தோம். 'கண்களில் வரட்சி இருந்தாலும் சின்னக் கைகளில் செவ்வரத்தம் மாலையுடன் எங்களை வரவேற்க ஆரம்பமான சிறார்களின் சுதந்திரமான ஆரோக்கியமான அந்த பாடசாலை நாட்களை தேடும் கண்களை அடையாளங்காட்டிக்கொண்டிருந்தது அவர்களது முகங்கள்'
"கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்" சமீப காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் முன்னிலையில் உள்ளன. அதுபோன்று பல்வேறு சமகால அனர்த்தங்களின் வேக்காடு மாறாத நிலையில் ஓரளவு துளிர்விடத் துவங்கினாலும், இன்னோரன்ன பெற்றோரின் வேலையின்மை, வரட்சி, விவசாயம் பாதிப்பு ஏற்றத்தாழ்வான விலை போன்ற இன்னோரன்ன காரணங்களால் இவர்கள் தங்களது கல்வியையும் தொலைத்து தங்களது பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல கல்விச் சூழலை நிர்னயிக்க முடியாத துர்ப்பாக்கியத்தில் இருக்கின்றனர்.

இதனால்; போசாக்கு குறைந்த குழந்தைகள் அதிகரித்து பாடசாலைக்கு வருகின்ற விருப்பம் குறைந்து கொண்டு போகின்ற நிலமையில் பட்டிருப்பு தொகுதியில் உள்ள போரதீவு வலயத்திற்குட்பட்ட படுவான் கரையின் அநேக முன்பள்ளி பாடசாலைகள் பரிதாப நிலையில் நடாத்தப்பட்டுக்கொண்டிருப்பதனை கருத்தில் கொண்டு பல வேண்டுகோள் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய சுரவணையடி ஊற்றிலுள்ள விநாயகர் பாலர் பாடசாலையில் பயிலும் 24 பிள்ளைகளுக்கான தொடர்ந்து போஷாக்கு உணவு வளங்கும் திட்டம் 28.05.2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டமானது நிக் அண்ட்; நெல்லி அமைப்பினருடனும், மற்றும் பிரதேச செயலகத்தின் முன்பள்ளி பாடசாலைக்கு பொறுப்பான அலகுடனும் இணைந்து மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விளையாட்டு கழகங்கள் என அத்தனை அமைப்புக்களும் இந்த நாளை வரலாற்றில் பொறிக்கப்படும் ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

'இத்திட்டத்தின் கீழ் பாடசாலை நாட்களில் வருகை தருகின்ற பிள்ளைகளுக்கு பசும்பால் முட்டையுடன் ஏதாவது ஒரு தானியம் உணவாக வழங்கப்பட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை கண்காணிக்க இணக்கம் தெரிவித்துள்ள பிரதேச செயலகத்துக்கு இந்த முன்பள்ளி நிர்வாகத்தினர் அறிக்கை சமர்ப்பிக்கும் ஒரு நீண்டகால பொறிமுறை உருவாக்கப்பட்டு இத்திட்டம் ஒரு மாதிரியான திட்டமாக நடைமுறையில் இருக்கும். இங்கு கல்வி பயிலும் மாணவச் செல்வங்களின் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுவதற்கும் இத்திட்டதில்  ஆவணசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான சூழலை மாணவர்களிடையே ஏற்படுத்த வகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.             இதுபோன்று பல கல்வி, சமய, சமுகப் பணிகளை எமது கிழக்கிலங்கை மக்களின் அமோக ஆதரவுடன் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது' என அதன் தலைவர் த.துஸ்யந்தன் குறிப்பிட்டிருந்தார்.

முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்கள் மிக முக்கியமானவர்கள். எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக வெளிவருவதற்கான ஆரம்ப பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் இடமாக இது விளங்குகிறது. அதனால் மாணவர்களது முன்பள்ளி பாடசாலை பருவம் அவர்களது எதிர்கால்ததை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கிறது என்று சொல்லலாம். அதனால் இவர்களுக்கான கல்வியை மட்டுமல்ல சிறந்த ஆரோக்கியம், ஒழுக்க விழுமியங்கள், நற்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் முக்கிய பணியாகின்றது.

இந்நிகழ்வில் இந்த திட்டத்திற்கான ஆரம்ப நிகழவு என்னுடன் ஏனைய அதிதிகளும் இணைந்து இத்திட்டத்தினை திரைநீக்கம் செய்து வைத்தமை குறுப்பிடத்தக்கது. 

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்று சொல்வார்கள். அதனால் கல்வியை தொடர வேண்டிய காலத்தை தவற விடாது பாடசாலைக் கல்வியை ஒழுங்காக படித்து வருவதற்கு எமது சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கல்வியை முடித்து விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு சிறுவரும் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும். இது விஷயமாக சாத்தியம் பெறுவதற்கு பெற்றார்கள். ஆசிரியர்களின் மற்றும் சமுகத்தின் அக்கறையுள்ள பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சிறுவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும் போது எமது வீடும் நாடும் சுபீட்சம் பெறும் என்பதில் ஐயமில்லை. அதற்காகவே இத்திட்டம் பல மட்டத்திலுள்ள பிரதிநிதிகளின் ஒருங்கிணைந்த முயற்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஆரம்பக் கல்வியில் இணைத்துக்கொள்ளப்படும் சிறுவர்களில் 90 வீதமானோர் ஏதாவது ஒரு வகையில், முன்பள்ளிக் கல்வியை பெற்றிருக்கின்றனர்;. ஆனாலும், முன்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிக்க வேண்டியுள்ளது. அதுபோல் முன்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும்போது அவர்களது கல்வித் தகைமைகள்,  அவர்களுக்கான பயிற்சி, தகுந்த வேதனம் வழங்குதல் தொடர்பில் அரச மட்டத்தில் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது.

'எங்கட புள்ளங்கள சரியான கஸ்ட்டத்தின் மத்தியிலதான் வளர்த்து வாறம் அத்தோட இஞ்ச வந்து படிப்பிக்கிற டீச்சர்மாருக்கும் சரியான சம்பளம் கிடையாது நாங்க எல்லைக்கிராமத்தில இருக்கிற மக்கள் வஸ் வசதிகள் இஞ்ச கெடயாது. இந்த நிலையில நாங்க தூரதேசம்போய் படிப்பிக்கிற அளவுக்கு இல்ல. எல்லாரும் கூலிவேலை மற்றும் சுயதொழில் செய்யுற அடிமட்ட மக்கள், அப்படி இருக்கிறப்ப எங்க வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, இந்த ஊரை தெரிவு செய்து இந்தப் புள்ளங்களுக்கு இந்த உணவுகளை கொடுக்க முன்வந்ததை இட்டு இந்த ஊர் சார்பாகவும், இந்த பெற்றோர் பிள்ளைகள் சார்பாகவும் உங்களுக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ளுறம்.' என பெற்றோர் ஒருவர் முன்வந்து கூறினார்.

ஆகவே இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் பிள்ளைகளின் பாடசாலை வருகின்ற ஆர்வத்தினைக் கூட்டும் என்பதுடன், ஆரோக்கியத்துடனான கல்வி அறிவுள்ள சமுகத்துக்கு வித்தாக இருக்கும். இது நேராகவும் மறைமுகமாகவும் பெற்Nறூர், இளைஞர்கள், ஊர்மக்கள் இடையே கல்வி, பிள்ளைகளின் சுகாதாரம், அவர்களது எதிர்காலம் போன்றவற்றில் அந்த சமுகத்துக்கு இருக்கவேண்டிய வகிபாகம் என்பன துறைசார்ந்தோரினால் எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நிதிவழங்கி உதவிக்கொண்டிருக்கும் நிக் அண்ட் நெல்லி அமைப்பினருக்கு இந்தப் பாராட்டுகள் சேரவேண்டும் என பலர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு சுரவணையடியூற்று விநாயகர் ஆலய பரிபாலன சபைத்தலைவர் அவர்களின் நன்றி உரையுடன் இனிது முடிவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

நிகழ்வுகளின் நிழழ்கள்










0 comments:

Post a Comment