ADS 468x60

16 June 2017

நஞ்சை உண்ணுகிறோம்!

எம்மைப் பொறுத்தளவில் உழவுத் தொழில் அல்லது விவசாயம்; என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். 
20ஆம் நூற்றாண்டில் வேளாண்மைத் தொழில் மிக்க வளர்ச்சியடைந்தது. . செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. உணவு உற்பத்தி பன்மடங்கு பெருகியது மேலும் தெரிவு வளர்ப்புமுறை, இயந்திர முறை வேளாண்மை மிகுதியானது. அதோடு விவசாய மானியங்கள் வழங்கப்பட்டன. பண்ணையிடலின் வளர்ச்சியானது ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் தேர்ந்தெடுத்த வளர்ப்பு போன்ற மாற்று தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியைப் புதுப்பித்தது. சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகள் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக, பல நாடுகள் வேளாண்மைத் தொழிலுக்கு கணிசமான மானியங்கள் வழங்குகின்றன. இந்த விவசாய மானியங்கள் கோதுமை, மக்காச்சோளம், அரிசி, சோயாபீன்கள், மற்றும் பால் போன்ற குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய அளிக்கப்படுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் இவ்வாறு மானியங்கள் வழங்குவதால் தம் நாட்டு உணவுப்பொருள்களின் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டு, 'பாதுகாப்பு வாதத்தை' கடைப்பிடிக்கின்றன என்றும், சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கின்றன என்றும் குறைகூறப்படுகிறது.

ஆனால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சர் ஆல்பர்ட் ஹாவார்டு போன்றோர் 'உயிரி வேளாண்மை' போன்ற இயற்கை இசைவுமுறை வேளாண்மையின் மேன்மையை வலியுறுத்தினர். பூச்சிக்கொல்லிகளையும், செயற்கை உரங்களையும் அதிகப்படியாக பயன்படுத்துவது நிலத்தில் நீண்டகாலச் செழுமையை பாதிக்கும் என்று வாதிட்டனர். 

அவர்களது இக்கருத்துகளைப் பல ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்ந்தது. விவசாயிகள், நுகர்வோர், மற்றும் ஆட்சித்துறையினர் பலர் இயற்கையோடு இசைந்த வேளாண்மை முறைக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நில தரமிழப்புப் போக்கு தொடர்ந்ததென்றால் இந்தக் கண்டம் 2025 ஆம் ஆண்டு தனது மக்கள்தொகையில் 25 சதவிகிதத்தினருக்கு மட்டுமே உணவளிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஆப்பிரிக்கா, ஐக்கிய நாடுகள் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கானா இயற்கை வளங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு எமது பிராந்திய நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவி வருகிகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலம் அல்லது தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்கி இயற்கையோடு ஒன்றித்த பயணமாக அது இருந்தது.

ஆனால் இன்று எமது மாவட்டத்தின் விவசாயிகள் புஞ்சை விதைக்கும் ஆர்வத்தினை விட நஞ்சை விதைக்கும் மனோ நிலையில் இருக்கின்றனரா என்ற கேள்வி பல மட்டங்களிலும் இருந்து எழுந்தவண்ணமுள்ளது. அழகான, அதிகமான உற்பத்திகள் விவசாயத்தில் பரிநாமத்தினை மறைப்பதற்கில்லை, சில நேரங்களில் அளவுக்கதிகமான உற்பத்தி எமது பிரதேசத்தில் கிடைப்பதனைப் பார்கிறோம்.. இயற்கை அநர்த்தங்களில் இருந்து வருகின்ற இழப்புகளைவிட பூச்சு புழுக்கத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு செயற்கையான அறுவடை அதிகரிப்புக்கான பூச்சுநாசினிகள் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுவதனால், இவற்றில் இருந்தான இழப்புகளில் இருந்து விவசாயிகள் விடுபட்டு அதிக விளைச்சலினை பெறுவதனைக் காணலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 49,339 கெட்டேயரில் மேட்டு நிலப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்குள்ள மக்கள் மலையகப் பிரதேசத்தில் இருந்து தருவிக்கப்படும் மரக்கறி வகைகளைவிட இங்கு உற்பத்தியாகும் பொருட்களையே அதிகம் நுகர்கின்றனர். அதிலும் அதிகமாக மன்முனை தென் எருவில் பற்றில் இருந்து அதிகம் இவ்வுற்பத்திகள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இங்கு விளைவிக்கப்படும் பயிர்வகைகளுக்கு 14 வகைக்கும் மேலான பூச்சிநாசினிகள் பாவிக்கப்படுவதாகவும், அவை 22 தடவைக்கும் அதிகமாக ஒரு அறுவடை முடிவதற்குள் பிரயோகிக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் பயிர்களில் அதிகூடிய நஞ்சு மருந்துகளை 84% விகிதம் கத்தரி பயிர் மீதும், 66% விகிதம் மிளகாய் பயிர் மீதும் அதிகம் பிரயோகின்றனராம். இங்கு பயிரிடுகின்ற விவசாயிகளில் 90% விகிதமானோர் இந்த பரிந்துரைக்கப்படாத நஞ்சு மருந்துகளை விசுறுகின்றதுடன். அந்த நஞ்சை விசிறி அதன் கால அவசாகம் கழியுமுன் 89% மானவா்கள் அவற்றை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்லுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (http://www.banglajol.info/index.php/IJARIT/article/view/21092)

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 50,000 கெக்டேயருக்கு மேல் மேட்டு நிலப்பயிர்ச்செய்கையினை செய்துவருவது அவர்களின் வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரமாகக் காணப்படுகிறது. இருப்பினும் இவ்வாறு இவ்வாறு ஒருபுறத்தில் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டாலும், இந்த நஞ்சு மருந்து, புதிய வகை உரப்பாவனைகள் பல பக்க விளைவுகளை இயற்கைக்கும் மனிதருக்கும் ஏற்படுத்தியுள்ளது எனக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஏற்படுதல்
நிலக்கீழ் நீர் குறைவடைதல்
இயற்கையான பூச்சு புழுக்களின் அழிவு
ஆறுகுளங்களில் கலப்பதனால் அங்குள்ள உயிரினங்களின் அழிவு
மீன் உண்ணுபவர்களுக்கு ஏற்படும் அசாதாரண நிலமை
சிறுநீரகப் பிரச்சினை

ஆக இந்த நஞ்சுப் பாவனை ஒரு பெரிய நச்சுவட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. ' ஆரம்பகாலத்தில் இங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர்கள் இயற்கையான பூச்சி நாசினிகளையே பாவித்து விளைவித்தனர். அதனால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழும், ஒரு பரம்பரையைக் கொண்டிருந்தனர். ஆனால் அவை இன்று மாற்றமடைந்துள்ளது. மாட்டெரு கூட்டெரு என்பனவற்றோடு பல இயற்கைப் பொருட்களை பூச்சி நாசினிகளைப் பாவித்து அவற்றை விளைவித்தனர். ஆனால் இன்று அந்த நிலையில் இருந்து மாற்றமடைந்துள்ளது.

ஒரு விவசாயப் பெரும்பாக உத்தியோகத்தரை கண்டு அவருடன் பேசும்போது கூறினார் 'பக்கத்து வயல்காரன் மூன்று வகைப் பூச்சிகொல்லிகளை கலந்து வீசியும் அதற்கு கட்டுப்படவில்லை, பசளைக் கடை முதலாளியிட்டதான் கேட்கணும் என்று சொல்லி அங்கு சென்று கேட்பார்கள், அவர்களும் இந்தாங்க புதிசா வந்திருக்கும் இந்தப் பூச்சி நாசினியையும் சேத்து வீசுங்க சரியாகிடும் என அறிவுரை கூறுவார்கள்'
இவ்வாறு புரியாத மருந்துகளை தெழிவற்றவர்களிடம் இருந்து பெற்ற அறிவுரைகளைக் கொண்டு விசுறுவதனால், அவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கின்றது, அத்துடன் சரியான பரிகாரமும் கிடைக்காமல் போகின்றது. இதனால் மேலும் சூழலும், உற்பத்தியும், சூனியமாகிவிடுகின்றது மனித வர்க்கத்துக்கு. 

இந்த விவசாயிகளின் மனோநிலைக்கான காரணங்கள் என்ன?
இவர்களுக்கும் விவசாய உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறையிலான இடைவெளி.
சரியான பூச்சி கொல்லி மருந்துகள் உரவகைகள், பாவிப்பது தொடர்பான குறைந்தபட்ச அறிவு. அதுபோன்று அவற்றினால் வரும் ஆபத்து பற்றிய தெழிவின்மை.
இவ்வகையான நஞ்சு மருந்து உரவகை, போன்றவற்றை விற்பனை செய்வோரின் விளம்பர மாயை
இலாபத்தினை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோரின் பொறுப்பற்ற மனோநிலை.
இவற்றுக்கு ஏற்படும் செலவினை விட இவற்றினால் ஏற்படும் எதிர்கால நஸ்டத்தினை கருத்தில் கொள்ளாத உளப்பாங்கு
ஆகவே இவ்வாறான பின்னடைவுகளில் இருந்து எமது எதிர்காலத்தினை எவ்வாறு பாதுகாப்பது என்கின்ற கேள்விக்கு யார் பொறுப்பு கூறுவது என்பதே எல்லோரது மனதிலும் இருக்கும் கேள்வியாகும். 
இவற்றுக்கான சில தந்திரோபாயங்களைப் பார்க்கலாம்,
விவசாய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் உரவகை விற்பனையாளர்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கான மார்க்கங்களை வலுப்படுத்தவேண்டும், அத்துடன் மாதிரிச் சேதனப்பசளைகளை ஊக்குவித்து அவர்களை ஏனைய விவசாயிகளுக்கு முன்மாதிரியாக காட்டவேண்டும்.
உற்பத்தியாளர்களை நஞ்சற்ற உற்பத்திகளை ஊக்குவிக்கும் விற்பனை நிலையங்களுடன் இணைப்பை ஏற்படுத்த வழிவகைகளைச் செய்யவேண்டும்.
இலங்கையில் வேறுமாவட்டங்களில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றுள்ள சேதன விவசாயச் செய்கையாளர்களை பார்வையிட ஆவண செய்தல் ஊடாக அவர்களின் மனோநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தல்.
இவ்வாறான விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களுக்கு விருதுவழங்கும் விழாக்களை ஒழங்குசெய்து எல்லோர் முன்னிலும் பாராட்டுதல்.
நுகர்வோரை பாதுகாக்க நஞ்சு உற்பத்திகளால் வரும் விளைவுகள் பற்றி ஊடகங்கள் மூலமாக விழிப்படையச் செய்யவேண்டும்.
மருந்துப்பொருட்கள் பாவனை, அவற்றை களஞ்சியப்படுத்தல் அவற்றை இல்லாமல் செய்தல் போன்றவற்றிலான விழிப்புணர்வுகளை பல்வேறு மட்டத்திலும் அதிகப்படுத்துதல்வேண்டும்.
கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலான பொருத்தமான பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் இவைபற்றிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மார்க்கங்களை உருவாக்கி அவற்றை அமுல்படுத்தவேண்டும்.

இவ்வாறான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன்வருவதனால், மேலுள்ள இடர்களை வென்று இயற்கையோடு வாழகின்ற மனநிலைபடைத்த நல்ல சமுகத்தையும், நோயற்ற வாழ்க்கையினையும் உறுதிப்படுத்துவதனூடாக ஒரு ஆரோக்கியமான வினைத்திறனான இனத்தைப் கொண்டு வாழலாம்.

0 comments:

Post a Comment