ADS 468x60

01 July 2017

அதிசயமாய் அமைந்த ஸ்ரீ பால முருகன்...

பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.


ஆங்காரமாக இருந்தாலும் ஓங்காரத்தை மறக்காத பக்தன் அம்பாரைச் சாமியார் என்னும் அடியார், வெத்திலைக் கொழுங்து மெத்தமாய் விளையும் தேனூர் பதியின் தோட்டத்துக்கான அலம்பல் தேட்டத்தில் கம்பு வெட்ட இந்த காட்டுக்குள் நுழைகிறார். முருகா முருகா என்று கம்புகளை வெட்டிக் கொண்டு செல்லுகின்றார், செல்லும்போது நிறை மதியம் சற்று இளைப்பாறி மறுபடியும் வெட்டுவோம் என நினைத்த அடியவரின் காதகளில் ' அடியவனே நான் இங்குதான் குடியிருக்கின்றேன் என்னை இங்கு ஆராதனை செய்யும்' என்ற ஒரு அசரீதி கேட்டதாம். அன்றிலிருந்து பால் பொங்கும் மணல் மேட்டில் பால முருகனாக வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை வாரி வழங்கி தன்னை நாடும் அடியவர்க்கு அருள் பேற்றினை வாரி வளங்கும் வள்ளலாக எம்பெருமான் எழுந்தருளிய தலம் தேத்தாத்தீவு  பால் மணல் மேடாகும்.
வந்தோரை சிறப்பிக்கும் மீன்பாடும் தேநாட்டின் 12 மைல் தெற்கே செந்தூரத் தேன் கதலி செறிந்திலங்கும் தேத்தாத்தீவில் வற்றாத வில்லுக்குளத்தருகே மந்தியும் கானக் குயிலும் மகிழ்து விழையாடும் அழகான இடத்தினில் அழகன் குடியிருக்கிறான்.

இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபால முருகனுக்கு சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் திருவிழா பெருவிழாவாக தேத்தாத்தீவு மக்கள் எடுத்து வருவது சிறப்பாகும். தமிழருக்கே உரித்தான தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு பண்பாடு சற்றும் பிசகாத வழபாட்டு மரபுகளை சுமந்து, பேணிக்காக்கும் இந்த நிகழ்வுக்குள் பல விடங்கள் உள்ளடங்கும். மேளதாள வாத்திய கச்சேரிகள், பட்டெடுத்தல், கலை நிகழ்சிகள், பஜனை நிகழ்வுகள்,  கதா பிரசங்கங்கள்,  பண்ணிசை நிகழ்வுகள், அறநெறி நிகழ்வுகள் அன்னதானம் என அத்தனை சமய அனுட்டானங்களையும் கொண்டு மக்களை ஒன்று சேர்த்து மகிழ்விக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.

பால  முருகன் மீது பக்தி கொண்டு இயற்றிய பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இது பால் மணல் பத்து என அழைக்கப்படுகின்றது.
எங்கு இருந்தாலும் இந்த திருவிழாக் காலம் வந்து விட்டால் ஐயன் முருகனின் ஆலயத்தில் ஆடித்திரிந்த அந்த நாட்கள்தான் ஞாபகம் வருகிறது. பல பேர் இந்த ஆலயத்தில் இருந்து தான் கலைஞர்களாகவும், பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும் உருவாகி இன்று நல்ல நிலையில் இருப்பதற்கான ஒரு களமாக இருந்திருக்கின்றது என்றால் அது மிகையில்லை. நல்ல நோக்கத்துக்காக வழிபாடுகளை பயன்படுத்துவது ஆத்மீக திருப்தி மாத்திரமல்ல ஒரு சமுகத்தின் எழுச்சியுமாகும்.
முருகா கோடி முறை பாடினாலும் சலிக்கவும் இல்லை உன்னை கொண்டாடும் நெஞ்சிக்கு கவலையும் இல்லை. வாடி நிதம் பாடுகையில் வருகின்றாய் நீ வந்தவுடன் இன்பம் எல்லாம் பெறுகின்றேன் ஆடி வரும் புள்ளி மயில் அழகோனே உன்னை அள்ளி நிதம் பருகிடுவேன் விழியாலே!!

0 comments:

Post a Comment