ADS 468x60

19 July 2017

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களின் கல்வி நிலைதான் என்ன??


வானம் தொடும் எல்லை அது. நீண்ட இடைவெளிகளைத் தாண்டி சென்றுகொண்டு இருந்தோம். பாதங்களை பகலவன் பட்ட மலைச் தொடர்கள் சுட்டெரிக்க, வெய்யிலையும் வென்றுவிடும் குளிர்ந்த புன்னகையுடன் குழந்தைகள் நடந்து வந்தனர். இரு வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் எமது மக்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை இந்த குழந்தைகளின் முகத்தில் இருந்து அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.


உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த வர்க்கத்தில் எமது எல்லைக் கிராமங்களில் வாழும் பிள்ளைகளும் அடங்குவர்.


கனடாவின் சிடாஸ் அமைப்பினர் எமது மட்டக்களப்பு கிராமங்களில் கல்வி கற்க்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகளைக் கொடுத்து உதவும் வகையில் மாவிளை ஆறு கைலன்  வித்யாலயம் மற்றும் பெரிய புல்லுமலை அ  த க பாடசாலை ஆகியவற்றில் உள்ள பாடசாலைச் சிறார்களுக்கு பெறுமதி மிக்க பாடசாலை சப்பாத்துக்களையும், புத்தகப் பைகளையும் வழங்க உதவியமை வரவேற்க்க தக்க ஒன்றாகும்.

கிட்டத்தட்ட மட்டக்களப்பு நகரில் இருந்து 45 கி.மீ க்கு அப்பால் இருக்கும் இப்பாடசாலைகளுக்கு பல வகையிலும் உதவிகள் போய்ச் சேர்வதில் சிரமம் காணப்படுகிறது. ஆசிரியர்கள் இத்தனை தொலைவில் உள்ள பாடசாலைக்கு செல்ல விரும்புவதில்லை, அது போல் இந்தப் பாடசாலைகளுக்கு வினைத்திறனான சமுக அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும்  ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் கட்டிட வசதிகள் இருந்தும் அனைத்தும் தாமதமாகவே கிடைக்கும் துர்ப்பாக்கியம் இங்கு காணப்படுகிறது. இருப்பினும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் இன்னும் இங்கு கடமையில் உள்ளதையிட்டு இந்தப் பாடசாலையின் அதிபர்கள் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

இம்மக்களிடையே எழுத்தறிவு மிகக்குறைவாகக் காணப்படுவதனால், அவர்களின் சக்திகளை, திறமைகளை உணர்தல் மற்றும் வெளிக்கொணர்தல், மாறுபட்டு சிந்திக்கும் திறமைகளை உருவாக்குதல், அவர்களின் அன்றாட வாழ்வில் பிரச்னைகளைத் தீர ஆராய்ந்து முடிவுகள் எடுத்தல் மற்றும் கிராம, மாவட்ட தேசிய வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தல் ஆகியனவற்றை தவற விடுகின்றனர்.

குறிப்பாக இங்குள்ள பெண்களுக்கு உடல் ஆரோக்கியம், மகப்பேறு, உடல் நலம் பேணுதல் தடுப்பூசி, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றில் விழிப்புணர்வு, சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தையும், முடிவு எடுக்கும் ஆற்றலையும்  உணர்வையும் அதிகரிக்கச் செய்தல் ஆகியன மிக மிக குறைவாகக் காணப்படுவதை அவதானித்து கவலைப்பட்டோம் காரணம் அவர்களிடையே காணப்படும் எழுத்தறிவின்மையாகும்.

'நாளாந்தக் கடமைகளைக் கூட அறியாத தெரியாத சிறுவர்கள் பாடசாலைக்கு ஏனோ தானோ என வருகை தருகின்றமை வருத்தப்படக்கூடியதே! வருமானக் குறைவு, பாராபட்சம், நீண்ட கால இடப் பெயர்வு, போதிய விழிப்புணர் இன்மை ஆகிய காரணங்களால் இந்த மாணவர்கள் படிக்கும் சூழலை இழந்து இடைவிலகி வருகின்றனர். இவற்றை புரிந்து கொண்டு இத்தனை தொலைவில் இந்த மாணவர்களுக்கு கொடுத்துதவ முன்வந்தமை பாராட்டுதற்குரியதே' என பெரிய புல்லுமலை பாடசாலை அதிபர் நன்றியோடு பாராட்டிக் கூறினார்.

'அதிகமா யானைகளால் பாதிக்கப்படும் கிராமத்தில் மாவிளையாறும் ஒன்றாகும். அதுபோல் வருடாவருடம் வரும் வெள்ளம் மற்றும் வறட்ச்சி ஆகியவற்றினாலும் கடந்த யுத்தத்தினாலும் முழுமையாக பாதிக்கப்பட்ட  ஒரு பின்தங்கிய கிராமம் என்றால் அது  மிகையில்லை. அரசாங்கத்தினாலும் தனியார் நிறுவகங்களினாலும் அமுலாக்கப்படும் திட்டங்களில் இவர்கள் குறைந்த பட்ச நன்மைகளைப் பெறுவதற்கான முழுக் காரணமும் மக்களிடையே எழுத்தறிவும், விழிப்புணர்வும் இல்லாமையே. அந்த எழுத்தறிவினை எமது சமுகம் முழுமையாகப் பெறாமையினாலேயே அரசியல் மற்றும்  பொருளியல் ரீதியில் பலமிழந்த ஒரு குழுவாக தலை குனிந்து நிற்க்க வேண்டியுள்ளமை அனைவருக்கும் தெரியும். அந்த நிலையை மாற்ற எம் உறவுகள் சிடாஸ் நிறுவனம் மூலமாக இந்த குழந்தைகளுக்கு செய்திருக்கும் உதவி இதோடு தொடர்பு பட்ட அனைவரையும் ஆசிர்வதிக்கும் என்று கூறினார்' மாவிளையாறு பாடசாலை அதிபர் அவர்கள்.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான எம் தமிழ் உறவுகள் இன்னும் மட்டு மாநகரின் பரந்த, வலுவிழந்த எல்லை வேலிகளாக மட்டும் இன்னும் இருப்பது வேதனைப்படவேண்டிய விடயமாகும். இருப்பினும் இவ்வாறான நிலையை மாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்முறவுகளின் அறிவுக்கண்ணை திறக்கச் செய்வதன் மூலம் எதிர்கால சந்ததியின் விருத்திக்கான சாவியினை அவர்களிடம் ஒப்படைக்கும் கைங்கரியத்தினை செய்தவர்கள் என்ற நாமத்துடன் வாழ்து போவோம்.

( மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..  )

மவிளையாறு கைலன்  வித்யாலயம் நிகழ்வுகளில் நிழல்  



 பெரிய புல்லுமலை  நிகழ்வுகளில் நிழல்   




0 comments:

Post a Comment