ADS 468x60

28 August 2017

மதுவில் மயங்கும் மட்டக்களப்பார்

ஒரு பிரதேசத்தின் முதுகெலும்பு அந்த பிரதேசத்தின் மனித வளங்கள்தான். அவற்றை ஆரோக்கியமாக பேணுவதனிலேயே அந்த சமுகத்தின் வளர்சி தங்கியுள்ளது. ஆனால் இந்த மனிதர்களை இயக்கத்தில் வைக்கவேண்டிய அதிகாரிகள் மயக்கத்தில் அல்லோ வைத்திருக்கின்றனர் எப்படி ஐயா மட்டக்களப்பு உருப்படும்? தவறான விடயங்களில் எல்லாம் மறவாமல் முன்னிற்கும் மட்டக்களப்பு வருடா வருடம் அதிகம் மது நுகர்வோர் மூலம் புதுவித சாதனையாக அதிக பணத்தை செலவிடும் பட்டியலில் இலங்கையில் முதன்மை வகிக்கிறது. இங்கு அட்டவணையின் தகவல்படி 63 உத்தரவாதமளிக்கப்பட்ட மதுசாலைகள் இயங்கிவருவது ஒரு ஆபத்தான விடயமே. அது இப்போது 66 ஆக உயா்ந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் மன்முனை வடக்கில் மாத்திரம் 33 மதுசாலைகள் இயங்கிவருகின்றன.

இவை இங்குள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையிலும், ஆலயங்களின் எண்ணிக்கையிலும் பன் மடங்கு அதிகமாகும். ஆலயம் பாடகாலைக்கு செல்பவர்களைத்தவிர மதுசாலைகளுக்கு செல்பவர்கள் அதிகரித்துவிட்டனர் என்ற தகவலையே இவை காட்டி நிற்கிறது.

2010 மற்றும் 2011 தகவலின் படி மட்டக்களப்பில் மது அருந்துவோரின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளமையினை அருகிலுள்ள கிறாவ் காட்டுகின்றது. ஒரு சமுகத்தின் எழுச்சி மீட்சியை சிதைக்கும் மூலகாரணம் இந்த போதைக்கு அடிமையாகி உற்பத்திதிறனிழந்த ஒரு கூட்டத்தினை உருவாக்கி அந்த சமுகத்தினையே ஒட்டுமொத்தமாக சிதைக்கும் செயற்பாட்டினையும் இந்த தரவு எமக்கு தெழிவாக காட்டுகின்றது.

எமது நாட்டில் அதிகளவு மதுபானசாலைகளைக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மட்டக்களப்பில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஆயிரம் மில்லியன் ரூபாவே ஒதுக்கப்படுவதாகவும் ஆனால் வருடமொன்றுக்கு மட்டும் எமது மாவட்டத்தில் மதுபானத்திற்காக 4800 மில்லியன் ரூபாய்க்கள் செலவிடப்படுகின்றன என தரவுகள் சொல்லுகின்றன. இதில் 2016 தரவுப்படி எமது மாவட்டத்தில் 41 இலட்சத்து 91 ஆயிரத்து 891 லீற்றர் மது நுகரப்பட்டுள்ளது. இதற்கு செலவிடப்பட்ட தொகை 281 கோடியினையும் தாண்டியுள்ளதாக தகவல் சொல்லும் போது எப்படிங்க நம்ம வறுமையில் முதலிடத்தில் இருந்து நகர முடியும். வாழ்த்துகள் குடிமக்களேஇ குடிப்பவர்கள் அதிகரிக்கும்போது  படிப்பவர்களை எப்படி அதிகரிப்பதென சிந்திப்பது. படித்தவர்கள், அதிகாரிகள், புத்திஜீவிகள் விசேடமாக இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதனால் எதுவித பயனும் இல்லை என்பதனையே இவை காட்டுகின்றது. 

இதில் இளைஞர்கள் சீர்கெட்டு வருவதனை சுட்டிக்காட்டவேண்டி இருக்கிறுது. இரு வருடங்களிலும் பருகி அழித்த சாராயத்தின் மொத்த லீற்றரின் அளவு 5,717,447 ஆகும். ஆகவே மக்களே சிந்தித்து வாக்களியுங்கள், உங்களை குடிகாரர்களாக்கிய துரோகிகளுக்கு வாக்களிக்கவேண்டாம். இதன் காரணமாக நாளாந்தம் பல கமுக சீர்கேடுகளும் நிகழ்கின்றன. நாளாந்தம் கூலித்தொழில் செய்பவர்களே இந்த விடயத்தில் பாதிக்கப்படுகின்றனர். மனைவி அல்லது தனது குழந்தையின் தங்க ஆபரணங்களை கூட அடகுவைத்துவிட்டு மது அருந்துவதால் மறுநாள் காலையில் குறித்த மதுசாலையில் பல பெண்கள் நின்று அழுவதையும் காணலாம்.

சாதி மத வர்க்க பேதமின்றி  எல்லாத்தரப்பினரையும் உடல் உள குடும்ப சமுக பொருளாதார ஆண்மீக சூழலியல்சார் பாதிப்புகளை உருவாக்குகின்ற ஒரு அம்சம் இந்தப் போதைப் பொருள் பாவனையாகும். இது இலங்கையில் 30 வருடகாலம் நடைபெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு அடுத்ததாக சமுகத்தை மிகமோசமாக பாதித்துள்ள ஒன்றாக நோக்கப்படுகின்றது. 30 வருட யுத்தத்தினால் உயிரிழந்த மக்களைவிட வருடா வருடம் போதைப்பொள் பாவனையால் 47000 பேர் இறப்பதாக சுகாதாரத்துறையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சி.தணிகசீலன், S.Thanigaseelan

0 comments:

Post a Comment