ADS 468x60

06 September 2017

மட்டக்களப்பு கிராமப் புறங்களில் அறநெறி பாடசாலைகள் ஆரம்பித்து வைப்பு.

பல தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிடையே, குறிப்பாக தமிழ் இந்துக்களின் அறநெறிப் பண்பாடு பல வழிகளிலும் சிதைவடைந்து வந்துள்ளது. இலங்கையில் கிழக்குப் பகுதியில் பல புராதன பெருமைமிக்க இந்து நாகரிகத்துக்கு சொந்தக்காரரான தமிழர்கள் அசைக்கமுடியாத நல்ல விழிமியங்களை அவர்களது மரபுகளில், பண்பாட்டில், ஏட்டில் புதைத்து அதற்கொழுகவே வாழ்க்கை முறையினை அமைத்து மற்றவரும் பெருமைகொள்ளும் வகையில் வாழ்ந்து வந்தனர் என்பது எனது கருத்து.

பாடசாலைகளிற்கு செல்லாதவர்களும், ஆலயங்கள், கலைகள் மற்றும் பெரியவர்களின் வாய்வழி அறப்பரப்பலிற்கு ஆட்பட்டு நல்ல வழியில் வாழலாயினர். ஆனால் இன்று அவை மறைந்து கொண்டு வருவதனைக் காணலாம். மதங்கள் வலியுறுத்துகின்ற நடைமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்த எம்முன்னோா்கள் நோய் நொடியற்ற, சுகாதாரமான, நல்ல மனமுடைய வக்கிரக் குணங்களற்ற, முரண்பாடுகளற்ற ஒரு குடிப்பரப்பினை நாங்கள் கொண்டிருந்தோம். இதனையே அறநெறிப்பாடசாலைகளுடாகப் ஏனைய மதத்தினரும் போதித்து வந்திருந்தனா்.

'இங்குள்ள பிள்ளைகள் எப்போது பல் விளக்க வேண்டும், எப்போது கைகால் முகம் கழுவ வேண்டும், மற்றவர்க்கு எப்படி மதிப்புக் கொடுக்கவேண்டும், நன்றி செலுத்தவேண்டும், பொறுப்புக்கூறவேண்டும போன்ற இன்னோரன்ன அடிப்படை விடயங்கள் கூட எமது பல கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் கூடத் தெரியாமல் இருக்கிறது. இதனால் இலகுவில் தீய செயல்களில் ஈடுபடும் எண்ணமுள்ள, கல்வியினை விரும்பாத அறிவில்லாத சமுகமாக எம் கண்முன்னே எமது சமுகம் சீரழிந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முயற்சி எடுங்கள், அல்லாது போனால் வேறு மதத்தவர்களால் இவர்களது நலிவுறு நிலையை கருத்தில்கொண்டு இன்னும் சிறிது காலத்தில் எமது வேர்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலைதான் உருவாகும்' என ஒரு கல்வி அதிகாரி அவரது ஆதங்கத்தினைக் கூறினார். 

இந்த நிலையினை தடுத்து நிறுத்தும் வகையில்தான் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினால் முன்னெடுத்துவரும் பல தொண்டுகளில், தூர்ந்துபோய் அறநெறி வகுப்புகள் என்றால் என்னவெனவும் தெரியாத மிகப்பின்தங்கிய மூன்று பாடசாலைகளில் இந்த அறநெறி வகுப்புக்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளை செய்து வருகின்றனர். 

இந்த இக்கட்டான நிலையினை கூறியவுடன் உடன் முன்னின்று இந்த நிகழ்வுக்கு நிதியுதவியினை வழங்கி, ஒரு சமுகத்தின் அறிவுக்கண்ணை திறந்துவைக்கும் சாவியாக, சமுக அக்கறையுள்ளவராக எமது சமுகத்தில் ஒருவராக இருந்து இப்பெருங் கைங்கரியத்துக்கு கனடாவில் இருந்து உதவிக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஐயா நீ.கேயூரன் அவர்களுக்கு இந்து சமய சமுக அபிவிருத்திச் சபை இந்த மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது. 

இந்நிகழ்வில் முதற் படியாக தும்பங்கேணி இ.வி.தி சிவசக்தி அறநெறி 
பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான அறநெறி வகுப்பினை தொடங்கும் முகமாக அதற்கான உபகரணங்கள், மற்றும் போஷாக்கு உணவு வழங்கி மாணவர்களையும், தொண்டர்களையும் இணைத்து ஊக்கப்படுத்தி இப்பாடசாலை வாராவாரம் நடக்க உதவிவழங்கப்பட்டது. இந்த மாணவர்களின் வரவை அதிகரித்ததுடன் அவர்களை விருப்பொடு பயில்வதற்கான புத்தகங்களும் வழங்கப்பட்டு தொடர்து நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அறநெறிப் பாடசாலை என்பது வாழ்க்கைக்கான நல்லறத்தைப் போதிக்கும் வகையிலான இந்துநெறி சார்ந்த அறவொழுக்கங்களைப் போதிக்கும் பாடசாலைகள் ஆகும்.

இலங்கையில் இந்து சமய, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள் மற்றும் மத நிறுவனங்கள் இவற்றை நடத்தி வருகின்றன. கத்தோலிக்க மதத்தவர்களின் ஞாயிறு பாடசாலைகளுக்கு ஒப்பாகவும், பௌத்தர்களின் 'தகம் பாசல' க்கு சமமாகவும் இசுலாமியர்களின் மதரசாக்களுக்கு ஒப்பாகவும் இது கொள்ளப்படுகிறது. இப்பாடசாலை மாணவர்கள் இந்து ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் சமய சாதனங்களை மேற்கொள்ளவும் தூண்டப்படுகின்றார்கள்.

இந்து சமுதாயத்தை மதித்து வாழ வேண்டும் என்ற அற நெறி 3 அம்சங்களைக் கொண்டதாக வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
அ) ஒழுக்கம் - தனக்கோ, பிறருக்கோஇ உடலுக்கோ மனதுக்கோ எக்காலத்திலும் எண்ணத்தாலும், சொல்லலும், செயலாலும் துன்பம் தராமல் இருப்பது
ஆ) கடமை -    மனிதர்கள் வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு கடன்பட்டவர்களேயாவர். விவசாயி பயிர் விளைவிக்கவில்லையெனில் நமக்கு உணவில்லை. நெசவாளியில்லையெனில் நம்மை அழகுபடுத்த ஆடையில்லை; கணணிப் பொறியாளர் இல்லையெனில் சொகுசான வாழ்க்கைமுறை நமக்கு இல்லை. இவ்வாறாக சமுதாயத்திற்குக் கடன் பட்டுள்ளோம். இக் கடனை நேர்மையான முறையில் தன் உழைப்பு, அறிவு இவற்றால் தீர்க்க வேண்டும். இதுவே கடமை எனப்படுகிறது.

இ) ஈகை - இது என்னவென்றால் பிறர் துன்பத்தினைப் போக்குவது

இவற்றை அடிப்படை நோக்காகக்கொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சபையின் பொருளாளர் த.திருநாவுக்கரசு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


சி.தணிகசீலன், S.Thanigaseelan

0 comments:

Post a Comment