ADS 468x60

05 November 2017

எல்லோருக்கும் ஒரு சமுகப்பொறுப்புண்டு; மறந்துவிடுகின்றனர்

தேத்தாத்தீவு, களுதாவளை செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி, எருவில், குறுமண்வெளி போன்ற கரையோர நடுத்தர கிராமங்களுக்கு அழகு சேர்ப்பவை, நிலக்கீழ் நீரை ஏந்தி வைத்திருப்பவை அங்குள்ள நீண்டு நிலைத்திருக்கும் மரங்களே!.

அவை ஒரு சில மனிதர்களின் கீழ்த்தரமான தந்திரங்களாலும், கோயில்களின் பெயர்களினாலும் கொன்றழிக்கப்டும் அளவுக்கு அவற்றை மீள்நடுகை செய்கின்ற, பாதுகாக்கின்ற மனப்பாங்கு உள்ளவர்கள் மிக அரிதானதாகவே காணப்படுகின்றனர்.


சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் வேண்டியது மிக முக்கியமானதே!

அந்த வகையில் பா.கமலநாதன் உதவியில் இற்றைக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் தேத்தாத்தீவு குடியிருப்பு பாதை முழுவதும் மதுரை மரங்களை நட்டிருந்தோம்.

ஆனால் அவற்றில் குறிப்பிட்ட அளவு மரங்களே தப்பி பிழைத்துள்ளது. காரணம் மிருங்களுக்கு அப்பால் மனிதர்களின் தீய மனப்பாங்கே காரணமாகும்.

அவற்றின் பாதுகாப்பு வேலியை பிடிங்கி இருந்தனர். நட்ட தடிகளை விறகுக்காக கொண்டு போயிருந்தனர். அவர்கள் எதை நினைக்கிறார்கள் எனில் இந்த மரங்கள் எங்களுக்கு எந்த வகையில் சொந்தமாகப் போகுது? எமக்கு என்ன இலாபம்? என்கின்ற மனப்பாங்கில் இந்த பாதையால் பயணம் செய்யும் படித்தவர் முதல் பாமரர் வரை சிந்திப்பதாலேயே அவற்றை அநாதைகளாக்கி பராமரிப்பு இன்றி அழிபவடைவதை கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கின்றனர். கவலையளிக்கிறது.

இவ்வாறு நடந்துகொள்ளாதீர்கள் உங்களுக்கும் சமுகப்பொறுப்பு உள்ளது, கடற்கரையில் மீன்பிடிக்கும் போது அது அவர்களுடைய கடற்கரை என்கின்றனர், மரங்கள் வளர்ந்து அதன் கிளைகளை வெட்டும் போது அது அவர்களுடையது என்கின்றனர், குளத்தில் மண்ணை ஏற்றும்போது அது அவர்களது குளம் என்கின்றனர், ஆற்றை, காட்டை, கடலை எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடும் அவர்கள் அவற்றை பாதுகாக்க நாட்டம் கொள்வதில்லை.

இவர்கள் ஒட்டுண்ணி போன்றவர்கள், எல்லாவற்றையும் உறிஞ்சிவிட்டு இன்னொரு மரத்துக்கு தாவும் மனப்பாங்கினர். கவலையளிக்கிறது.
தயவு செய்து நான் தான் இந்த மரங்களை பாதுகாக்கவேண்டும் என்றில்லாது நீங்கள் அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாள் எப்பொழுது மலருமோ அப்பொழுதுதான் நல்ல பயன்களை எமது எதிர்கால சந்ததிக்கு விட்டுவைக்கலாம்.இல்லாவிடின் உங்களை கடவுளும் காப்பாற்ற மாட்டான்.

0 comments:

Post a Comment