ADS 468x60

22 December 2012

இறுதி மூச்சில் வாழும் சொந்தங்களை தேடி ஒரு மனிதாபிமானப் பயணம்

இரண்டு உயிர்களை வெள்ளத்தில் காவு கொடுத்துவிட்டு ஏங்கிக் கிடந்த வேப்பவெட்டுவான் நலன்புரி நிலையத்தை நோக்கி மனிதாபிமான பயணம் ஆரம்பமானது. கன்றை இழந்த தாய்போன்று அங்கே வாடி நின்ற தாய்மாரும், சிறுவர்களும் எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொன்றாக கூறக் கேட்ட எங்களுக்கு அழுகையை விட ஆறுதல் ஒன்றும் இருக்கவில்லை.

'நாங்கள் இன்றுடன் வந்து ரெண்டு நாளாகிட்டு, உடுக்க உடுதுணியோ, படுக்க பாயோ ஒன்றுமில்லாமல் 8 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளோம். இஞ்ச 72 குடும்பம் (252பேர்) வேப்பவெட்டுவான், காரைக்காடு மற்றும் மாவடி ஓடை போன்ற ஊரில இருந்து வந்நிருக்கம், உம்மயா சந்தோசமா இருக்கு எங்கட புள்ளங்களுக்கு தேவையான பால்மா, சீனி, விஸ்கட்டு மற்றது தேயில அதோட கோதும மா, பருப்பு எல்லாம் அநாதரவா இருந்த எங்களுக்கு தந்து உதவி இருக்கிங்க நன்றி தம்பிமாரே' என்று குமாரி கனகசபை அழாக்குறையாகக் கூறினார்.

மட்டக்களப்பு இந்த தசாப்தத்தில் பாரிய அனர்தங்களை சந்தித்துள்ளது. மினி சூறாவளி, சுழி காற்று, வெள்ளம் போன்றவற்றினால் அண்மை நாட்களில் பாரிய இழப்பினை சந்தித்து வருகிறது. அதிலும் வருடா வருடம் வெள்ள அனர்த்தம் இந்த மக்களை படாத பாடு படுத்தியுள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது, மீன்பிடி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளது, சாதாரண தர பரீட்சாத்திகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அன்றாட தொழில் புரிவோர் நிர்கதியாகியுள்ளனர், வேளான்மை வயல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது இத்துடன் இப்பிரதேசங்களில் உயிக்களும் காவுகொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளில் செங்கலடி(ஏறாவூர்ப் பற்று), கிரான் மற்றும் வெல்லாவெளி போன்றன மிகமோசமாக வருடா வருடம் பாதிக்கப்படுவது வழமை. அவ்வாறு மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு இடமாக செங்கலடி பிரதேச செயலகப் பிரிவு காணப்படுகிறது. 

கொடுத்த உணவில் பசியாறும் அம்மா
 ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்தின் 19.12.2012 அன்றய தகவலின்படி 9993 மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இடம்பெயர்ந்த 4636 பேர் 21 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக அறிக்கை கூறுகிறது. அதே போன்று நன்பர்கள் உறவினர்கள் வீடுகளில் 5357 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் கொடுவா மடு- மயிலவெட்டுவான், மாவடிஓடை - ஈரலைக்குளம், தும்பாலஞ்சோலை- கோப்பாவெளி, வந்தாறுமூலை –மயிலவெட்டுவான், தன்னாமுனை- மட்டக்களப்பு பிரதான வீதி, சித்தாண்டி- ஈரளைக்குளம், சித்தாண்டி பிரதான வீதி ஆகிய வீதிகள் முற்றாக போகமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்கதியாகிய நிலையில் உள்ள இந்த மக்களுக்கு உதவ மாவட்ட செயலாளரினால் 17.12.2012 அன்று விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, தொண்டுள்ளம் கொண்டவர்களுடன் கலந்துரையாடியதன் நிமித்தம் 350 கிலோகிராம் உலர் உணவுப் பொருட்களை  வேப்பவெட்டுவான் பாடசாலையில் உள்ள நலன்புரி நிலையத்துக்கு 19.12.2012 அன்று வழங்கி வைத்தோம். 

'மிகவும் பாதிக்கப்பட்ட பல இடங்கள் இருக்கின்றன, அதிலும் இங்கு அநேகம் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருப்பதனால் உங்கள் உதவி அவர்களுக்கு முதலுதவியாக இருக்கும். இந்த மழையையும் பொருட்படுத்தாமல் இந்த சேவையை செய்ய முன்வந்திருக்கும் மைகேல் டொம்மி கணேசமூர்த்தி மற்றும் றொகான் சின்னய்யா ஆகியோருக்கு மிக்க நன்றி' என அவர்களை பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் அன்போடு பாராட்டினார்.

'இந்த நலன்புரி நிலையத்துக்கான உணவினை எங்கள் பிரதேச செயலகத்தினால் வழங்கிக்கொண்டு இருக்கிறோம் இருந்தும் அவை போதுமானதாக இல்லை, அதற்கு மேலாக இவர்களுக்கு மிக அவசியம் தேவையான உலர் உணவினை உரிய நேரத்துக்கு உரிய இடத்தில கொடுத்து இருக்கிறீங்க' என்று கிராம உத்தியோகத்தர் அரியராஜா அவர்கள் தெரிவித்தார்.

'ஒழுங்கான பாதுகாப்பு இல்லாததால நாங்க வரும்போதே ரெண்டு பேரு வெள்ளத்தில அடிச்சிப்போயிட்டாங்க, எங்கள வோட்டிலதான் கொண்டுவந்து சேத்தாங்க இஞ்ச பாருங்க சின்ன புள்ளங்க, வயதுபோனவங்க, வருத்தக்காரரு பொம்பளங்க என்று சரியான கஸ்ட்டப்படுறம் தம்பி, ராவாகினா இடி மின்னல், மழை நித்திரையும் இல்ல நிம்மதியும் இல்ல. இந்த வெட்டவெளியில எப்படி கிடக்கிற?. எங்களுக்கு இப்போது நீங்கள் தந்த உதவி பெரியது. வீடெல்லாம் வெள்ளத்தில தாண்டுபோனதால படுக்கிறத்துக்கு பாய், வெற்சிற், நுளம்பு வலை குடிக்க தண்ணி போன்ற அத்தியாவசிய சாமான் ஒன்றும் கிடையாது மகனே!' என்று சண்முகம் அவர்கள் தெரிவித்தது மனதை நெகிழ வைத்தது.

'இஞ்ச கொஞ்சம் வாங்க, பொம்பள பிள்ளகள் சரியா கஸ்ட்டப்படுதுகள் அதுகளுக்கு எண்டு பாவிக்கிற பொருட்கள் சோப்பு சாமான் ஒன்றும் இல்லாம வந்திட்டம், யாரிட்டயும் சொல்லிக்கவும் ஏலா இதுகள, நாங்க வேண்டயும் முடியாது தூரம் போகனும் தம்பி இஞ்ச பாத்து ஏலுமண்டா உதவுங்க புண்ணியம் கிடைக்கும் என்று' மிகவும் சிரமப்பட்டு வேண்டிக்கொண்டார் ஒரு அம்மா.
உன்மையில் எமது வேண்டுகோளுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் இப்பெரிய உதவியை உவந்தளித்த பெரிய உள்ளங்களுக்கு இம்மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதோடு, இவர்களை இந்த மாவட்டத்தின் பிறருக்கான எடுத்துக்காட்டாகவும் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆக மொத்தத்தில் 'ஆலையில் கரும்பாக, அனலில் துரும்பாக' எம்மக்களின் நிலை இருக்கிறது. இவர்கள் உயிர்களை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு உடமைகளை இழந்து நிர்க்கதியாக இருக்கிறார்கள். மிகவும் ஏழ்மை நிலையில், அன்றாடம் உழைத்து உண்ணும் மக்கள்தான் அநேகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் மற்றும் கோயில்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 60 பெண்கள் இந்த நலன்புரி நிலையத்தில் இருக்கிறார்கள் அத்துடன் அதிகப்படியான சிறுவர்களும் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற எத்தனையோ பாதிக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டெடுக்க கருணை உள்ளம் கொண்டவர்கள், தொண்டர்கள் முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மனிதாபிமானப் பயணத்தில்



பிரதேச செயலாளருடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கையில்

மக்களுக்கு பொருட்களை அவசரமாக வழங்கும்போது..




வழங்கிய பொருட்களை வாஞ்சயுடன் உபயோகிக்கயில்..



எதிர்பார்புடன் ஏங்கிதவிக்கும் மக்கள்..

ஆர்வத்துடன் உண்டுமகிழும் சிறுவர்கள்

0 comments:

Post a Comment