"பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் நியதி. இருப்பினும் பலருக்கு இதனை ஒத்துக்ெகாள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. நிகழ்காலம் தொடர்பாக கருகனை காட்டுவதிலும் பார்க்க கடந்த காலம் தொடர்பான சிந்தனைகளில் அவர்கள் நிறைந்திருப்பாா்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.
நாம் பழையன என்ற வார்த்தையால் அதிக காலமாக பழக்கத்தில் இருந்தவை என்று பொருள் கொள்வோம். அப்படி நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து அவைகள், இதற்கு மேலும் உபயோகிக்கத்தக்கவை அல்ல என்று ஆனபின் அவைகளை நீக்குதலும், அதன் இடத்தில் புதிய உபகரணங்களைக் கொணர்வதும் அவசியமாகிறது.
எனவே புதிதாய் பிறக்கும் வருடத்தில் ஒருமுறை உபயோகத்தில் இல்லாதவைகளைக் கழித்து, வீட்டினையும் ஒரு முறை சீர்திருத்தம் செய்து, புதிய பொருள்களை அங்கு அழகுற இருத்தி இன்புறுவது தொன்று தொட்டு நம்மகத்தில் இருந்து வந்த மரபாகும். இதைதான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று கூறினர்.
எமது பண்பாட்டின் ஒவ்வொரு மரபிலும் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம், தலையாய மரபுகளுக்கும் பண்புகளுக்கும் சொந்தக்காரர்கள். "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று கூறியிருக்கிறாா்கள்.
எம்மிடையே கல்லும் மண்ணும் ஜீவாதாரத்தின் அடிப்படைகள். கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே தமிழர் தோன்றினர். "அறிவு" என்னும் வாளோடு தமிழர் தோன்றினர்! அதன்பின்னர் தோன்றிய யாவரிலும், பண்பிலும் மாண்பிலும் முதிர்ந்து மூததவராய் வாழ்ந்தனர். அவர்கள் சொல்லும், செயலும் மற்றும் சிந்தனையும், வந்தனைக்குரியதாய் சிறப்புற்றிருந்தது.
உங்களுக்கு தொியும் "Globalization" என்று அகிலத்தில் இன்று நடைமுறைபடுத்தப்படும் வாழ்க்கைமுறையை அன்றே அதாவது கணக்கிட்டுச் சொல்லமுடியாத காலங்களுக்கு முன்னரே தமிழர் சொன்னார்:
"யாதும் ஊரே; யாவரும் கேளீர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
அவர்தான் கணியன் பூங்குன்றனார்.
ஆனால் இந்த உலகில் இன்று தமிழர் இல்லாத ஊரில்லை; உலகில்லை.இதுபோன்றே தமிழர்களின் ஒவ்வொரு சிந்தனையும் செயலும் உலகத்தவரால் உயர்வாகப் போற்றபட்டதாகிறது. உலகமே ஒரு குடும்பம் என்றால், குடும்பம் என்ற ஒப்பற்ற அகிலத்திற்கு ஆதாரமாகிய ஒரு ஒருமைப்பாட்டை உலகிற்கு காண்பித்து வழிநடத்தியது தமிழரின் பெருமை. எல்லா நாடுகளிலும் குடும்பங்கள் இருந்தன. ஆயினும் தமிழ்க்குடும்பங்கள் போல் உடையாமல் உயிர் உள்ளவரை ஒன்றாக.. நன்றாக வாழ்ந்தவர்கள்தான் வேறு யாரும் அல்லர்.
இவ்வாறான சிறந்த குடும்பங்களில் நிறைந்த சீர் மரபுகளில் ஒன்றுதான் "பழையன கழிதலும்; புதியன புகுதலும்." பழையன என்று இங்கு குறிப்பிட்டது, கையாண்ட பொருள்களை மட்டுமே. அவன் கைக்கொண்ட முறைகள், எத்தனை பழமையாய் இருந்தாலும், என்றும் புதுமையாய் உலகத்தவரால் இன்றும் போற்றப்படுகின்றன.
ஒருகாலத்தில் தமிழர் கல்லாலும் மண்ணாலும் ஆன வீடுகளில் தான் வாழ்ந்தார்கள். ஆயினும், அவ்வீடுகளை அவர்கள் ஒவ்வொரு வருடமும் சீர்செய்து வண்ணம் தீட்டி திண்ணமுறச் செய்தனர். உபயோகமில்லாப் பொருள்கள் யாவற்றையும் வெளியேற்றி, அவைகள் குப்பைகளாய் அங்கங்கு கிடக்காமல் அவற்றை எரித்து நீக்கினர்.
தேவையில்லாமல் போக்கிய பொருள்களின் இடத்தில் புதியன கொணர்ந்து நிறைத்தனர். அப்படிச் செய்யும் அந்த நன்னாளை "போகி" என்று போற்றினர். பழைய பொருட்களைக் கழைந்து வெளியேற்றி, அவற்றை எரித்த செயல்களால் ஒப்பற்ற ஒரு உபதேசத்தை தமிழர்உலக்கு தந்தனர். உபயோகமின்றி,இடத்தைக் காத்துக்கொண்டிருக்கும் பொருள்களை நீக்கி, அவற்றை எரித்தல் போல் உலகத்தவர் தமது பண்புகளில் பதுங்கிக் கிடக்கும் கலகங்களை ஆம், கலகங்களுக்கு காரணமாகிடும் காட்டுமிராண்டித் தனங்களை, கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் தம்மிடமிருந்து வெளியேற்றி, அவற்றை எரித்தலும் அவசியம் என உணர்த்தினார்கள்.
எத்தனையோ வேண்டாத சுபாபங்களால் ஆட்கொள்ளப்பட்டோம். எத்தனையோ பழக்க தோஷங்களால் பாழ்பட்டோம். எத்தனையோ கோபங்களும் பாபங்களும் குவிந்தன. தாபங்களும் தகாதவழிப் போகங்களும் மிகுந்தன. அத்தனையும் உபயோகமற்றவை. அன்பிற்கும்... அகம் மலரும் அமைதிக்கும். வேண்டாதவை உள்ளத்திருந்து நீக்கவேண்டியவை, போக்கவேண்டியவை. போக்கிவற்றை பொசுக்கி பின், பொன் மணம் கொணர்வோம். அதுபோல் நல்ல குணங்களால் நம்மை நிறைத்து நீடூழி வாழ்வோம்!
சி.தணிகசீலன்
0 comments:
Post a Comment