ADS 468x60

27 November 2010

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.....

 இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..

பழம் நிறைசோலைகள் உருவாக்குதல், இனிமையான குளிர்சி பொருந்திய  தண்நீர் தடாகங்களை ஆக்குதல், உண்டு உறங்குவதற்க்காக அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம் கட்டுதல்...இன்னும் என்ன என்ன நன்மைகளை செய்தாலும் இவற்றையெல்லாம் விஞ்சி யாரோ ஒரு ஏழை பிள்ளை கல்வி படிக்க உதவுவதே மகா புண்ணியம்.. என்று பாரதியார் பாடியிருக்கிறார்...

கல்வி மனித வாழ்க்கைக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு, கற்றாரை கற்றாரே காமுறுவர்.. என்றெல்லாம் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். பொதுவாக தான் படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகளை டாக்டராகவும், இன்ஞ்சினியராகவும் ஆக்கி பார்க்க வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் நினைப்பதுண்டு. அது சாத்தியப்படவில்லை என்றாலும்.. தன் பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் சிக்கி கொண்டு இருக்கும் பெற்றோர்களை நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறோம். 

சில நல் இதயங்களின் உதவியாலும்,தொண்டு நிறுவங்களின் ஆதரவினாலும், அரசாங்கத்தின் இலவச கல்வி திட்டத்தினாலும் பலர் படித்து வருகின்றார்கள் என்றாலும், பலருக்கு இந்த சூழலும் வாய்க்காமல்.. உழைத்தால்தான் அடுத்த வேளை உணவு என்ற கட்டாயத்தில் பிஞ்சு வயதிலேயே வறுமையில் தள்ளப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபுகினும் கற்கை நன்றே; ஒருவன் பிச்சை எடுக்கும் இழிநிலையிலும் கூட கற்க வேண்டும் என்றார் அதிவீரராமபாண்டியர். தனிமனித வாழ்க்கையை மட்டுமல்லாமல் கல்வி நாட்டையே சிறப்புறச்செய்யும்.

இலங்கையின் கல்வி....
கலாநிதி கன்னங்கரா காலம் (1943 முதல்) தொடக்கம் இடம்பெற்று வந்த இலங்கையின் கல்வி வளர்ச்சியானது, நாட்டின் பின்தங்கிய வகுப்பினரின் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்டமைந்தது. அவர்களுடைய மேம்பாட்டை நோக்கி நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், பிற்காலத்தில் இலங்கை வளர்முக நாடுகள் மத்தியில் சிறந்த கல்வி வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளக் காரணமாக இருந்தது.

இலவசக் கல்வி, படிப்படியாகத் தாய்மொழி போதனாமொழி ஆக்கப்பட்டமை, இலவச சீருடை, இலவச பாடநூல் விநியோகம், ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில்கள், கிராமங்கள் தோறும் பாடசாலைகளின் விரிவாக்கம், கன்னங்கரா காலத்து மத்திய பாடசாலைகள் என்று பின்தங்கிய வகுப்பினரை இலக்காகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்கள் நீண்டு செல்லுகின்றன. இதனால், பின்தங்கிய வகுப்பினரை விட மத்திய வகுப்பினரும் பயனடைந்தனர் என்ற கருத்தும் உண்டு.

இவ்வாறான கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக, வளர்முக நாடாகிய இலங்கையில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி உலகளாவிய அபிவிருத்தி அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளியல் பேராசிரியர் அமாருத்திய சென் முதல் உலக வங்கியின் கல்வியியல் ஆய்வாளர்கள் வரை, கல்வித்துறையில் இலங்கையின் சாதனைகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அஞ்சலா விட்டில் என்ற பிரித்தானியக் கல்வியாளரின் கருத்தின்படி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சற்று நிதானமானதாகவே இருந்தாலும் அதன் கல்வி முறையின் உயர் தராதரங்கள், சர்வதேச ரீதியாகப் பாராட்டுக்குரியன.

'இலங்கையின் கல்வி முறை வெற்றிகரமான ஒரு வரலாறைக் கொண்டது; கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பானது, வழமைக்கு மாறாக விசேடமானது' என்பது உலக வங்கி ஆய்வாளர்களின் கருத்து. இலங்கையின் குறைந்த பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, உயர்ந்த எழுத்தறிவு வீதம் (2006 இல் 93%), ஆரம்பப்பள்ளி மாணவர் சேர்வு வீதம் (2002 இல் 96%) என்பன மிகவும் உயர்ந்தவையாகும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் அபிவிருத்தி இலக்கும் கல்வியும்.....
2000ம் ஆண்டு 189 நாடுகளை அங்கத்துவர்களாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்படுத்தப்பட்ட மிலேனியம் அபிவுருத்தி இலக்குகளில் வறுமையை இல்லாதொழித்தல் மற்றும் எல்லோருக்கும் அடிப்படைக் கல்வியை வளங்குதல் என்பன 2015ஆம் ஆண்டில் எட்டுவதற்கு திட்டமிடப்படடுள்ளது. இது எங்களைப்போன்ற வறிய நாடுகளில் எட்டப்படுமா என்ற ஒருகேள்வி இருக்கிறது.  ஆனால் பல தொண்டர்கள், ஆர்வலர்கள் இந்த இலக்கை எட்டுவதற்கு முன்வந்துள்ளமை இலங்கை போன்ற நாட்டில் பாராட்டதக்க ஒன்றாகவே இருக்கிறது.

நாம் எதிர்கொள்ளும் சவால்கள்..
இருப்பினும் கல்வி என்பது பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த விவகாரம் மட்டும் அல்ல என்றும், ஒட்டுமொத்த சமூகச்சூழலுமே அந்த சமூகத்தின் கல்வி நிலையை தீர்மானிக்கும். இவற்றில் முதன்மையானது கல்வி பயில வேண்டிய குழந்தைகளின் குடும்பச்சூழலே அந்த குழந்தையின் கல்வியை தீர்மானிக்கும் பிரதான அம்சமாகும். உயர் மட்ட குடும்பங்களும், மேல் நடுத்தர குடும்பங்களுக்கும் கல்வி என்பது எந்த விலை கொடுத்தேனும் வாங்கப்படும் ஒரு அம்சமாக மாறிவிடுகிறது. இதில் பிரசினைகளை சந்திப்போர் கீழ் நடுத்தர குடும்பங்களும், வறுமையில் வாழ்வோரும்தான். இவர்களது குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத்தான் கல்வி என்பது எட்டாக்கனவாகிறது. தவிரவும் இந்தப் பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்வியை தீர்மானிப்பதில் அக்குழந்தைகளின் பெற்றோர்களின் தொழில், கல்விநிலை, உடல்நலம், மதுப்பழக்கம்இ போக்குவரத்து வசதிகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற எண்ணற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன.

மட்டக்களப்பு கலைகளுக்கு மாத்திரமல்ல தமிழர்களின் பெயரை உலகறியச் செய்ய எத்தனையோ கல்வியியலாளர்களையும், அறிஞ்ஞர்களையும் மற்றும் சிந்தனையாளர்களையும் உருவாக்கித்தந்த பெருமை நிறை தேசம் என்றால் அது மிகையில்லை. ஆனால் பல்வேறு கூழல்கலாலும் திட்டமிட்டும் அழிக்கப்பட்டு அது மிகவும் பின்தங்கி இருப்பது வேதனைப்படும் விடயமாகும்.

இத்தகைய சவால்களை நீண்டு நிலைத்திருக்கும் திட்டமிடல் மூலமாகவே வெற்றி கொள்ளமுடியும். இதற்க்காக எத்தனை திட்டங்கள், இலக்குகள் முன்வைக்கப்பட்டாலும் எங்களுடைய பாதிக்கப்பட்ட சமுகத்தினை முன்னுக்கு கொண்டுவர ஒரு படி மேலே செல்லவேண்டி இருக்கிறது. அதற்க்காக  எமது தூரநோக்குடைய புலம் பெயர் சொந்தங்கள் இவற்றை மீழ கட்டிஎழுப்ப பல வடிவங்களில் முன்வுரும் பரோபகாரச் செயல் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்கதே.  எமது ஆசை கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட தூரத்து உறவுகளின் துணையுடன் பின்வருவனவற்றினை அடைய எமது சமுகத்தினை வலுவூட்டுதல்வேண்டும் என்பதொன்றேயாகும்.

 பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்
 பாதிக்கப்பட்ட மாணவர்களின் ஆளுமையினை விருத்தி செய்தல்
 மாணவர்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுதல்.
வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகளை ஒழுங்கமைத்தல்;
 உயர் கல்வியினை தொடர முடியாத வறிய மாணவர்களுக்கு தகுதியடிப்படையில் இலவச கணணிப் பயிற்சியினை வழங்குதல்.
 மாணவர்கள் மத்தியில் காணப்படக்கூடிய இதர சிக்கல்களைத் தீர்த்து மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை புரிந்துணர்வினை எற்படுத்துதல்
 ஆங்கில மற்றும் கணனி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் இலவச ஆங்கில வகுப்புக்கள்இ கணணி பயிற்சி நிலையங்களை விஸ்தரித்தல்.
 வெளி நாடுகளில் உள்ள மாணவர்கள்இ கல்வியியலாளர்கள் மூலம் சர்வதேச கல்விமுறை தொடர்பாக மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடாத்துதல்.
 பாடசாலை மாணவர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்,
 பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்தியவர்களுக்கான தொழில்சார் கல்வியினை வழங்குதல்,
 கலை, கலாச்சாரங்களை கட்டியெழுப்பும் நோக்கில் பயிற்சிப்பட்டறைகளை ஏற்பாடு செய்தல்.
கலை நிகழ்சிகளை அழியவிடாமல் அளிக்கை செய்தலுக்கான ஊக்கப்படுத்தல்.

மாணவ சமுதாயம் எமது சமுகத்தின் உயிர்நாடி. எமது மாணவச் செல்வங்களின் உள, உடல், கல்வி, சமுக மேம்பாட்டிற்காக அனைத்து வழிகளிலும் உழைப்போம் என உலகெங்கும் பரந்து வாழும் எமது சொந்தங்கள் அனைவரும் உறுதி கொள்வோம்.

0 comments:

Post a Comment