ADS 468x60

11 September 2017

சமுகத்துக்கு பயன்படும் திறன்களை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும்.

'ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கான பெரிய பாதை கல்வியே, கல்விதான் இன்று வாழ்க்கைக்கான ஆதாரமாகிவிட்டது. எமது பிரதேசங்களில் காணப்படும் பாரபட்சம், வறுமை, கடந்து சென்ற அனர்த்தங்கள், அக்கறையீனம் போன்றவற்றால் மெது மெதுவாக எம்மினத்தை விட்டு கல்வி வழுவி கூலிக்காரர்களாகிவிடும் நிலையில் உள்ளமை கண்கூடு. அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, கள்ளக்காதல் கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், வன்முறைகள் என அனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது கல்வியில் காணப்படும் பின்னடைவாலேயாகும். 

இந்த நிலையினை தடுத்து நிறுத்தும் வகையில்தான் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினால் முன்னெடுத்துவரும் பல தொண்டுகளில், தூர்ந்துபோய் அறநெறி வகுப்புகள் என்றால் என்னவெனவும் தெரியாத தொிவுசெய்யப்பட்ட மிகப்பின்தங்கிய மூன்று பாடசாலைகளில் இந்த அறநெறி வகுப்புக்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.

கிழக்கிலங்கை   இந்துசமய   சமூக   அபிவிருத்தி   சபையின்   தலைவர்   த.துஷ்யந்தன்   தலைமையில் முதலில் 03.09.2016 அன்று தும்பங்கேணி இ.வி.தி சிவசக்தி அறநெறி பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான அறநெறி வகுப்பினை தொடங்கும் முகமாக நடைபெற்ற நிகழ்வில் அதற்கான உபகரணங்கள், மற்றும் போஷாக்கு உணவு என்பனவற்றை இங்கு அதிதியாக கலந்து கொண்டு வழங்கிவைத்தேன், அத்துடன் மாணவர்களையும், தொண்டர்களையும் இணைத்து ஊக்கப்படுத்தி இப்பாடசாலை வாராவாரம் நடக்க ஏற்பாடுகள் செய்யவும்பட்டுள்ளது. இந்த ஆரம்பம் பின்தங்கிய இடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் வரவை அதிகரித்ததுடன் அவர்களை விருப்பொடு பயில்வதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டு தொடர்து நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல் விவேகானந்தபுரம் திருக்கொன்றை அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் ஞாயிற்றுக்கிழமை(10.09.2017) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கிலங்கை   இந்துசமய   சமூக   அபிவிருத்தி   சபையின்   தலைவர்   த.துஷ்யந்தன்   தலைமையில் நடைபெற்ற   இந்நிகழ்விற்கு   கிராம   சேவை   உத்தியோகஸ்தர்   மா.சத்தியசோதி நாகதன்பிரான் ஆலய பிரதமகுரு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.குருகுலசிங்கம் கல் உடைக்கும் தொழிலாளர் சங்க தலைவர் திரு.பேரின்பமூர்த்தி இளம் சுடர் விளையாட்டுகழக  தலைவர்  வை.திலகநாதன்   சபையின்   செயலாளர் செல்வி.ம.கலாவதி  அறநெறி  பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்; பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு மாணவா்கள் பண்ணிசைப்பதற்கான இசைக்கருவிகள் ஒரு தொகுதி வழங்கிவைக்கப்பட்டதுடன், அவா்களுகளை ஊக்குவிக்கும் வகையில் போஷாக்கு உணவும் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம். மனிதன் தன் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். 

"அத்துடன் படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும். அப்போதுதான் மனிதன் தன் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும் அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்! இதனால்தான் அறநெறி பாடசாலைகளின் தேவை உணரப்பட்டு வருவது கண்கூடு' 

'குழந்தைகள் தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான பகுதியை பள்ளிக்கூடங்களில்தான் கழிக்கின்றன. பள்ளிப் பருவம் முடிந்து வெளியேறும்போது வாழ்வின் அனைத்து சவால்களையும் துணிச்சலோடு சந்திக்கக்கூடிய மனோபக்குவத்தையும் மனோதைரியத்தையும் அவர்கள் பெறவேண்டும். அதற்கும் அடிப்படை இறையச்சம்தான். இறையச்சம் மனிதனுக்குள் வந்துவிட்டால் அவனுக்கு வேறு எந்த அச்சமும் வருவதில்லை என்பதே உண்மை!. தங்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு தன் வாழ்வாதாரங்களை தேடும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும் விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.' 

ஆகவே எமது குழந்தைகளின் கல்வியில் அக்கறைகொள்வோர் எல்லோரும் பாக்கியசாலிகளும் மதிக்கப்படவேண்டியவர்களுமே!

நிகழ்வுகளின் நிழல்கள்


சி.தணிகசீலன், S.Thanigaseelan

0 comments:

Post a Comment