ADS 468x60

20 May 2017

மேலும் தண்ணி கீழும் தண்ணி புலம்பும் இடம்பெயர்ந்த மக்கள்..

'வெள்ளம் விட்ட பாடில்லை இன்னும், ஆடு, மாடு எங்கட வீடு எல்லாம் தண்ணிலதான் கிடக்கு ஓடி வந்து இங்க கொடுவாமடு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறம்' என்று ஒரு அம்மா அடிக்கும் மழையின் நடுவில் கொடுகிக் கொண்டு சொன்னார்.

மெதுவாக ஆனால் பாரிய சேதத்தினை ஏற்ப்படுத்தும் அனர்த்தங்களில் வெள்ள அனர்த்தம் முக்கியமானது. இலங்கையில் தாழ்ந்த பிரதேசங்களில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வெள்ளத்தினில் பாதிக்கப்பட்டு வருவது பதிவாகியுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தின் வேப்பவெட்டுவான் பகுதியில் இருந்து 18.12.2012 அன்று அவசரமாக இடம்பெயர்ந்து கொடுவாமடு பாடசாலை மற்றும் அங்குள்ள பிரம்பு தொழிற் பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள 143 பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் வேண்டிக்கொண்டதற்க்கிணங்க 22.12.2012 அன்று பார்வையிட்டு அவர்களுக்கான ஒரு தொகை உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தோம்.

'இஞ்ச பாருங்க தம்பி, குஞ்சு குரானோடு சரியா கிடந்து அவதிப்படுறம், மேலும் தண்ணி கீழும் தண்ணி 2 மாசம் மூன்று மாசம் பொறந்த புள்ளகள வைச்சி என்னதான் பண்ணுற மகனே! இருந்தாலும் நீங்க தந்த விஸ்கட்டு, பாண் மற்றது கடல கிழங்கு இதெல்லாம் வைச்சி கார் கார் என்று பசிக்கிற நேரத்தில வயிறாற சாப்புட உதவும் மகன், புண்ணியம் கிடைக்கும்' என்று பூரிப்பில் முகம் மலர்ந்தார் சீதேவி அம்மா.

கொடுவாமடுவில் தங்கி இருக்கும் இந்த மக்களுக்கு சமைக்ககூட இடமில்லாமல் கோயிலில் வைத்து சமைத்து கொடுக்கிறார்கள். இங்கும் சிறுவர்களும் பெண்களும் அதிகமாக தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மக்களுக்கான ஒரு இரவுச் சாப்பாட்டினையும் ஒரு காலை ஆகாரத்துக்கான உணவுப் பொருட்களையும் திருவாளர் அன்ரன் ஜெசன்வி அவர்களுடைய உதவியில் வழங்கி வைத்தோம்.

இந்த நிவாரணப்பயணத்தில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி முகுந்தன், கிராமசேவகர் மற்றும் அங்குள்ள ஏனைய உத்தியோகத்தர்களுடன் விரிவுரையாளர் திருமதி சுரேஸ் மற்றும் ரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மக்களைப் பார்வையிட்டதோடு, அந்த மக்களுக்கு கொண்டு சென்ற பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை; அவர்களுக்கு மகிழ்சியை எற்படுத்தியது. அத்துடன் இவர்களது மேலதிக தேவை மற்றும் பிரச்சினைகள் பற்றி உதவி பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முறையான இடர் முகாமை இல்லாமை, அத்துமீறிய குடியேற்றம், அனர்த்த தணிப்புக்கு இடமில்லாத அபிவிருத்தி, காடழிப்பு, முறையற்ற நீர்பாசன முறைமை போன்ற இன்னோரன்ன காரணங்கள் வெள்ள அனர்த்தத்தினை ஏற்ப்படுத்துகிறது. தொடர்ந்து நிவாரணம் கொடுக்கும் அந்த தொகையில் மாற்று வழியினை சிந்திக்து இழப்புக்களை தவிர்க்க தலைப்பட வேண்டும்.

 இந்த வெள்ளத்தினால் இடப்பெயர்வு சொத்து, உயிர் இழப்பு என்பன வருடம் தோறும் இடம்பெறுகிறது. மாற்று வழிகளை இனியாவது சிந்திக்கவேண்டும். இந்த தாழ் நிலப்பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கும் மக்களை மேட்டு நிலங்களில் குடியேற்றலாம் அல்லது அவர்களுக்கான முறையான அனர்த்த தயார்படுத்தலை செய்யலாம். அப்போதுதான் இந்நிலமை இனிமேலும் தொடராமல் பார்த்துக்கொள்ளலாம்.

எங்களது நிவாரணப் பொருட்களை வழங்கி வைக்கும் உதவி பிரதேச செயலாளர் திருமதி முகுந்தன். (http://www.battinews.com/2012/12/blog-post_7550.html)




 கொண்டு சென்ற பொருட்களில் ஒரு தொகுதி

நாங்கள் சென்று பார்வையிட்ட இடம்.


0 comments:

Post a Comment