ADS 468x60

05 July 2017

ஏமாற்றப்படும் மட்டக்களப்பு வாழ் மக்கள்.

நாம் எப்படியெல்லாம் ஏமாறுகின்றோம் என்பது தெரியுமா? கட்டாயமாக வரும் ஏமாற்றம், அறியாமையினால் வரும் ஏமாற்றம், கவனக் குறைவினால் வரும் ஏமாற்றம், பேராசையினால வரும் ஏமாற்றம். இதில் முதல் மூன்று வகையிலும் தோ்தல் காலங்களில் எமது மக்கள் செமயா ஏமாந்து விடுகின்றார்கள் என்பதற்கு அப்பால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுதான் உன்மை.இன்று பார்த்தீர்களானால் தேவையில்லாத எதிலாவது எமது மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தினைப் பெற்றுவிடுகின்றது எல்லாம் ஏமாற்றுவதற்கான முஸ்த்தீபுகள்தான். அதில் கடந்த தடவை பா.ம. தேர்தலில் மாத்திரம் 16 அரசியல் கட்சிகளும் 33 சுயேட்சைக் குழுக்கழுமாக மொத்தம் 49 கட்சிகள், ஆக கட்சிகள் அதிகமாக களமிறக்கப்பட்டிருக்கும்  ஒரு மாவட்டமாக எமது மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை இந்த மாவட்ட மக்களை மடையர்களாக்கி, வாக்குகளை சிதறடிகும் செயற்பாடுகளுக்கு செய்யப்பட்டுள்ள முதலீடுகளாகும் என்பதனைப் புரிந்துகொள்ளலாம்.

இதில் பல கட்சிகள் உரியவர்களின் பெயர்களைக் கூட அவர்களிடம் கேட்காமலேயே வேட்பாளர் பட்டியலில் இட்டிருந்தமை விநோதமானதாக இருந்தது. மக்களுக்கு இன்றும் அதே நிலை தோன்றினால் அது ஒரு பரீட்சையாக இருக்கும் தேறுவதும் தேறாமல்போவதும் அவரவர் கைகளியே உள்ளது. ஆனால் கல்விப்பரீட்சையில் தோற்றுப்போனால் மறுபடி மறுபடி தோற்றலாம், ஆனால் இந்தப் பரீட்சையில் தோற்றால் ஐந்து வருடம் அனைத்தையும் இழக்கநேரிடும்.

இந்த தேர்தலைப்பற்றி மக்கள் எமது பகுதிகளில் எதனைப் பேசிக்கொள்ளுகிறார்கள், அவர்களது எதிர்பார்ப்புகள் என்ன என்பதனைப் பற்றி இங்கு ஆராய்ந்துள்ளேன்.

இன்று மக்கள் இதைத்தான் பேசிக்கொள்கிறார்கள் 'தேர்தல் புதிது புதிதாக வந்தாலும் அதில் நிற்பவா்கள் அலுத்துப்போன உளுத்துப்போனவர்களெனவும், அவர்கள் விரும்பாத, காணாத யாரோ எல்லாம் என அவர்கள் விரும்பாதவர்களையே இதில் நிறுத்துகின்றனர் எமது பகுதிகளில்' என ஏமாற்றத்துடன் பேசிக்கொள்ளுகின்றனர்.

இன்னுமொன்றைப் பேசிக் கொள்ளுகின்றனர், அது தமிழர்களிடம் இருக்கும் கல்வித்திறன். அதுவும் வறுமையின் விழுங்கலுக்குள் அகப்பட்டு, கை நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது. அத்துடன் எமது மாகாணத்தில் வியர்வை சிந்தி உழைப்பாளிகள் உற்பத்தி செய்ய அந்த உற்பத்திகளை அறாவிலைக்கு கொள்வனவு செய்து சிலர் முதலாழியாக மாற, எம்மவரோ தொழிலாளிகளாகி சிக்கி சின்னா பின்னமாகிவிட்டனர்.

இவற்றில் நிற்கதியாகிய இளைஞர் யுவதிகள் முஸ்லிம் சிங்கள சகோதர அரசியல்வாதிகளிடம் வேலை கேட்டு, கையேந்தி நிற்கின்றனர். பட்டதாரிகள் வீதிகளில் இருந்து கடைநிலை வேலையாவது தாருங்கள் எனப் பிச்சை கேட்க்கும் நிலையிலுள்ளனர், அத்துடன் சிலர் அவற்றைப் இடைததரகர்களுக்கு சன்மானம் கொடுத்து பெற்றுக் கொள்ளுகின்றனர்.

 ஆனால் எம்மவர்களோ கிடைத்த பிரதிநிதித்துவத்தினை வைச்சி தாங்க மட்டும் பொளச்சி முன்னேறிவிட்டு திரும்பவும் திரும்பவும் வந்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதில் மக்களுக்கு 'என்னய்யா நன்மை கிடைச்சி இருக்கு' என்று அலுத்துக்கொள்ளும் மக்கள் மனநிலை வாக்களிப்பில் பாரிய இடைவெளியை கொண்டு வரும் என எதிர்வுகூறப்பட்டது மற்றும் எதிர்வுகூறப்படுகின்றது. 

ஆனால் ஒன்று எமது மக்களுக்கு உதவுவது   எப்படிச் சாத்தியமாகும்! திணைக்களங்கள், நிறுவனங்களின் மேல்நிலை உத்தியோகத்தர்களாக இருந்த தமிழ் உத்தியோகத்தர்கள், ஒன்றன் பின் ஒன்றாக இல்லாது  தூக்கி வீசிய பின் என்னதான் பண்ண முடியும்!. அது பல்கலைக்கழகம் இருந்து நிருவாக மட்டம் வரைக்கும்  பறிபோய்விட்டது கிழக்கில்.

'எங்களுக்கு என்று தொடர்ந்து படிக்கவும் முடியவில்லை, அதுதான் இல்லையென்றாலும் ஒரு தொழில்கூட கிடைக்கிதில்ல, அப்படி தொழில் வேணுமென்னா காசு கொடுக்கணுமாம், இல்லாட்டி சும்மா வெளிநாடு அனுப்புறாங்களாம். எங்களுக்கு இதுகளுக்கு பின்னால மினக்கெட்டு என்ன பயனுங்க கெடைக்கப்போகுது' கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாட்டம் எமது வேலையில்லா யுவதிகளின் அங்கலாய்ப்பு இது. அவர்கள் விரும்புகிற மாதிரி யாரும் நடந்துகொள்ள, அக்கறைகொள்ளவில்லை இதுதான் யதார்த்தம். அத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பிரதிநிதிகள், யாரையும் களத்தில் அவர்கள் சந்திப்பது மிக மிக அரிது. அந்த இடைவெளி இம்முறை நிரப்பப்படுமா? தெரியவில்லை.

'இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை' ஆம் தமிழர்களிடையே எமது பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களின் வாழ்க்கை, அவர்களது குடும்பம், சொந்தங்கள் ஊர் என வளர்ச்சியடைந்ததுபோல் ஒட்டுமொத்த மாகாண அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் இந்தப் பிரதிநிதிகளினால் ஏற்ப்பட்டது? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 மக்களுக்கு மாத்திரம் இவர்களால் சாதித்துக்கொள்ள முடியாத திம்புத்தீர்மானமும், 13 ஆம் திருத்தச் சட்ட அழுலாக்கலும் சொல்லி சொல்லி அவர்கள் அத்தனை அரச நன்மைகளையும் ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் தின்று சென்றதுதான் உண்மை. இதை யாராவது மறுக்க முடியுமா?. கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளட்டும் பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொறுப்பதில்லை.

கடந்தகால வரலாறுகள் எமக்கு சொல்லும்பாடம், நேரடி உதாரணங்கள் எல்லாம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் இதைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அநேகம்போ் ஏதோ ஒரு வகையில் எமது நாட்டை விட்டு வெளிநாடுகளில் வாழ்ந்துவிட்டு, காலத்துக்கு காலம் தேர்தல் வருவதனை கேள்வியுற்று மீண்டும் மீண்டும் அவர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என வந்து மக்களை ஏமாற்றி அவர்கள் இந்த பதவியில் இருந்து தங்களது சுயதேவைகளை பெருக்கிக்கொள்ளும் அபாக்கியம் எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு மாத்திரமே இருந்து வருகின்றது.

இந்தச் சமுகத்துக்குள் வாழ்ந்தவன், இந்தச் சமுகத்துடன் இன்ப துன்பங்களில் இங்கேயே இருந்து அடிபட்டவன், அவர்களது கலாசாரம், மொழி, உரிமைகள் என்பனவற்றில் எல்லாவகையிலும் அக்கறையுள்ள மனிதர்களை புறக்கணித்து இறக்குமதிகளுக்கு முக்கியம் கொடுப்பதில் இருந்து விளங்குகிறது, இவர்களை தெரிவு செய்வது இந்த மக்கள் இல்லை, அந்த உரிமையை அவர்களுக்கு கட்ச்சிக்காரர்கள் கொடுப்பதும் இல்லை.

இன்னுமொன்றைச் சொல்லிக் கொண்டனர்; வேலை இன்றி எமது மக்கள் துன்பப்படுகின்றனர். உழைப்பு இன்றி தெருவில் நிற்கின்றனர். பணத்தினைக் கொடுத்தாவது ஒரு வேலையைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் அல்லது சிங்க சகோதர அரசியல்வாதிகளின் தரகர்கள் மூலமே தங்கள் சிறிய சிறிய வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர்.

எம்மவர்களிடம் சென்றால் அவர்கள் லண்டன், கனடா சென்றுவிட்டனர் இந்திய சென்றுவிட்டனர் அல்லது இருந்தால் ஐயா மீற்றிங்கில் இருக்கிறார் எனவும், எங்களால் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு தெரியும்தானே! எனவும் கேட்டு மக்களை நடுத் தெருவில் தள்ளி விடுகின்றனர். இதனால் பழைய முகங்களையும் போலிப் பிரச்சாரத்தினையும் ஏற்கும் நிலையில் இந்த மக்கள் இல்லை என கூறிக்கொள்வது என்னவோ யதார்த்தமான உண்மைதான். தன்னை தானும் அறியாத ஊருக்கும் சொல்லாத மனிதர்கள் எப்படி மக்கள் தலைவர்களாகலாம்?

இன்னொன்றைக் கேட்கின்றனர் 'இதென்ன புதினம் சிலர் அடிக்கடி வந்து சர்வதேசத்துககு வாக்குப் பலத்தைக் காட்டுங்க! என்றாங்க, காட்டி என்ன பண்ணட்டாம்' என்று வெதும்புகின்றனர் மக்கள். நாங்க என்ன மாடா ஆடா? அடேய் வீடில்லாதவனுக்கு என்ன வழி, வீதி இல்லாதவனுக்கு என்னவழி, தொழிலில்லாதவனுக்கு என்ன வழி, திறனில்லாதவனுக்கு என்ன வழி, பசிக்கென்ன வழி பட்டினிக்கென்ன வழி? படிக்க என்ன வழி, தண்ணி குடிக்க என்ன வழி? இதெற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் உங்கள் திட்டங்களை விஞ்ஞாபனங்களை முன்மொழியுங்கள். எல்லா வகையிலும் முன்னேறிய யாழ் மக்களுக்கு இந்த பசப்பு வார்த்தைகள் சரியாக இருக்கலாம் எமக்கு அதை விட முக்கியம் மேலுள்ள கேள்விக்கான பதில்கள்! அங்கே ஒரு டக்ளஸ், திருமதி மகேஸ்வரன், அங்கஐன் இருந்து போட்டி போட்டு அபிவிருத்தி செய்கின்றனர் இங்கே யார் இருக்கா எங்களுக்கு?. அவர்கள் எம்மை ஒரு நாளாவது பார்த்ததுண்டா?? 

இதற்கு வழியை காட்டுகின்ற நல்ல மனிதர்களை, தலைவர்களை நாங்கள் இருப்பவர்களுக்குள் முதலில் தெரிவுசெய்ய வேண்டும். 'சர்வதேசமாம் சர்வதேசம்! என மக்கள் திட்டித்தீர்க்கின்றனர்' உண்மையில் மக்கள் உங்களிடம் சர்வதேச அனுசரனை கேட்டா உங்களை நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள்? இல்லையே! தயவு செய்து யதார்த்தம் உண்மையை பேசுங்கள் மக்களிடம். 'முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே' இதில் இன்னொரு சமுகத்துக்காக வாக்குகளை போட்டுக் காட்டவேண்டிய தேவை இல்லை. நமக்காக நாம் இதுதான் ஐனனாயக அரசியல், பிறர்காக இருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பை தவிர எமக்கு வேறு எந்த மாற்று வழியும் தற்போதைக்கு கிடையாது என்பது கிழக்கில் தமிழர்களிடையே அனைவரும் அறிந்த உண்மை. அப்படி அல்லாது போடுகின்ற அனைத்து வாக்குகளும் முஸ்லிம் சகோதரர்களுக்கு கொடுக்கும் எமக்கு பயனற்ற வாக்குகளாகவே இருக்கும். ஆக இருக்கின்றவர்களுக்குள். இம்முறையாவது மக்களின் குரலுக்கு முக்கியம் கொடுங்கள், அவர்களது முன்மொழிவை முதனிலைப்படுத்துங்கள், அதற்காக ஏவிவிட்ட ஏஜென்சிகளாக சில கழகங்கள் சங்கங்கள் என முளைச்சி முன்னுக்கு வருவார்கள், அதன் பின்னுக்கு இருப்பவர்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் சி.வியை கேளுங்கள், அத்துடன் அவர்களின் குறைந்தது ஐந்து வருட சேவைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தக்க ஆதாரத்துடன் சமர்ப்பிக்கச் சொல்லுங்கள், அதனை நடுநிலமையான குழு அமைத்து பக்கச் சார்பில்லாமல் தெரிவு செய்யுங்கள், அதனை மக்கள் மன்றில் அறிக்கையிடுங்கள், அதன் பின் தெரிவுசெய்யுங்கள் தேர்தலில் நிற்பவரை. 

இவ்வாறு வருபவர்களை முடியுமானால் நேர்முகப்பரீட்சைக்கு ஆட்படுத்துங்கள். இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் நிச்சயம் நல்ல சேவையை வழங்குவார்கள் என்பது எனது அபிப்பிராயம். அவ்வாறு வெற்றிபெறுபவர்கள்,; இந்த ஐந்து வருடத்தினையும் பயன்படுத்தி இந்த மக்களின் அடிப்படை குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், அழிவடைந்த கைத்தொழில் பேட்டைகளை புனருத்தாரணம் செய்து இளைஞர்களின் தொழில் வாய்பை அதிகரித்து வறுமை மட்டத்தினை தணிக்க வேண்டும், அத்துடன் மாணவர் இடைவிலகலை முற்றாக நிறுத்தி கற்ற சமுகத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்பது எமது அவா.

அதற்கு மேலாக பல கட்சிகள் கேட்டு மக்களின் வாக்கினை சிதறடிக்கும் திட்டங்களை எமது மக்கள் விழிப்பாக இருந்து உடைத்தெறியவேண்டும், இதற்கு இவ்வாறான முனைப்பில் வருபவா்களை சந்தித்து தயவாக இத்தோ்தலை வெல்லுவதற்கு ஒத்துளைப்புனைக் கோரவேண்டும், இல்லாவிடின் அவா்களை மக்களிடம் அணுகாமல் அவா்களை வழிப்படையச் செய்யவேண்டும்.

அதனூடே, தமிழ் பண்பாடுள்ள சமுகத்தினை, அபிவிருத்தியில் புரட்சியான மக்களை, முன்னேற்ற முள்ள பொருளாதாரத்தினை இலக்காக வைத்து அறிவு, திறன், மனப்பாங்கு, தொழில்வாய்ப்புக்கு முக்கியம் கொடுத்து எமது சமுகத்தினை ஒரு எடுத்துக்காட்டான சமுகமாக, மற்றவர்க்கு உதவும் உயர்ந்த மக்களாக அவர்களை வழிநடத்த அனைத்தையும் துறந்த, மக்களின் தலைவர்களாகப் பார்க்கக்கூடிய இந்த புதிய முகங்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தயவு செய்து தாயகம், சர்வதேச தேவை, சிங்களம், திம்பு, 13ம் திருத்தச் சட்டம் என்கின்ற புரியாத வார்தைகளை வைத்து உசுப்பேற்றி வாக்கு வங்கியை நிரப்பும் எண்ணத்தினை கைவிடுங்கள், அதன் பின் உங்கள் வெற்றி திண்ணமாகும்.

யாரையும் குறிவைத்து இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை என்பதை தொிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று வாழ்ந்த நெஞ்சம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோயிலாகாலாம்.

0 comments:

Post a Comment