ADS 468x60

24 July 2017

எமது திட்டமிடலாளர்களின் கிராமியப் பொருளாதார அக்கறை!

எமது மாவட்டத்தினைப் பொறுத்தளவில் கிராமிய அபிவிருத்தி சார்ந்த அணுகுமுறைகள் ஒரு தெழிவு இல்லாமல் இருப்பதனை அவதானிக்கலாம். வளர்ந்து விட்ட நாடுகளைப்போல் கைத்தொழில் அபிவிருத்திக்கு மாறாக எமது கிராமப்புறங்களின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்து காணப்படுகின்றது. அதற்கேற்ப வளமார்ந்து காணப்படுவதுடன் அவற்றில் பரம்பரை ரீதியான பரீட்சயமும் அவர்களுக்கு இருப்பது முக்கியமானது.

எமது நாட்டின் அபிவிருத்தி வரலாற்றுப்பாதையில் கிராமிய பொருளாதார முன்னேற்றத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச நிதியியலாளர்கள் பல முதலீடுகளை செய்துள்ளனர், ஆனால் மாவட்ட, கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் வினைத்திறனற்ற அமுலாக்கல் செயற்பாட்டினால் கொண்ட குறிக்கோளினை அடைந்துகொள்ளாத வரலாறுகள்தான் அதிகம். அவர்கள் அதிகமாக இந்த கிராமப் புற மக்களிடையே நிவாரணம், நஸ்ட்டஈடு கொடுப்பதில் பாதீட்டில் அதிகம் செலவிடப்படுவதனால் மக்கள் தங்கிவாழும் ஒரு மனநிலையில் தள்ளப்படும் ஒரு நோய்க்கு அளாக்கப்படுகின்றனர். இதன் பலனால், பல வறியவர்கள் தன்னம்பிக்கையினை அதுபோல் முன்வருவருகின்ற எண்ணத்தினை மற்றும் முயற்சியாண்மையை இழந்துள்ளனர். அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற பல ரூபாய்க்கள், உள்ளீடுகள்; என்பவை வீட்டுரிமையாளர்களின் நுகர்வு தேவையை நோக்கி திசைதிரும்புவதனையும் காணலாம்.

குறிப்பாக எமது பிரதேசத்தினைப் பொறுத்தளவில் கிட்டத்தட்ட 70 விகிதமானவர்கள் கிராமப்புறங்களை அண்டியே வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தினை அண்டியே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த மக்களின் 90 விகிதமான வருமானம் அவர்களின் அன்றாட பாவனைக்கே பயன்படுகின்றன. குறிப்பாக உணவு, எரிபொருள், மற்றும் சுகாதார தேவைகளைக் குறிப்பிடலாம். அதிலும் இங்குள்ள கிராமப்புற மக்களில் 50 விகிதமானவர்கள் அடிப்படை வசதிகளைக்கூட அடைந்துகொள்ள முடியாத வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நிலையில் உள்ளமை நாம் அறிந்ததே.

இலங்கை போன்ற வளர்ந்து வரும் விவசாயநாடுகள் அதன் பொருளாதார வளர்ச்சியை மொத்த தேசிய உற்பத்தியில் கிடைக்கும் தனியாள் வருமானக் கணிப்பை வைத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தினைக் கணிப்பிட்டு காட்டமுடியாது, அது கிராப் புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தினை குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.

கைத்தொழில் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தலாம் அதிக வருமானத்தினை வசதிபடைத்த முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக்கொடுக்கலாம் ஆனால் கிராமப்புறங்களில் இந்த முன்னேற்றமானது, எமது பிரதேசத்தில் இருக்கும் நகர மற்றும் கிராமிய மக்களிடையேயும் வசதிபடைத்த மற்றும் ஏழை மக்களிடையேயும் உள்ள இடைவெளியை இன்னும் பெரிதுபடுத்திவிடுவதனையே காண்கின்றோம். இந்த நிலை வறியவர்களை இன்னும் வறியவராக்குகின்ற ஒரு துர்பாக்கியத்தினை ஏற்படுத்த தவறுவதில்லை.

ஆகவே அபிவிருத்திச் செயற்பாடுகளில் நாங்கள் எமது கிராமப்புற மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும், சமுக நீதியினை நிர்ணயம் செய்வதற்கும் திட்டமிடலாளர்கள் தலைவர்கள் முன்வரவேண்டும். முதலில் கிராமிய பொருளாதார, அபிவிருத்தி ஊடாக உணவு உற்பத்தியில் தன்னிறைவினை ஏற்படுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். எமது உணவுப் பாதுகாப்பானது வளர்ந்து வரும் சனத்தொகையிடையே மிக ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றது. ஆகவேதான் எமது பிரதேச பொருளாதார வளர்ச்சி விவசாயத்தினை அடிப்படையாகக்கொண்ட கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இது எமது மக்களின் உணவுப் பாதுகாப்பினையும் நிச்சயப்படுத்தும்.

வெறுமனே அபிவிருத்தி என்று சொல்லி குறிப்பிட்ட சிலரது ஈடுபாட்டை தவிர்த்து அந்த அபிவிருத்தியை அடையப்போகின்ற மக்களின் பங்குபற்றுதலை ஒவ்வொரு திட்ட ஆரம்பத்தில் இருந்தும் உறுதிப்படுத்தவேண்டும். அத்துடன் பெண்களினுடைய பங்களிப்பு அனைத்து வகையிலும் இடம்பெறவேண்டும் அது சமுக அபிவிருத்திக்கான முக்கியமான பங்களிப்பினை நல்கும்.
ஆக அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக கிராமிய வளங்களை பெருக்கி அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றும் வகையில் திட்டம் வகுக்கவேண்டும். மக்களினுடைய திறன்களை உற்பத்தியாக்க செயற்பாடுகளில் அடையாளங்கண்டு முயற்சிக்கவேண்டும். அவற்றுக்கு உள்ழூரிலும் வெளிநாடுகளிலும் நல்ல சந்தையினை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்பப் பாவனையினை பிரயோகித்து உற்பத்தித் தரத்தினை மேம்படுத்தி மொத்த வருமானத்தினையும் பெற்றுக்கொடுக்கும் வகைசெய்யவேண்டும்.

எமது கிராமங்களை அபிவிருத்தி செய்வது உணவுப்பாதுகாப்பினை நிர்ணயனம் செய்யும் ஒன்றுமாத்திரமல்லாமல் அது மொத்த தேசிய உற்பத்தியினையும் அதிகரிக்கின்றது. அதிஸ்ட்டவசமாக மட்டக்களப்பு மாவட்டமானது போதியளவு இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, பொருத்தமான ஊழியப்படையை வகை தொகையின்றிக் கொண்டுள்ளது, அதேபோல் நல்ல சந்தைச் சூழலினையும் கொண்டுள்ளது. இருப்பினும் விவசாயம் மீன்பிடித்துறையில் ஊக்குவிப்பு இல்லாத காரணத்தினாலும், நிறுவன ஒருங்கமைப்பு இல்லாத காரணத்தினாலும் அவற்றில் ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுவரும் நிலை காணப்படுகின்றது.

ஆகவே துறைசார் அறிவும், தலைமைத்துவமும், துடிப்பும் சமுக அக்கறையும் உள்ளவர்களின் கூட்டமைப்பே எமது மக்களின் விடிவுக்கு ஒரே வழியாக இருக்கும் அதற்கு எமக்கு நல்ல இளம், கற்ற, அனுபவம் உள்ள அரசியல் தலைமைகளின் தேவை இருக்கிறது. காலம் கடக்கமுன் சிந்தித்து பிச்சகாரர்களை உருவாக்கும் மூடத்தனமான அரசியல்வாதிகளை தமிழ் பிரதிநிதித்துவத்தில் இருந்து தூக்கிவீசவேண்டும் முன்னோக்கிச் செல்வோம் வாருங்கள்.
இல்லாமை நீக்க வேண்டும் 
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் 
நல் எண்ணம் வேண்டும் 
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்

0 comments:

Post a Comment