ADS 468x60

06 July 2017

ஒரு நாட்டின் திறனுள்ள இளைஞர்களே அதன் வளர்ச்சியின் முதுகொலும்பு

அறிமுகம்.
இலங்கை சமுகரீதியான நல்ல கொள்கைகளை அழுல்படுத்தும் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஒரு மாதிரி நாடாகும். இருப்பினும் தசாப்த காலமாக இளைஞர்களிடையே வேலைவாய்பை உருவாக்குவதிலும் அவர்களது ஏனைய தேவைகளை நிறைவுசெய்வதிலும் பாரிய சவால்களை அரசு எதிர்நோக்கி வருகின்றது. எவ்வாறாயினும், இளைஞர்களே ஒரு நாட்டின் எதிர்காலத்தின் பிரதிநிகள். அவர்கள் அந்த நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்கினை வகிப்பது அவர்களது கடமை. ஒரு நாட்டினுடைய உற்பத்தி அந்த அரசாங்கத்தின் உதவியைவிட அந்த நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் பங்களிப்பில் இருந்து வருகின்ற ஒன்றாகும். ஆக ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி இளைஞர்களின் தோழ்களிலேயே தங்கி இருக்கிறது. 

ஆனால் நாங்கள் இளைஞர்களின் விவகாரத்தில் ஒன்றை அவதானிக்க முடிகிறது இன்று வேலை கொடுப்பவர்களுக்கும் வேலையாட்களை உருவாக்குகின்றவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்து வருகின்றது. அதனால்தான் மொத்தமான 2016 இல் 4.2% விகித வேலையற்றவர்களிடையே இளைஞர்களின் வேலையின்மை 21% விகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமையை கீழுள்ள தரவுப்படம் காட்டுகிறது. ஆனால் நம் அண்டை நாடான இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளான அவுஸ்த்திரேலியா, இலண்டன் மற்றும் கனடா போன்றவற்றில் கிட்டத்தட்ட இளைஞர்களிடையே வேலையின்னை வெறும் 12% விகிதமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவை தவிர யப்பான், யேர்மனி, அமெரிக்கா போன்றவற்றில் முறையே: 5%, 6% மற்றும் 8% விகிதமெனக் காணப்படுவது அவர்கள் சந்தை தேவையை அறிந்து ஊழியர்களை நிரம்பல் செய்கின்ற நடைமுறையை பின்பற்றுகிறார்கள் என்பதை குறிக்கின்றது.


எமது நாட்டைப் பொறுத்தளவில் இளைஞர்களிடையே தேவையாக இருக்கும் திறனுக்கான கேள்விதான் அதன் பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நகரமயமாக்கல், உள்ளநாட்டு மாற்றம் என்பனவற்றை இயக்கும் சக்தியாக இருக்கிறது.

இதற்காக இளைஞர்களிடையே அவர்களை கவர்ந்திழுப்பதற்கான திட்டங்களை கையாழுதல் வேண்டும், அது போன்று இந்த நாட்டில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற தொழில்பயிற்சி நிறுவனங்களை தொழில் துறையினரின் வேண்டுகோளுக்கமைவாக பாடவிதானங்களினூடு அந்த திறனை தொழில் சந்தைக்கு நிரம்பல் செய்யவேண்டும். இது தவிர ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 மாணவ்கள் தொழில் சார் திறனற்றவர்களாக, பொதுக்கல்விப் பெறுபேற்றுடன் வெளியேற்றப்படுகின்றனர். இந்த இடைவெளியினை நிரப்புவது மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்பயிற்சி கல்வி ஆணைக்குழுவின் பாரிய பங்கு என அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் இலங்கை போட்டித்தன்மைவாய்ந்த நடுத்தர வருமானத்தை ஈட்டும் ஒரு வளர்முகநாடாக மாறுவதில், இருக்கின்ற இந்த நடைமுறையின் வினைத்திறனற்ற தன்மையால் மீணடும் மீண்டும் ஆபத்துக்குள்ளாகிவிடுகிறது.

குறிப்பாக பாடசாலை மாத்திரமல்ல, தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கூட ஊழியச் சந்தையின் கேள்வி நிரம்பலில் சமநிலையற்ற தன்மையே காணப்படுகின்றது. காரணம் இவர்களின் கல்வித்தரம், பயிற்றுவிப்போரின் திறன், மற்றும் அவர்களுக்கான கட்டுமான வசதிகள், மற்றும் பாடவிதான மாற்றம் என்பன திறன் வேண்டுகோளுடன் ஒத்துப்போகவில்லை என்பது இளைஞர்கள் வேலைபெறுவதில் உள்ள பெரிய சவாலாக உள்ளது.

பரிந்துரைகள்
இந்த சவால்களை வெற்றிகொள்ள பல பரிந்துரைகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன், அவை பின்வருமாறு தரப்படுகின்றது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே புரிதலையும் விழிப்புணர்வினையும் பெரியளவில் ஏற்படுத்துவதனூடாக தொழில்துறைக்கான கேள்விக்கேற்ப அவர்களை தயார்நிலைப்படுத்துதல்.

தொழில்பயிற்சி நிலையங்களின் பயிற்ச்சியினை தொழில் தருநர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைத்தல் அத்துடன் நல்ல பயிற்றுவிப்பாளர்களை உருவாக்குதல்.

மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் பயிற்சி ஆணையகத்தில் ஏனைய தனியார் மற்றும் அரச தொழில் பயிற்சி நிறுவனங்களைப் பதிவுசெய்து பொதுவான குறிக்கோள் நோக்கி சந்தைக்கு தேவையான பொருத்தமான பாடங்களை வழங்கும் பயிற்சிகளுக்கு வலுச்சேர்க்கவேண்டும்.

பாடசாலை மட்டத்தில் அதிகப்படியான தொழில்வழிகாட்டல்களை தொழில் துறை வல்லுனர்களுடன் இணைந்து முன்னெடுக்கவேண்டும்.

ஊழியப்படையில் வெறும் 36.7 விகிதமாக இருக்கின்ற பெண் ஊழியர்களின் தொழில்துறை பங்களிப்பினை அதிகரிக்கவேண்டும்.

கல்வித்துறையில் இளைஞர்களுக்கான அறிவுப்பகிர்வு வழிகாட்டல்களை ஏற்படுத்தவேண்டும். எமது நாடானது தொழில்துறை சார்ந்த இந்த அறிவுப்பகிர்வினை இளைஞர்களிடையே அவர்களுடைய பங்களிப்புடன், ஈடுபாட்டுடன் அவர்களது திறனை மேம்படுத்தும் வகையில் கட்டியெழுப்புதல்வேண்டும்.

குறிப்பாக வடகிழக்கில் உள்ள இளைஞர்களிடையே வேலைவாய்பினை வழங்குவதில் ஒப்பீட்டளவில் மிகப் பின்னடைவை கொண்டுள்ளது. இதற்காக தனியார் மற்றும் அரச கூட்டிணைப்பில் அபிவிருத்திச் செயற்பாட்டில் காணப்படும் திறன் இன்மையை குறைவடையச் செய்வதற்கான கல்வித்திட்டங்களை புதிதாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதன்போது தொழில்சார் அறிவு இந்த இளைஞர்களிடையே அதிகரிக்கும்போது இளைஞர்களின் அபிவிருத்திக்கான பங்களிப்பு கணிசமான அளவு அதிகரிக்கும். அதுபோல் இத்தொழில் துறைசார் ஈடுபடுபாட்டு திறன் இளைஞர்களின் தொழில் வாய்ப்புச் சந்தர்ப்பத்தினை அதிகரித்துக்கொள்ளும். 

முடிவுரை
ஆகவே, இங்குள்ள அனேக இளைஞர் யுவதிகள் இலங்கையில் குறிப்பாக சுற்றுலாத்துறை, கட்டிட நிர்மானம், தொழில்நுட்பத்துறை, விவசாயம் போன்ற இன்னோரன்ன துறைகளில் காணப்படும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் திறனற்றவர்களாகவும் தொழில்துறைசார்ந்த புரிதல் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். 

இது அவர்களை முச்சக்கர வண்டிச் சாரதியாகவோ அல்லது வளைகுடா கூலியாளாகவோ மாற்றிவிடும் அபாயம் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இல்லாமல் பெரியளவில் கனவுகாணும் ஒரு வர்க்கத்தினை நாம் உருவாக்க வேண்டும். வருடா வருடம் இலங்கையின் மொத்த ஊழியப்படையான 7.8 மில்லியன் பேரில் இருந்து, கிட்டத்தட்ட 300,000 பேர்வரையில் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் திறனற்ற கூலிவேலையாட்களாக செல்ல, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேர் முச்சக்கரவண்டிச் சாரதிகளாகவும் தொழில்புரியும் படையினராகவும் இருக்கின்றமை தரவுகள் சொல்லும் உண்மை.

இதில் இருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ள முடிகிறது, தொழில் வழங்குநர், தொழில் பயிற்சி வழங்குனர் மற்றும் இவை இரண்டுடனும் சம்மந்தப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான இடைவெளி அதிகமாகக் காணப்படுவதே இந்த நிலைக்கான காரணமாகும். இவர்களை எல்லா மட்டங்களிலும் ஒருங்கிணைக்கும் வேலையினை ஆரம்பிக்கவேண்டும். 

இதன் மூலம், சரியான திறன் அறிவுடன், தேவையான தராதரத்துடன் தொழில்துறை அனுபவத்துடன் கூடிய இளைஞர்படையை கூட்டிணைந்து உருவாக்குதல்வேண்டும். இவ்வாறான ஓர் சந்தர்ப்பம்தான் புரிதல் இல்லாமல் தொழில் சந்தையில் நுழைந்து இடைநடுவில் விலகிச்செல்லும் இளைஞர்களின் விகிதத்தினை பெருமளவில் குறைவடையச் செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. குறிப்பாக இந்நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் இன்றய இளைஞர்களின் யதார்த்தத்தினையும், தொழில் வழங்குவோரின் கேள்வியினையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப்ப இளைஞர்களை வலுப்படுத்துவதில் ஈடுபடுமானால் எமது நாட்டை வளர்ச்சியடையச் செய்ய தேவையான அதிகூடிய நன்மையினை அனுபவிக்கலாம்.

0 comments:

Post a Comment