ADS 468x60

19 July 2017

ஆசை கொள்ளவைக்கும் தேத்தாத்தீவு பாமுருகன் ஆலயம்.

நிலவினை விரித்த வெள்ளை மணல் அருகே நித்திரை கொள்ளவைக்கும் மதிரை நிழல்;  சுற்றி நெல் சொரியும் வயல்வட்டை எங்கும் நெஞ்சினை தாலாட்டும் குளங்குட்டை;  கூடி குரவைபோடும் நாரைகள் சுற்றி பாடி இரையைத் தேடும் பருந்துகள்; விரிந்து சிரித்திருக்கும் கார்த்திகைப்பூ எங்கும் விழுந்து கிடந்திருக்கும் நாவற்ப்பழம்; அலை கொண்டு தாலாட்டும் ஆற்றங்கரை அருகே உவர்ப்பள்ளிச் சொரியும் உப்புத்தரை; சில்லென்று அலைமோதும் வில்லுக்குளம் அதில் அதில் சிலுசிலென விளையாடும் மீன்கூட்டம்;  இது பழகியோர்க்கு மட்டும் பயத்தை நீக்கும் காடு  அதுதான் இன்று பாலமுருகன் உறையும் பால்மணல் மேடு.

புலர்ந்தும் புலராத காலைப்பொழுது அது, அப்பா அவசர அவசரமாய் அம்மாவிடம் கேட்கிறார் ' ஒருக்காப் பாரு அந்த கைப் பெட்டிக்குள் முடி சீவிய ரெண்டு தேங்காய், பழம், வெற்றிலை, கற்பூரம், அருவா கத்தி, சணல் எல்லாம் இருக்கா எண்டு' ' ஆமாம்' என்று சொல்ல அவசர அவசரமாக வேலகாரன் கம்பு, கயிறு, தண்ணிக்குடம் எல்லாம் எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு டக்டரில் ஏறி, போற போற வழியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆலையடி மும்மாரி நோக்கி சூடுபோடுவதற்க்காக போகத் தொடங்கினோம்.

யாரும் இல்லாத அந்த றம்மியமான காலைப் பொழுதில் அப்படியே டக்டரை ஒரு மதுரைமர அடியில் நிற்பாட்ட. நிசப்தத்தில் ஒரு சத்தம் அது சில்லெனக் கத்தும் சில்லூறுகளின் ஒலி. அதுதான் பால முருகன் சந்நிதானம். அந்த தேங்காயில் வழமைபோல் ஒன்று இந்த முருகப் பெருமானுக்கு மற்றது சூட்டு முடியில் வைத்து பிள்ளையாருக்கு உடைப்பதற்க்காக. முருகப் பெருமானில் அந்த சந்நிதியில் பக்திபூர்வமாக வணங்கி விட்டுச் சென்ற அந்த பொன்னான நாட்கள் பசுமரத்து ஆணிபோல் இன்று இந்த முருகனின் திருவிழாவில் ஞாபகம் வருகிறது.

வாழைக்குலை வெட்டினால் 'முருகப் பெருமானுக்கு ரெண்டு சீப்ப கொண்டு குடுடா தம்பி, இந்த மாம்பழத்திலயும் ரெண்டக் கொண்டுபோ' என்று பாலமுருகன் மேல் இந்த ஊரில் உள்ளவர்கள் பக்தியாக இருந்து வருகின்றனர். காரணம் முருகன் நினைக்குமிடத்து வருபவன், தமிழ் கடவுள், முருகன் என்றால் எல்லோரும் விரும்புவர் மற்றும் அழகான அமைவிடம் போன்ற இன்னோரன்னவற்றைக் குறிப்பிடலாம்.
'குளத்துக்குள்ளால போகாத, மழை பெய்து குட்டை எல்லாம் நீர் நிறைந்து கிடக்கு றோட்டால சுற்றிப்போ' கந்தர்சஷ;டி காலம் வந்தால் ஆசை ஆசையாக அந்த ஆலயம் செல்வேன். ஆறுமுகம் ஐயாவின் பக்திப் பாராயணங்கள் என்னை சுற்றிச் சுற்றி இழுக்கும். மழை இலேசாகத் தொடங்கி இருக்கும் இக்காலத்தில் அந்த றம்மிய சூழல் பசிபட்டினியைக்கூட போக்கிவிடும் அப்படி அழகு இந்த ஆலயச் சூழல்.

இப்படியான இந்த ஆலயம் எப்படி வந்தது? 

ஆங்காரமாக இருந்தாலும் ஓங்காரத்தை மறக்காத பக்தன் அம்பாரைச் சாமியார் என்னும் அடியார், வெத்திலைக் கொழுங்து மெத்தமாய் விளையும் தேனூர் பதியின் தோட்டத்துக்கான அலம்பல் தேட்டத்தில் கம்பு வெட்ட இந்த காட்டுக்குள் நுழைகிறார். முருகா முருகா என்று கம்புகளை வெட்டிக் கொண்டு செல்லுகின்றார், செல்லும்போது நிறை மதியம் சற்று இளைப்பாறி மறுபடியும் வெட்டுவோம் என நினைத்த அடியவரின் காதுகளில் ' அடியவனே நான் இங்குதான் குடியிருக்கின்றேன் என்னை இங்கு ஆராதனை செய்யும்' என்ற ஒரு அசரீதி கேட்டதாம். அன்றிலிருந்து பால் பொங்கும் மணல் மேட்டில் பால முருகனாக வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை வாரி வழங்கி தன்னை நாடும் அடியவர்க்கு அருள் பேற்றினை வாரி வளங்கும் வள்ளலாக எம்பெருமான் எழுந்தருளிய தலம் தேத்தாத்தீவு  பால் மணல் மேடாகும்.
வந்தோரை சிறப்பிக்கும் மீன்பாடும் தேநாட்டின் 12 மைல் தெற்கே செந்தூரத் தேன் கதலி செறிந்திலங்கும் தேத்தாத்தீவில் வற்றாத வில்லுக்குளத்தருகே மந்தியும் கானக் குயிலும் மகிழ்து விழையாடும் அழகான இடத்தினில் அழகன் குடியிருக்கிறான்.

இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபால முருகனுக்கு சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் திருவிழா பெருவிழாவாக தேத்தாத்தீவு மக்கள் எடுத்து வருவது சிறப்பாகும். தமிழருக்கே உரித்தான தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு பண்பாடு சற்றும் பிசகாத வழிபாட்டு மரபுகளை சுமந்து, பேணிக்காக்கும் இந்த நிகழ்வுக்குள் பல விடங்கள் உள்ளடங்கும். மேளதாள வாத்திய கச்சேரிகள், பட்டெடுத்தல், கலை நிகழ்சிகள், பஜனை நிகழ்வுகள்,  கதா பிரசங்கங்கள்,  பண்ணிசை நிகழ்வுகள், அறநெறி நிகழ்வுகள் அன்னதானம் என அத்தனை சமய அனுட்டானங்களையும் கொண்டு மக்களை ஒன்று சேர்த்து மகிழ்விக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.

பால  முருகன் மீது பக்தி கொண்டு இயற்றிய பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இது பால் மணல் பத்து என அழைக்கப்படுகின்றது.




எங்கு இருந்தாலும் இந்த திருவிழாக் காலம் வந்து விட்டால் ஐயன் முருகனின் ஆலயத்தில் ஆடித்திரிந்த அந்த நாட்கள்தான் ஞாபகம் வருகிறது. பல பேர் இந்த ஆலயத்தில் இருந்து தான் கலைஞர்களாகவும்இ பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும் உருவாகி இன்று நல்ல நிலையில் இருப்பதற்கான ஒரு களமாக இருந்திருக்கின்றது என்றால் அது மிகையில்லை. நல்ல நோக்கத்துக்காக வழிபாடுகளை பயன்படுத்துவது ஆத்மீக திருப்தி மாத்திரமல்ல ஒரு சமுகத்தின் எழுச்சியுமாகும்.

முருகா கோடி முறை பாடினாலும் சலிக்கவும் இல்லை உன்னை கொண்டாடும் நெஞ்சிக்கு கவலையும் இல்லை. வாடி நிதம் பாடுகையில் வருகின்றாய் நீ வந்தவுடன் இன்பம் எல்லாம் பெறுகின்றேன் ஆடி வரும் புள்ளி மயில் அழகோனே உன்னை அள்ளி நிதம் பருகிடுவேன் விழியாலே!!

0 comments:

Post a Comment