சின்னவத்தை சீமை
சென்றுவரச் சேய்மை
குறுணல் புடைத்து
உலை மூடும் கண்ணம்மா
கூலிக்கு செய்யவில்லை- அரிசி
ஆலைக்குச் செல்வாள்- அங்கு
காலையில் அரிசி விற்க்க
கடனுக்கு ஐந்து மரைக்கால்- எடுத்து
உடனுக்கு உடன் கடன் கொடுப்பாள்..
சின்ன வீட்டினுள்
செல்லமாய் ரெண்டு பெண் பிள்ளை
கணவன் வயல் சென்றும்
காணாமல் போன பின்னும்..
உணவு கொடுக்க மறுத்திலள்..
உடை உடுக்க தவறவில்லை..
காலையில் பிள்ளைகட்கு
கறிசோறு சமைத்து விட்டு..
ஒரு நாளில் ஒரு தடவை
ஓடுகின்ற பேருந்து..
மறு முறையும் வாராது..
வாழைக்கால் ஆறுமட்டும்
வந்து செல்லும் அந்த வண்டி
அதில்
தினமும் அரிசி விற்க்க
பனங்காடு பாண்டிருப்பு
மாங்காடு மருதமுனை
இனங்கண்டு சென்று விற்ப்பாள்..
பாரங்கள் தலை சுமந்த கண்ணம்மை
தூரங்கள் பார்த்ததில்லை
மழை வெயில் பனி
மாச்சல்கள் தொட்டதில்லை..
நேரம் போன தெரியாமல்
பாரம் குறைந்த தலையுடன் - சற்றே
ஆறுதல் அடைந்ததால்
பேருந்து போனது...
பாவம் என்ன செய்வாள்...
இருபத்தி ஒன்பது மயில்கள் நடக்க
இருட்டுப் பட்டு விட்டது..
கண்கள் பார்க்க மறுத்தது -இரண்டு
பெண்களின்; ஏக்கம் வேறு.
சென்றடைந்தாள் .....இருந்தும்
அவள் செல்லங்களை கண்ட பின்தான்
உள்ளத்தில் உயிர் வந்தது..
பசிவயிற்றைக் கிள்ளியதால்
பானையில் அரிசெடுத்து
உலைவைக்க போனால்...
பானைதான் இருந்தது..
அரிசங்கு இருக்கவில்லை
யாருக்கு தெரியும்...
ஊரெல்லாம் உணவளித்த கண்ணம்மை
உலைமூட்ட அரிசி தேடுவாள் என்று...
0 comments:
Post a Comment