ADS 468x60

20 May 2016

'மட்டக்களப்பில் பாரம்பரியத்தை கட்டியிழுக்கும் சடங்கு முறை' ஒரு பார்வை.



இலங்கையில் இரண்டு தசாப்தகால யுத்தம் உயிர்களை மட்டும் காவு கொள்ளவில்லை அந்த இனத்துவ அடையாளங்கள், வழிபாட்டு வழக்காறுகள், பாரம்பரியம், நடைமுறைகள், உறவுமுறைகள் என்று எல்லாவற்றையும் இழந்து, ஏதோ! எச்ச சொச்சமாக மிஞ்சிய தழிழ் இனம் பார்க்க ஏதோ மீண்டு வருவது போல் ஒரு உணர்வு இப்போது இருந்தாலும், முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது,  இப்போது அதில் இருந்தான சிறிய விடுதலை எமக்கு பெரிதாகத் தெரிகின்றது அவளவுதான். யுத்தவடு இன்னும் ஒரு பரம்பரை அலகை கடத்தும் வரை அது எம்மில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இருந்தும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில், தழிர்களின் அடையாளங்களை பறைகின்ற உயிர்நாடிகளாக இருப்பவை பட்டி தொட்டிகளில் புழுதி மண்டிக்கிடக்கும் கலாசாரம், வழிபாட்டு முறைகள், பாரம்பரியங்கள், நம்பிக்கை, ஒழுக்கம் போன்ற இன்னோரன்ன இருக்க வேண்டியவைகள்தான். ஆனாலும்  மட்டக்களப்பு மாநில மக்களிடையே இன்றும் இவர்களுடைய கலாசாரத்தை மரபு மாறாமல் கட்டி இழுக்கின்ற சாதனங்களுள் சடங்கு வழிபாட்டு முறை போற்றுதற்க்கு உரியதே.

மட்டக்களப்பு மான்மியம் உணர்த்தும், கி.பி 16ம் நூற்றாண்டில் தோன்றிய இவ்வழிபாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்மையில் தமிழர்களும் அல்லாதவரும் நம்பிக்கையில் தொடரும் கண்ணகி வழிபாடாகும். இது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகார கதாநாயகியான கண்ணகியுடன் தொடர்புபட்டது. குறிப்பாக இம்மாநிலத்தின் சிறப்புகளுடன் இந்த சிலம்பரசி வழிபடும் பண்டைய இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
(பறவைக்காவடி எடுக்கும் அடியவர்)
கரிலுயர் பட்டிநகர் தம்பிலுவில்லெருவில்
நாவலர்கள் துதிபாடும் பரவுகாரேறுதீவு
பகரரிய மகிழுர் மகிழடித்தீவு
பண்புசெறி தாழைநகர் கொக்கட்டிச்சோலை
நிகரான தாண்ட நகர்வந்தாறுமூலை
நிதியமிகு கல்முனை புதுக்குடியிருப்பு
தகதிகென நடனமிடு செட்டிநகர் குடிகொண்ட
தையலே உனது அருள் தந்தருளுமம்மா!

இந்தச்சடங்கு நடைபெறும் ஆலயங்களில் இருக்கும் சூழல் எம்மை எல்லாம் வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைந்து காணப்படும்.

'திறமான கஸ்த்தூரி சந்தணம் பன்னீர்
சிந்தை மகிழ் வாடையது வீசிவரணேணும்'

என்பதற்க்கு அமைவாக பூசையில் பல நிற மலர்கள், பலவகைப் பூக்கள், பழங்கள், கமுகம் பாழை, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், இளநீர், தேன், வேப்பம் இலை, கரும்பு, இன்னும் பல வாசனைத் திரவியங்கள், அலங்காரப் பொருட்கள் கொண்டு விதிமுறை தவறாமல் கண்ணகி தெய்வத்துக்கு மடைபரவி, காவிய இராகம் ஒலிக்க, உடுக்கை தாளம் முழங்க, பறைமேளம் வானைப் பிழக்க, குரவை ஓசை அரோகரா ஒலி என்பன நிறைந்து ஒலிக்க இந்த சடங்கு முறை கட்டாடிமார்களால் இனிதே நடாத்தப்படும்.

(நம்பிக்கையில் முள்ளுக்காவடி)
இன்னும் இந்தக் காலங்களில்தான் கண்ணகி வழக்குரை, கதவுதிறத்தல் நிகழ்வுடன் பாராயணம் செய்யப்படுவதுடன், வசந்தன் கூத்து, கரகம், கும்மி, கரகம், நாட்டுக்கூத்து, காவியம் பாடுதல், காவடி எடுத்தல், பஜனைப் பாராயணடம் என்பன அரங்கேற்றப்படுவது மரபாகும்.

இன்னும் பல கலாசார நிகழ்வுகள் பக்தியுடன் நடந்தேறுவது வழக்கம். 

மடிப்பிச்சை எடுத்தல்.
குறிப்பாக பெண்கள், சிறுமியர்கள், வயோதிபர்கள் என்று எல்லோரும் தங்களை அம்மன் சிலைபோல அலங்கரித்து தலையிலே வேப்பம் பூச்சூடி கையிலேயும் வேப்பம் இலை எடுத்து அழகான வர்ணங்களில் விதவதமாக சேலைகள் அணிந்து, உடுத்த சேலையிலே மடி செய்து அதில் தங்கள் வீட்டில் முதலில் நெல் சிறிது எடுத்து பின் வீடு வீடாகச் சென்று 'கண்ணகி அம்மன் பேரால மடிப்பிச்சை போடுங்க' என்று மடிப்பிச்சை எடுத்து வெறுங்காலுடன் ஆலயம் நோக்கி நடந்து சென்று நெல்லை ஆலயத்தில் கொடுத்து வணங்கி வருகின்ற முறை பார்க்க அழகாகவும் ஆசையாகவும் இருக்கும்.

நேர்த்திக்கடன்.
மக்கள் தங்களுக்கு ஒன்று நடக்கவேணும் என்றோ அல்லது ஒரு துன்பம் விலக வேணும் என்றோ நேர்த்தி வைப்பது வழமை. இதனை நேர்த்திக்கடன் மற்றும் அடையாளம் கொண்டுபோதல் என அழைக்கின்றனர். தொட்டிலும் பிள்ளையும், கண்மணி, பாதம், மனித அபயம், என நேர்த்தி தீர்க்க ஆலயத்தில் கொண்டு கொடுப்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக மட்டு மாநில கண்ணகி வழிபாட்டில் விரவிக் காணப்படுகிறது.

இலக்கிய வடிவங்களான காவியங்கள், சிந்து, காவடிப்பாடல்கள் போன்றன எத்தனை அழகு பொருந்தியது என்பதனை முறையாகப் பாடும் போதுதான் அது உணரப்படுகின்றது. அவை பாரம்பரியமாக செயல் வடிவுற்றதனால், அவை புதிய தலைமுறைக்கு கடத்தக்கூடிய இலகு தன்மை, புதிதுசேர்த்தல், நயம் இல்லாமல் போனதால், இப்போது அவைஅழிவுறும் தறுவாயில் இருந்து வருகின்றது. 

ஆனால் அவற்றை நாங்கள் அப்படியே விட்டுவிடுவோமா என்ன! புதிய முறையில், பழமை மாறாமல் இதுவெல்லாம் எங்கள் சொத்துக்களா! என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அவை அழகு பொருந்தியதே! இதனை எம் நாட்டில் இல்லாதவர்களும் கேட்டு இரசிக்க இங்கே இணைத்து விடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  தமிழர் கலைகள் பாரம்பரியமானவை, சுவையானவை அதை கேட்டு உணரும் போது அதில் ஒரு தனிச் சுகம் இருப்பதனை அறியலாம். சத்துருக்கொண்டான் கண்ணகி ஆலயத்தில் அருளானந்தம் குழுவினர் பறை வாசிக்கும் இந்த வீடியோவை எடுக்கக்கூடியதாக இருந்தது.


நீண்ட நாட்க்களுக்கு பின் ஒரு லைவ் இசைக்கச்சேரி பார்ப்பதற்க்கும் எமது தொன்மை வாய்ந்த பாரம்பரியத்தினை ஞாபகப்படுத்தவும் உதவியாய் இருந்தது இது. நீங்களும் இங்கு கிளிக் பண்ணி இரசித்துப் பாருங்கள். 

வசந்தன் கூத்து 

(வசந்தன் அரங்கேற்றும் தேத்தாத்தீவு கிராமத்தார்)
வசந்தன் கூத்து என்றால் மட்டக்களப்பு ஞாபகம் வரும். இந்த சிறுவர்களை கதாநாயகர்களாகக் கொண்டு ஆடுகின்ற கூத்துக்கு தொழில் நுட்ப வளர்ச்சி, ஊடக விருத்தி இல்லாத காலத்தில் பெரு வரவேற்ப்பு இருந்தது. ஒழுக்கம், கலாசாரம், தர்மம், நியாயம் என்பன அந்தக்காலத்தில் இந்த கூத்து போன்ற கலை வடிவங்களுடாகவே அறியப்படுத்தப்பட்டன, மக்களும் அதை நம்பிக்கையுடன் பின்பற்றி சந்தோசமாக வாழ்ந்தனர்.

அவை இன்று யாராலும் முன்னெடுத்து செல்லாத தலைமைத்துவம் இல்லாத மூக்கறுந்த சமுத்தில் சிக்கிவிட்டதா என்று நினைக்கும் போது தமிழ் இருப்புக்கே கேள்வியாகிவிட்ட நிலையில், சடங்கு காலங்களில் அதிலும் ஒன்றிரண்டு கிராமப்புறங்களில் 70 மற்றும் 80 வயது மதிக்கத்தக்க முதியவர்களால் மட்டும் எடுத்து செல்லப்படுவது கவலைக்குரியதே.

இங்கு அழகாக ஆடும் தேத்தாத்தீவு வசந்தன் கூத்தின் ஒரு சில ஆட்டங்களை இங்கு இணைத்துள்ளோம். இது செட்டிபாளையம் கண்ணகி சடங்கில் அரங்கேற்றிய போது படமாக்கப்பட்டது. இந்த கூத்தினை எமது அனைத்து மக்களுக்கும் தெரிவியுங்கள், அதன் அழகினையும் முக்கியத்துவத்தினையும் பறைசாற்றுங்கள்.

இவற்றை இன்னும் இன்னும் வளப்படுத்தி அவற்றினூடாக ஒரு சென்நெறி தவறாத சமூகத்தை கட்டி எழுப்பி இந்த மட்டு மாநிலத்திற்கு என்று ஒரு அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள எந்த வகையிலாவது பாடுபட வேண்டும் என்பதே அனைவரதும் அவா. அது எந்த ரூபத்திலும் இருக்கலாம். இந்த இலக்கை எய்துவதின் ஊடாக ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களின் அடையாளத்தை உலகத்தாருக்கு பறைசாற்றிக் கொள்ள வழிசமைக்க மனதில் கொள்ளுவோம்.

செட்டிபாளையம் ஆலயத்துக்கு திருக்கல்யான கால் நாட்ட அணிவகுத்துச் செல்லும் தேற்றாத்தீவு கிராமத்தார்.

0 comments:

Post a Comment