ADS 468x60

04 January 2017

மட்டக்களப்புக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது கனபேருக்கு தெரியாது' தோணிதாட்ட மடுவின் சோகக் கதை


போய்க்கொண்டே இருந்தோம் அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.
ஆமாம் அதுதான்  கோறளைப்பற்று வடக்கில் நில வளம் நீர் வளம் ஒருங்கே அமையப்பெற்ற பேர்பெற்ற வாகரைப் பிரதேசத்தில் அமைந்த ஒரு பழம் பெரும் கிராமம்தான் தோணிதாட்டமடு எனப்படும் கிராமமாகும். இது புச்சாகேணி என்னும் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடமாகும். இங்கு மொத்தமாக 47 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அதன் மக்கள் தொகை 171 உம்; அதில் 7 கணவரை இழந்த பெண்களும் 15 பாடசாலை செல்லும் மாணவர்களும் அதுபோல் 13 பாலர்வகுப்பு சிறார்களும் உள்ளடங்குவர்.
இந்த மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய கிராமம் இது என்றால் அது மிகையில்லை. இது யுத்தகாலங்களில் படுமோசமாக பாதிக்கப்பட்டு 2007 ஆண்டு காலப்பகுதியில் முற்றாக இடம்பெயர்ந்து வாழைச்சேனை இடம்பெயர் முகாங்களில் தத்தளித்து அல்லோல கல்லோலப்பட்டு சொந்த மண்ணிற்கு இன்று பல சிரமங்களுக்கு மத்தியில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இந்த 47 குடும்பங்களில் 34 குடும்பங்களுக்கு மாத்திரம் NRC ஆல் தற்க்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன . ஏனைய குடும்பங்கள் அவர்களது  சிதைவடைந்த வீடுகளில் தங்கி வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது, இங்கு பிரதானமாக சேனைப்பயிர்ச் செய்கை தான் காணப்படுகிறது, தவிரவும் வேளாமை செய்கை வீட்டுத்தோட்டச் செய்கை என்பனவும் முக்கியமானதாக செய்கைபண்ணப்படுகிறது.(காட்டுப்பாதையில் பயணம் செய்யும் சின்னஞ்சிறுசுகள்..)
ஒரு சமுகத்தின் கண்ணாக இருக்கவேண்டியது, அறிவு தானுங்க அந்த அறிவைப் பெற இந்த சின்னஞ சிறுசுகள் படும் பாடு பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அடிப்படை வசதிகளைக் கூட சரிசெய்யாத நிலையில் பிள்ளைகளின் கல்வியை எப்படி பெற்றோர்களால் நிவர்த்திக்க முடியும்?? மூன்று வேளை உண்ணும் சமுகத்துக்கே படிக்கவராத நிலையில் ஓரிரு வேளையுடன் காலத்தை கடத்தும் இந்த சிறார்களின் நிலையை யாரறிவார்???
பாவனைக்கு வீதியில்லை, பசிக்கு சோறில்லை, வேலைக்கு தொழிலில்லை வேதனைக்கு மருந்தும் இல்லை குடிக்க நீர் இல்லை, படிக்க பள்ளி இல்லை பால் இல்லை பிள்ளைக்கு கூழும் இல்லை பசிக்கு, யானைத் தொல்லை வேறு யாரும் இல்லை சொல்ல. ஆனால் அவர்களிடம் இருப்பதெல்லாம், மனதில் தையிரியமும், மானமும், உழகை;கும் ஊக்கமும் எள்ளையும் ஏழாக்கி வந்தோரை வாழவைக்கும் தமிழ் பண்பாடும் மட்டும்தான்.
இப்படி எத்தனையோ கிராமங்களை முன்னேற்ற நேரமில்லாமல் கொண்டாட்டங்கள் செய்வதில் என்ன பயன் தெரியவில்லை... சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அந்த சுவரே எமது அன்புக்குரிய சனங்கள்தான் அவர்கள் வறுமையால் பரிதவிக்கும் போது ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கு வேறொன்றும் துணையாகாது.
 (பாவிக்கமுடியாமல் கிடக்கும் பாழடைந்த பாதை)
இந்த சமுகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள்.
இங்கு ஒன்று இரண்டல்ல நிறை சிக்கல்கள் இருக்கிறது. பாரிய 30 வருடகால கொடிய யுத்தத்தில் சீவனைத்தவர சீவியத்தையே இழந்த வெறும் மனிதர்கள் தான் இவர்கள். ஒரு வருத்தம் வாதை ஏற்ப்பட்டால்கூட பொதுவான போக்குவரத்து வசதிகள் கிடையாது, அப்படி போகவேண்டுமானால் இங்கிருந்து எட்டு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கதிரவெளிக்கு பொடி நடையாகவும் ஈருருளியிலும் மாட்டு வண்டியிலும்தான் பயணம் செய்ய வேண்டும். பாருங்கள் மாண்பு மிகு மக்களே! எங்கள் மண்ணுக்குள்ளும் மாடு ஆடுகள்போல் காட்டுக்குள் விரட்டப்பட்ட பட்டாளம்போல் இன்னும் இன்னும், நினைத்தால் வெட்க்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கிறதல்லவா????
(யுத்த வடுக்களுடன் வாழும் மக்கள்)
கல்வியில் பிரச்சினை
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆனால் நம்மில் எத்தனை பேர் மனிதனாய் கூட நடவாமல் இருக்கிறார்கள் என்றால் எனக்கு தெரியவில்லை. உடைந்து கிடக்கும் ஒரு பாழடைந்த வீட்டில் சந்து குத்தப்பட்ட கற்க்களின் நடுவே அ, ஆ என்ற அடிப்படையே ஆடிப்போய் கிடக்கிறது பாருங்கள். எங்கள் குழந்தைகள் அல்லவா!! அவர்கள் எங்கள் தமிழ் உறவுகள் அல்லவா!! அவர்கள் அந்த கருணை உள்ளம் கொண்ட ஆசிரியை எவ்வளவு சிரமத்தின் மத்தியில் பாடம் கற்ப்பிக்கிறார் பாருங்கள்!! இங்கு இவர்கள் கற்ப்பதற்க்கு ஒரு நிரந்தர இடம் கூடக் கிடையாது.
(உடைந்த பாலர் பாடசாலையில் கடமைபுரியும் ஆசிரியை)
இந்த குழந்தைகளில் அநேகமாக காலில் செருப்புக்கள் கூட கிடையாது, பள்ளிக்கு செல்ல குட்டிப் பை கிடையாது, இருக்க கதிரையில்லை எழுத கொப்பி இல்லை நடக்க செருப்பு இல்லை சிரிக்கக்கூட தெம்பில்லை.... ஆகவே இலங்கை தனது மிலேனியம் இலக்கை 'மிதமிஞ்சிய வறுமையையும் பட்டினியையும் ஒழித்தல்' என்கின்ற கோசத்தில் 2015 இல் அரைவாசிக்கும் குறைவாக்குவது சாத்தியமாக்குமா என்பது எனக்கு புரியவில்லை.

அதுபோல் இன்னும் ஒரு இலக்கான 'எல்லா நிலைகளிலும் ஆரம்பக்கல்வியை சாதித்தல்' என்கிற இலக்கும் மட்டக்களப்பினைப் பொறுத்தவரையில் சிந்திக்கவேண்டிய ஒன்றே. இருந்தும் 50 விகிதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்களை தாய்மொழியில் எடுக்கும் பிரதேசத்தில் வடக்கில் 72 விகிதமும் கிழக்கில் 82 விகிதமும் 2007 ஆண்டின் 'MDG இலங்கை நாட்டு நிலைமை அறிக்கை 2008/09' இல் குறிப்பிடப்பட்டிருப்பது இம்மக்களின் தழிழ் மொழிமேல் உள்ள பற்றினைக் காட்டச் சிறந்த ஆதாரமாகும் அல்லவா.

இன்னும் தேசிய வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களின் விகிதாசாரம் 20மூ கும் அதிகமாக இருக்கும் ஒரே ஒரு மாவட்டம் மட்டக்களப்புத்தான் என்பது எம்மில் எத்தனைபேருக்கு தெரியுமோ தெரியவில்லை?
 

(நீர் இல்லாமல் வற்றிக் கிடக்கும் காய்ந்த கிணறுகள் )
மினரல் வோட்டர் குடிக்கும் எம் சமுகம் குடிநீரே இல்லாமல் பரிதவிக்கும் சமுகத்து உறுதுணை புரியுமா??? அவர்கள் அவர்களது பூர்வீக வாழிடங்களில் வாழ்வது ஒன்றும் வேதனைக்குரிய விடயமோ அற்றும் குற்றமோ அல்ல! பாலைவனத்திலும் வசதியுடன் வாழவில்லையா?? ஆனால் இந்த கிராமமாகி சுருங்கி வளர்ந்து விட்ட உலகத்தில் இவர்கள் பாராமுகமாய் இருப்பதுதான் வேதனை.
இவ்வாறான காரணங்களினால்தான் தான் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது குழந்தைகளின் போசாக்கு நிலை மிகவும் மோசமான மந்த நிலையில் உள்ளது. இலங்கைக்கான மிலேனியம் இலக்கு அறிக்கையின் பிரகாரம் உடல் நலிவடைந்த குழந்தைகளின் விகிதம் 19.5 விகிதமாகவும், வயதுக்கான நிறை குறைந்தவர்களின் விகிதம் 32.9 ஆகவும் படு மோசமாக உள்ளமையினைக் காணலாம். ஆனால் கம்பகா மாவட்டத்தில் வயதுக்கான நிறை குறைந்தவர்களின் விகிதம் 16.9 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
யானைகளின் பெருக்கம் கூடி விட்ட நிலையில் எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் படும் தொல்லை கொஞ்ச நஞ்சமில்லை. இந்த யானைகளை அழிக்கவும் முடியாமல் அதனால் அழிந்து போவதை தடுக்கவும் முடியாமல் இம்மக்கள் நாளாந்தம் நித்திரை தொலைத்து, நிம்மதி தொலைத்து, குடியிருப்பைத் தொலைத்து, குழந்தை குட்டிகளைத் தொலைத்து, வாழையைத் தொலைத்து பயிர்க்காலையைத் தொலைத்து வாழ்க்கையையும் தொலைத்து அஞ்சி வாழும் நிலையில் இவர்கள் இருக்கும் போது, இவர்களது பேரால் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட பணம் எல்லாம் எங்கே போகிறது???? இந்த மக்களின் பணம் எல்லாம் வெளியே போகும் போது யானை எல்லாம் உள்ளே வராமல் என்ன செய்யும்????
(யானைத் தொல்லையில் உடைந்து கிடக்கும் கட்டிடம்)
மின்சார வசதிகள் இன்னும் இல்லை நாளாந்தம் காட்டு வெள்ளம் போல் ஏறும் விலைவாசிக்கு மத்தியில் மண்ணெண்ணை விளக்கில் குப்பி லாம்பில் படித்து பாசாக முடியுமா என்பது கேள்விக்குறியே! இப்படியே பிரச்சினையை அடிக்குக் கொண்டு போனால் நாம் தமிழ் சமுகம் என்று சொல்லுவதற்க்கு பதிலாக பிச்சைக்கார சமுகம் என்று சொல்ல நேரிடும் என்பதில் ஐயமில்லை.
இம்மக்களை போன்ற எத்தனையோ வறிய எம் சமுகத்தினை ஏன் நாங்கள் முன்னேற்றக்கூடாது. இங்கு இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், இவர்களுக்கு குழாய் கிணறுகள் மூலம் நீர் வழங்குவதென்றால் சுமார் 10 கிணறுகள் தேவைப்படுகிறது.  அதுபோல் நிரந்தர பாலர் பாடசாலைக் கட்டிடம் ஒன்று தேவையாக இருக்கிறது அதற்க்கு தளபாடங்கள் அதுபோல் அவர்களுக்கான உபகரணங்கள் என்பனவும் தேவையாக உள்ளது. பாடசாலை செலலும் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் தேவைப்படுகிறது.. இதற்க்கு மேலாக யானைக்கான பாதுகாப்பு வேலி மற்றும் தற்க்காப்பு சாதனங்கள் என்பன எல்லாம் தேவை இருந்தும் இருந்தும் யார் இவற்றை எல்லாம் எம் தமிழ் மக்களுக்கு இரந்தளிப்பார்? சிந்திப்போம் செயலாற்றுவோம்.

This is written in 2012

0 comments:

Post a Comment