ADS 468x60

30 January 2013

வாழ துடிக்கும் வாகரை மக்கள்- மக்களின் குரலில்

(கட்டாயம் படியுங்கள்) இவர்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தார்கள்? இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? கடவுளே! உன் முன் பக்தனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். இவர்கள் கொலை செய்தார்களா? இல்லை கொள்ளையடித்தார்களா? இல்லை நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை செய்தார்களா? குற்றம் என்ன செய்தார்கள் இந்த மக்கள்  குற்றம் என்ன செய்தார்கள்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

நானே கூறுகிறேன், அடர்ந்த காடுகள், விரிந்த விளை நிலங்கள், படர்ந்த புல்வெளிகள், பாடித்திரியும் புள் இனங்கள் கடந்து போகிறோம்.... நெடுவான் பூமியைத்தொடும் வண்ணம் படுவான் பக்கம் 10 கிலோமீற்றர் தள்ளி கதிரவெளிக்கு மேற்க்கே தோணிதாட்டமடு எமது தமிழ் எல்லைச் சாமிகளை நோக்கி போனோம். இது பொலநறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லையாக இருக்கிறது. இங்கு இவர்கள் இருப்பதுதான் குற்றம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எல்லைக்கும் சாமி இவர்கள்தான் அதனால்தான் யாருமே பெரிதாகக் கவனிக்காமல் வேலிகளாகவே இன்னும் இருக்கிறார்கள், இது போன்றுதான் எம்மினத்தின் வேலிகளாக இருக்கும் இவர்கள் போன்ற எமது மக்களையாவது பலப்படுத்த எங்கள் குழுமம் புறப்பட்டது.
"இது ஒரு காலத்தில் பெரிய பிரச்சினைக்கு உரிய கிராமமாக இருந்தது. நாங்கள் குடியேற்றுவதும் அவர்கள் திரும்ப ஓடி வருவதுமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டுதான் இறுதியாக இவர்கள் நிரந்தரமாகக் மீள்குடியமர்த்தப்பட்டனர். அப்போது இருக்க வீடுகள் இருக்கவில்லை, குடிக்க தண்ணீர் இருக்கவில்லை, செய்ய தொழில் இருக்கவில்லை. ஒரு மாதிரியாக என். ஆர்.சி தந்த தகரங்களை வைத்துத்தான் கொட்டில் அடித்துக் கொடுத்தோம். அதுதான் இன்றும் அவர்களுக்க அரனாக இருப்பது பரிதாபம்தான்.' எனக்கூறிய பிரதேச செயலாளர் மேலும் தொடர்ந்தார் 'இவர்கள் இந்த வெள்ளத்தில் மிகவும் கஸ்ட்டப்பட்டுள்ளனர். எல்லா வழிகளிலுமான  போக்குவரத்தும் தடைப்பட்டு இருந்தது, அவர்களுக்கு தற்ப்போது என்றால், உண்பதற்க்கான உணவுதான் மிகமுக்கியமானது, தயவு செய்து அதை வழங்குங்கள்" என கேட்டுக்கொண்டார் வாகரை பிரதேச செயலாளர் செல்வி. இராகுலநாயகி அவர்கள்.

உடனே புறப்படத் தயாரானோம். மழை ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. ஒருமாதிரியாகச் சென்றடைந்தோம். 'பெரிய கைங்கரியம் தம்பிமாரே! இஞ்ச பாருங்க எல்லாரும் உக்கிபோய்ட்டம். தொடந்து மழ, வெள்ளம். எங்கம்பி தொழிலிக்கு போற, வெள்ளாமய வெட்ட தொடங்குனாத்தான் ஏதும் வந்து கிட்டும், கடவுளாக் கொண்டு உட்டு இருக்காரு மகனே, ஒங்களுக்கு நாங்கல்லாம் எப்படித்தான் நன்றி சொல்லப்போறமோ! தெரியல்ல!' என மூத்த மனிதர் வேலாச்சி மலர்ந்த முகத்தோடு நன்றி கூர்ந்தார்.

 'குறிப்பாக வாகரை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்கள், பல தசாப்த யுத்த சுவடுகளை இன்னும் சுமந்துகொண்டு, மிகவும் வருந்தித்தான் முன்னேறவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கு காணப்படும் எல்லைக் கிராமங்கள் நெடுகிலும் கஸ்ட்டப்படும் ஒரு வறிய நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த நலிவான தன்மைதான் அவர்களை இலகுவாக அனர்த்தங்களில் அழிவடைய வைத்து விடுகிறதுஇந்த நிலமையில் நீங்கள் கொடுத்துதவிய மீன் டின், அரிசு ( 05 கி.கி ), கோதுமை மா (02.கி.கி), பருப்பு (01.கி.கி), சீனி (01.கி.கி) போன்றன மிக மிக அத்தியாவசியமானவை, இந்த கிராமத்தில் உள்ள 38 குடும்பங்கள் சார்பாகவும் எமது பிரதேச செயலகத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்' என கிராம சேவகர் விஜயராஜன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த மக்கள் தங்களது வாழ்க்கையினை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிர்க்கதிக்கு ஆளாகி உள்ளனர். மக்கள் அனர்த்தத்துக்கு உட்ப்படுவது ஒன்றும் பெரியதில்லை ஆனால் அதே கணத்தில் அவர்கள் மீளப் பெறுவதற்க்கான இடர் முகாமைத்துவ திட்டமிடல் அவசியமாக இருக்கிறது. அத்துடன் மக்கள் மத்தியில் தொண்டான்மை வலுப்பெற வேண்டும் அதன் மூலம் சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு பாதுகாக்கும் மார்க்கம் உருவாக்கப்பட வேண்டும்.

'கையேந்தாதவர்களாக நாங்கள் மாற வேண்டும், யாரையும் நம்புவதனை விட எங்களை நம்ப வேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் குறிப்பாக இருங்கள், அதுதான் எந்த அனர்த்தத்தினும் அழியாத சொத்து நமக்கு. இந்த இடத்தில் இத்தனை உதவிக்கும் முழுக்காரணமாக இருந்த பா. உஷாந்தினி அவர்களுக்கு இந்த இடத்தில் நாம் எல்லோரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். நான் நினைக்கிறேன் நாங்கள் இதை விட பெரிய அனர்த்தங்களில் இருந்தெல்லாம் தப்பி வந்தவர்கள், எல்லோரும் ஒன்றுபட்டால் இந்த அனர்த்தங்களை எல்லாம் வெல்லுவது ஒன்றும் பெரிய விடயமல்ல' என மாவட்ட விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளர்   திரு. ந.சிவலிங்கம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

 ஆகவே இயற்கையின் சீற்றம் தவிர்க்க முடியாதது எனினும் பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்க்கொள்வதன் மூலம் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியதாய் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்மந்தப்பட்ட பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளையே சாரும். பல்வேறு பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் வந்து பார்வையிடவில்லை என்ற குறை காணப்படுகிறது. எனவே இந்த இக்கட்டான காலகட்டத்திலாவது இவர்கள் இம்மக்களை பாதுகாக்க தம்மாலான பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ஒப்பிடும் போது பா. உஷாந்தினி அவர்கள்  நமது நாட்டில் இல்லா விட்டாலும் இந்த பெரிய உதவியை புரிந்தது நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

இந்த மக்கள் எமது சொந்தங்கள், எமது உறவுகள் இவர்களை வேற்றுக்கிரக வாசிகள் போல் பார்க்கக்கூடாது. அவர்களை கருணையோடு அணுக வேண்டும். இவர்கள் எமது அடுத்த தலைமுறை இருப்பின் பாதுகாவலர்கள். குறிப்பாக வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் இந்த மக்கள் வாழிடங்களில் முதலீடுகளை இட முன்வரவேண்டும், அங்கு அளவுக்கு அதிகமான மனித வளம் மற்றும் பௌதீக வளங்கள் காணப்படுகின்றன. அவற்றை சரியான முறையில் பாவித்து இதன் மூலம் அவர்களுக்கு தொழில் வாய்பை உண்டு பண்ணி, வருமானத்தினை தொடர்ந்து பெறும் வழியை காட்டுவதன் மூலம் அனர்த்தத்துக்கு முகம் கொடுக்கும் வலுவான மக்களை உருவாக்கலாம் என்பதில் எது வித ஐயமும் இல்லை.

ஆர்வத்துடன் பொருட்களை கீழிறக்கும் மக்கள் 

அன்புடன் பொருட்களை வழங்கி வைக்கும் திரு சிவலிங்கம் ACAD

உணவு பொதிகளை வழங்கி வைக்கும் திரு விஜயராஜன் GS

உணவு பொதிகளை வழங்கி வைக்கும் திரு ஜீவரெட்ணம் ஆசிரியர் 

கொடுத்த பொதிகளுடன் வீடு செல்லும் மக்கள் 


மக்களுடன் உறவாடும் போது 

0 comments:

Post a Comment