நம்மில் கனபேருக்கு இந்த ஊர்களின் பெயரைக் கேட்டாலே அந்தளவு பயமாக இருந்தது ஒரு காலத்தில். கரடியனாறு, மரப்பாலம், புல்லுமலை, ஆயித்தியமலை, கித்துள், கொடுவாமடு, உறுகாமம் போன்ற கிராமங்கள் யுத்தகாலத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களாகும். அந்தக்காலத்தில் அடிக்கடி இடம்பெயர்ந்து, உயிர்கள், சொத்துக்கள் போன்ற எல்லாவற்றிலும் இழப்புகளை சந்தித்து இன்று வேரில்லாத மரம்போல் இந்தச் சமுகம் ஆடிப்போய் கிடப்பதனை அனைவரும் அறிவர். எஞ்சிய ஆடுமாடுகள் மேயும் புல்வெளிகளிலும், கணக்கற்றுக்கிடக்கும் வயற்காடுகளிலும் இங்குள்ள அநேகமான சிறுவர்கள் கல்வி கற்கும் பருவத்தினை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"தொழில்வாய்பின்மை, வறுமை, பாராமுகம், புறக்கணிப்பு, விலைவாசி அதிகரிப்பு போன்ற ஏகப்பட்ட காரணங்கள் பொருளாதாரம் அதேபோல் கல்வி என்பனவற்றில் இந்த மக்களை பின்தங்கிய நிலையில் தள்ளியுள்ளது". இதனால் இந்த மக்களை ஒரு இரண்டாம் நிலை பிரஜைகளாகப் பார்க்கும் போக்கு காணப்படுகிறது. இந்த மாவட்டத்துக்கே சோறுபோடும் வளம் நிறைந்த மண் இவர்களுடையதே, கலப்பில்லாத அன்புடன் ஒரு கோப்பைத் தேனீர் தரும் முகம் இவர்களுடையதே, வந்தோரை அரவணைக்கும் பண்பு இவர்களுடையதே இவைதான் எமது மாவட்டத்துக்கு அடையாளமாக இருக்கும் பெரும் சொத்து என்றால் அது மிகையில்லை.
இந்த இக்கட்டான நிலையில் வாழும் மக்களின் கல்வியினை மேம்படுத்தும் திட்டத்தினை சரியாக இனங்கண்டு மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருமலை மாவட்டங்களில் உள்ள யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை மீள் எழுச்சி செய்யும் வண்ணம் கனடாவில் நிறுவப்பட்டுள்ள ChiDAES Canada (Children Development Association of Eastern Sri Lanka – Canada) எனும் நிறுவனத்தினரால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 5 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள பெறுமதிமிக்க புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகள் என்பன வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக உறுகாமம் மட்/ சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 89 மாணவர்களுக்கு இவை 10.02.2013 அன்று சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளுக்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளையும் எமது குழுமத்தினர் சிரமம் பாராது சிடாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து ஏற்பாடு செய்ததுடன், அந்த நிகழ்வை சிறப்பிக்க எமது குழுவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அங்கத்துவர்கள் பிரசன்னமாகி இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் புதிய நம்பிக்கையினை எமது தமிழ் குழந்தைகள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்மை தெட்டத்தெளிவாகும்.
"காலங்காலமாக வயல் செய்கையிலும் மீன்பிடியிலும் மற்றும் கூலித்தொழிலிலும் தங்கியுள்ள இந்த மக்கள் யுத்தம், வருடாவருடம் தாக்கத்தினை ஏற்ப்படுத்தும் இயற்கை அனர்த்தம் காரணமாக அவற்றில் தோல்வியினையே கண்டுள்ளனர். இதனால் வாழ்க்கையில் மீண்டுவர முடியாத நிலையில் இங்குள்ள தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பாதையினை கல்வியின்பால் திசைதிருப்புவதன் மூலமே எமக்கு சொந்தமான இன்னொரு தலைமுறையினை உருவாக்கலாம். இந்த ஏக்கதில் இருந்த எமக்கு சிடாஸ் குழுமத்திரின் உதவியுடன் இந்தப் பிள்ளைகளுக்கான மிக மிக அத்தியாவசியமான சப்பாத்து, புத்தகப்பை என்பனவும் வழங்கி வைத்தமை எமக்கு மாத்திரமல்ல இந்த கிராமத்துக்கே நம்பிக்கையினை வளர்த்துள்ளது. இந்த உதவியை தர உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி” என இப்பாடசாலையின் அதிபர் திருமதி சகீலா அவர்கள் கூறினார்.
“முடியாதவனை மன்னித்துவிடு, விரும்பாதவனை தண்டித்து விடு!” என்கிறது இந்துதர்மம். தன்னால் செய்ய முடிந்த ஒன்றை செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி. ஆனால் எங்கள் உறவுகள் உலகத்தில் இரண்டாய் இருந்தாலும் உதிரத்தால் ஒன்றானவர்கள் என்பதை இந்த ஏழைச் சிறுவர்களின் கல்விக்கு உதவுவதன் மூலம் நிருபித்துள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் என்ரெண்டும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இன்று நாம் பலப்படுத்தவேண்டிய ஒரே துறை கல்விதான். அதனை யாராலும் அழித்துவிட முடியாது, சூரையாடவும் முடியாது எனவே அதனை குறிப்பறிந்து உதவிக்கொண்டிருக்கும் எமது சீடாஸ் நிறுவனத்தினருக்கு எமது பாராட்டுக்கள்” என எமது குழும அங்கத்தவரும், எம்முடனும் இந்த மக்களுடனும் மனதார ஒன்றிணைந்து சிரமம் பாராது சேவை செய்துகொண்டிருக்கும் இப்பிரதேசத்தின் பிரதேச செயலாளர் திரு உதயஸ்ரீதர் குறிப்பிட்டார்.
“இல்லாமை கொடுமையல்ல, இயலாமை குற்றமல்ல, விரும்பாமையே பாவம்” விரும்பி கொடுக்கிற இடத்திலேயே இறைவன் அருள் சுரக்கும். இந்த வசதி குறைந்த குழந்தைகளை சரியாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு விருப்பத்துடன் இத்தனை பொருட்களையும் அன்பளிப்பு செய்த எங்கள் கனடிய உறவுகளுக்கும் இறைவனுடைய ஆசி என்றென்றும் கிடைக்கும். அத்துடன் மேலதிகமாக இலண்டனில் இருந்து எங்கள் குழும உறுப்பினர் அனுப்பிவைத்த சுவையான இனிப்புப் பண்டங்கள், அத்துடன் அவர் மூலம் கிடைத்த உதவியில் புலமைப் பரிசில் பரிட்சைக்கான அனைத்து புத்தகங்கள், கடந்தகால வினாப்பத்திரங்கள் என்பனவும் வளங்கப்பட்டமை, இந்த தொலைவில் உள்ள எமது தமிழ் உறவுகளையும் ஒன்றிணைத்து, எதிர்காலத்துக்கான ஒரு பாலமாக இந்நிகழ்வு அமைந்திருந்தமை வரவேற்க்கத்தக்கது” என வைத்தியக் கலாநிதியும் எங்கள் குழுமத்தின் மூத்த உறுப்பினருமான திரு சுகுணன் அவர்கள் தெரிவித்தார்.
“உண்மையில் கடும் வெயில், கடும் குளிர் காணப்படும் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உழைக்கும் எம்மவர்கள் உதவ நினைக்கிற ஒவ்வொரு பணமும் பெறுமதியானவை. அந்தப் பெறுமதிக்கு அவர்கள் எதிர்பார்பப்பதெல்லாம் இந்த பணம் உங்கள் மத்தியில் செலவிடப்பட்டுள்ளதா என்பதற்க்கு அப்பால், இதனால் இந்தச் சமுகத்தில் முன்னேற்றகரமான மாற்றம் நடக்கிறதா என்பதனையே.. அவர்களுக்கு நாங்கள் செய்யும் பிரதியுபகாரம் நாங்கள் கல்வியில் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து காட்டுவது மட்டுமே” என எமது குழுமத்தின் மூத்த உறுப்பினரும், சதா ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து, இந்த மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையாக இருக்கும் திரு.க.சுரேஸ் அவர்கள் தெரிவித்தார்.
எமக்கு இந்த உதவியை செவ்வனே செய்ய எங்கள் மட்டக்களப்பு மேற்க்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அனைத்து வித உதவியினையும் புரிந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல் இப்பிரதேசத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு முருகேசபிள்ளை அவர்கள் ஆர்வத்துடன் கலந்து எங்களுடன் முழுநேரத்தையும் இதற்காக செலவிட்டமை குறிப்பிடத்தக்கது .
இந்த நிகழ்வில் இன்னும் பல பிரமுகர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்வுகளுடன் தொடர்ந்து இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தனர். குறிப்பாக இந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள், அதிபர், இப்பகுதி கல்வி அதிகாரி, எங்கள் குழும உறுப்பினர்களான கி.ப.க விரிவுரையாளர்களான சுரேஸ் மற்றும் திருமதி.சுரேஸ் ஜெயப்பிரபா அத்துடன் ரமேஸ்வரன், சக்தியலிங்கம், ஆசிரியர் ஜீவரெட்ணம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
அந்த எதிர்காலத்தில், தனித்தனியே நமக்கு உள்ள விருப்பு, வெறுப்பு, உரிமை மற்றும் சலுகை இவைகள் எமது மக்கள் வாழவேண்டும் என்ற பொதுக்கடமைக்கு துணைசெய்வதாய் அமையவேண்டும். எமது மக்கள் முன்னேற நமது உழைப்பும் தேவை என்கின்ற சிந்தனை எல்லோருக்கும் எழவேண்டும். நாம் எல்லோரும் எந்தளவுக்கு நமது அறிவையும் ஆற்றலையும் இந்த மக்களுக்காக தருகின்றோமோ அந்த அளவுக்கே அந்தச் சமுகமும் இருக்கும். ஆகவே பல காரணங்களால் பின்தள்ளப்பட்டு உள்ள சமுகத்தினை முன்னே கொண்டுவரும் பொறுப்பு நாம் எல்லோருக்கும் இருக்கின்றது என்பதனை மனதில் கொள்வோம்.
நிகழ்வுகளின் நிழல்கள்
0 comments:
Post a Comment