இடமில்லாத நிலையிலும்
தொடர்ந்து
முயற்சி செய்கிறவர்கள்தாம்
முக்கியத்துவம்வாய்ந்த
செயல்களை உலகில்
செய்து முடிக்கிறார்கள்.
கலாம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியுமோ! அவரைப் பற்றி அறியும்போது எதையாவது செய்யலாம், நினைத்ததை அடையலாம், நம்பிக்கை மட்டும் கையாக வைத்துக் கொண்டால் என்பதை அறிந்தேன்..
மேலே ஆகாயத்தில் நகர்ந்துகொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமானியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார். ”நான் சிறுவனா யிருந்த போது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப் பேன். ஆகாயத்தில் விமானங்கள் பறந்தால் அண்ணாந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு நாள், விமானியாக வேண்டும் என்று கனவு காண்பேன்” என்றார்.
துள்ளிக் குதித்தார் துணை விமானி. ”நினைத்ததை முடித்து விட்டீர்கள். இப்போது சந்தோஷம்தானே” என்றார். ‘இல்லை’ என்றார் தலைமை விமானி. ”இப்போது விமானத்தில் இருந்து கீழே பார்க்கும்போதெல்லாம், அந்தக் குளக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாதா என்று யோசிக்கிறேன்”.
பலருக்கு முன்னாலும் மலைபோல் நிற்கிற பிரச்சினை இதுதான். குறிப்பிட்ட இடமொன்றை சிரமப்பட்டு எட்டுவது. இந்த இடம் எனக்குப் பொருந்தவில்லையென்று தலையை முட்டுவது.
சாதிக்க வேண்டும் என்று நினைத்து சாதாரண நிலையைத் தாண்ட முயல்வது வேறு. தாங்கள் எட்டியிருக்கும் உயரங்களை எண்ணியும் பாராமல் சலித்துக் கொள்வது வேறு.
ஓரிடத்தில் நிலைகொண்ட பிறகுதான் இன்னோர் இடம்நோக்கி நகர்வது சாத்தியம். நிலை கொள்ளாமல் தவிப்பவர்கள் நிச்சயமாய் பதட்டத்தில்தான் இருப்பார்கள்.
தங்களைத் தாங்களே ரசித்துக் கொண்டு அடுத்த தளம் நோக்கி நிதானமாக நகர்பவர்களே நிறைவான வெற்றியை அனுபவிக்கிறார்கள்.
இருந்த இடத்தில் கால்களை அழுந்தப் பதியுங்கள். அங்கிருந்து அடுத்த இலக்கை நினையுங்கள். உந்தி மேல் செல்ல சிறகு முளைப்பதை உணர்வீர்கள்.
இருக்கும் இடம் பிடிக்கவில்லை என்று பதட்டத்தில் கால்களை உதறிக் கொள்பவர்கள் சிறகு முளைக்கும் வரை பொறுக்காமல் பறக்க நினைத்து கால்களையும் உடைத்துக் கொள்கிறார்கள்.
தன்னிடம் இருக்கும் வல்லமையை உணர்ந்தவர்கள் எல்லோருமே எளிய முறையில் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் எல்லை யில்லாத முயற்சியுடன் தொடர்ந்திருக்கிறார்கள். சிரமமான பயிற்சிகளையும் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு அதன் மூலம் வளர்ந்திருக்கிறார்கள்.
பள்ளிச் சிறுவனாய் இருந்தபோது, மோசமான கையெழுத்தைக் கொண்டிருந்தார் அவர். தினமும் மூன்று மணி நேரங்கள் எழுதிப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார் ஆசிரியை. சிரமம்தான். விடாமல் முயன்றார். கையெழுத்து சீரானது. அந்தக் கைதான், 2020ல் இந்தியா வல்லரசு என்கிற கனவை ஒவ்வோர் இந்தியனின் இதயத்திலும் எழுதியுள்ளது.
தன் கையெழுத்தைப் பற்றி கவலைப்பட்டு முயன்றதால்தான் கலாம் இன்று இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றத் துணிந்திருக்கிறார். பள்ளிப்பருவத்தில் கணக்கு சரியாக வரவில்லை. அதற்காக அவர் விடவில்லை. ஆசிரியர்களின் துணையுடன் கணக்குக் கோட்டையையும் கைப்பற்றினார்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது சிறுவனாயிருந்த அப்துல்கலாம், வீடுகள்தோறும் நாளிதழ்கள் போடுகிற வேலையைச் செய்தார். நாளிதழ்களில் வின்ஸ்டன்ட் சர்ச்சிலின் புகைப் படத்தைப் பார்த்தவர், ”ஒருநாள் என் படமும் நாளிதழ்களில் வர வேண்டும்” என்று கண்ட கனவும் நிகழ்ந்தது.
விமானப் பொறியியல் படித்து முடித்த போது விமானப்படையில் சேர விண்ணப்பித்தார் அப்துல்கலாம். மொத்தம் 25 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். 24 பேர் தேர்வாயினர். நிராகரிக்கப்பட்டவர் அப்துல்கலாம் மட்டுமே.
மனம் சோர்ந்தவர் ரிஷிகேஷில் உள்ள சுவாமி சிவானந்தரைக் கண்டார். விமானப்படை தன்னை நிராகரித்ததால் வருத்தத்தில் இருப்பதை கலாம் சொன்னார். ”இதைக் கேள்வி கேட்காதே! வேறொன்றுக்காக நீ படைக்கப்பட்டுள்ளாய். அதை நோக்கிச் செல்” என்று ஆதரவாகக் கூறினார் சுவாமி சிவானந்தர்.
விமானப்படைக்குத் தகுதியில்லாதவர் என்று கருதப்பட்ட கலாம் குடியரசுத் தலைவர் ஆனபிறகு, இந்தியாவின் கப்பல்படை – விமானப் படை – தரைப்படை ஆகிய முப்படைகளுக்கும் தலைவராய் நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்க வைத்தது காலம். செய்வதை சலிப்பின்றி செய்தால், சிகரங்களை ஆளலாம் என்பதற்குக் கண்கண்ட உதாரணமாய் கலாம் திகழ்கிறார்.
அவருடைய பிறந்தநாளை சர்வதேச மாணவர்கள் தினம் என்று கொண்டாடும் திட்டத்தை ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது.அவர் நீடுழி வாழ்ந்து நல்ல உலகை உருவாக்க கால்கோலாக இருக்க வேண்டும் என வாழ்துகிறேன்..
Reference:
1 comments:
தலை நிமிர்ந்த தமிழனுக்கு தலை வணங்குகிறேன், நன்றாக எழுதி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்
Post a Comment