எம்முன்னோா் கல்வி பற்றி பல விடயங்களை கூறியுள்ளனா். ‘அனைத்து அறிவும், புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது‘ என்று ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். மனிதனுக்குள்ள ஆற்றலை வெளிக்கொணர்வது இந்திய கல்வி முறையாக இருந்தது. ஆனால், வெளியில் இருப்பவற்றை மனித மனதிற்குள் ஏற்றுவதுதான் பிரிட்டிஷ் கல்வி முறை. அது ஊக்கம் அளிக்கும் கல்வி முறையல்ல; தகவல் அளிப்பது மட்டுமே கல்வியாக உள்ளது. இதுதான் கல்விமுறையில், மனிதனின் புரிதலைப் பற்றிய அடிப்படை வேறுபாடு.
நமது பண்பாட்டின்படி, அனைத்திற்கும் தெய்வீகத்தன்மை உண்டு. ஆன்மிகம் எந்த ஒரு தனிப்பட்ட மதம் அல்ல; மாறாக, மனிதப் பண்புகள். உடல்ரீதியாக, அறிவு ரீதியாக, ஆன்மிக ரீதியாக ஒவ்வொருவரும் சிறந்தவர்களே என்பதை புரிய வைத்தது முந்தைய இந்திய கல்வி முறை.
உண்மையை சரியாக புரிந்துகொள்வதும், எந்த செயலையும் தெளிவாக செய்வதும் தான் ஆன்மிக ரீதியிலான பரிமாண வளர்ச்சி.உதாரணத்திற்கு, சாலையில் விபத்தில் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். அப்போது,அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லும்; ஆனாலும் ‘அவருக்கு உதவும்பட்சத்தில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்‘ என்று மூளை அந்த நற்செயலை தடுத்துவிடுகிறது. அவசர நேரத்தில் உதவி செய்யும் அடிப்படை மனிதப்பண்பைக்கூட இன்றைய அறியாமைக் கல்வியால் இழந்துவிட்டோம் அல்லவா?
ஸ்ரீ சத்ய சாய்பாபாவாவின் பாடத்திட்டம்
அறிவு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வளர்ச்சியடைந்து, ஆன்மிக ரீதியாக வளர்ச்சி அடையாததும் தவறு. உடல் ரீதியாகவும்,ஆன்மிக ரீதியாக வளர்ச்சியடைந்து, அறிவு ரீதியாக வளர்ச்சி அடையாததும் தவறு. எனவேதான், இன்றைய சூழலில் மனிதப் பண்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விழுக்கல்வியை பள்ளி அளவில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீ சத்ய சாய்பாபா. அதனாலேயே, பால விகாஸ் திட்டத்தை நிறுவினார்.
வழிபாடு, குழுவாக பாடுதல், குழுச் செயல்பாடு, கதை சொல்லுதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டுள்ள பால விகாஸ் பாடத்திட்டத்தின் மூலம் எந்த நாட்டைச் சேர்ந்த மற்றும் எந்த பிரிவைச் சேர்ந்த குழந்தையையும் மேம்பாடச் செய்ய முடியும்.ஏனென்றால் அமெரிக்கா, ஜப்பான், மலேசியா என எந்த நாட்டினருக்கும் உணர்வுகள், அறிவு, நட்பு என அனைத்து மனிதப் பண்புகளும் சமமானவையே.
இந்த உலகத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் அன்பு குறைந்துள்ளதே. விழுக்கல்வியின் மூலம் இதை சீரமைக்க முடியும். பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பிறகு வாரத்தில் ஒரு மணிநேரம் இப்பாடத்திட்டத்தை பயன்படுத்தினால்கூட போதுமானது. இதனால், மொத்த கல்வி கற்கும் சூழலையே மதிப்பு மிக்கதாக உருவாக்க முடியும்.
மதிக்கப்படும் மனிதப் பண்புகள்
கணிதம், அறிவியல் என எந்த பாடத்தை கற்பித்தாலும், இதர திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தாலும், அதனுடன் மனித நேயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இதைப் போதிப்பதன்மூலம்,சமுதாயத்திற்கு தேவையான நற்பண்புகள் கொண்ட மனிதர்களாக மாற்ற முடியும். இன்றைய சமூகத்திற்கு அவசியம் தேவைப்படுவது மனிதநேயம். சமுதாயம் மனிதநேயத்தை என்றும் மதிக்கும்; அங்கீகரிக்கும்.
தேர்வுகளிலும் சரி, பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளிலும் சரி, ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர். அவற்றில் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது வெற்றி, தோல்விகளுக்கு சமநிலையில் உள்ள சந்தோஷம் தான். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனில், வாழ்க்கையையே மாய்த்துக் கொள்ளமுயலுகின்றனர். மதிப்பெண்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதுசரியான கல்வி முறையாகுமா? மனிதப் பண்புகள் தான் முக்கியமே தவிர, மதிப்பெண்கள் அல்ல.
மனிதரை விட கார், வீடு, பொன் போன்ற பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு, மனிதப் பண்புகள் குறித்த பாடத்திட்டம் இன்றைய கல்வி முறையில் இடம்பெறாததே முக்கிய காரணம்.
வாழ்க்கைக்கான கல்வி ‘விழுக்கல்வி‘ எந்த குற்றம் செய்யும் முன்பும் மனசான்று கேள்வி கேட்கும். ஆனால், மனசான்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பயிற்சித்திறனோ, வல்லமையோ இல்லை என்பதே முக்கிய காரணம். முன்பு மூளையை மனிதன் ஆண்டான். தற்போது மூளை மனிதனை ஆளுகிறது. இதுதான் இன்றைய கல்வி முறை. மனிதப் பண்புகள், குடும்ப உறவுகள் அனைத்தும் மூளையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. தந்தை மகன் இடையில் அன்பு வெகுவாக குறைந்துவிட்டது; இருந்தாலும் வெளிக்காட்டுவதில்லை. மனித உணர்வுகள் மங்கிவிட்டன.
வாழ்க்கை என்னவென்று இன்றைய கல்வி கற்றுக்கொடுப்பதில்லை. கல்வி வணிகமாகிவிட்டது. ‘புரொபஷனல்’ ஆவதைவிட, முதலில் மனிதருக்குரித்தான பண்புகளை பெறுவது தானே அவசியம். மருத்துவம், சட்டம், பொறியியல் என அனைத்து துறைகளிலும் ‘புரொபஷனல்’கள் நிச்சயம் தேவை. ஆனால், மனிதப் பண்புகளுடன் அவர்கள் செயல்பட வேண்டியது அவசியமல்லவா... அப்போதுதானே அவர்கள் இந்த சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.
நாட்டிற்கு, நற்பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டியதே பெற்றோர்களின் முதல் கடமையாக இருக்கவேண்டுமே தவிர, அதிகம் சம்பாதிப்பவர்களாக உருவாக்குவதாக இருக்கக்கூடாது. ஆசிரியர்களும் மாணவ,மாணவிகளுக்கு ரோல்மாடலாக செயல்பட வேண்டும்.
இன்றய நிலையில் நமது அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் விழுக் கல்வியை கற்பிக்க முயற்சித்தால், சமுதாயத்தில் மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.
0 comments:
Post a Comment