ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ! என கதிர்காமக் கந்தனின் சந்நிதியை காலால் நடந்து, கிடந்து, பத்தியோடு பக்தர்களுடன் பழகி; பயணம் செய்யும் புண்ணிய தருணம் இது. உகந்தை தொடங்கி குமுக்கன், வியாழை மற்றும் வள்ளியம்மன் ஆறு குறுக்கறுத்து குன்றில் உறையும் குமரனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களின் வழக்காறு இன்று நேற்றல்ல பன் நெடுங்காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது.
குடும்பத்தினரிடம் ஆசி பெற்று குலதெய்வத்தை வணங்கி கடுங்காடுகளுக்கால் கந்தா கந்தா என்று செல்லும் பயணம் இது. இங்கு ஒன்று கவனிக்கத்தக்கது, இந்த காடுகளுக்குள் பயணம் செய்பவர்கள் இறைவனை அன்றி எதையும் நினையாதவராய் மனதாலும் பிறருக்கு வஞ்சிக்காமல் இயலுமானவரை பிறருக்கு உதவி இந்த பயணத்தினை மேற்கொள்ளவே சங்கற்ப்பம் பூண்டு நடப்பர்.
இந்த பாதயாத்திரை ஒருவருக்கு ஒருவர் அந்யோன்யமாக நடக்கவும், உதவும் மனப்பாங்கை வளர்க்கவும், இறைபக்தியை உணரவும், ஆசைகளை துறந்து காடு, மலை, நதி, ஆறு, கடல் அனைத்தினையும் கடந்து, அந்த இயற்கையின் இரகசியத்தை இரசித்து அதற்கு மதிப்பளிக்க பழகும் நல்ல மனப்பாங்கினை இந்த பாதயாத்திரை எமக்கு கற்றுத்தருகின்றது.
பயணத்தின் போது முருகனை பாடி, ஆடி அவனுடைய கதைகளை, அற்புதங்களை எல்லாம் கூறியபடி, ஒரே பக்தியாக அந்தப்பயணம் இருந்தது அந்தக்காலம். அது ஒரு மறக்கமுடியாத இறை அனுபவமாகவும் இருந்தது. ஆனால் இப்போது அவையெல்லாம் மாறிவிட்டது என எண்ணத் தோணுது. இந்தப்பாதயாத்திரையின் பின்னணியில் பாா்த்தால் மனதார உடலார ஒருவகையான ஓய்வினை இந்த நிகழ்வு பக்தா்களுக்கு கொடுக்கிறது.
ஆனால் இப்போது பல இளைஞர் யுவதிகள் பண்ணுக்காக செல்வதனைக் காணக்கிடைத்தது. பாவத்தினை தொலைக்கச் சென்று பாவனத்தினை தேடிக்கொள்ளுகின்றனர். இங்கு செல்லும் இந்துக்கள் அதற்கு பொருத்தமில்லாத உடைகளை அணிந்து அந்த பக்திச் சூழலை கெடுத்துவிடுகின்றனர். அதுமாத்திரமின்றி பாதயாத்திரையின் ஆரம்பத்தில் சூழலை கெடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டாலும் அங்குள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கு பாதகமான செயற்பாடுகளை இந்த பக்தர்கள் என அழைக்கப்படும் மனிதர்கள் செய்வதனை பொறுக்க முடியவில்லை. பொலித்தின், பீங்கான், பிளாஸ்ட்டிக் பிளாஸ்ட்டிக்ஸ் கழிவுகள், ஒயில் தாள்கள் என்பனபோன்ற உக்கிப்போகாத பொருட்களையெல்லாம் இருந்த இருந்த இடத்திலேயே விட்டு செல்லும் மட்டமான செயலை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
எவ்வாறு இருந்தபோதும் சில நல்லடியார்கள் குமரனை நினைத்து கும்மிப்பாடல்களும், கந்தனை நினைத்து கரகப்பாடல்களும், காங்கேயனை நினைத்து களுகுமலைப்பத்தும், கலியுகனை நினைத்து காவடிச் சிந்தும் பாடிச் செல்வதனை கண்ணுற்றோம். அவர்கள் பின் வடிபட்டு ஓர் பெரிய கூட்டம் செல்லும். இங்கு அதிக அதிகமான முதியவர்கள் வேலனை நினைத்து வேதனையில் பாரங்களை சுமந்து சென்றாலும் பாராமுகமாக செல்லுவதனைப் பார்த்திருக்கிறேன், பிறருக்கு உதவி செய்யாத உங்களுக்கு முருகப்பெருமான் எவ்வாறு உதவுவார். இந்த யாத்திரை பல உண்மைகளை உணர்த்துகிறது, நாங்கள் கிடைக்கும் பொருட்களுடன் காற்றிலும், வெயிலிலும், மழையிலும், காட்டிலும், மேட்டிலும், கல்லிலும் முள்ளிலும் எவ்வாறு காலத்தினை கடத்துகிறோம், அதை எவ்வாறு எதிர்கொள்ளுகிறோம் என்பதனூடு இவ்வாறான இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை எமக்கு உணர வைக்கின்றதல்லவா.
துன்பத்தில், வேதனையில்தான் இறைவனை நினைக்கின்றோம் என்பதற்கு இந்த யாத்திரையை விட எடுத்துக்காட்டு வேறொன்றும் இருக்காது.
இவற்றையெல்லாம் பொறுக்காமல் அவற்றை சுத்தம் செய்யும் இளைஞர்கள் படையணியை பாராட்டாமலும் இருக்கமுடியாது. எது எப்படியோ புனித யாத்திரை என்பதனால் புனிதமாக செல்ல வேண்டும் என்ற ஒரு நோக்கத்தினை மையமாக வைத்து அதனை தொடர்ந்தால் எல்லாம் நன்மையாகமே முடியும் என்பது எனது கருத்து.
தேடி வந்தேனையா கதிர்காமம்.
மேனி சிலுக்குதையா உந்தன்
மேன்மையை எண்ணி வேல்முருகையா!!
0 comments:
Post a Comment