
அப்போதுதான் சிந்தித்தோம், "நாம் இந்த யுத்தத்தினை தொடங்கியே ஆகவேண்டும்" திட்டமிட்டு பின்னடைய வைத்துக்கொண்டிருக்கும் எதிரிகளிடையே நாம் புறமுதுகு காட்டி ஓட முடியாது. அதற்கான ஆயுதத்தினை, தயார்படுத்தலினை, வழிகாட்டுதலினை, தலைமைத்துவத்தினை ஒவ்வொரு மனிதாபிமானமுள்ளவர்களும், பெரியோர்களும், கற்றவர்களும், அதிகாரிகளும், இளைஞர்களும் கையில் எடுக்க வேண்டும். அந்த ஆயுதம் வேறொன்றுமில்லை 'கல்வி' 'கல்வி' 'கல்வி' மட்டும்தான். இன்று பார்த்தோமானால் உலகில் மாற்றத்துக்கான சாவியாக கல்வி இருக்கிறது. எனவேதான், "உலகை மாற்றும் வலிமையான ஆயுதமாக கல்வி இருக்கும்" என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல ஆயுதங்களை கையில் எடுத்திருந்தாலும் அவை பயனளிக்கவில்லை ஆனால் இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற பலமான ஆயுதம் கல்வி மட்டுமே.
ஒரு மனிதனுக்கு இருக்கும் மிக அத்தியாவசியமான உரிமை என்னவெனில் "அவனது இனத்தை அவர்களை வைத்தே ஆளவிடல்". குறிப்பாக அரசிலை நாம் எப்படி பார்க்கவேண்டும் என்றால், ஒரு இனத்தினது வளங்களை குறிப்பாக காட்டு வளம், கடல்வளம், நிலவளம், மலைவளம் அதுபோல் பெண்ணியம், தொழில் வளர்ச்சி, மொழி, பண்பாடு, வழமைகள், கலைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை வைத்து ஒரு அரசியல் இருக்கு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதை கட்டிக்காக்க மொழி சார்ந்த இனம் சார்ந்த, அந்த மண் சார்ந்த பற்றுள்ள ஒருவர் வரும்போதுதான் அது அந்த இனத்துக்கான ஆறுதலாக, பாதுகாப்பாக, கட்டிக்காப்பாக, அபிவிருத்தியாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. இந்த அடிப்படைவாதம் தவறுவதனால்தான் அடாவடித்தனமான நிதிமோசடி, நில அபகரிப்பு, பாகுபாடு, புறக்கணிப்புகள், கொள்ளை என்பனபோன்ற திட்டமிட்ட இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால்தான் எம்மக்கள் அரசியல் அனாதைகள் என அழைக்கப்படுகின்றனர்.
அப்படி இல்லாத சமயத்தில், எமது இனத்தவர், இருந்தாலும் பலர் விலைபோகும் குணமுடையவர்களாக இருக்கின்றனா். ஆதலால், தமது அரசியல் பலத்தில் பாதியையேனும் பிரயோகிக்கும் திராணி இல்லாதவர்களாய் அந்த பலத்தை வைத்து வெறுமனே தன் குலத்தினையே அற்பசொற்ப ஆசைக்காய் குழிதோண்டும் கயவர்களாய், எம்மினத்தை கூறுபோட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றனர் சிலா். இதுவா அரசியல்! இதுவா அபிவிருத்தி! இதுவா பாதுகாப்பு! இதுவா தலைமைத்துவம்! இதுவா வழிகாட்டல்! இதுவா தட்டிக்கொடுப்பு!. இவ்வாறான தலைவர்களினால் மிக நலிவுற்ற பல இடங்களில் எம்மக்களின் பொருளாதார, அரசியல், கல்வி பலவீனத்தைப் பயன்படுத்தி பல பூர்வீகக் வளமார்ந்த கிராமங்கள் மாற்றான் கையிருப்புக்களாக நேராகவும் மறைமுகமாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அவை இன்று ஓரளவு இளைஞர்களின் அணிதிரளளில் மூச்சுப்பெற்றுள்ளதனைக் காணும்போது ஆறுதல் அடைகிறது மனம், ஆனால் இவ்வாறான தலைமைகள் என்று மாறுகின்றதோ அன்றுதான் நிம்மதி கிடைக்கும்.
இங்கு இந்த தி/மூ சிவசக்தி வித்தியாலயம் கடலுக்கு மிக அண்மையில் (50 மீற்றர்) இருக்கிறது, இது சுணாமியால் பாதிக்கப்பட்டது. இப்பாடசாலை இப்போது ஊர்பக்கமாக உள்ள ஒரு காணிக்குள் அடுத்த வருட ஆரம்பத்தில் நகருவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதுவும் பல எதிர்ப்புக்கு மத்தியில், அங்குள்ள ஒரு பல்தேவைக் கட்டிடத்துக்குள் குடிநீர் வசதி, மலசலகூட வசதி என்பனவை இல்லாத நிலையில்தான் இந்த கைங்கரியத்தினை செய்யவேண்டியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார். ஆனால் இந்தப் பின்தள்ளப்பட்ட பள்ளிக்கூடம் பற்றி வெளியாட்களுக்கு அந்தளவுக்கு தெரியாத ஒரு நிலை காணப்படுகின்றது. இதை உங்கள் மூலம் தெரியப்படுத்துவதில் மகிழ்சியாக இருக்கின்றது.
இந்தப் பாடசாலைக்கும் இந்தக் குழந்தைகள் வசிக்கின்ற இடத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பாடசாலை அமைந்துள்ளது. இதற்கான பாதுகாப்பினை இங்கு அருகில் உள்ள கடற்படையினர்தான் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என அந்த அதிபர் கூறியமை மனதை நெகிழ வைத்தது. அத்துடன் இங்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது, இந்தப்பாடசாலைக்கு ஆசிரியர்கள் வர விரும்புவதில்லை, இரண்டு தொண்டர் ஆசிரியர்கள் வந்து உதவினார்கள் ஆனால் அவர்களும் இப்போது வரமறுத்துள்ளார்கள். நான் வந்த பின் ஸ்கொலர்சிப்பில் குறைந்தது அவர்களின் அடைவை மொத்தபுள்ளிகளாக 70 ஆவது எடுக்க வைக்கவேணும் என்பது எனது இந்த வருடத்துக்கான குறிக்கோள், அதற்க்கு எனக்கு மொடல் பேப்பர்களை தந்து உதவுங்கள், நான் அவற்றை இந்த குழந்தைகளுக்கு படிப்பிக்கின்றேன் என அவர் வேண்டிக்கொண்டார்.

இதேபோன்று இங்குள்ள பெற்றோர்கள் வெறுமனே அபிவிருத்தி, சலுகைகள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் சென்று தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்காமல் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி அவர்களை எதிர் காலத்தில் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வளர்த்தெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் அதன் ஊடாகவே தமிழினம் எதிர்காலத்தில் சுயமாக தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக இருக்கும்.

0 comments:
Post a Comment