ADS 468x60

28 October 2021

பா.ம தேசியப்பட்டியல் தேவைதானா?

 நாம் நாளாந்த அரசியல் விமர்சனங்களை அவதானிக்கவேண்டியுள்ளது இன்று. புதிய அபிவிருத்தியில், அரசாங்கத்தின் பங்காளியான கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 5% இனரை குறைக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.

தற்போது, இலங்கையின் பாராளுமன்றம் 29 தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, அவர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளால் அவர்களது வாக்குகளின் பங்கைப் பொறுத்து நியமிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 12.8%ஆவர்.

பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு மக்களின் வாக்குப்பலம் இல்லாத அல்லது அரசியல் அரங்கில் அங்கம் வகிக்க விரும்பாத புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், நாட்டின் பிரதான சட்டத்தை உருவாக்குதல் மற்றும் ஆட்சி செய்யும் பொறிமுறையில் பரிந்துரை செய்தல் ஆகிய நோக்கங்களுடன்; தேசியப்பட்டியலில் முக்கியமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வலுவான வாக்காளர் அடித்தளம் இல்லாத பெண் மற்றும் சிறுபான்மை குழு பிரதிநிதிகளை பாரம்பரிய வாக்களிப்பு முறையின் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைய முடியாதவர்களுக்கான சந்தர்ப்பமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் முறையை அறிமுகப்படுத்தும் எண்ணம் பாராட்டத்தக்கது. எவ்வாறாயினும், நடைமுறை ரீதியாக, தேசியப்பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா என்பதில் அழுத்தமான சந்தேசகம் உள்ளது. 

கடந்த சில தசாப்தங்களில் பாராளுமன்றத்தில் நுழைந்த பெரும்பாலான தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்களாக இருந்தும் அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தவறியுள்ளனர். மறுபுறம், பாராளுமன்றத்தின் ஊடாக நாட்டிற்கு நிறைய பங்களிப்பைக் கொடுத்த புகழ்பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட இலங்கை கடந்தகாலங்களில் கண்டுள்ளது, 

பாரம்பரியமாக மக்களால் தெரிவாகிவரும் அரசியல்வாதிகளின் மனப்பாங்கை மற்றும் விரும்பத்தகாத பழக்கவழக்கங்களை அனுமானித்து, அவர்களின் குறைபாடுகளை தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல்களில் தோல்வியுற்ற எம்.பி.க்களை, அதாவது, போதிய செயல்பாடு இல்லாமல் பல்வேறு காரணங்களால், மக்களால் நிராகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, மீண்டும் நியமிப்பது, சமீபகாலமாக சர்வசாதாரணமாகி விட்டது, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் அதைச் செய்து வருகின்றன. 

தேசிய சுதந்திர முன்னணியின்; முன்மொழிவு வாக்களிப்பின் மூலம் பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு சாத்தியமான நடவடிக்கையாகத் தோன்றினாலும், அது ஒரு பயனுள்ள தீர்வாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, உண்மையான பிரச்சினையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. ஆந்தவகையில் இவர்களின் உண்மையான பங்களிப்புகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், வினைத்திறனான பங்களிப்பு ஆகியவை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

அதைச் செய்வதற்கு, இலங்கை தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் தகுதிகள் மற்றும் பங்கை மதிப்பிடுவதற்கும் நிபந்தனைகளை வழங்குவதற்கும் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது போன்ற கடுமையான மற்றும் கொள்கை அடிப்படையிலான முடிவுகளை எடுக்க வேண்டும். 

எனவே அத்தகைய நடவடிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு மாறுபடலாம் என்றாலும், அவ்வாறு செய்வது பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அதிக தொழில்முறை நிபுணத்துவத்தை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பொறுப்புக்கூறலையும் அவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்ட தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் உள்ளதைப் போலவே, இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவது சவாலானதாக இருக்கலாம்.

இது தொடர்பில் உறுதியான மேம்பாடுகளை அடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் போதுமானதாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேசியப்பட்டியல் எம்.பி.க்களை நியமிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் வகிபாகம் தொடர்பான அணுகுமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை கட்சிகள் விளங்கிக்கொள்ளவேண்டும் முதலில்.

ஏல்லாவற்றுக்கும் மேலாக, பாராளுமன்றம் என்பது பொதுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் பொது இறையாண்மையை நிலைநிறுத்தும் ஒன்றாகும். மேலும் அந்த இடத்தில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தேசியப்பட்டியல் எம்.பி.க்களும் சேர்க்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் பங்கிற்கு சில நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை அனுபவம் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.


0 comments:

Post a Comment