எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆனால் பொதுவாக 'தலைவா' என்றழைத்துவிட்டால் போதும் யாருக்கும் சற்று மயக்கம் வந்துவிடுகிறது. தலைமை என்பது ஒரு மந்திரச்சொல். தலைமை ஒருவருக்கு எப்படிக் கிடைக்கிறது என்று பார்த்தால், திறனுக்கேற்பப் பெறுகிற தலைமை, திணிக்கப்படுகிற தலைமை, ஸ்வீகரிக்கப்படுகிற தலைமை, தாமே அறிவித்துக்கொள்கிற தலைமை என்று வகைப்பாட்டில் வரும். தலைமை யாருக்கும் கிடைக்கும். அதைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு திறன் என்று பொதுவாகச் சொன்னாலும் தலைமை ஒரு பண்பாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
எது அரசியல் தலைமைத்துவம்.
தலைமைத்துவம் என்பது 'ஒரு பொதுவான விஷயத்தைச் செய்து முடிப்பதில், மற்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி மற்றும் ஆதரவைப் பயன்படுத்தி ஒருவர் சமூக தாக்கத்திற்கு ஆளாகின்ற நிகழ்முறை' என்று விளக்கப்படுகிறது.
இதன் வழிவந்தவர்களுடைய மிகுதியான வரையறைகளும் கூட உள்ளார்ந்து இதில் வெளிப்படுகிறது. கிரீன்டெக்கின் ஆலன் கீத் அவர்கள் 'தலைமைத்துவம் என்பது அசாதாரணமான ஒரு விஷயத்தை நிகழ்த்திக்காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குவது பற்றியதே' என்று குறிப்பிடுகிறார்.
கென் ஆக்போனியாவின் கூற்றுப்படி 'நிறுவன அல்லது சமூக இலக்குகளை அடையச்செய்வதற்கான உட்புற மற்றும் வெளிப்புற சூழலுக்குள்ளாக கிடைக்கக்கூடிய மூலாதாரங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அதிகப்படுத்தச் செய்கின்ற திறனே ஆற்றல்மிக்க தலைமைத்துவம் எனப்படுகிறது.'
நிர்வாகத்தைத்தான் திறன் என்று குறிப்பிடவேண்டுமே தவிர தலைமையைப் பண்பு என்றே கூற வேண்டும். தொழிலாளியின் கையில் கருவி இருக்கவேண்டும், நிர்வாகியின் தலையில் மூளை இருக்க வேண்டும். தலைவனின் இதயத்தில் பண்பு இருக்க வேண்டும். எப்படித் தலைவராவது, யார் தலைவராக முடியும், எந்தத் தலைமை சிறந்தது,எது நிரந்தரமானது என்பதைத் தலைவர்கள் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் நாம் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்களிடம் இப்பண்புகள் இருக்கின்றனவா என்று முதலில் எடைபோட வேண்டும். தலைவர்கள் தம்மை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும், நாம் நம் தலைவர்களைச் சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
யாவரும் உருவாகவேண்டும்
இன்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நமக்குத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று. ஆனால் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் நமக்குள் இருக்கிற தலைவரையும் தலைமைப் பண்புகளையும்? 'நல்ல தலைவர் என்பவர் தம் செயல்கள் மூலம் கனவு காணவும், கற்றறிந்து கொள்ளவும், செயலூக்கம் பெறவும், பெரிதாக வரவும் மற்றவர்களைத் தூண்டவும் உற்சாகப்படுத்தவேண்டும்' என்பார் ஜான் குயின்ஸி ஆடம்ஸ் என்ற வாழ்வியலறிஞர்.
நம்மத்தியில் எல்லோரும் வளர வேண்டும் என்கிற எண்ணம்தான் ஒரு நல்ல தலைவனை உருவாக்குகிறது. தம்மோடு இருக்கிறவர்கள் முட்டாள்களாகவே இருக்க வேண்டும், அவர்களை மேய்த்துக் கொண்டிருந்தால் போதும் என்று எண்ணுகிறவன் தலைவனல்லன், மேய்க்கிறவன் மட்டுமே. கழுதைகளுக்குத் தலைமை தாங்குகிற சிங்கத்தைவிட சிங்கங்களுக்குத் தலைமை தாங்கும் கழுதை சிறப்பிற்குரியது. தலைமை தாங்குவது முக்கியமல்ல. யாருக்குத் தலைமை தாங்குகிறோம் என்பது முக்கியம். தலைவர்கள் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க வேண்டும். நம்மில் எத்தனைத் தலைவர்கள் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கினோம் அல்லது உருவாக்குகிறோம். உயில் எழுதாத சொத்துகளைப் போலத்தானே இந்நாட்டில் ஒவ்வொரு தலைமையும் கைமாறிக் கொண்டிருக்கின்றன.
தலைமை பதவி அல்ல பணி
இன்று உள்ள தலைவர்களில் பலர் தொண்டர்கள் அழைத்த குரலுக்கு ஓடிவரவும், அவர்களை ஆணையிடவும், விரட்டவும், வேலைவாங்கவும் தான் பிறந்திருக்கிறோம் என்று நினைப்பார்கள். ஆனால் நல்ல தலைவர்களோ தாமே களத்தில் இருப்பார்கள். கிராமப்புறங்களில் உழவு நடக்கிறபோதும், நாற்று நடுகிறபோதும், அறுவடை நாள்களிலும் நில உரிமையாளர்கள் விவசாயிகளைப்போல களத்தில் இருப்பார்களே அப்படி. அவர்களெல்லாம் தம்மைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளாமலேயே தலைமை தாங்குகிறார்கள்.'தலைமை என்பது ஒரு பதவியல்ல பணி'என்பார் டோனால்ட் மெக்கனான்.
எம்மத்தியில் நல்ல தலைவர்கள் எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறவர்களாக மட்டுமே இராமல் தாமே எடுத்துக்காட்டுகளாக விளங்க வேண்டும்.பலர் இல்லையென்றாலும் உலகத் தலைவர்களில் சிலர் செம்மையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் தம் சொந்த வாழ்வில் பேரிழப்புகளைச் சந்தித்திருந்தாலும், பெயரிழப்பை அனுபவித்ததில்லை. நம் நாட்டிலும் நல்ல தலைவர்களாக, நேர்மையாளர்களாகச் சிலர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவருடைய மகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதற்காக அவர் எழுதியத் தேர்வுத் தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார். மொரார்ஜி தேசாய் மறுப்பு தெரிவிக்கிறார். 'மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் கிடைத்து நீ மருத்துவப் படிப்புக்கு இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டால்கூட ஊர் என்ன சொல்லும் பிரதமர் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்திவிட்டார் என்றுதானே.
எனவே நீ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது' என்கிறார். விரக்தியுற்ற தேசாயின் மகள் தற்கொலை செய்து கொள்கிறார். இப்படியொரு பேரிழப்பை அவர் சந்தித்து தான் ஊழலற்ற தலைவர் என்கிற உன்னதமான பெயரைப் பெற்றிருக்கிறார். இப்போதெல்லாம் பேசப்படுகிற தலைவர்களைக் காட்டிலும் ஏசப்படுகிற தலைவர்களே ஏராளமாகிவிட்டனர்.
பக்குவம் எங்கே
நமது தலைவர்கள் எளிமையாகவும், பக்குவமாகவும், இதமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும். இன்று எத்தனைத் தலைவர்கள் அப்படி இருக்கிறார்கள்; பதவிகளில் இருப்பவர்கள் தொடங்கி அவற்றிலிருந்து இறங்கியவர்கள் வரை எல்லோருமே தலையில் கொஞ்சம் கனமாக இருப்பதுதான் கவலைக்குரியது. எளிமை இன்று எவரிடம் இருக்கிறது. தலைவர்கள் எப்போதும் உயரத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நல்ல தலைவர்கள் உயரத்தில் இருப்பதைவிட உடனிருப்பதையே தொண்டர்கள் பெரிதும் விரும்புவார்கள். 'எனக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதைவிட எங்கள் கூட்டம் பெரிது' என்பதே இதமான உணர்வை எல்லோர்க்கும் தரும். 'இறங்கி வருவது இழிவன்று. இறங்கிவருகிற மழைக்கு இருக்கிற மதிப்பு உயரே எழுகிற புகைக்கு இருப்பதில்லை' என்பார் கவிக்கோ அப்துல்ரகுமான்.
அன்பையும், பரிவையும் ஆள்வைத்துக் காட்ட முடியாது. அவரவர்களே இறங்கிவர வேண்டும். தலைமைப்பண்புகளில் உச்சமாகக் கருதப்படுவது அடுத்தவர் நிலையில் தாமிறங்குவது. இதை ஆங்கிலத்தில் நுஅpயவால என்கிறார்கள். நிவாரணம் தருவது, நேரில் சென்று உதவுவது, நெஞ்சமுருகி ஆறுதல் கூறுவது, அறிக்கை வெளியிடுவது என்பனவெல்லாம் பாராட்டிற்குரியதுதான். இவையெல்லாம் உடனடித்தேவை. இது நம் இரக்கத்தைக் (ளுலஅpயவால) காட்டும் என்றாலும் அதையும் தாண்டி புனிதமானது அடுத்தவர் நிலைக்குள் தாமிறங்குவது. அடுத்தவர் நிலைக்குத் தாம் இறங்குவது என்றால் காயப்படுகிறவருக்கு ஆறுதல் கூறுவது, மருந்து பூசுவது. இவை இரக்கம் சார்ந்த செயல்கள்.ஆனால் அந்தக்காயம் தனக்கு ஏற்பட்டதைப்போல வலியுணர்வது நுஅpயவால எனப்படும். இதுவே தலைமை பண்பின் தலையாயப் பண்பு.
பெரிய எண்ணம்
எம்மத்தியில் பேரிடர்கள் நிகழும்போதும், பெருநோய்கள் பரவும்போதும் தமக்கே நேர்ந்ததுபோல் ஓடிச்சென்று உதவுகிறவர்கள் பேருள்ளம் கொண்டவர்கள் மட்டுமல்லர்; பெருந்தலைமை பூண்டிருக்கிறவர்கள் என்கிறார் வள்ளுவர்.'அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்தன்நோய்போல் போற்றாக் கடை'இந்த உலகின் இயக்கமே பிறர்க்கென வாழ்வோரால்தான் என்றிருக்க வேண்டும். தனக்கென வாழ்வோர்கள் தலைமைக்குத் தகுதியற்றவர்கள்.இப்படி காலம் காலமாகத் தலைமைக்கென பல்வேறு பண்புநலன்கள் வரையறுக்கப்பட்டவண்ணம் இருக்கின்றன. இவ்வாறு தலைமைக்கான பண்புகள் ஒருபுறமிருக்க யாருக்குத் தலைமை தாங்குகிறோம், எதற்காகத் தலைமை தாங்குகிறோம் என்பதும் முக்கியமானது. சிறந்த கொள்கைகளோடு உயரிய நோக்கத்தோடு பயணிக்கிற தலைமையை ஏற்பதுபோல் கொள்ளைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவனை தலைவன் என்று சமூகம் ஏற்காது.நல்ல தலைவர்கள் யாராலும் உருவாக்கப்படுவதில்லை உருவாகிறார்கள். தகவல் பரிமாற்றத்திறன், சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுத்தல், நேர்மறை எண்ணம், சுயமரியாதை, துணிவு, நேர மேலாண்மை என்று தலைமைப் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
முன்னுதாரணங்கள்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த எடுத்துக்காட்டாகத் தலைவர்கள் இருக்கவேண்டும். எடுத்துக்காட்டுவதற்குச் சிறந்த பண்புகள் ஒரு தலைவனிடம் இல்லாமற்போனால் அவனை எடுத்துக்காட்டி அவனைவிட மோசமானவர்கள் உருவாகும் நிலைமை நாட்டுக்கு நேரும். 'அவன் மட்டும் கொள்ளையடிக்கவில்லையா, இவனென்ன ஊழல் செய்யவில்லையா'என்று தம்மை நியாயப்படுத்திக் கொள்வோர் நாட்டுக்குத் தேவையற்றோர். அன்று நல்ல தலைவர்கள்தான் நமக்கு எடுத்துக்காட்டுகளாக இருந்தார்கள். இன்றும் அப்படியே இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும், கவலையும். 'இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்'என்று கவிஞர் வாலியின் வரிகளுக்கேற்ப ஊர் சொல்லும் அளவு உயர்ந்த நல்ல தலைவர்களைத்தான் நாடு கொண்டாடும்.-
ஆதாரங்கள்:
dinamalar
https://ta.wikipedia.org/
0 comments:
Post a Comment