ADS 468x60

18 February 2023

மின்சாரக் கள்வர்களை முதலில் பிடியுங்கோ! இந்த சூத்திரம் சாதாரண மக்களின் தலையில் விழுந்த இடி.

விஞ்ஞான முறைப்படி ஒளி முதலில் வருகிறது. அதன் பிறகுதான் ஒலி வருகிறது. இது ஒரு மின்னல் போன்றது. இவை இரண்டும் ஒன்றாக நடந்தாலும் தனித்தனியாக பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் இந்த ஆக்கம் ஒளி அல்லது ஒலி பற்றியது அல்ல. ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ளும் மின்தடை பற்றியது.

இன்று நம் அனைவரும் அறிந்தளவு மின் கட்டணம் 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 

புதிய கட்டண திருத்தத்தின்படி யுனிற் 0-30க்கு இடையில் 8 ரூபாவாக இருந்த மின்சார அலகின் விலை 30 ரூபாவாகவும், 31-60 ரூபாவிற்கு இடையில் 10 ரூபாயிலிருந்து 37 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 61 முதல் 90 யூனிட் வரை, ஒரு யூனிட் பதினாறில் இருந்து 42 ரூபாயாக அதிகரித்தது. 120க்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 

எனவே இந்த சட்டத்திருத்தத்தின்படி 90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் சாமானியர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த அதிகரிப்பின் பலன் இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு தெரியவரும். ஆகவே நம் எல்லோருக்கும் இருக்கும் கேள்வி பில் அதிகரிப்பு எப்படி மக்களுக்கு பலன் தரும்? ஆதற்கு பதில் தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதால், அந்த அனுகூலம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த நன்மை சாமானியர்களுக்கு அல்லது ஏழை வர்க்கத்துக்கு அல்ல, அது வர்தக சமூகத்திற்கே நன்மையாகப்போகின்றது. மின்சாரம் இல்லாமல் வர்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால், விளைவுகளும் கடுமையானவையாக இருக்கும் என்பதனையும் மறுக்க முடியாது. 

ஒரு நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உற்பத்தி நடவடிக்கைகளின் வெற்றிக்கும் மின்சாரம் இன்றியமையாதது. அதில் எந்த வாதமும் கிடையாது. எனவே புதிய மின் இணைப்புகள் மீது அதிகாரிகள் காட்டும் கவனம் போதாது என்பது தெளிவாகிறது. இந்த நாட்டில், கடுமையான மின்வெட்டு ஏற்படும் போது அத்தகைய கவனம் அதிகம் எழுகிறது. ஆனால்  பில் குறைக்கும் வாய்ப்பை தற்போது சாமானிய மக்கள் இழந்துள்ளனர்.

கடந்த வருடத்தில் மின்சார சபைக்கு 46,350 மில்லியன் வருமானம் கிடைக்கவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இ.மி.சபைக்கு கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களும் கணிசமாக உள்ளனர். பல அரசு நிறுவனங்களில் இருந்தும் இன்னும் நிலுவைத் தொகை வர உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்களில் மின்சார திருடர்களும் உள்ளனர் அதை நாம் பார்க்காமல் இல்லை நம்மத்தியில். அதனால் தேவையில்லாமல் மின்சாரம் விரயமாகிறது அதற்கும் சேர்து அனைவரும் பலியாகவேண்டுமா? இதுபோன்ற பிரச்னைகளை விசாரிக்காமல் மின்கட்டணத்தை அதிகப்படுத்தினால் மட்டும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்குமா?

மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான பணத்தினை உடனடியாக வசூலிக்க முறையான ஏற்பாடு உள்ளதா? இங்கு பணிபுரியும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் மட்டும் இந்த மின்சார சபையினை மீட்டெடுக்க முடியுமா? எனவே இறுதியாக, இதற்கெல்லாம் பொறுப்பு இந்நாட்டின் பொது மக்களா என்று கூறுங்கள்?

எனவே முதலில் தற்போதுள்ள ஊழியர்களின் திறமையின்மை, ஊழல், விரயம் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும், ஆனால் இதுவரை எந்த வெற்றிகரமான நடவடிக்கையும் அதற்காக எடுக்கப்பட்டுள்ளதா தெரியவில்லை.

பொதுவாக நீர்மின்சார அலகு ஒன்றின் உற்பத்திச் செலவு 2.76 ரூபாய். காற்றாலை அல்லது சூரிய சக்தி அலகு ஒன்றின் உற்பத்திச் செலவு 18.86 ரூபாவாகும். நிலக்கரியில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 47.91 ரூபாய் செலவாகிறது. எண்ணெயில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு 87.80 ரூபாய். உற்பத்திச் செலவு சுழற்சி இப்படியென்றால், நிலக்கரி, எண்ணெய் பற்றிச் சிந்திக்காமல், நீர், சூரிய ஒளி, காற்று போன்ற இயற்கை ஆற்றல் மூலங்களைப் பற்றிச் சிந்திக்க நாம் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? 

கடந்த காலங்களில், மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணம் பற்றிய விவாதம் சோலார் பேனல்களுடன் நிறுத்தப்பட்டது. இத்தகைய செலவு குறைந்த ஆற்றல் மூலங்களை உற்பத்தியாக்கும் தொழிற்சாலைகளும் அறிமுகப்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற வாக்குவாதங்களில் நேரத்தை வீணடிப்பது பல அதிகாரிகளின் பொழுதுபோக்காக தற்போது மாறிவிட்டது.

இன்று மின்சார கட்டணம் மீண்டும் அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியான மின்சாரம் விநியோகம் செய்யும் நோக்கங்களில் ஒன்று எனச்சொல்லப்படுகின்றது. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் இந்நாட்டு மக்கள் தங்களின் கட்டணத்தை ரூபாயில் செலுத்துவார்கள், டொலர்களில் அல்ல. ஆனால் நாட்டுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தேவையான பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுகின்றன.

எனவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, புதிய சக்தி உற்பத்தி வழிகளில் கவனம் செலுத்தி நாட்டைக் கட்டியெழுப்பும் முறையான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


0 comments:

Post a Comment