ADS 468x60

17 February 2023

நாடு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் மக்களின் எண்ணங்கள் சுத்தமாக இல்லை

நாம் இன்று பல பற்றி எரியும் பிரச்சினைகளைப் பேசுகின்றோம். இந்த நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைதான் என்ன? மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதா? மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா? மின்கட்டணம் அதிகளவில் ஏறுகிறதா? தனிநபர் வரியை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளதா? இல்லை. இந்த நாட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்ட விடயம் மிக முக்கியமான பிரச்சினையாக இப்போ இருக்கின்றது. 

வாக்களிப்பு நடத்தப்பட்டால் மக்களுக்கான ஏனைய வசதிகள் வழங்கப்பட முடியாது முக்கியமாக பசிக்கின்ற வயிறறுக்கு உணவு இருக்காது. ஆனால் ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம். வாக்குகள் இல்லாவிட்டாலும் ஜனநாயகம் பாதிக்கப்படாது. ஏனெனில் உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தின் அதிகாரத்தை மாற்ற முடியாது என்பதே இதற்குக் காரணம். ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த 10 பில்லியன் ரூபா செலவாகிறது மேலும் அந்த செலவினத்தால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சேதம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்கின்றனர். 

சரி இவற்றுக்கு அப்பால் இன்னொரு பிரச்சினை இருக்கின்றது. அது தற்போது சிவனொளிபாதமலை ஏறுகின்ற பருவம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் சிவனொளிபாதமலை மலை ஏறும் பகுதியில் இருபுறமும் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளின் அளவு 8 தொன்கள் என அறியப்படுகிறது. சிவனொளிபாதமலை பருவத்தின் முடிவில், இந்த அளவு 20 தொன் அல்லது 20000 கிலோ அல்லது 40000 பவுண்டுகளை தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சரி நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது சிவனொளிபாதமலை மலையின் இருபுறமும் உள்ள குப்பைகளை பற்றி ஏன் பேச நினைத்தோம் என்று நீங்கள் யோசிக்கலாம்.

பெண்களே, நீங்கள் தேர்தல் விடயங்களை பேசுவதை விட இலங்கையின் குப்பை பிரச்சினை பற்றி பேசுவதே பொருத்தமானது. சிவனொளிபாதமலை செல்லும் மலைப்பாதையின் இருபுறமும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் உள்ளன. இவை தண்ணீர் போத்தல்கள், பொலித்தீன் உணவு உறைகள்; மற்றும் பியர் கேன்கள் என்பன அதிகம் காணப்படுகின்றன. இந்த மூன்று களிவுகளில் முதல் இரண்டும் இலகுவில் சிதைவதில்லை. இது இவ்வாறு இருக்க, கடவுளை வணங்கப்போகும் பக்தர்கள் பீயர் கேன்கள் அல்லது மதுப் போத்தல்களை எடுத்துச் செல்வது முற்றிலும் தவறல்லவா? அது ஒரு அவமானமும் கூட. தலதா மாளிகையை அவமதித்த செப்பல் அமரசிங்கவை ரிமாண்ட் செய்தால், சிவனொளிபாதமலை பாதயாத்திரை செல்லும் பாதையில் பியர் மற்றும் மது அருந்துபவர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டும்தானே!

ஒரு முக்கியமான தகவலை இப்போது பார்க்கப்போகின்றோம். அது இலங்கையில் நாளாந்தம் குவியும் குப்பையின் அளவு 7000 தொன்களாகும். இதில் 66 வீதம் உணவு வீணாக வீசப்படுகின்றது. அதாவது இலங்கையின் நாளாந்த குப்பையில் 3963 தொன்கள் நாம் உண்டு மிச்சப்படும் உணவாகும். ஒரு டொன் உணவில் சராசரியாக 3500 பேருக்கு உணவளிக்க முடியும். அப்படியானால், 3963 டொன் உணவை வைத்துக்கொண்டு எத்தனை பேர் வயிற்றை நிரப்ப முடியும் என்ற கேள்வியை நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். 

இந்த இலங்கைத்திருநாட்டில் நாளொன்றுக்கு 7000 தொன் குப்பைகளை சேகரித்தால் கணிப்பின்படி, அதன் மாதாந்த பெறுமதி இரண்டு இலட்சத்து பத்தாயிரம் தொன்களை தாண்டும். அந்த குப்பையில் பிரித்தெடுத்த வீசப்பட்ட உணவின் அளவினைப்பார்தால் ஒரு லட்சத்து இருபதாயிரம் டொன்களை தாண்டிவிடும். 

இது இப்படி இருக்க, இந்த நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் இன்று ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் காலை உணவையோ மதிய உணவையோ சாப்பிடுவதில்லை என்று சமீபத்திய பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும், இந்த நாட்டில் ஒரு வேளை உணவை உண்டு வாழ்பவர்கள் பலர் இன்று இருப்பதாக அரசியல்வாதிகள் மேடைகளில் சுட்டிக்காட்டுகின்றனர். 

எனவே மாதாந்தம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் டொன் உணவுப் பொருட்கள் வீணாகும் நாட்டில் அப்படி உணவற்றவர்கள் இருக்க வாய்பிருக்கின்றதா என்பதே கேள்வி. ஆனால் அது உண்மையில் நடந்துள்ளது. அப்படியானால், இந்நாட்டில் உணவு முகாமை செய்வதில்; பாரிய குறைபாடு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பப் பெண் முதல் முதலாளித்துவ வர்க்கப் பெண்மணிகள் வரை அனைவரும் அதற்குக் காரணம் இல்லையா?

நமக்குத் தேவையான உயிர்வாயு(காஸ்) மற்றும் விவசாயத்துக்கு தேவையான கரிம உரங்களை சிதைக்கும் கழிவுகள் அதாவது சமைத்த உணவு குப்பைகள் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட பச்சை காய்கறி கழிவுகள் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யலாம். ஆனால், இந்நாட்டில் வாழும் பாரம்பரிய தாய்மார்கள் தங்கள் தோட்டத்தில் உரம் தயாரிக்கும் குப்பைத் தொட்டியையோ, உயிர்வாயுவை உற்பத்தி செய்யும் தொட்டியையோ வைக்க விரும்பவில்லை அல்லது அது ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால் நாம் வயோ கேஸ் மூலம் சமைக்கலாம் என்பதை நாம் மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கிராமப்புறங்களில் உயிர்வாயு சேமிப்பு வசதிகள் உள்ளன. இவற்றில் வீசப்படும் அழுகும் கழிவுகளில் இருந்து உயிர்வாயுவை தயாரித்து சமையலுக்குப் பயன்படுத்தலாம், மீதமுள்ள கரிம உரங்களைக் கொண்டு வீட்டுத்தோட்டங்களைச் செய்யலாம். ஆனால் இவற்றையெல்லாம் செய்து மாற்றுவதற்கு மிகவும் கடினமான ஒரு மனநிலையைக் கொண்ட நாடு இலங்கை. 

நம்மால் அன்றாடம் தூக்கி எறியப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க அனைவரும் விரும்பி அந்தக் கழிவுகளில் இருந்து வாயுவை உருவாக்க முடியும் என்றால், நமது மக்கள் அந்த யோசனையை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு வரிசையில் நிற்க விரும்புகிறார்கள் அல்லது ஒரு எரிவாயு சிலிண்டரை எடுத்து தங்கள் தலையில் சுமந்து கொண்டு வீட்டிற்கு கொண்டு வர விரும்புகிறார்கள். 

நாம் அறிந்தவகையில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஒரு அழுக்கு நாடாக இருந்தது. அந்தக் காலத்தில், வடிகால் பாதைகள் கொண்ட பாதுகாப்பான கழிவறைகளுக்குப் பதிலாக குழி கழிப்பறை அல்லது வெட்டைவெளியில் பயன்படுத்துபவர்கள் இருந்தனர். இதனால் நோய்கள் மிக எளிதாக பரவியிருந்தது. அதன்பின் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் கொலரா நோய் இலங்கை முழுவதும் பரவியது. அதுபோல மலேரியா என்பது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு வழக்கமான நோயாகி இருந்தது. ஆனால் இன்று அந்த அழுக்கான ஒரு நாடு; அந்தவிடயத்தில் தூய்மையான நாடாக மாறியுள்ளது. அதற்குப் பதிலாக இன்று குப்பை கொட்டும் ஒரு நாடாகவும் மாறிவிட்டது. நாடு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் மக்களின் எண்ணங்கள் சுத்தமாக இல்லை. மக்கள் சுத்தமாக இல்லாவிடில் இந்த நாடு குப்பை அரசாகவே தொடரும்.


0 comments:

Post a Comment