ADS 468x60

23 April 2023

இன்று மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி

சுதந்திரத்திற்குப் பிறகு நமது நாடு எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அண்மைக்காலமாக நம் நாட்டு மக்கள் சந்திக்க நேர்ந்தது. எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் அதன் விளைவுகளாகும், மேலும், இதனால் மணிக்கணக்கில் நம் நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருட்களின் விலை உயர்வால், மக்களின் கொள்வனவு செய்யும் திறன் குறைந்துள்ளது. இவற்றின் உடனடி விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு நாடாக பார்க்கும்பொழுது இது மிகவும் மோசமான நிலையாகும்.

எமது நாடு இதுவரை உலக நாடுகளிடம் வாங்கிய கடனுக்கான தவணையை மாத்திரமாவது கட்ட முடியாத அளவுக்கு நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மீள் கடன் பெறுதல், அதுபோல கடன் மறுசீரமைப்பு போன்ற விடயங்களுக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது.

ஆனால், தற்போது நம் நாட்டில் வரிசையில் நிற்கும் காலம் முடிந்துவிட்டது. அதற்காக இருமடங்கு மின் கட்டணம் செலுத்தி மக்கள் இருளில் இருந்து வெளியேறி வருகின்றனர். ஆனால் இவற்றின் காரணமாக நம் நாட்டு மக்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நினைக்க முடியுமா?

இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளால் மக்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். இன்று அப்பப்போது அரசு செய்யும் சில நல்ல காரியங்களின் பலன் கூட மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பது இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

அந்தவகையில், அண்மையில் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்தமை மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதுபோல காஸ் விலையை ஆயிரம் ரூபாவால் குறைக்க முடிந்ததையும் பாராட்ட வேண்டும்.

 ஆனால், இந்த விலைக் குறைப்பினால் மக்களுக்குப் பலன் கிடைக்கிறதா, இல்லையா என்பதைச் சரிபார்க்கும் பொறிமுறை அரசிடம் இல்லை என்பது பாரிய பிரச்சினையாகும். நுகர்வோர் விவகார அதிகார சபை என்ற அரச நிறுவனம் இருந்தாலும், அதன் சிறப்பான செயல்பாடு சிக்கலாக உள்ளது. குறிப்பாக எரிபொருள் விலைக் குறைப்பு, எரிவாயு விலை குறைப்பு மற்றும் அப்பம் மாவின் விலை குறைவினால் கிடைக்கும் இலாபத்தின் பங்கு இன்று நுகர்வோருக்கு செல்கிறதா என்பது சிந்திக்கவேண்டியதொன்றுதான். 

இன்று ஒரு ரொட்டியின் விலை ஓரளவு குறைந்தாலும், மற்ற உணவுப் பண்டங்களின் விலை அப்படியே உள்ளது. அப்பம் மற்றும் வெதுப்பகப் பொருட்கள் போன்ற உணவுகளின் விலையும் குறைய வேண்டும், ஆனால் அது இன்னும் சரியாக இல்லை. 

உணவுப் பொட்டலங்களின் தரம் மற்றும் விலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சில அல்லது அனைத்து நுகர்வோர் பொருட்களும் குறைந்த எரிபொருட்களின்; விலையால் குறைந்த போக்குவரத்து செலவுகளால் பயனடைய வேண்டும். 

ஆனால் இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதைப் பற்றிய புரிதலைப் பெற, தத்தமது நகரத்தில் உள்ள மீன் சந்தைக்குச் சென்றால் போதும். நம் நாட்டில் நீண்ட காலமாக மீன் விலை மிக அதிகமாக உள்ளது. 

எரிபொருள் விலை குறைவினால் மீன் விலை ஓரளவு குறைந்திருக்க வேண்டும், ஆனால் இல்லை. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு துண்டு சத்தான மீன் சாப்பிடுவது ஒரு கனவாகவே உள்ளது. 

மீன்களின் விலை ஒரே மாதிரியாக இருக்கும் அதே வேளையில், ஏழைகளின் அரிசி உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் முட்டை என்பனவற்றின் நிலையும் நாம் அறிந்ததே. முட்டைக்கான விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை  நிர்ணயம் செய்தாலும், அந்த விலையில் முட்டையை வழங்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இவர்கள் இருவரின் இழுபறியால் இன்றும் முட்டை கிடைக்காமல் ஏழை மக்கள் தவித்து வருகின்றனர். மீன்களின் விலை அதிகரிப்பு மற்றும் முட்டை சந்தையில் இந்த பிரச்சினைகள் காரணமாக, எமது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் மேலும் அதிகரிக்கலாம். எனவே நமது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான தேசத்தை நாம் எவ்வாறு வழங்க முடியும்?

எமது மக்களின் ஒவ்வொரு சமூகப்பிரச்சினைகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் அக்கறை காட்டினால்; அதுபோல அதிகாரிகளும் குரல் எழுப்பும் தரப்பினரும் கவனம் செலுத்தினால் நாளை முன்னேற்றம் அடையலாம். ஆனால் பல இடங்களில் இப்பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில், அதற்கான திட்டவட்டமான திட்டம் எதுவும் இல்லாதது வருத்தமளிக்கிறது. நமது நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், தொழில்துறையை விரிவுபடுத்தவும், ஏற்றுமதி விவசாயத்தை அதிகரிக்கவும் உடனடியாக ஒரு திட்டத்திற்கு செல்ல வேண்டும். மேலும், நம் நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் வெளிநாட்டு தொழில் சந்தையை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் வளர்ந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா வணிகத்தை கவர்ச்சிகரமான முறையில் ஊக்குவிப்பது போன்ற பல நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்தத் துறைகளை ஊக்குவிக்கும் போது, சமூகத்தின் கீழ்மட்டப் பிரிவினருக்கு நன்மைகள் பாயும் வகையில் ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி நீங்காது.


0 comments:

Post a Comment